இந்தியா, இசுரேல், ரசியா, துருக்கி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அந்நாடுகளின் நிலவரம் பற்றி அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்த இரகசியக் கடிதங்களை, விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

 

இந்த இரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களையும், அதன் திமிரையும் வெட்டவெளிச்சமாக்கும் என்பதால், அமெரிக்க அரசு விக்கலீக்ஸ் நிர்வாகத்தை மிரட்டி இந்த ஆவணங்கள் வெளிவராமல் தடுக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துபோனது.

 

அமெரிக்கத் தூதரகங்கள் பல்வேறு நாடுகளில் உளவு அமைப்பைப் போலச் செயல்பட்டு வருவதும், ஜ.நா. மன்றத்தின் உயர் அதிகாரிகளைக்கூட அமெரிக்கா உளவு பார்த்துவருவதும் இப்பொழுது எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி அம்பலமாகிவிட்டது.

 

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வந்த அணுசக்தி ஒப்பந்தம், இராணுவக் கூட்டுறவு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பியிருக்கும் கருத்துகள் இதன் மூலம் அம்பலத்துக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்திய அரசின் அமெரிக்க அடிமைத்தனம் மேலும் அம்பலமாகக் கூடும் என்பதால் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சுகளும் அதிகாரிகளும் அரண்டு போய்யுள்ளனர்.