எமக்கு தெரியாது என்று கூறி, இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளமுடியாது. மன்னிக்க முடியாத குற்றங்களின் பின்னனியில் இது தொடருகின்றது. கொடூரங்களிலும் கொடூரம். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் உயிருடன் மீள வருவோமா என்ற கேள்வியுடன் தான், மீன்பிடிக்க செல்லுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் கடலை வெறித்து பார்த்து காத்து நிற்கின்றனர். இதுவே கடலில் உழைத்து வாழும் மீனவர்களின் அன்றாட வாழ்வாகிவிட்டது.

உழைத்து வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், எப்படியாவது கடலில் மீன்பிடிக்க வேண்டிய மனித அவலம்;. மக்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய அரசு, இயற்கை வளத்தை மேலும் அழித்து வாழ்வை நாசமாக்க வழிகாட்டுகின்றது. சுரண்டல், சூறையாடல் மட்டும் தான் அரசின் பொதுக் கொள்கை. இதற்குள்தான் மீனவர்கள் தொடர்ந்தும் பலிகொடுக்கப்படுகின்றனர்.

 

இந்திய அரசின் மூலதனக் கொள்கைக்கு ஏற்பத்தான், இலங்கை அரசு மீனவர்களைக் கொல்லுகின்றது. இந்த வகையில் இதற்கான முழுப்பொறுப்பும் இலங்கை அரசையே சாரும்;. இந்திய இலங்கைக் கடலில் நடத்தும் படுகொலைகள் முதல் அடாவடித்தனங்கள் அனைத்தையும் செய்வதில், இலங்கைக் கடற்படை தான் வழிகாட்டி நிற்கின்றது. இதன் பின்னணியில் இந்திய அரசு மிகத் தெளிவாக கைகோர்த்து நிற்கின்றது.

இந்த பின்னணியில் தான் அரசியல் ரீதியாக குறுகிய சுயலாபம் அடைகின்ற மூன்றாம்; தரப்பும், அரசியல் நோக்குடன் இது போன்ற படுகொலைகளை ஆங்காங்கே திட்டமிட்டு நடத்துகின்றது.

மீனவர் படுகொலை இலங்கைக் கடல் பரப்பை கடப்பதால் நடப்பதில்லை. தடை செய்யப்பட்ட மீன்பிடியை செய்வதால் நடப்பதில்லை. அதாவது இலங்கையின் இறைமையை முன்வைத்தோ, கடல் வளத்தை பாதுகாக்கவோ, மீனவர் நலன் சார்ந்தோ இந்தப் படுகொலைகள் நடப்பதில்லை.

எல்லை கடந்த செயற்பாடுகளை இது போன்ற கொலையின் பின்னணியில் நியாயப்படுத்த முனையும் இந்திய சுரண்டும் வர்க்கத்தின் செயலை எதிர்த்துதான், இலங்கை அரசு செயற்படுவதாக தன்னைத்தான் நியாயப்படுத்த முனைகின்றது. ஒடுக்கப்பட்ட மீனவர் குரலே தனது செயற்பாடாக, இலங்கை அரசு (கொலைகாரக் கும்பல்) காட்ட முற்படுகின்றது. இதை இந்திய அரசம் காட்டி நியாயப்படுத்துகின்றது. ஓடுக்கப்பட்ட மக்களின் குரலை, இந்திய இலங்கை அரசுகள் தமக்கு ஏற்ப பயன்படுத்தமுனைகின்றனர். இப்படி அரங்கேறும் மீனவர் படுகொலையை முன்பு புலி மற்றும் ஆயுதக் கடத்தலுடன் சம்மந்தப்படுத்தி, இலங்கை அரசு மறுத்து வந்தது. இன்று எல்லை கடத்தல் என்று கூறியபடி மறுக்கின்றது. உண்மையில் கொலைகளின் பின்னணியில் இலங்கை அரசு இந்தியாவின் துணையுடன் இருக்கின்றது.

