உட்படுகொலை முதல் பலவிதமான மனிதவிரோத அராஜகத்தை செய்த குற்றவாளிகள் முதல், இதை எதிர்த்துப் போராடியவர்களை குற்றவாளியாக்குகின்ற இன்றைய வலதுசாரிய குப்பைகள் வரை, ஓரே அடிப்படையைக் கொண்டு அவர்கள் தம்மைத்தாம் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அவர்கள் தம்மை நியாயப்படுத்த, இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் தாம் அல்லாத எஞ்சிய உறுப்பினர்கள் பற்றி அக்கறைப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அதைச் சார்ந்து நின்றதாகவும், சார்ந்து நிற்பதாகவும் கூறிக்கொண்டு தான், தங்கள் அரசியல் வண்டவாளங்களை இன்றும் அரங்கேற்றுகின்றனர்.

ஏன் தாங்கள் கூட இயக்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுகொண்டது கிடையாது என்றும், எஞ்சிய உறுப்;பினர்களின் பாதுகாப்புக்காகத்தான் அங்கு தாம் தொடர்ந்து நீடித்ததாக கூறுகின்ற புரட்டுகளையும் கூட முன்வைக்கின்றனர். இப்படி இடதுசாரியத்தை எதிர்க்கின்ற வலதுசாரியக் கும்பல், எஞ்சிய உறுப்பினரைப் பற்றிய கவலையின்றி சென்றதாக இன்று குற்றஞ்சாட்டுகின்ற புரட்டுகளோடு, இங்கு ஒன்றாகக் கூடிக் கும்மியடிக்கின்றனர்.

அன்று வெளியேறியவர்களை வேட்டையாட அலைநது;திரிந்த ஜென்னி, தான் கூட நேசனின் மனநிலையில் இருந்ததாக இன்று கூறுகின்றார். தான் அமைப்பில் இருந்தது அமைப்பை நம்பி வந்த பெண்களைப் பாதுகாக்கத்தான் என்கின்றார். இதனால் தான் புளட்டில் தொடர்ந்ததாக வேறு கூறுகின்றார். இந்தக் கொலைகார கும்பலுடன் நீடித்தவரும், அசை போட்டு இன்று இனியொரு என்ற இனவாத இணையம் நடத்தும் அசோக்கிடம் இதுபற்றி நாம் முன்பு பேசிய போது, தம்மை நம்பி வந்தவர்களை பாதுகாக்கத்தான் தாம் புளட்டில் தொடர்ந்து இருந்ததாக கூறினார். ஏன் ஈ.என்.டி.எல்.எவ்.வுடன் கூட இதற்காகத்தான் சேர்ந்து இருந்ததாக வேறு கூறினார். இப்படி அவர் எமக்குக் கூறியதை இன்று மறுத்தாலும்;, இப்படியான கருதுகோள்கள் பலரால் முன்வைக்கப்பட்டது. பலர் தாங்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருந்து செய்த அட்டகாசத்தை நியாயப்படுத்த, இப்படித்தான் அதற்கு இன்று நியாயம் கற்பிக்கின்றனர். அரசியலில் நீடிக்கும் இவர்கள் எவரும், கடந்தகாலத்தில் தம்மைச் சுற்றி நடந்தது என்ன என்பதைச் சொல்லவில்லை. தேசம்நெற்றில முகமூடியுடன் உலவும் பல்லி, இயக்கத்தில் எஞ்சிய உறுப்பினர்களைக் காட்டித்தான், வெளியேறியவர்களைக் குற்றஞ்சாட்டி தங்கள் இடதுசாரிய எதிர்ப்பை அவதூறாக்குகின்றார்.

