"வங்கம் தந்த பாடம்" : வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாத நாம்.

யூலை 1983 இற்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது வெறுமனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமல்லாது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு கவலைக்குரிய விவகாரமாகவும், இந்திய அரசைப் பொறுத்தவரை அவர்கள் நலன்களின் "அக்கறைக்குரிய" விவகாரமாகவும் காணப்பட்டது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டது.

 

 

 


வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போதும், வங்கதேசப் பிரிவினையின் போதும் இந்திய அரசு செயற்பட்ட விதம் குறித்தும், வங்கதேசப் பிரச்சனையை தனது நலன்களுக்கு பயன்படுத்துமுகமாக வங்கதேசப் போராளிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகித்தது குறித்தும், இறுதியில் வங்கதேசப் பிரிவினையின் பின் உண்மையான தேசபக்தர்களையும் புரட்சியாளர்களையும் சிறைகளில் அடைத்து தூக்கிலிட்டதுமான வங்கதேசத்தின் படிப்பினைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிக்கொண்டு வருவதென்று அன்றைய புளொட் மத்தியகுழுவின் முடிவின்படி ” வங்கம் தந்த பாடம்” என்ற சிறிய கையடக்கத் தொகுப்பு 1983 புரட்டாதி மாதம் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியானது. அன்று இதை வெளிக்கொண்டு வந்ததன் நோக்கம் வங்கதேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளை அமைப்பில் உள்ளோருக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துவதும் எமது போராட்டம் குறித்தும் அதில் இந்தியாவினுடைய தலையீடு குறித்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுமேயாகும். ஆனால் "வங்கம் தந்த பாடம்" யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் போதே இந்திய அரசுக்கூடாக புளொட் உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான முயற்சிகளும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. "வங்கம் தந்த பாடம்" வெளியிட்ட பின்பு இந்தியாவிற்கு இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புவது ஆரம்பமாகியது. வங்கம் தந்த பாடத்தை படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று சொன்ன நாம் அந்தப் படிப்பினைகள் எல்லாவற்றையும புறந்தள்ளி வைத்துவிட்டு இந்தியாவின் வலைக்குள் மிக இலகுவாக இழுத்துச் செல்லப்படலானோம். நாம் வரலாற்றிலிருந்து படிப்பினையைப் பெறாதது மட்டுமல்லாமல் எமது கருத்துக்களுக்கும் நடைமுறைக்குமிடையேயான முரண்பாடாகவும் இது அமைந்தது எனலாம்.

80 களின் ஆரம்பத்தில் "இந்தியா வரும் தமிழீழம் எடுத்துத் தரும்" என்ற கனவு தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ் தலைமைகள் மத்தியிலும் காணப்பட்டது. வங்கம் தந்த பாட அனுபவங்களுக்குப் பின்பும், இந்திய இராணுவம் இலங்கையில் காலடி பதித்த பின்னான அனுபவங்களுக்குப் பின்பும், 30 வருட கால ஈழவிடுதலைப் போராட்டத்தின் கசப்பான நடைமுறை அனுபவங்களுக்குப் பின்பும் கூட பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளும் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளும் "தமிழீழம்" பெற்றுத்தருவார்கள் என்று இன்னும் நம்பிக்கை கொள்ளும் தமிழ்மக்களும் தமிழ்த் தலைமைகளும் கடந்தகால எமது போராட்ட வரலாற்றிலிருந்து சிறிதளவேனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது. பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளினதும், அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்கள் தமிழ்மக்களின் நலன்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நலன்களுக்கும் நேரெதிரானவை என்பது தான் உண்மை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனுமான ஜக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாகத்தான், அவர்களின் துணை கொண்டுதான் வெல்லப்படமுடியும்.

புளொட்டில் முரண்பாடுகளின் தோற்றுவாய்கள்

புளொட் தனது கடந்தகால "இரகசிய" அல்லது "தலைமறைவு" என்ற நிலையிலிருந்து வெளியே வரத்தொடங்கியிருந்தது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புதல், அரசியல் பாசறைகள், மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல், என்பனவெல்லாம் ஒருவகை "அசுர" வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவற்றுக்கெல்லாம் மக்களது ஆதரவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் கூட கேள்விக்கப்பாற்பட்டதாக இருந்தது. பேரினவாத அரசுக்கெதிராக சாத்தியமான அனைத்துவழிகளிலும் போராடுதல் என்பதே எமது நிகழ்ச்சிநிரலாக இருந்தது.

