புலிகள் இருந்த காலத்தில் கொழும்பை மையமாக கொண்டு இயங்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் பலர், புலிகளுக்கு ஏற்ற செய்திகளை தமிழ் மக்களின் தலையில் வைத்து அரைத்தனர். பேரினவாதம் புலிகள் போல் அனைத்தையும் வேட்டையாடத் தொடங்கியவுடன், ஊடகவியலாளர்கள் கூறித் திரிந்த இந்த புலி ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தங்கள் அறிவுசார் மேலாண்மை மற்றும் முன்னைய மற்றைய இயக்க தொடர்புகள் மற்றும் அடையாளங்கள் மூலம், தாம் முற்போக்காக மக்களுக்கு ஊடகவியலை செய்ததாக இன்று காட்டிக்கொள்ளுகின்றனர். இன்று வரை புலியை விமர்சனம் செய்யாத சூக்குமத்தின் பின் நின்று கொண்டு தான், ஊடக அடையாளம் மூலமான பிழைப்பை இன்று நடத்த முடிகின்றது.

 

 

 

சரி, ஊடகவியலாளராக இருத்தல் முற்போக்கானதா? தமிழ் தேசியத்தை உயர்த்துதல் முற்போக்கானதா? அரசை எதிர்த்து எழுதுதல் முற்போக்கானதா? இப்படி எல்லாம் இருத்தல் முற்போக்கானது என்று காட்டுகின்ற கூத்துகள் தான், புலிகளின் தமிழ்நெற்றை சுற்றி ஒளிவட்டம் கட்டி காட்டுகின்றனர். இந்த வகையில் சிவராமை முன்னிறுத்தி ஊடக தர்மம் பேசுகிறவர்கள் முதல் "இனியொரு" "தமிழ்நெற்" றுக்கு இணைப்பு கொடுத்து அகற்றிய "மார்க்சிய" கண்ணோட்டம் வரை, புலியின் வால்களில் தொங்கி நின்று வழிகாட்டுகின்றனர். (பார்க்க தொடுப்பு இணைப்பை) அன்று மட்டுமல்ல, இன்றுவரை எந்த சுயவிமர்சனம் விமர்சனமுமின்றி இதுதான் தொடர் கதை.

அரசுக்கு எதிராக தேசியத்துக்கு ஆதரவான ஊடகவியலாளராக இருந்ததும், இருத்தலும் தான் முற்போக்கானது என்று தொடர்ந்து புகட்டப்படுவது தொடருகின்றது. புலிகளின் அணியில் தேசியத்தை முன்னிறுத்தி, தம்மை நிலைநிறுத்தினர். தேசியத்தை ஆதரிப்பதாக கூறிக்கொண்டு, புலித்தேசியத்தை தொழுதனர்.

மறுபக்கத்தில் புலிகளோ, புலிகளின் தேசியமோ பத்திரிகை சுதந்திரத்தை முடக்கி, ஊடகவியலாளர்கள் சுதந்திரத்தையே இல்லாதாக்கியது. கருத்து, எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து, இதை ஒட்டி பலரைக் கொன்று குவித்தனர். பாரிய யுத்தநிறுத்த மீறல்கள் முதல் பாரிய போர்க்குற்ற மீறல்கள் வரை தொடர்ச்சியாக புலிகள் செய்தனர். இதை பற்றி எல்லாம் பேசாத ஊடகவியல், யாருக்காக எழுதியது? புலிக்காகத்தான். அதுவும் புலியின் தமிழ்நெற்றில். புலிகள் வழங்கிய சம்பளத்தில், கூலி எழுத்தாளராக எழுதிப் பிழைத்தவர்கள், அதை முற்போக்கான சுதந்திரமான ஊடகவியலாளர் செயற்பாடாக காட்டி இன்று பிழைப்பது நாய்ப் பிழைப்பாகும். அன்று தங்கள் ஊடகவியல் மூலம், புலிக்குத்தான் வழிகாட்டினர் மக்களுக்கல்ல.

