பாலியல் உணர்வை நலமடிக்க மறுத்தால், அவர்களை கொல் என்கின்றது. இதைத்தான் யுத்தத்திற்கு பிந்தைய இன்றைய தமிழ் சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகும். கடந்தகாலத்தில் இந்த மலட்டுச் சிந்தனை முறைதான் எம்மை அழித்தது என்றால், யுத்தத்தின் பின் மனித உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத வன்முறையாக மாறுகின்றது.

"தாயின் ஈனச் செயலால் கொலையாளியான தனயன்" என்று, வன்னியில் நடந்த ஒரு கொலை பற்றிய செய்தியை பல ஊடகங்கள் 22.04.2011 வெளியிட்டு இருந்தது. குறைந்தபட்சம் கொலையாக கூட இதை பார்த்து அணுகவில்லை. தாயின் குற்றமாக, மகனின் தியாகமாக காட்டுகின்றது. குறுந் தமிழ் தேசிய பாரம்பரியம் இப்படித்தான் சமூகத்தை அணுகி, வழிகாட்டுகின்றது. சமூகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முனைந்த மகனும், அதை சீரழித்த தாயுமாக காட்சிகளை அரங்கேற்றினர்.

 

 

இந்தச் செய்தியின் சாரம், ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ வக்கிரமாகும். கொலை செய்தவனின் அதே மனநிலையை பிரதிபலித்து, செய்தியாக வெளியிட்ட இந்த ஊடகங்களின்; மனநிலையும் அதுதான். மறுபக்கத்தில் இவைதான், குறுந் தமிழ்தேசியத்தை உயர்த்திப் போராட்டத்தை வெம்பவைத்து அழித்தவை என்றால் மிகையாகாது.

இவர்களிடம் இருந்து இந்தச் சமூகம் கற்றுக்கொள்ள எதுவுமில்லை. ஆணாதிக்கமும், நிலப்பிரபுத்துவமும் கொண்ட சமூகமாக, அதன் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து உயர்வானதாகக் காட்டி அதைப் பாதுகாக்க முனைகின்றது. அந்தவகையில் துணை இழந்தவரின் பாலியல் உணர்வை நலமடிப்பதுதான், சமூகம் பற்றிய அதன் பார்வையாகும்.

வடக்கு கிழக்கு யுத்தத்தின் பின்னான வாழ்வில், துணையை இழந்தவர்களின் பாலியல் ரீதியான உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நெருக்கடியில் பெண்கள் சந்திக்கும் அவலம் எல்லையற்றது. யுத்தத்தில் ஆண்களின் இழப்பு, பெண்களின் மேலான சுமையை பல மடங்காக்கியது.

பொருளாதார ரீதியான சுமை மட்டுமல்ல, தங்கள் பாலியல் ரீதியான உணர்வுகளைக் கூட மலடாக்கக் கோரும் ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்கொள்கின்றனர். பண்பாடு கலாச்சார வடிவில் அவர்களை ஒடுக்குகின்றது. மறுதளத்தில் இதே ஆணாதிக்கம் சார்ந்த பாலியல் மேலாண்மையும், பொருளாதார மேலாண்மையும், பெண்களைப் பாலியல் பண்டமாக மாற்றி நுகர்கின்றது. ஒரு எதிர்மறையான இரண்டு எதிர்விளைவுகளை குறிப்பாக வடக்கு கிழக்கு பெண்கள் சந்திக்கின்றனர்.

இந்த வகையில் ஆண் துணையை இழந்த பெண்கள் அனுபவிக்கும் வதைகள் பலமடங்காகின்றது.

1. பண்பாடு கலாச்சாரம் என்ற நிலையில், தனக்குத்தானே நலமடித்து வாழ வேண்டிய நிலையில் பெண்கள் வாழ்கின்றனர்.

2. சமூக மேலாண்மை சாhந்த ஆணாதிக்க உலகிற்கு ஏற்ப, தங்கள் சுயத்தை இழந்து பலியாகின்ற இயலாமையும் அவலமும்.

3. இரகசியமான வெளிப்படையற்ற பாலியல் நடத்தைகளை சார்ந்து சந்திக்கும், மன அழுத்தங்கமும், சீரழிவுகள்.

பெண் சந்திக்கும் எல்லையற்ற துயரங்களில், இது குறிப்பாக பங்காற்றுகின்றது. யுத்தத்தின் பின் சமூகத்தை மீள கட்டியெழுப்புதல் என்பதை பொருளாதார ரீதியான ஒன்றாக கருதுகின்ற எல்லையில், தமிழ் சமூகம் இதைக் குறுக்கிக் காட்டி அணுகுகின்றது. இது முற்றிலும் தவறானது.

