மாபெரும் தோழர் ஸ்டாலின் அவர்களை மறுதலித்து சவக்கிடங்கில் இருந்த டிரட்ஸ்கியவாதிகளுக்கு குருசேவ் உயிரூட்டினார். அன்று குருசேவ் கும்பல்களும் டிராட்ஸ்கியவாதிகளும் ஸ்டாலின் மீது எவ்வளவுதான் அவதூறுகளை அள்ளி வீசியபோதும் உலகெங்குமுள்ள உண்மையான மார்க்சிய-லெனினியவாதிகளின் மனங்களில் இருந்து தோழர் ஸ்டாலின் அவர்களை அகற்ற முடியவில்லை.

இன்று மீண்டும்  தங்களைத் தாங்களே மாக்சியவாதிகள் என அழைத்துக்கொள்ளும் சிலரஇ; தோழர் ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்வதாக கூறிக்கொண்டு அவரை முழுமையாக மறுதலிக்க முயற்சி செய்கின்றனர். டிராட்ஸ்கியவாதிகள் மற்றும் குருசேவ்கும்பல்கள் போன்று இவர்களுடைய நோக்கமும் நிறைவேறப் போவதில்லை. மாறாக உண்மையான கம்யுனிஸ்ட்டுக்கள் தோழர் ஸ்டாலின் அவர்களையும் அவர் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய-லெனினியத்தையும் உயர்த்திப்பிடிப்பார்கள் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் ஸ்டாலின் எவ்வாறு விமர்சிக்கப்பட வேண்டும்?

 
ஸ்டாலின் பிரச்சனை பற்றி எவ்வாறு அணுக வேண்டும்?

 
என்பன குறித்துஇ மாபெரும் விவாதத்தின்போது தோழர் மாசேதுங் தலைமையிலான சீனக் கம்யனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் “செங்கொடி” மற்றும் “மக்கள் தினசரி”யில் கட்டுரைகளாக வெளிவந்தன. அவற்றை இங்கு மீண்டும் முன்வைக்கிறோம். இவை ஸ்டாலின் பிரச்சனை பற்றி அணுகுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

 
தோழர்.பாலன்
30.08.2010

ஸ்டாலின் பற்றிய பிரச்சனையின் மீது ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதத்தின் மீதான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் இரண்டாவது விமர்சனம்.


“மக்கள் தினசரி” “செங்கொடி” பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்கள் (செப் 13.1963 )

ஸ்டாலின் பற்றிய பிரச்சனை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. அது ஒவ்வொரு நாட்டிலும் அனைத்து வர்க்கங்களிடையேயும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரச்சனையாகும். பல்வேறு வர்க்கங்களும் அவற்றின் அரசியல் கட்சிகளும் குழுக்களும் வௌவேறு கண்ணோட்டங்களில் இன்றைக்கு பெரும் விவாதத்திற்குள்ளாகிய ஒரு விடயமாக அது இருக்கின்றது. இந்தப் பிரச்சனைக்கு இறுதிமுடிவு இந்த நூற்றாண்டில் அடைய இயலாது எனத் தோன்றுகிறது. ஆனால் இப் பிரச்சனையில் சர்வதேச உழைக்கும் வர்க்கம் மற்றும் புரட்சிகர மக்களின் பெரும்பான்மையினரிடையே கிட்டத்தட்ட ஒரு ஏகோபித்த உடன்பாடு இருக்கிறது. அதாவது அவர்கள் ஸ்டாலினை முழுவதுமாக மறுப்பதை அங்கீகரிக்கவில்லை. மாறாக மேலும் மேலும் அவரது நினைவைப் போற்றிப் பேணி வளர்த்து வருகின்றனர். ரஸ்சிய நாட்டின் விடயத்திலும்கூட இதுவே உண்மை. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான எங்களது கருத்து வேறுபாடு என்பது மக்களின் ஒரு பகுதியினருடனானதாகும். புரட்சிகர இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்களையும் இக் கருத்துக்கு இணங்கச் செய்துவிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் இதுவே.


“தனி நபர் வழிபாட்டை எதிர்ப்பது” என்ற சாக்கில் தோழர் குருசேவ் ஸ்டாலினை முழுவதுமாக மறுத்த போது அவர் (குருசேவ்) மிகவும் தவறாகவும் உள்நோக்கம் கொண்டவராகவும் இருந்தார் என்று சீனக் கம்யுனிஸ்ட் கட்சி எப்போதும் கருதி வந்திருக்கிறது.


இந்த தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டம் என்பது தலைவர்கள், கட்சி, வ ர்க்கம், பொதுமக்கள் ஆகியோருக்கிடையிலான பரஸ்பர உறவு பற்றிய முழுமை பெற்ற லெனின் போதனைகளை மீறுவதாகும் என்றும் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கம்யுனிசக் கொள்கையின் அடிப்படைகளையே அழிப்பதாகும் என்றும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஜீன் 14 தேதியிட்டு தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளது.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதம் கொள்கை வழிப்பட்ட எங்கள் வாதங்களுக்கு பதில் எதுவும் சொல்வதைத் தவிர்க்கிறது. ஆனால் வெறுமனே சீனக் கம்யுனிஸ்ட் கட்சியை “தனிநபர் வழிபாட்டின் ஆதரவாளர்கள்”,“ஸ்டாலினுடைய தவறான கருத்துக்களைக் கூவி விற்பவர்கள்” என்று முத்திரை குத்துகிறது.