இந்த வகையில் இயங்கியவர்கள், ஊடகவியலை அரசுக்கு எதிராக மட்டும் முன்னிறுத்தி பேசினர், பேசுகின்றனர். இன்று வரை தங்கள் கடந்த காலம் பற்றிய எந்த சுயவிமர்சனமும் கிடையாது. குளோபல் தமிழ்ச் செய்தி இணையத்தில் சோமிதரன் எழுதுகின்றார் "ஆறு வருடங்களுக்கு முன்னர் இதே இரவில்தான் அவர்கள் பத்திரிகையாளர் சிவராமைக் கடத்திச் சென்று கொன்றனர்" என்று. இந்த கட்டுரையின் பின்னணியில் முன்னைய சரிநிகர் சார்ந்து உருவான "முற்போக்கு" ஊடகவியலாளர்கள், பேஸ்புக்கிலும் இந்த தமிழ்நெற் புலியிஸ்ட்டுகளுக்கு ஆரத்தி எடுத்து ஒளிவட்டம் போடுகின்றனர்

இந்தச் சோமிநாதன் கட்டுரை, தமிழ்நெற் பின்னணி பற்றிய பல தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. அதில் இருந்து பார்ப்போம். "என் செல்பேசி மணியடிக்க ஆரம்பித்தது. நண்பர் சிவகுமாரின் அழைப்பின் போது மட்டும் பிரத்தியேகமாக ஒலிக்கும் ஒலி அது. 'என்ன சிவா அண்ணா இந்த நேரத்தில்' 'சோமி.... சிவராம கடத்திப் போட்டாங்கள். . . ." "சோமி முடிந்தவரை சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் சொல்லியாகிவிட்டது. சிங்களப் பத்திரிகையாளர்கள் அரசியல் அமைப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்று சொல்லி சிவா அண்ணா தொடர்பைத் துண்டித்தார்." இந்த ஊடகவியலை சுற்றி இருந்த அரசியல் அடிப்படையை, இது எடுத்துக் காட்டுகின்றது. யார் யாருடன் எங்கே நின்றனர் என்பதையும், சிவராம் மாமனிதன் என்று புலிகள் அறிவிக்கும் எல்லை வரை இந்த அரசியல் பரிணாமத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும். இன்றும் சிவராமுக்கு ஒளிவட்டம் கட்டுபவர்கள் வேறுயாருமல்ல இவர்கள் தான்.

"சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும்" தொடர்பு கொண்ட ஊடகவியல், மேற்கு ஏகாதிபத்தியம் வரை கூடி நின்றதை எடுத்துக் காட்டுகின்றது. சிவராம் அரச பாசிசத்தால் கொல்லப்பட்ட நிகழ்வை கண்டித்தல் என்பது வேறு. புலிகள் கொன்ற பலரைப் போல், இதுவும் இலங்கையில் ஒரு நிகழ்வுதான். இதைக் கடந்து அரசியல் ரீதியாக புலிகள் மாமனிதப் பட்டம் கொடுத்து முன்னிறுத்துவது போல் தான், இங்கு இந்த ஊடகவியலாளர்களின் புளுத்துப்போன புலித் தேசிய அரசியலாகியது. இதே சிவராம் முன்னின்று கொன்ற அகிலன் செல்வன் படுகொலை உட்பட, புளொட் நடத்திய நூற்றுக்கணக்கான படுகொலைகளின் போது கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் மனிதகுலத்தை நேசித்தவர்கள். அவர்களைக் கொன்றவர்கள் அணியில் நின்ற சிவராமை, அதேயொத்த மற்றொரு பாசிச அணி கொன்றது. புளொட் படுகொலை மற்றும் உள்ளிருந்து பலர் தப்பியோடிய போது, அவர்களை தேடிக் கருவறுத்த அணியில் நின்றவன் இந்தச் சிவராம். இறுதியில் புலி என்ற பாசிசக் கும்பலின் பாசிசத்துக்கு பக்கப்பாட்டுப் பாடியபடி, புலியின் தமிழ்நெற்றில் ஊடகவியலாளானான்.