முதன்மையானது உள ரீதியானது. உள ரீதியான தன்னம்பிக்கையையும், சமூக ரீதியான கூட்டுவாழ்வு முறையையும் கட்டியெழுப்புதல் தான் அனைத்தையும் விட முதன்மையானது, மையமானது. இதற்குள் இருந்து தான், பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும்.

இதில் ஆண் துணையை இழந்த பெண்களின், பாலியல் ரீதியான உணர்வுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இது பற்றி இன்று யாரும் பேசுவது கிடையாது. ஆணாதிக்க நிலப்பிரபுத்துவத்தை கடந்து பேச யாரும் தயாராகவில்லை. இதற்கு மாறான உலகமயமாதல் நுகர்வே தீர்வு என்பதைக் கடந்து தீர்வு காணத் தயாராகவில்லை. இப்படிப் பொதுவில் இதை ஒரு பிரச்சனையாக கூட இன்று அணுகுவது கிடையாது. பெண்ணியம் பேசுகின்றவர்கள் கூட, இதை நடைமுறை சார்ந்த போராட்டமாக கருதுவது கிடையாது.

"தாயின் ஈனச் செயல்" என்று கூறுவதன் மூலம் தான், இதற்கான பதிலையும், இதற்குள் தான் சமூகம் இதற்கு தீர்வு காண்கின்றது. மறுபக்கத்தில் பாலியல் ரீதியான இயற்கை உணர்வை இந்த "ஈனச்செயல்" மூலம்தான் தீர்வு காண சமூகம் வழிகாட்டுகின்றது. இதன் மூலம் இதை "ஈனச்செயலாக" கருதி கொல்லுதல் என்ற நிகழ்வு வரை அரங்கேறுகின்றது.

இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு. இங்கு அந்தப் பெண்ணின் செயலும், கொலையாளியின் செயலுக்குமான முழுப்பொறுப்பு இந்தச் சமூகம் தான். ஆணாதிக்கமும், நிலப்பிரபுத்துவம் சார்ந்த சமூகக் கண்ணோட்டமும் தான், இந்தச் செயலையும் நடத்தை நெறிகளையும் வழிகாட்டி உதவுகின்றது.

ஆண் துணையை இழந்து போன பெரும்பாலான பெண்கள், குறைந்தளவிலான ஆண்களின் இயற்கையான பாலியல் உணர்வுகளை புரிந்து கொண்டு, இதை தீர்க்கும் பொறிமுறையாக உடனடியாக மாற்று வழிகளை சமூகத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த வகையில்

1. துணையை இழந்தவர்களின் மறுமணங்களை ஊக்குவித்தல், அதற்கான உடனடியான செயற்பாடுகள்

2. வயது ஏற்றத்தாழ்வைக் கடந்த திருமணங்களை அங்கீகரித்தல்,

3. திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமணத்தில் உள்ள வயது இடைவெளியைக் குறைத்தல் (இது பாரிசில் மருத்துவர் எஸ் சிவதாஸ் உடன் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், இந்தச் சரியான கருத்து அங்கிருந்த ஒருவரால் முன்வைக்கப்பட்டது.) இதில் பல நன்மைகள் உண்டு.

இது போன்றும், சமூகத்தில் இருந்துமான வேறு பல வழிமுறைகளை இனம் கண்டு, அதை முன்வைத்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கவேண்டும்.

இதற்கு அப்பால் பாலியல் நுகர்வாக கருதாத எல்லையில், ஆணும் பெண்ணும் இணங்கி பாலியல் ரீதியாக தெரிவு செய்து வாழ்வதை, கண்டும் காணாமல் நெகிழ்ச்;சிப் போக்குடன் அணுகவேண்டியதன் அவசியத்தையும், அதையொட்டிய சமூக கண்ணோட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக கலாச்சார பண்பாடுகளைக் கொண்டு சமூகத்தை தொடர்ந்து நலமடிப்பதால், இவற்றுக்கு தீர்வு காணப்படுவதில்லை. சமூக சீரழிவையும், வன்முறையையும், மனநோயையும் தான் சமூக விழுமியமாக பெறமுடியும். இந்த வகையில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடனும், சமூக அக்கறையுள்ளவர்கள் சமூகத்தை மாற்றி அமைக்கும் பணியினையையும் கையில் எடுத்துப் போராடவேண்டும்.

 

பி.இரயாகரன்

23.04.2011