மென்~;விக்குகளை எதிர்த்துப் போராடியபோது லெனின் சொன்னார் “கொள்கை ரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒரு வாதத்திற்கு பதில் சொல்லாமல் அவன் மீது இரக்கம் காட்டுவதாக சொல்வது விவாதிப்பதாக பொருளாகாது. மாறாக  அவதூறு செய்ய முயல்வது ஆகும்”. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி தனது பகிரங்க கடிதத்தில் காட்டியுள்ள மனப்பான்மையானது மென்~;விக்களுடைய மனப்பான்மையுடன் துல்லியமாகப் பொருந்துவதாகும்.


பகிரங்கக் கடிதமானது விவாதத்திற்கு பதிலாக அவதூறு செய்வதை மேற்கொண்ட போதிலும் நாங்கள் கொள்கை ரீதியான விவரங்கள் மூலமாகவும் மறுக்க முடியாத உண்மைகள் மூலமாகவும் அதற்கு பதில் அளிக்க விரும்புகிறோம்.


மாபெரும் ரஸ்சிய நாடு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முதல் அரசாக இருந்தது. துவக்கத்தில் இந்த நாட்டின் அரசாங்கம் மற்றும் கட்சியின் தலைசிறந்த தலைவராக லெனின் இருந்தார். லெனினுடைய மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் அவ்வாறு இருந்தார்.


லெனினுடைய மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் ரஸ்சிய நாட்டின் கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவராக ஆனது மட்டுமல்ல சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் ஆனார்.


அக்டோபர் புரட்சியினால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் சோசலிச அரசு தோன்றி 46 ஆண்டுகள்தான் ஆகின்றன. இதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்த அரசின் தலை சிறந்த தலைவராக ஸ்டாலின் இருந்தார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்றிலும் சரி, சர்வதேச கம்யுனிச இயக்க வரலாற்றிலும் சரி, ஸ்டாலினுடைய செயல்பாடுகள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.


ஸ்டாலினை எவ்வாறு மதிப்பிடுவது, ஸ்டாலினைப் பற்றி என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என்பது ஸ்டாலினை மட்டுமே மதிப்பிடும் ஒன்றல்ல, மிக முக்கியமாக, லெனின் மறைவில் இருந்து சர்வதேச கம்யுனிச இயக்கம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்று அனுபவங்களை எவ்வாறு தொகுப்பது என்ற பிரச்சனையாகும் என்ற நிலையை சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது.


ரஸசிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது பேராயத்தில் தோழர் குருசேவ் ஸ்டாலினை முழுவதுமாக மறுதலித்தார். சர்வதேச கம்யுனிச இயக்கம் முழுவதையும் பாதிக்கக்கூடிய இந்த கொள்கைரீதியான பிரச்சினையைப்பற்றி அவர் முன்கூட்டியே சகோதரக் கட்சிகளிடம் கலந்தாலோசிக்கத் தவறினார். ஆனால் பிறகு அக் கட்சிகளின் மீது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றைத் திணிக்க முயற்சி செய்தார். ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைமையின் கருத்திலிருந்து மாறுபட்ட வகையில் ஸ்டாலின் பற்றிய மதிப்பீட்டுக்கு வந்தவர்களை “தனிநபர் வழிபாட்டின் பாதுகாவலர்கள்” என்றும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுபவர்கள் என்றும் வர்ணிக்கப்பட்டனர். ஆனால் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் வரலாற்று அனுபவத்தின் சர்வதேச முக்கியத்துவத்தையோ அல்லது சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் தலைவராக ஸ்டாலின் இருந்தார் என்ற வரலாற்று உண்மையையோ யாரும் மறுக்க முடியாது. இதன் விளைவாக ஸ்டாலின் பற்றிய மதிப்பீடு சர்வதேச கம்யுனிச இயக்கம் முழுவதையும் பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய கொள்கைப் பிரச்சனையாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியானால் பிற சகோதரக் கட்சிகள் ஸ்டாலினைப் பற்றிய யதார்த்தமான ஆய்வையும் மதிப்பீட்டையும் மேற்கொள்வதை ரசிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் எந்த அடிப்படையில் அனுமதிக்க மறுக்கிறார்கள்?


ஸ்டாலினுடைய சிறப்பு அம்சங்களையும் குறைபாடுகளையும் பற்றி முழுமையான விஞ்ஞானரீதியான ஆய்வை வரலாற்றுப் பொருள்முதவாத அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு, ஸ்டாலினை முழுவதுமாக மறுதலிக்கக்கூடிய அகவயமான பண்பாடற்ற கருத்து முதல்வாத வரலாற்று ஆய்வு முறையையும் தான்தோன்றித்தனமான வரலாற்று புரட்டலையும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.


