இலங்கை அரசு இனவழிப்பு யுத்தத்தை நடத்தியது மட்டுமின்றி, பல முனையில் பாரிய பல்வேறு போர்க்குற்றங்களை செய்ததும் உலகறிந்தது. புலிகளால் நலமடிக்கப்பட்ட தமிழ் மக்கள், தங்கள் சொந்த வாழ்வியல் அனுபவம் மூலம் இதை நன்கு அறிவார்கள். ஐ.நா மற்றும் மேற்கு அறிக்கைகள் தான், இதற்கு சான்று தர வேண்டும் என்று கனவு காண்பவர்கள் யார் என்றால், புலிதனத்தை அரசியலாகக் கொண்ட வலதுசாரிகள் தான். அரசு செய்தது போன்று பல போர்க்குற்றங்கள் செய்த கும்பல்தான், அதை ஆதரித்து நின்ற புலத்து புலிக் கும்பல் தான், தங்களை மூடிமறைத்து ஐ.நா அறிக்கை ஊடாக அரசியல் நடத்துகின்றனர்.

இறுதி யுத்தத்தில் மக்களை யுத்தப் பிரதேசத்தில் பணயம் வைத்தவர்கள் புலிகள். மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்காது மட்டுமின்றி, இதைக் காட்டி தம்மை பாதுகாக்க முனைந்தனர். உண்மையில் மக்களை கொல்வதை ஊக்குவித்ததன் மூலம், தாங்கள் தப்பிப் பிழைக்க முனைந்தனர். தம்மைத் தற்காத்துக்கொள்ள பிணத்தைக் காட்டி, புலிகள் அழுது புலம்பினர்.

 

 

பலியெடுப்பு மூலம் புலிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பலி கொடுப்பை தங்கள் அரசியலாக்கினர். வன்னி முதல் ஐரோப்பிய வீதிகள் வரை, இந்தப் பிண அரசியல் தான் மக்களை கொன்றது. பல பத்தாயிரம் மக்கள் இதற்காக கொல்லப்பட்டனர். கொன்றது அரசு, கொல்லக் கொடுத்தது புலி. இதுதான் அன்று அரசு மற்றும் புலியின் அரசியலாக, இதுவே யுத்த தந்திரமாக அதுவே ராஜ தந்திரமாக முன்வைக்கப்பட்டது. கொல்லக் கொடுத்து, பின் அதைக் காட்டியே புலியிஸ்ட்டுகள் புலம்பினர்.

கொன்றவன் மட்டும் இங்கு குற்றவாளியல்ல. கொல்லக் கொடுத்தவனும் குற்றவாளி தான். கொல்லக் கொடுத்தவன் கொன்றவனை குற்றவாளியாக கூறுகின்ற இன்றைய புலியிஸ்ட்டு அரசியல், அன்றைய அதே அரசியலானது. மக்களை கொல்லக் கொடுத்த கொலைகாரக் கூட்டம், அதைக்காட்டி மக்களின் நண்பனாக வேடம் போட முனைகின்றது. அன்றும் இன்றும் இதுதான் புலியிஸ்ட்டு அரசியல்.

அன்று புலியின் இந்த பலிகொடுப்புக்கு உடன்பட மறுத்து உயிர் தப்பி ஓடியவர்களை, துரோகியாகக் காட்டி அவர்களை புலிகள் கொன்றனர். 30 வருடமாக சமூகவிரோதியாக காட்டி லயிற் போஸ்டில் கட்டிவைத்து சுட்டுக் கொன்ற புலிகள், அதன் மூலம் மக்களை அச்சுறுத்தி அடக்கிவைத்தனர். இதுபோல் புலியின் பலிகொடுப்பில் இருந்து தப்பியோடிய குடும்பங்களை பிடித்த, அவர்களை சந்திகளில் அரை உயிருடன் போட்டு எர்pத்ததன் மூலம் பலியெடுப்பில் இருந்து தப்பியோடுவதற்கான தண்டனை இதுதான் என்று புலிகள் அறிவித்தனர்.

இப்படித்தான் பலிகொடுப்பும் பலியெடுப்பும் நடந்தேறியது. பலி கொடுத்த புலிகள், பலியெடுத்த அரசு பற்றி மட்டும் தொடர்ந்து பேசுவது கடைந்தெடுத்த பாசிசமாகும். பலியெடுப்பின் கோரம் தாங்காது, பலிகொடுத்த புலியிடமிருந்து மக்கள் கூட்டங் கூட்டமாக தப்பியோடிய போது, புலிகள் அவர்களை கண்மூடித்தனமாகவே சுட்டுக்கொன்றனர். இதைப் பற்றியெல்லாம் பேசாது, அரசு பற்றி மட்டும் பேசுகின்றவன் மக்களின் எதிரியாகத்தான் எப்போதும் தொடர்ந்து இருக்க முடியும்.