கொலைகாரர்களையும், கொலைகாரருக்கு உடந்தையாக இருந்தவர்களையும், அவர்களின் அரசியலையும் பாதுகாக்க, இதற்கு எதிராகப் போராடியவர்களையும் வெளியேறியவர்களையும் குற்றஞ்சாட்டுகின்ற அபத்தத்தைப் பார்க்கின்றோம். இப்படி கொலைகாரருக்கு ஆதரவாக குற்றஞ்சாட்டுகின்றவர்கள், அன்று போராடி வெளியேறியவர்களின் தனிநபர் பாத்திரம் மற்றும் அரசியல்வழி பற்றியும், பொதுவான தவறுகள் பற்றியும் கேள்வி எழுப்புவது என்பது எந்த அரசியல் நேர்மையின் பாலானதுமல்ல. மக்களைச் சார்ந்து நிற்கின்ற இடதுசாரி அரசியலால் மாத்திரம் தான் சாத்தியமானது. இப்படிப் போராடியவர்களே, அதை எழுப்ப முடியும்;. அதுபோல் அன்றைய போராட்டம் சரியானது என்று அரசியல் ரீதியாக ஏற்றுக்கொண்டு தான் இன்று அதை எழுப்பமுடியும். இப்படி அரசியல் ரீதியாக அங்கீகரிக்காத, அதற்காக அன்றும் இன்றும் போராடாத எவரும், இதை எழுப்புவது என்பது மக்கள் விரோத அரசியலை அடிப்படையாகக் கொண்டதாகும்.

கொலைகாரர்களும், கொலைக்கு ஆதரவான அரசியல் வியாக்கியானங்களும் தொடர்ந்து சேறடிக்கின்ற, அதை முதன்மைப்படுத்தி நிற்கின்ற அரசியல், மக்களைச் சாராத இடதுசாரிய எதிர்ப்பின் அரசியல் வெளிப்பாடாகும்.

இந்த மக்கள் விரோத அரசியல்தான், இடதுசாரிய போராட்டம் மற்றும் வெளியேற்றத்தைத் தொடர்ந்து எஞ்சிய உறுப்பினர் பற்றி தாம் அக்கறைப்படுவதாக பாசாங்கு செய்கின்றது. இது உண்மையானதா!? போராடி வெளியேறியவர்கள், எஞ்சியவர்கள் பக்கத்தில் நிற்கவில்லையா?

அவர்கள் தர்க்கப்படி, பலமுனையில் போராடி வெளியேறியவர்கள், போராடாது தலைமையின் போக்குடன் இணைந்து சென்று இருந்தால் என்ன நடந்திருக்கும். இன்னும் இன்னும் உள்ளியக்கப் படுகொலை மட்டுமின்றி, மக்கள் மேலான தொடர் படுகொலைகளும், இறுதியில் புலி அழிப்பில் மேலும் பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டும் இருப்பர். இறுதியில் புளட் இந்திய இலங்கைக் கைக்கூலியாக இருந்து செய்த அட்டகாசங்கள், தொடர்ந்து பலமடங்கு பலத்துடன் நடந்திருக்கும். வெளியேறியவர்கள் அன்று வெளியேறவில்லை என்றால், எஞ்சியவர்கள் என்று அதில் யாருமில்லை. இதுதான் பல்லி போன்ற வலதுசாரிகளின் தர்க்கத்தின், எதிர்மறையான அரசியல் விளைவாகும். உட்படுகொலைகள் பல மடங்காக நடந்திருக்கும். பொதுஜனங்கள் மேலான அராஜகம், மேலும் பலமுனையில் வரைமுறையின்றி நடந்திருக்கும்.