ஸ்டாலின் சித்தாந்த மற்றும் சமூக வரலாற்று வேர்களைக் கொண்ட தவறுகளைச் செய்தார் என்பதை சீனக் கம்யுனிஸ்ட் கட்சி இடைவிடாது கூறி வந்துள்ளது. ஸ்டாலின் உண்மையாகவே புரிந்த தவறுகளை விமர்சிப்பது அவசியம். அடிப்படையில்லாமல் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அல்ல. மேலும் ஒரு சரியான நிலைப்பாட்டில் இருந்து சரியான முறைகளில் அது செய்யப்பட வேண்டும். ஆனால் நாங்கள் ஸ்டாலின் பற்றிய முறையற்ற விமர்சனத்தையும் தவறான நிலைப்பாட்டில் இருந்து தவறான முறைகளில் செய்யப்படும் விமர்சனத்தையும் இடைவிடாது எதிர்த்து வந்துள்ளோம்.


லெனினுடைய வாழ்க்கைக் காலத்தில் ஸ்டாலின் ஜாரிசத்தை எதிர்த்துப் போராடினார். மார்க்சியத்தை பிரச்சாரம் செய்தார். லெனின் தலைமையிலான போல்~;விக் கட்சியின் மத்திய கமிட்டியின் உறுப்பினர் ஆன பிறகு 1917 புரட்சிக்கு வழிவகுத்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அக்டோபர் புரட்சிக்கு பிறகு அவர் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பலன்களை பாதுகாக்க போராடினார்.


லெனின் மறைவுக்கு பிறகு உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளை எதிர்த்து தீர்மானகரமாகப் போராடுவதிலும் உலகின் முதல் சோசலிச அரசை பாதுகாப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் ரஸ்சிய மக்களையும் அவர் வழி நடத்தினார்.


சோசலிச தொழில் மயமாக்கல் பாதை, விவசாயக் கூட்டுப்பண்ணை முறை ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதிலும் சோசலிச மாற்றம் சோசலிச கட்டுமானம் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளை ஈட்டுவதிலும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் ரஸ்சிய மக்களையும் அவர் வழி நடத்திச் சென்றார்.


பாசிச எதிர்ப்பு யுத்தத்தின் மாபெரும் வெற்றிக்கான கடுமையான நெடிய போராட்டத்தில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் ரஸ்சிய மக்களையும் ரஸ்சிய ராணுவத்தையும் அவர் வழி நடத்திச் சென்றார். பல்வேறு வகை சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும், டிராட்ஸ்கியவாதிகள, ஜீனோ

வாதிகள், புகாரின்வாதிகள் மற்றும் பிற முதலாளித்துவ ஏஜென்டுகள் ஆகிய லெனிய விரோதிகளுக்கு எதிராகவும் நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் மார்க்சிய- லெனியத்தைப் பாதுகாத்து வளர்த்தார்.


அழிக்க முடியாத மார்க்சிய- லெனிய படைப்புகளாக விளங்கும் ஏராளமான கோட்பாட்டு ரீதியான படைப்புகள் மூலமாக ஸ்டாலின் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கு நிரந்தரமான பங்களிப்பை செய்துள்ளார்.


சீனமக்கள் உட்பட அனைத்து மக்களின் புரட்சிகர போராட்டங்களுக்கு பெருமளவு உதவக் கூடிய பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு முற்றிலும் பொருந்திய அயலுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் ரசிய கட்சி மற்றும் அரசாங்கத்தை ஸ்டாலின் வழி நடத்தினார்.


ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அனைத்து எதிர்ப் புரட்சியாளர்களின் இணக்கமற்ற எதிரியான ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை வழி நடத்திச் செல்வதில் வரலாற்றுப் பேரலைகளின் முன்னனியில் நின்றார்.


ஸ்டாலினுடைய நடவடிக்கைகள் மாபெரும் ரசிய கம்யுனிஸ்ட் கட்சியின், மாபெரும் ரசிய மக்களின் போராட்டங்களுடன் மிக நெருக்கமாகவும் உலக முழுவதிலுமுள்ள மக்களின் புரட்சிகர போராட்டங்களுடன் பிரிக்க முடியாத வகையிலும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.


ஸ்டாலினுடைய வாழ்க்கை ஒரு மாபெரும் மார்க்சிய- லெனியவாதியின் வாழ்க்கையாகும். ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்க புரட்சியாளரின் வாழ்க்கையாகும்.


ஒரு மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியும், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளருமாகிய ஸ்டாலின் ரஸ்சிய மக்களுக்கும் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கும் மகத்தான பணி புரிந்துள்ள அதே வேளையில் சில தவறுகளையும் செய்துள்ளார் என்பது உண்மையே. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தனக்கு முன்னுதாரணமாக பின்பற்றி செல்ல எதுவும் இல்லாத காலத்தில் ஸ்டாலின் இழைத்த சில தவறுகள் கொள்கை ரீதியானவை. ஒரு சில தவறுகள் நடைமுறைப் பணிகளின் போக்கில் இழைக்கப்பட்டவை. சில தவர்க்கப்பட்டிருக்கக் கூடியவை. சில மிக அரிதாகவே தவிர்க்கப்பட்டிருக்க முடியும்.