இப்படிப்பட்ட சிவராமை பற்றி சோமிநாதன் எழுதுகின்றார் "மட்டக்களப்பில் மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்த சிவாராம் பல்கலைக்கழக படிப்பை இடைநிறுத்திவிட்டு. தமிழீழ விடுதலைக்கென புறப்பட்ட இயக்கங்களில் ஒன்றான புளட் இயக்கத்தில் இணைந்து அதன் அரசியல் பிரிவின் முதலாவது பொதுச் செயலாளராக பதவியேற்று பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி பத்திரிகைக்காரனாகி சராசரிகளைத் தாண்டி அரசியல், இலக்கிய, கருத்தியல், ராணுவ, புவியியல் தளங்களில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டு…. புலிகளை விமர்சித்து பின்னர் தீர்க்கமாக ஆதரித்து. சிங்கள தமிழ் ஆங்கில ஊடகவியலாளர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஆரவாரத்திற்குரியவராகி.... சிவராம் பற்றி நினைத்துக் கொண்டே அவ்வப்போது சிவா அண்ணாவிடம் நிலமையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்." இப்படித்தான் ஒரு கொலைகாரன், பாசிட் இன்று ஊடகவியல் முகமூடிக்குப் பின்னால் முன்னிறுத்திப் போற்றப்படுகின்றான். எதைச் சார்ந்து, புலித் தேசியத்தைச் சார்ந்தும், அரசின் பாசிச படுகொலையை கண்டிக்கும் பின்னணியில் நின்றும்.

சிவராம் போல் சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்க, மார்க்சியம் முதல் பின்நவீனத்துவம் வரையான அறிவு ஊடகவியலாளனுக்கு அவசியம் என்று சோமிநாதன் எழுதுகின்றார். சிவராம் பற்றிய தன் குறிப்பில் "1981 இல் எஸ்வி ராஜதுரை அவர்களுக்கு சிவராம் எழுதிய ஒரு எதிர்வினை ஒன்று எழுத்தாளர் ஜேசுராஜாவின் வீட்டில் படிக்க கிடைத்தது. சிவாரம் மார்க்சியம் மாத்திரமல்லாமல் அப்போது பின்நவீனத்துவம் உள்ளிட்ட பல கருத்தியல்கள் கூறி விவாதங்களை நிகழ்த்தியிருந்தார். மட்டக்களப்பில் வாசகர் வட்டத்தின் முக்கிய பங்களிப்பாளனாக சிவராம் இருந்ததும் பலரும் அறிந்த ஒன்றே. சிவராம் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பத்திரிகையாளன் எவ்வளவு கற்க வேண்டும் எவ்வளவு தேடல் கொண்டிருக்க வேண்டும், எத்தகைய பணியை எந்த நிலையில் ஆற்ற வேணும் என்பதை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தியவர் சிவராம். சிங்களவர்களாலும் தமிழர்களாலும் மிகவும் அறியப்பட்ட பல்மொழிப் புலமை மிகு ஆளுமையின் மூளை சிதறியிருந்தது........" என்கின்றார். "பல்மொழிப் புலமை" மக்களுக்கு எதைச் சொன்னது? உண்மை சொன்னதா? அவன் நடத்திய கொலைகள், அதை நியாயப்படுத்திய புரட்டுகள் தான் "எத்தகைய பணியை எந்த நிலையில் ஆற்ற வேணும் என்பதை" புகட்டுகின்றது. இதைக் கற்கவேண்டும் என்று கூறுவது பாசிசத்தின் எச்சம். இதை "எந்த நிலையில் ஆற்ற வேணும் என்பதை அடுத்த தலை முறைக்கு உணர்த்தியவர்" என்பது, இன்று இவர்கள் முன்னிறுத்தும் வக்கிரம். புலிகளின் மாபியாத் தனத்தை தொழுதும், பாசிசத்தை தேசியமாக காட்டியும் வழிபட்ட கூட்டம், அதை வழிபடக் கோரியபடி ஊடகவியல் முகமூடியை அணிந்து கொண்டு உலகெங்கும் வலம் வருகின்றனர். இந்தச் சிவராம் புலிகளால் கொல்லப்பட்டு இருந்தால், என்ன போற்றியிருப்பார்கள். சொல்லுங்கள்.