இதற்கு மாறாக பலமுனையில் நடந்த அன்றைய வெளியேற்றம், அதைத் தொடர்ந்து புளட் அம்பலமாகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பு உதிர்ந்து அழியத்தொடங்கியது. இதுதான் புளட்டின் சித்திரவதையையும், கொலைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்;தது. மக்களை தொடர்ந்து ஏய்ப்பதை சாத்தியமற்றதாக்கியது. எஞ்சிய உறுப்பினர்களை சுதந்திரமாக, அச்சமின்றி வெளியேற வைத்தது. தொடர்ந்து உள்ளிருந்தவர்கள், இதைத் தடுத்து பழைய வடிவத்தை தொடர்ந்தும் தக்கவைத்து பாதுகாக்க முற்பட்டனர். இதைத்தான் ஜென்னி, அசோக், குமரன் … போன்றவர்கள், வௌ;வேறு அளவில் செய்தனர். அவர்கள் என்ன செய்தனர் என்பதை அவர்கள் சொல்லாதவரை, மற்றவர்கள் பற்றி அவர்கள் வாய் திறவாதவரை, ஒருவரை ஒருவர் பாதுகாத்து அதை மூடிமறைக்கின்றனர். இதை 25 வருடமாக செய்தவர்கள், செத்தவர்களின் பெயரில் இன்று பல புலுடாக்களை விடுகின்றனர். இப்படி இவர்கள் புளட்டை தக்கவைக்க எடுத்த முயற்சி, பல மனிதவிரோத செயற்பாட்டாலானது.

அன்று உள்ளியக்கப் படுகொலைகள், வெளிஇயக்க நடத்தைகளால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுத்தவர்களும், இதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் தான் பலமுனையில் போராடி வெளியேறினர். இந்த வெளியேற்றத்தை குற்றஞ்சாட்டுகின்ற பொறுக்கித்தனத்தை இன்று பார்க்கிறோம். இப்படிப் போராடிய பலர், அன்றைய தேசிய விடுதலைப்போராட்டம் என்ற அலையில் சென்றவர்கள தான்;. அவர்கள் அங்குதான் போராட்டம் என்றால் என்ன என்பதையும், எதிர்ப்புரட்சிக்கு எதிரான எதிர்மறையில் தான் தான் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்;. அவர்களின் அறிவும், அறியாமையும் என்பது இணைந்து தான் இந்த எதிர்ப்புரட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொண்டது. அவர்களின் பொதுவான பூர்சுவா வர்க்க அடிப்படையும் சேர்ந்து, அதை தீர்மானகரமாக வழிநடத்தியது. இங்கு இடது கண்ணோட்டம் கொண்ட புரட்சிகர அரசியல் கூறுகளையும், நேர்மையின ;பாலான மனித உணர்வையும் கொண்டு இது வெளிப்பட்டது.

இப்படி போராடியவர்கள் எவரும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. போராடச் சென்று, அங்கு எதிர்மறையில் கற்றுக்கொண்டவர்கள். இவர்கள் கூட கல்வி முதல் தங்களைச் சுற்றிய இயல்பான வாழ்வைத் துறந்துதான் இயக்கத்துக்குச் சென்றனர். வெளியேறியவர்கள், இயக்கத்தில் எஞ்சியவர்கள் இடையில், இதில் வேறுபாடு கிடையாது. இதில் மேற்கு புலம் பெயர்ந்தவர், இந்தியா இலங்கையில் தங்கியவர் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.

தேசிய போராட்டத்தின் எழுச்சியில், அவர் அவரின் தெரிவுதான் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டதாகும். இந்த அலையில், அறியாமையில், பித்தலாட்ட பிரச்சாரங்களில் நம்பிச் செல்ல, இலங்கை அரசின் ஒடுக்குமுறையும் இந்தியா இதை வீங்கவைத்த வேகமும் இதன் மேல் குறிப்பாக பங்காற்றியது.

இந்த உண்மையை உணர்ந்து அதை வெளிப்படுத்தி போராடி மடிந்தவர்கள் போக, தப்பிப்பிழைத்து விலகியவர்களை குற்றஞ்சாட்டுகின்ற அரசியலும், அதன் நோக்கமும் மக்களைச் சார்ந்ததல்ல.

தொடரும்

பி.இரயாகரன்

15.03.2011

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

2. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 2

3. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 3

4 .புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 4