தனது சிந்தனை முறையில் ஸ்டாலின் ஒரு சில பிரச்சனைகளில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்திலிருந்து விலகி இயக்க மறுப்பியல் மற்றும் அகநிலைப் போக்கிற்கு இரையானார். அதன்விளைவாக சில சமயங்களில் யதார்த்தத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகிச் சென்றார். கட்சியின் உள்ளேயும் வெளியேயும் நடந்த போராட்டங்களில் ஒரு சில சமயங்களில் ஒரு சில பிரச்சனைகளில் இயல்வாகவே மாறுபட்டுள்ள இரண்டுவகையான முரன்பாடுகளை –அதாவது நமக்கும் எதிரிக்கும் உள்ள முரண்பாட்டையும் மக்களுக்கிடையே உள்ள முரண்பாட்டையும் அவர் போட்டுக் குழப்பிவிட்டார். மேலும் அவற்றைக் கையாள்வதில் தேவைப்படும் வேறுபட்ட முறைகளையும் குழப்பிக் கொண்டார். ஸ்டாலின் எதிர்ப்புரட்சியை நசுக்குவதில் ஈடுபட்டபோது தண்டிக்கப்படவேண்டிய பல எதிர்புரட்சியாளர்கள் உரிய தண்டனையைப் பெற்றார்கள். அதே சமயத்தில் சில நிரபராதிகளும் தவறாக தண்டிக்கப்பட்டார்கள். 1937லும் 1938லும் எதிர்ப் புரட்சியாளர்களை நசுக்குவதை பெருமளவில் விரிவாக்கும் தவறு நிகழ்ந்தது. கட்சி மற்றும் அரச அமைப்புகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவர் பாட்டாளிவர்க்க ஜனநாயக மத்தியத்துவத்தை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதை அவர் மீறினார். சகோதரக்கட்சிகள் மற்றும் நாடுகளது உறவுகளைக் கையாள்வதில் அவர் சில தவறுகளைப் புரிந்தார். சர்வதேச கம்யுனிச இயக்கத்திலும் அவர் சில மோசமான ஆலோசனைகளை வழங்கினார். இத் தவறுகள் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கும் ரஸ்சிய நாட்டுக்கும் சில இழப்புகளை ஏற்படுத்தின.


ஸ்டாலினுடைய தகுதிகளும் தவறுகளும் வரலாற்று ரீதியான புறநிலை யதார்த்த வகைப்பட்டவை. இரண்டையும் ஒப்பிடும்போது அவருடைய நிறைகள் அவருடைய தவறுகளைக் காட்டிலும் மிகுதியானவை என்பதைக் காணமுடிகிறது. அவர் பிரதானமாக சரியானவராக இருந்தார். அவருடைய தவறுகள் இரண்டாம் பட்சமானவையாகவே இருந்தன. ஸ்டாலினுடைய சிந்தனைகளையும் பணிகளையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து பார்க்கும்போது ஒவ்வொரு நேர்மையான கம்யுனிஸ்ட்டும் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுக்கு மதிப்பு கொடுத்து ஸ்டாலினிடம் இருந்த பிரதானமானவற்றை முதலில் கவனிப்பான். எனவே ஸ்டாலினுடைய தவறுகள் சரியான வகையில் மதிப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டு களையப்படும்போது ஸ்டாலினுடைய வாழ்க்கையில் பிரதானமாக இருந்தவற்றை பாதுகாப்பதும் ,அவர் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய-லெனியத்தைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.


இரண்டாம் பட்சமானவையாக மட்டுமே இருந்த ஸ்டாலினுடைய தவறுகள் வரலாற்றுப் படிப்பனையாக எடுத்துக் கொள்ளப்படுமாயின் அது பயனள்ளதாக இருக்கும். ரஸ்சியா மற்றும் பிற நாடுகளது கம்யுனிஸ்டுகள் அந்த தவறுகளை மீண்டும் இழைக்காமலிருப்பதற்கு அல்லது தவறுகளை குறைத்துக் கொள்வதற்கு இந்தப் படிப்பினைகள் எச்சரிக்கையாகப் பயன்படும். நேர்மறை மற்றும் எதிர் மறையானவரலாற்றுப் படிப்பினைகள், அவை வரலாற்று உண்மைகளைத் திரித்துப் புரட்டாமலும், சரியாகத் தொகுத்தும், உறுதிசெய்யப்பட்டும் இருப்பின் அவை அனைத்து கம்யுனிஸ்டுக்களுக்கும் பயனுள்ளவையாக இருக்கும்.


பல தவறுகள் இருப்பினும் மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளராக இருந்த பெபல், ரோசாலுச்சம்பர்க் போன்றவர்களுடன் மார்க்சியவாதிகளின் அணுகுமுறை, இரண்டாவது அகிலத்தின் திரிபுவாதிகளுடனான அணுகுமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று லெனின் பல சமயங்களில் சுட்டிக்காட்டினார். மார்க்சியவாதிகள் இவர்களுடைய தவறுகளை மறைக்கவில்லை. மாறாக அத்தகைய உதாரணங்கள் மூலமாக “அவற்றை எவ்வாறு தவிர்ப்பது, புரட்சிகர மார்க்சியத்தின் கடும் தேவைகளுக்கு எவ்வாறு ஈடுகொடுப்பது” என்பதைக் கற்றுக்கொண்டார்கள். அதற்கு மாறாக திரிபுவாதிகள் பெபல் மற்றும் ரோசாலுக்சம்பர்க்கின் தவறுகளைப் பற்றி “கூவினார்கள்” “கொக்கரித்தார்கள”. திரிபுவாதிகளைக் கேலி செய்த லெனின் இந்த விடயத்தில் ஒரு ரஸ்சிய பழங்கட்டுக்கதையை மேற்கோள் காட்டினார். “ சில சமயங்களில் கழுகுகள் கோழிகளைக் காட்டிலும் தாழ்வாகப் பறக்கலாம். ஆனால் கோழிகள் ஒருபோதும் கழுகுகளின் உயரத்திற்கு பறக்கமுடியாது.” பெபலும் ரோசாலுக்சம்பர்க்கும் “மாபெரும் கம்யுனிஸ்டுகள்” மேலும் அவர்களுடைய தவறுகளுக்கு பின்பும் “கழுகுகளாகவே” திகழ்ந்;தார்கள். அதே சமயத்தில் திரிபுவாதிகள் “உழைக்கும் வர்க்க இயக்கத்தின் கொல்லைப்புற சாணக் குவியலிடையே “கோழிகள்” கூட்டமாக இருந்தனர்.