இந்தப் பாசிச புலித் தேசியத்தை தன் புலமை சார்ந்த அறிவு கொண்டு அரசு எதிர்ப்பு மூலம் நியாயப்படுத்திய தர்க்கங்கள், பொதுவான புலியாதரவுப் பிதற்றலுக்கு முன் வழிபாட்டுக்குரியதாகின்றது. அதையே சோமிநாதன் பிரதிபலித்து வெளிப்படுத்தும் போது "போர் பற்றிய செய்திகளையும் நகர்வுகளையும் பி.பி.சி யில் தொடர்ந்து சொல்லும் ராணுவ ஆய்வாளர் சிவராமும் எங்களுக்கு பரிச்சயமாகிறார். கொஞ்சம் கொஞ்சமாக சிவராமின் எழுத்துகளையும் படிக்கிற போதுதான் ஒரு மசாலப் படத்துக்கும் ஆழமான அரசியல் படத்துக்குமான வித்தியாசம் தினமுரசு எழுத்துக்கும் சிவராமுக்கும் இடையில் இருப்பது எங்களுக்கு புரிந்தது." என்கின்றார். புலியின் கட்டியமைத்த மசாலா தேசியத்தை, ஆழமான தேசியமாக காண்பித்த சிவராமின் அறிவுசார் பாசிசம், இங்கு மிகத் தெளிவாக அம்பலமாகின்றது. இடதுசாரியம், மார்க்சியம் பேசியவர்கள், பல்வேறு இயக்கங்களின் பாசிசத்துக்கு அரசியல் விளக்கம் கொடுத்து, நாய்ப் பிழைப்பு நடத்திய வரிசையில் இதுவும் அடங்கும். வலதுசாரியக் கும்பலுடன் வால் பிடிக்கின்ற இடதுசாரியப் பித்தலாட்டம் வரை தொடர்ந்து இப்படித்தான் அரங்கேறுகின்றது. "இனியொரு" "தமிழ்நெற்" றுக்கு இணைப்பு கொடுத்து அகற்றிய அரசியல்வரை இதில் தான் அடங்கும்.

தங்கள் இந்த அணியில் யார் யார் இருந்தனர் என்பதையும் சோமிநாதன் போட்டு உடைக்கின்றார். "அவர் இருந்த ஓமேக்கா ஹோட்டலுக்குள் போனபோது இவர்கள் அணியைத் தவிர வேறு யாரும் இல்லை. சரிநிகர் சிவகுமார், மேர்வின் மகேசன், திசநாயகம் இவர்களுடன் சிவராம். அப்போதுதான் என்னை முதல் முதலில் திஸ்ஸவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிவராம்." இப்படி இவர்கள் அணி சேர்க்கை, அரசியல் ரீதியானது. மக்களைச் சார்ந்த சுதந்திர ஊடகமல்ல, மக்களைச் சார்ந்த மக்கள் அரசியலுமல்ல. "ஆழமான அரசியல்" ஆனது, அது புலி அரசியலானது. புலி தமிழ்நெற் மூலம், புலிக்கு வேசம் போட்டு அரங்கேற்றிய புலிப் பாசிசக் கூத்தாகும். இந்த பாசக்கயிற்றை பேரினவாத பாசிசம் அறுத்த போது, துடித்துப் பதைத்து ஊடக சுதந்திரம் பற்றியும் "ஆழமான அரசியல்" பற்றியும் புலம்புகின்றனர். தமிழ் மக்களுக்கு அரசால் நேர்ந்த துயரங்கள் பற்றிப் பேசுகின்றவர்கள், புலியால் தமிழ்மக்களுக்கு நேர்ந்த அவலங்கள் பற்றி பேசுவது கிடையாது.

இன்று புலிகள் இல்லை என்று கூறி அதை விடுவோம் என்று கூறித் தட்டிக்கழிக்கும் அரசியல் முதல் புலிகள் சிறு தவறுகளை விட்டனர் என்று சடைந்து மூடிமறைத்த வக்கிரம் வரை, தொடர்ந்து மக்கள் விரோத அரசியலாக அரங்கேற்றப்படுகின்றது.

