அறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன?

 



“பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி…..” குரான் 16:69

“….. இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்…….” குரான் 24:43

“அது சிறப்பான விருந்தா அல்லது ஜக்கூம் என்ற மரமா?…… நிச்சயமாக அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்…..பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்” குரான் 37:62‍,67

“சீழ் நீரைத்தவிர அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை” குரான் 69:36

“அவர்களுக்கு விஷச் செடிகளைத்தவிர வேறு உணவில்லை” குரான் 88:6


மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திலிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், அந்த இடத்தில் ‘தமர்’ என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பழத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பழத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை, பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார், அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குரானில்.



வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி “அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்” என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம். நம்புங்கள் குரான் எல்லாம் வல்ல அல்லா இறக்கியருளியது தான்.


அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?


சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.



குரான் மீது மதவாதிகள் ஏற்றிவைத்திருக்கும் புனிதக்கனம் தாளாமல் அது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாம் அறிந்தவன் எக்காலமும் உணர்ந்தவன் என்றெல்லாம் தட்டப்பட்ட ஒளிவட்டங்களே இன்று அப்படி ஒன்றிலிருந்து வந்திருந்தால் இதுபோன்ற வசனங்கள் கிளைத்திருக்குமா எனும் ஐயங்களை நேரியவர்கள் நெஞ்சில் விதைத்துக்கொண்டிருக்கிறது. எந்த வசனங்களைக் கொண்டு அறிவியல் என்றும் முன்னறிவிப்பு என்றும் புருடா விட்டார்களோ அந்த குரானின் வசனங்களே அவர்களை சாயம் வெளுக்கச் செய்துகொண்டிருக்கிறது.


இத்தொடரின் முந்தைய பகுதிகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….