பெபல் மற்றும் ரோசாலுக்சம்பர்க்கின் வரலாற்று பாத்திரங்கள் எந்த வழியிலும் ஸ்டாலினுடைய பாத்திரத்துடன் ஒப்பிடப்பட முடியாதவை. ஸ்டாலின் ஒரு வரலாற்று சகாப்தம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் மாபெரும் தலைவராக இருந்தார். அவரைப்பற்றி மதிப்பிடும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.


ஸ்டாலினைப் பாதுகாப்பதாக சீனக் கம்யுனிஸ்ட் கட்சி மீது ரஸ்சியக் கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆம் , நாங்கள் ஸ்டாலினைப் பாதுகாக்கவே செய்கிறோம். குருசேவ் வரலாற்றை திரித்து ஸ்டாலினை முழுவதுமாக மறுதலிக்கும்போது இயல்பாகவே நாங்கள் சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் நலன்களையொட்டி ஸ்டாலினைப் பாதுகாக்க வேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமையை ஏற்றுள்ளோம்.


ஸ்டாலினை ஆதரிக்கும்போது சீனக் கம்யுனிஸ்ட் கட்சி அவருடைய சரியான பகுதியை ஆதரிக்கிறது. அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட முதல் பாட்டாளி வர்க்க அரசின் புகழ்மிக்க வரலாற்றுப் போராட்டத்தை ஆதரிக்கின்றது. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றை ஆதரிக்கின்றது. உலக முழுவதுமுள்ள உழைக்கும் மக்களிடையே சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் மதிப்பைப் பாதுகாக்கின்றது. சுருங்கக் கூறின் அது மார்க்சிய- லெனியக் கொள்கையையும் நடைமுறைகளையும் ஆதரிக்கிறது. சீனக் கம்யுனிஸ்டுகள் மட்டும் இதை செய்து கொண்டிருக்கவில்லை. மார்க்சிய-லெனினியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து கம்யுனிஸ்டுக்களும் அனைத்து உறுதி மிக்க புரட்சியாளர்களும் அனைத்து நேர்மையான உள்ளம் கொண்ட மக்களும் இதையே செய்து வருகிறார்கள்.


ஸ்டாலினை ஆதரிக்கும் வேளையில் நாங்கள் அவருடைய தவறுகளை ஆதரிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு முன்பே சீனக் கம்யுனிஸ்டுகள் ஸ்டாலினுடைய தவறுகளில் சிலவற்றின் நேரடி அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சமயத்திலோ அல்லது மற்றொரு சமயத்திலோ சீனக் கம்யுனிஸ்ட் கட்சியில் எழுந்த தவறான இடது மற்றும் வலது சந்தர்ப்பவாதப் பாதைகளில் சில ஸ்டாலினுடைய ஒரு சில தவறுகளின் தாக்கத்தினால் எழுந்தவை என்பது அப்பாதைகள் தோன்றுவதற்கான சர்வதேச அடிப்படைகள் ஆகும். 1920ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 30ம் ஆண்டுகளிலும் 40ம்ஆண்டுகளின் துவக்கத்திலும் மத்தியிலும் தோழர்கள் மாசேதுங், லியோசோ~p ஆகியோர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சீன மார்க்சிய-லெனியவாதிகள் ஸ்டாலினுடைய தவறுகளின் செல்வாக்கை எதிர்த்தனர். அவர்கள் படிப்படியாக இடது மற்றும் வலது சந்தர்ப்பவாதப் பாதைகளைக் களைந்து இறுதியில் சீனப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.