அன்று இடதுகள் பல புலிகள் மீதான விமர்சனத்தை பிறகு வைப்போம் என்று கூறி, புலிப் பாசிசத்துக்கு குடைபிடித்தனர். இந்த வகையில் தான் சிவராம் "சோமிதரன் நீ தினக்குரலை விட்டுத்து என்னோட சேர்ந்து வேலை செய்யிறியா..? உன்ர நியூஸ் பார்த்தன். இவனுகள் ஆருக்கும் தகவல் கூட தெரியாத நீ நியுஸ் போட்டாய். ஒரு பத்திரிகைக்காரனுக்கு எல்லாப்பக்கத்திலையும் ஆள் இருக்கோணும் அப்பதான் நியூஸ் தவறாம கிடைக்கும். சமதானத்தை குழப்புறதில ராணுவம் எப்பிடி வேலை செய்யுது. மக்கள் அமைதிக் காலத்தை அனுபவிக்கிராங்களா? நம்மட ஊர் அபிவிருத்தி, வளங்கள், கலை இதுகளப் பத்தியெல்லம் நாம் வெளியே கொண்டு வரணும். உனக்கு தமிழ் நெற்றில வேலை செய்ய விருப்பமா எண்டார். நான் உடனே இல்லை... அதன் மீதான அடையாளம் எனக்குப் பிரச்சனையாக இருக்கும் என்றேன். சரி.. நீ அதுக்கு வேலை செய்ய வேணாம். நாங்கள் தொடங்கியிருக்கிற நோர்த் ஈஸ்டன் ஹெரல் பேப்பருக்கு வேலை செய். நான் யோசித்தேன். சோமிதரன். நீ ஒரு பத்திரிகைக்காரனாக இருகிரதெண்டால் முதல்ல சுதந்திரமான பத்திரிகைகாரனா வா...தினக்குரலில் இருந்து வெளிய வந்து "பிறீலான்ஸ்" ஆக இரு. இல்லாடி காலம் முழுவதும் ஏதோ ஒரு பத்திரிகையில் இருந்து குப்பை கொட்ட வேண்டியதுதான். யோசிச்சுப் போட்டு நாளைக்கு சொல்லு... சிவராமிடமிருந்து விடைபெற்றேன்...மேலும் இரண்டு எள்ளுப்பாகுகளை உள்ளே தள்ளிக் கொண்டு கணனியில் தான் எழுதிய கட்டுரையை தொடர்ந்தார் சிவராம். .." அதன் பின்னர் சிவராமோடும், திசநாயகத்தோடும் இணைந்து நோர்த் ஈஸ்டன் ஹெரல்டில் பணியாற்றுகையில் நிறைய விசயங்களை வெளியே கொண்டுவர சிவராம் என்னைத் தூண்டினார்." என்கின்றார். இப்படி புலிக்கு ஆள்பிடித்த சிவராமும், அந்த "அடையாளம் எனக்கு பிரச்சனையாக" இருக்கும் என்று கூறி, "குப்பை கொட்டா"மல் சோரம் போன கதையையும் கூறுகின்றார். இது தான் பலரின் வெட்டுமுகம். இந்த வெக்கமற்றதனத்துக்கு ஏற்ப புலிக்கு, புலியின் பணத்தில் தமிழ்நெற்றில் நெளிந்தனர். "மக்கள் அமைதிக் காலத்தை அனுபவிக்கிராங்களா?" என்பதை கேட்கும் இந்த ஊடகவியலாளர்கள் எவர் தான், நேர்மையாக அதைக் கொண்டு வந்தனர். வரலாற்றை புரட்டிப்பார்த்து சொல்லுங்கள். எங்கே உங்கள் ஊடக தர்மமும், நேர்மையும் இருந்தது என்பதை, இந்த மக்களுக்கு சொல்லுங்கள்.

 

பி.இரயாகரன்

15.05.2011