இந்த இனப்படுகொலையை முன்னிறுத்தி புலிகள் முதல் ஐ.நா வரை, இன்று தத்தம் சுய நலத்துடன் வே~ம் கட்டி ஆடுகின்றனர். இலங்கை அரசு, இந்தியா, சீனா ஆற்றிய பங்கை முன்னிறுத்தி நிற்கும் புலிகள் முதல் ஐ.நா வரை, இதில் தங்கள் பங்கை முற்றாக மூடிமறைக்கின்றனர்.

கடந்த 30 வருடத்தில் புலிகள் செய்த போர்க்குற்றங்கள் எண்ணில் அடங்காதவை. தாம் அல்லாதவர்களைக் கொல்லுவது, கைது செய்தவர்களையும் சரணடைந்தவர்களையும் சித்திரவதை செய்து கொல்வதையும், புலிகள் தொடர்ச்சியாக செய்து வந்தனர். புலிகள் 1996 இல் முல்லைத்தீவு இராணுவ முகாமை கைப்பற்றி, அப்பிரதேசத்ததை முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தபோது செய்த போர்க்குற்றங்கள் பாரியது. மூல்லைத்தீவு இராணுவ முகாமில் 1500 - 2000 இராணுவம் இருந்தது. அவர்கள் அனைவரையும் ஒருவர் மீதமின்றி அனைவரையும் ஈவிரக்கமின்றி கொன்றனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட, காயமடைந்த, சரணடைந்த ஒருவரையும் புலிகள் உயிருடன் விட்டு வைக்கவில்லை. அனைவரையும் கொன்றதுடன், யாரும் உயிருடன் இல்லை என்று புலிகள் அறிவித்தனர். அன்று புலியை மிஞ்சிய சிங்கள தேசிய உணர்வுடன் இராணுவம் போரடியதா!?, ஒருவரும் பிடிபடாது போராடி மரணித்தனரா என்று நாங்கள் மட்டும் கேட்டோம். அன்று நடத்திய இந்தக் போர்க்குற்றத்தை பற்றி அக்கறையற்ற புலியிஸ்ட்டு அரசியல், இன்றும் குறுகிய தளத்தில் புலம்புவது வேடிக்கையானது.

இன்று இராணுவம் செய்தது போன்று தான், புலிகள் அன்று தங்கள் கைதிகளை கொன்றனர். இராணுவத்தை மட்டுமல்ல தாம் அல்லாத அனைவரையும் கொன்றனர். சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமப்புறங்களில் புகுந்து, மக்களை கூட்டம் கூட்டமாக ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். இராணுவம் எதைச் செய்ததோ அதையே புலிகள் செய்தனர். புலிகள் முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து விரட்டிய போது, அவர்களிடமிருந்து அனைத்தையும் புடுங்கினர். இதில் சிலரை பிடித்த புலிகள், அவர்களை பற்றிய எந்த தகவல்களையும் கொடுத்தது கிடையாது. அந்த முஸ்லிம் மக்கள் அகதியாகி, மீள் குடியேற்றமின்றி 20 வருடங்கள் அங்கமிங்குமாக அனாதையாக வாழ்ந்தனர். இன்று பேரினவாத பாசிசக் கும்பல் எப்படி தங்களை நியாயப்படுத்துகின்றதோ, அப்படி தான் அன்றும் இன்றும் புலிப் பாசிட்டுகள் அனைத்தையும் நியாயப்படுத்தினர். பேரினவாத தேசியம் எப்படியோ, அப்படித்தான் குறுந் தமிழ்தேசியமும் மக்களை ஒடுக்கி துன்புறுத்தியது.

இப்படி இருக்க இலங்கை அரசின் செயலை மட்டும் தூக்கிப்பிடித்த அரசியல் செய்கின்றவர்கள் அனைவரும், புலிக்கு துணையாக அதற்கு ஆதரவாகவும் இருந்தனர். இன்றுவரை அதைப்பற்றி அக்கறையற்ற, அதை நியாயப்படுத்தி, அதை மறுத்து நிற்கின்றவர்களின் அரசியல் பொறுக்கித்தனமானது. அரச குற்றங்கள் மட்டும் பேசுகின்றவர்கள், தமிழ்மக்களின் முதல்தரமான எதிரிகளில் முதன்மையானவர்கள்.

இவர்கள் இலங்கை அரசு நடத்தியது மட்டும் தொடர்வது பேசுவது என்பது, தமிழ்மக்களை ஒடுக்குகின்ற கொல்லுகின்ற தங்கள்; கடந்தகால குறுந்தேசிய சுதந்திரத்தை பறிகொடுத்தவனின் வக்கிரமான புலம்பல்தான். இதனால் பல வழிகளில் குறுகிய இலாபம் அடைந்த கூட்டத்தின் ஓப்புத்தான், ஐ.நா அறிக்கையை காட்டி ஓப்பாரி வைக்கின்றது. அமெரிக்கா, இந்தியா, ஐ.நா என்று அதைச் சுற்றி ஓளிவட்டம் கட்டி, தான் பிழைத்துக்கொள்ள தொடர்ந்து கூலிக்கு மாரடிக்கின்றது.

 

பி.இரயாகரன்

22.04.2011