ஆனால் ஸ்டாலினால் முன்வைக்கப்பட்ட சில தவறான கருத்துக்கள் சீனத் தோழர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையாளப்பட்டதற்கான பொறுப்பினை சீனர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே இடது மற்றும் வலது சந்தர்ப்பவாதத்தற்கு எதிரான தனது போராட்டத்தில் எங்களது கட்சி தவறிழைத்த தனது சொந்த தோழர்களைத்தான் விமர்சித்ததே தவிர ஒருபோதும் ஸ்டாலின் மீது பழியைப் போடவில்லை. தவறையும் சரியையும் பிரித்துப் பார்ப்பதும், தகுந்த படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதும், புரட்சிகர இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதும்தான் எங்கள் விமர்சனத்தின் நோக்கமாக இருந்தது. நாங்கள் தவறிழைத்த தோழர்களை தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று மட்டும்தான் கேட்டுக்கொண்டோம். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் தங்கள் ஒளிவு மறைவான, சீர்குலைவு நடவடிக்கைகளுக்காக ரகசிய குழுக்களை கட்டியமைக்கவில்லையெனில் தங்கள் சொந்த நடைமுறை அனுபவத்தால் படிப்படியாக கற்றுக்கொள்ளும்வரை காத்திருந்தோம். எங்கள் முறையே உட்கட்சி விமர்சனம் மற்றும் சுய விமர்சனத்தின் சரியான முறையாகும். நாங்கள் ஜக்கியத்திற்கான விருப்பத்திலிருந்து தொடங்கி விமர்சனம் மற்றும் போராட்டங்களின் வழியாக ஒரு புதிய அடிப்படையிலான ஒரு புதிய ஜக்கியத்தை வந்தடைந்தோம். இவ்வாறு நல்ல விளைவுகள் பெறப்பட்டன. இந்த முரண்பாடுகள் மக்களுக்;கிடையிலான  முரண்பாடுகளே, எதிரிகளுக்கும் நமக்கும் உள்ள முரண்பாடுகள் அல்ல என்று நாங்கள் கருதினோம். எனவே மேற்கூறிய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.


தோழர் குருசேவும் பிற ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் இருந்து ஸ்டாலினைப் பற்றி எத்தகைய மனப்பான்மையைப் பெற்றிருக்கிறார்கள்?


அவர்கள் ஸ்டாலின் வாழ்க்கையைப் பற்றியும,; பணிகளைப் பற்றியும் ஒட்டுமொத்த வரலாற்று ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வினைச் செய்யாமல், சரி தவறுகளை வேறுபடுத்திப் பார்க்காமல், அவரை முழுவதுமாக மறுதலித்துள்ளார்கள். அவர்கள் ஸ்டாலினை ஒரு தோழராக மதிக்கவில்லை. மாறாக ஒரு எதிரியாகப் பார்க்கிறார்கள்.


அனுபவங்களைத் தொகுப்பதற்கு அவர்கள் விமர்சன, சுயவிமர்சன முறையைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக அனைத்து தவறுகளுக்கும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார்கள். அல்லது தாங்கள் ஒரு தலைப்பட்சமாக கண்டு பிடித்த தவறுகளுக்கு ஸ்டாலினைக் காரணமாக குறிப்பிட்டார்கள்.


அவர்கள் உண்மைகளையோ, ஆதாரபூர்வமானவற்றையோ முன்வைக்கவில்லை. மாறாக, ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் மனதை நச்சுப் படுத்தும் பொருட்டு அவர் மீது கீழ்த் தரமான தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.


குருசேவ் ஸ்டாலினை ஒரு “கொலைகாரன்” என்றும் ஒரு “குற்றவாளி” என்றும் ஒரு “கொள்ளைக்காரன்” என்றும் ஒரு “சூதாடி” என்றும் “பயங்கர இவான”; போன்ற ஒரு “கொடுங்கோலன்” என்றும் ரஸ்சிய வரலாற்றிலே மிகப்பெரிய “சர்வாதிகாரி” என்றும் ஒரு “மடையன்” என்றும் ஒரு “முட்டாள்” என்றும் இன்ன பிற சொற்களால் அவதூறு செய்தார். இத்தகைய அசிங்கமான, அவக்கேடான, வன்மம் மிக்க வார்த்தைகளை நாங்கள் சுட்டிக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அதேசமயம் இது எங்கள் தாளையும் பேனாவையும் அசிங்கப்படுத்திவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். குருசேவ் ஸ்டாலினை ரஸ்சிய வரலாற்றிலே மிகப்பெரிய “சர்வாதிகாரி” என்று அவதூறு செய்துள்ளார். அப்படியானால்  ரஸ்சிய மக்கள் முப்பதாண்டு காலம் ரஸ்சிய வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையின் கீழ் வாழ்ந்தார்கள், சோசலிச அமைப்பு முறையின் கீழ் அல்ல என்று என்று இது பொருள்படவில்லையா? மாபெரும் ரஸ்சிய மக்களும் உலக முழுவதுமுள்ள புரட்சிகர மக்களும் இந்தப் பழிச் சொல்லை முற்றிலும் மறுக்கிறார்கள்.


குருசேவ் ஸ்டாலினை “பயங்கர இவான”; போன்ற ஒரு “கொடுங்கோலன்” என்று அவதூறு செய்துள்ளார். இது மாபெரும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியும் மாபெரும் ரஸ்சிய மக்களும் உலக முழுவதுமுள்ள மக்களுக்கு முப்பதாண்டு காலமாக வழங்கி வந்த அனுபவம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அனுபவமல்ல மாறாக ஒரு நிலப் பிரபுத்துவக் கொடுங்கோலன் ஆட்சியில் பெற்ற அனுபவம் என்று பொருள்படவில்லையா? மாபெரும் ரஸ்சிய மக்களும் ரஸ்சிய கம்யுனிஸ்டுகளும் உலக முழுவதுமுள்ள மார்க்சிய- லெனினியர்களும் இந்தப் பழிச்சொல்லை முற்றிலும் மறுக்கிறார்கள்.