இலங்கை பாசிச அரசின் அடாவடித்தனமான உள்நாட்டு வெளிநாட்டு கண்ணோட்டம் சார்ந்த சர்வாதிகாரம் உருவாக்கிய இராணுவமயமாக்கலின் விளைவுதான் இதுவும். அது தன் பாசிச மயமாக்கலைப: பலப்படுத்த தமிழ்மக்களை கொன்று குவித்தது. அதே கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டது தான், தொடரும் மீனவர் படுகொலை. இதைப் பூசிமெழுக எல்லை, தமிழன், ஆயுதக்கடத்தல், புலி… என்ற பல பத்து பொய்க் காரணங்களை காட்டுகின்றனர். இதன் பின்புலத்தை காட்டி படுகொலை செய்தபடி, தாம் அதை செய்யவில்லை என்று கூறியபடி படுகொலைக்கு மறைமுகமாக நியாயம் கற்பிக்கின்றனர்.

உலகளாவிலான ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தன்னை பலப்படுத்தி பாசிசமயமாக்கிய இலங்கை அரசு, அதன் தொடரான சர்வதேச நெருக்கடிக்களை இன்று சந்திக்கின்றது. இதனால் இலங்கையின் வளத்தை, இதற்கு எதிராக தாரை வார்க்கின்றது. இறையாண்மையை முன்னிறுத்தி, இலங்கையின் தேசிய வளங்களை முரண்படும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நாடுகளுக்கு தாரை வார்த்து தன்னை தக்கவைக்க முனைகின்றது. இந்த வகையில் இலங்கையை மேற்கிடம் இருந்து பாதுகாப்பதாக காட்டிக்கொண்டு, இந்தியா இலங்கையை சூறையாடுகின்றது.

இந்த வகையில் கடலையும் இலங்கை தாரை வார்க்கின்றது. இதற்காக கடலை மீனவர்களிடம் இருந்து தூய்மையாக்க முனைகின்றது. நிச்சயமாக இந்திய அனுசரணையுடன், இந்திய நலனுடன் தான். இந்திய மூலதனத்தின் கூலிப்படையாகத்தான், இலங்கையின் செயல்கள் அமைகின்றது. இந்திய மீனவர்களை கொல்லுதல், இந்திய மூலதனத்தின் நலனுக்குத்தான்;. புலிகளை அழித்த யுத்தத்தில் எப்படி இந்தியாவின் பங்கு இருந்ததோ, அப்படித்தான் கடல் படுகொலையிலும் இந்தியாவின் திட்டமிட்ட வழிகாட்டல் துல்லியமானது.

இதில் இந்தியா உள்நாட்டு அரசியல் சூழலுக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்துடனான படுகொலையில் அத்துமீறி நடப்பது, பொது வழிகாட்டலில் உள்ள குறிப்பான விதிவிலக்கான நிகழ்ச்சியாகும். அதாவது பொது வழிகாட்டலைக் கடந்து, குறுகிய உணர்வுக்கு உட்பட்ட படுகொலைகளும் இதற்குள் தான் அரங்கேறுகின்றது.

கிரிக்கெட்டில் இலங்கை தோற்றால் தான் மீனவர் படுகொலை என்ற தமிழக மீனவர்களின் அனுமானம், வெற்றிடத்தில் இருந்து உருவாகவில்லை. மாறாக இலங்கை அரசு உருவாக்கியுள்ள குறுகிய பெருந்தேசிய வாதமும், குறுகிய தேசியவாதம் சார்ந்த இலங்கை கடற்படையின் பொதுவான நடத்தை நெறி சார்ந்து அனுபவத்தில் இருந்து மீனவர்களின் குற்றச்சாட்டு வெளிப்படுகின்றது.

இந்த இலங்கை அரசு இப்படிப்பட்டதுதான் என்பது, இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு சார்ந்த அனுபவம் கூட. ஒடுக்கப்பட்ட இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அதே பாசிச அரசை, இந்திய மீனவர்கள் கடலில் சந்திக்கின்றனர். இந்த வகையில் தமிழக மீனவர்கள் இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்;றிணைந்து இதை இனம் கண்டு போராடுவதன் மூலம் தான், இதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். வேறு எந்த குறுக்கு வழியிலுமல்ல.

 

பி.இரயாகரன்

16.04.2011