(உமாமகேஸ்வரன்)

இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் தலைமை பற்றியும், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றியும் உயர்ந்த மதிப்பும் தலைமை விசுவாசமும் என்னிடமும் இருந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

 

(சந்ததியார்)

1) புளொட் பற்றியும், உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் பற்றியும் ஏற்கனவே மக்கள் மத்தியில் இருந்த நல்ல அபிப்பிராயமும் பிரபல்யமும். கூடவே "தமிழீழத்தின் குரல்" வானொலிச் சேவையை (ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலில்) உருவாக்கி அதனுடாக வெளிக்கொணர்ந்த கருத்துக்கள்.

2) புளொட்டில் தளத்தில் செயற்பட்ட பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்களிடையே காணப்பட்ட கடின உழைப்பும எளிமையான வாழ்க்கையும்.

 

( கொக்குவில் சிவா - உரிமை கோரப்படாமல் கடத்திப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்)

புளொட்டின் இராணுவப்பிரிவு தளத்தில் பார்த்தன் தலைமையில் செயற்பட்டு வந்தது. பார்த்தனுடன் இணைந்து மல்லாவிச்சந்திரன், கொக்குவில் சிவா, திருகோணமலை கிறிஸ்டி போன்றோர் செயற்பட்டு வந்தனர். இராணுவ தகவல் சேகரிப்பு பிரிவுக்கு பொறுப்பாக ரமணன் செயற்பட்டு வந்தார்.

(சுப்பிரமணியம் சத்தியராஜன் 1962 -2001)

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில் பாலமோட்டை சிவத்தின் தலைமையிலும் பின்னர் அவர் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்றதன் பின் மீரான் மாஸ்டரின் கீழ் "சுந்தரம் படைப்பிரிவு" என்று செயற்பட்டுக் கொண்டிருந்தனர். வவுனியாவில் யக்கடையா இராமசாமி (பின்னர் புளொட்டினால் கொலை செய்யப்பட்டார்), வவுனியா தம்பி (பின்னர் புலிகளால் கொலை செய்யப்பட்டார்) போன்றோர் "காத்தான் படைப்பிரிவு" என்றும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். யக்கடையா ராமசாமி, தம்பி போன்றோர் பார்த்தனின் தலைமையின் கீழ், பார்த்தனின் வழிகாட்டலில் செயற்பட்டுவந்த அதே நேரம் சுந்தரம் படைப்பிரிவினரோ தன்னிச்சையான போக்கில் செயற்படலாயினர். இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே (குறிப்பாக சுந்தரம் படைப்பிரிவுக்குமிடையே) சில முரண்பட்ட போக்குகள் காணப்பட்டது மட்டுமல்லாமல் இராணுவப் பிரிவுக்குள்ளேயேயும் கூட முரண்பட்ட போக்குகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு அமைப்பினது ஒருங்கிணைக்கப்பட்ட, மத்தியப்படுத்தப்பட்ட செயற்பாடு என்பதற்கு மாறாக, சில தன்னிச்சையான போக்குகள் அங்கும் இங்குமாகத் தென்பட்டன.

சுழிபுரத்தை மையமாகக் கொண்டியங்கிய "சுந்தரம் படைப்பிரிவினர்" இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது மட்டுமல்லாமல், தளத்தில் அன்று இயங்கிய நிர்வாகத்துக்கும் கட்டுப்படாதவர்களுமாக இருந்தனர். பார்த்தனிடம் காணப்பட்ட மகத்தான ஆற்றல், மனோதிடம், ஆளுமை அனைத்துமே சுந்தரம் படைப்பிரிவினரை கையாளும் விடயத்தில் பெருமளவு வெற்றியளிக்கவில்லை. அன்று தளத்தில் செயற்பட்ட நிர்வாகம் கூட (காந்தன் - ரகுமான் ஜான் தள நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தார்). சுந்தரம் படைப்பிரிவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வெற்றிபெறவில்லை. இத்தகைய முரண்பாடுகளை நான் புளொட்டில் இணைந்த ஆரம்ப காலங்களில் அவதானித்திருந்த போதும் இந்த முரண்பாடுகள் எதிர்காலத்தில் அமைப்பின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என்று அன்று நான் கருதியிருக்கவில்லை. காரணம், இந்த முரண்பாடுகளை அன்றைய யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியும் தள இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனுமே நேரடியாக முகம் கொடுத்து அவற்றை கையாண்டதால், இந்த முரண்பாடுகளில் இருந்த ஆழத்தன்மையையோ அல்லது இந்த முரண்பாடுகளால் அமைப்புக்கு ஏற்படும், ஏற்படப்போகும் பாதிப்புக்களையோ என்னால் உணரமுடியாமல் இருந்தது.

(தொடரும்)

14/05/2011

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3