குருசேவ் ஸ்டாலினை ஒரு “கொள்ளைக்காரன்” என்று அவதூறு செய்துள்ளார். இது உலகின் முதலாவது சோவியத் அரசு ஒரு நீண்ட கால அளவுக்கு ஒரு கொள்ளைக்காரனால் தலைமை தாங்கப்பட்டு வந்தது என்று பொருள்படவில்லையா? மாபெரும் ரஸ்சிய மக்களும் உலக முழுவதுமுள்ள புரட்சிகர மக்களும் இந்தப் பழிச் சொல்லை மறுக்கிறார்கள்.


குருசேவ் ஸ்டாலினை ஒரு “மடையன்” என்று அவதூறு செய்துள்ளார். வீர மிக்க புரட்சிகர போராட்டங்களை நடத்தியுள்ள ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி கடந்த பல பத்தாண்டுகளாக ஒரு மடையனை தனது தலைவராக கொண்டிருந்தது என்று இதனால் பொருள்படவில்லையா? ரசிய கம்யுனிஸ்ட்டுகளும் உலக முழுவதுமுள்ள மார்க்சிய- லெனினியர்களும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.


குருசேவ் ஸ்டாலினை ஒரு முட்டாள் என்று அவதூறு செய்துள்ளார். இது பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் வெற்றியீட்டிய மாபெரும் ரஸ்சிய ராணுவம் ஒரு முட்டாளை தனது தலைமைத் தளபதியாக கொண்டிருந்தது என்று பொருள்படவில்லையா? புகழ் பெற்ற ரஸ்சிய கமாண்டர்களும் படை வீரர்களும் உலகின் பாசிச எதிர்ப்பு வீரர்கள் அனைவரும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.


குருசேவ் ஸ்டாலினை ஒரு “கொலைகாரன்” என்று அவதூறு செய்துள்ளார். இது சர்வதேச கம்யுனிச இயக்கம் ஒருகொலைகாரனை பல பத்தாண்டுகளுக்கு தனது ஆசானாகக் கொண்டிருந்தது என்று பொருள்பட வில்லையா? ரஸ்சிய கம்யுனிஸ்டுகள் உட்பட உலக முழுவதுமுள்ள கம்யுனிஸ்டுக்கள் அனைவரும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.
குருசேவ் ஸ்டாலினை ஒரு “சூதாடி” என்று அவதூறு செய்துள்ளார். இது புரட்சிகரமக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், எதிர்ப்புரட்சிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் ஒரு சூதாடியை முன்னணியாளனாகக் கொண்டிருந்தார்கள் என்று பொருள் படவில்லையா? ரஸ்சிய மக்கள் உட்பட உலகின் அனைத்து புரட்சிகர மக்களும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.


ஸ்டாலின் மீதான குருசேவின் இந்த அவதூறு மாபெரும் ரஸ்சிய மக்களை ஒட்டு மொத்தமாக அவமதிப்பதாகும். ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியை ஒட்டு மொத்தமாக அவமதிப்பதாகும். ரஸ்சிய ராணுவத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கும் சோசலிச அமைப்பு முறைக்கும் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கும் உலக முழுவதுமுள்ள புரட்சிகர மக்களுக்கும் மார்க்சிய- லெனினியத்திற்கும் ஒட்டு மொத்தமான அவமதிப்பாகும்.


இப்பொழுது அழுது புலம்பிக் கொண்டு மேசையைக் குத்தி தனது உச்சஸ்தாயியில் ஸ்டாலின் மீது அவதூறு பொழிந்து கூப்பாடு போடும் குருசேவ் ஸ்டாலின் காலத்தில் அரசு மற்றும் கட்சியின் தலைமையில் அங்கம் வகித்தாரே, அப்படியானால் அவர் தனக்கு என்ன தகுதியை வழங்கிக் கொள்கிறார்? ஒரு கொலைகாரனின் அல்லது கொள்ளைக்காரனின் கூட்டாளி என்ற தகுதியையா? அல்லது மடையன் அல்லது முட்டாள் என்ற அதே தகுதியையா?


ஸ்டாலின் மீதான குருசேவின் இத்தகைய அவதூறுகளுக்கும் ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு நாடுகளில் உள்ள எதிர்ப் புரட்சியாளர்கள் கம்யுனிச கொள்கையை விட்டு ஓடிப்போனவர்கள் ஆகியோருடைய அவதூறுகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஸ்டாலின் மீது ஏன் இத்தனை கண் மூடித்தனமான வெறுப்பு? நீங்கள் ஏன் எதிரியை தாக்குவதைவிட மூர்க்கத்தனமாக அவரைத் தாக்குகிறீர்கள்?


ஸ்டாலினை அவதூறு செய்வதன் மூலம் குருசேவ் உண்மையிலேயே சோவியத் அமைப்பு முறையையும் அரசையும் காட்டுத்தனமாக தூற்றுகிறார். இந்த விடயத்தில் அவருடைய வார்த்தைகள் எந்த விதத்திலும் பலவீனமானவை அல்ல. மாறாக காவுட்ஸ்கி, ட்ராட்ஸ்கி, டிட்டோ, ஜிலால் போன்ற ஓடுகாலிகளுடையதைக் காட்டிலும்  உண்மையிலேயே கடுமையானவையாக இருக்கின்றன.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்கக் கடிதத்தின் கீழ் கண்ட பகுதியை மேற்கோள் காட்டி மக்கள் குருசேவைக் கேட்க வேண்டும். மாபெரும் லெனினுடைய கட்சியைப் பற்றி , சோசலிசத்தின் தாயகத்தைப் பற்றி , ஒரு சோசலிசப் புரட்சியை நிறைவேற்றுவதில் உலகில் முதலாவதாக இருந்த மக்களைப் பற்றி, சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உள்நாட்டு எதிர்ப் புரட்சிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் அதன் மாபெரும் சாதனைகளை உயர்த்திப் பிடித்த மக்களைப்பற்றி, கம்யுனிசத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் வீரசாகச அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டும், அர்ப்பணிப்பைக் காட்டிக்கொண்டும் இருக்கின்ற மக்களைப்பற்றி, உலக உழைக்கும் மக்களுக்கான தங்களின் சர்வதேசக்கடமையை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற மக்களைப்பற்றி எப்படி அவர்களால் இவ்வாறு சொல்ல முடியும்?


அவதூறின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் கூறினார் “அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும் நிர்க்கதியையும் பேடித்தனத்தையும் அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்துவிடுகிறது”. ஸ்டாலினுடைய ஆவியினால் இடையறாது அலைக் கழிக்கப்படும் உணர்வைக் கொண்டிருக்கிற , ஸ்டாலினை அவமதிப்பதன் மூலம் தங்களது கொள்கை ஒட்டாண்டித்தனத்தையும், எரிச்சல் தரும் பேடித்தனத்தையும,; நிர்க்கதியான நிலையையும, மூடி மறைத்து கொள்ள முயற்சிக்கிற ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு இது பொருந்தாதா?


ரஸ்சிய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் ஸ்டாலினை இவ்வாறு அவமதிப்பதை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் மேலும் மேலும் ஸ்டாலினுடைய நினைவைப் போற்றுகிறார்கள். ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களிடமிருந்து தங்களை மிக மோசமாக தனிமைப் படுத்திக் கொண்டுவிட்டார்கள். அவர்கள் தாங்கள் ஸ்டாலினுடைய அலைக்கழிக்கிற ஆவியினால் பயமுறுத்தப்பட்டுக்கொண்டிருப்பதாக உணருகிறார்கள். உண்மையில் அது ஸ்டாலினை முழுவதுமாக மறுக்கும் செயல்மீது பெரும் அதிருப்தி கொண்டுள்ள பரந்துபட்ட மக்களின் பயமுறுத்தலாக இருக்கிறது. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது பேராயத்தில் முன்வைக்கப்பட்ட ஸ்டாலினை முழுவதுமாக மறுக்கும் ரகசிய அறிக்கையை இதுவரை ரஸ்சிய மக்களும் சோசலிச முகாமில் உள்ள பிற மக்களும் தெரிந்து கொள்வதற்காக வெளியிடும் துணிவு இல்லை. ஏனெனில் அது உண்மையின் வெளிச்சத்தை தாங்க முடியாத மக்களை தீவிரமாக அந்நியப் படுத்திவிடக் கூடிய அறிக்கையாகும்.


சாத்தியப்பட்ட ஒவ்வொரு வழியிலும் ஸ்டாலினை இழிவுபடுத்தும் அதேவேளையில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் தலைவர்கள் ஜய்சனோவர், கென்னடி மற்றும் இவர்களைப் போன்றவர்களை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் போற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் ஸ்டாலினை பயங்கர இவானைப் போன்ற ஒரு கொடுங்கோலன் என்றும் ரஸ்சிய வரலாற்றிலே மிகப் பெரிய சர்வாதிகாரி என்றும் இழிவு படுத்துகிறார்கள். ஆனால் ஜய்சனோவரையும் கென்னடியையும் அமெரிக்க மக்களின் அறுதிப்பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்கள் என்று பாராட்டுகிறார்கள். அவர்கள் ஸ்டாலினை ஒரு மடையன் என்று இழிவு படுத்துகிறார்கள். ஆனால் ஜய்சனோவரையும் கென்னடியையும் விவேகமானவர்கள் என்று புகழ்கிறார்கள். ஒரு புறம் ஒரு மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியை, ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்க புரட்சியாளனை, சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தின் ஒரு மாபெரும் தலைவனை, அவர்கள் கீழ்தரமான முறையில் தாக்குகிறார்கள். மறுபுறம் ஏகாதிபத்தியத்தின் தலைவர்களை வானளாவப் புகழ்கிறார்கள். இந்த குறிப்பிடத்தக்க சம்பவங்களுக்கிடையிலான உறவு மார்க்சிய-லெனினியத்திற்கு துரோகமிழைத்ததன் தவிர்க்க முடியாத பின் விளைவாகத் தோன்றியது என்பதன்றி தற்செயலாக நிகழ்ந்தது என்று கருத ஏதேனும் வாய்ப்பு உண்டா?


குருசேவின் நினைவு குறுகியதாக இல்லாவிட்டால் அவர் 1937 ஜனவரியில் மாஸ்கோவில் நடந்த ஒரு மக்கள் அணிவகுப்பை நினைத்து பார்க்கட்டும். அந்த அணிவகுப்பில் ஸ்டாலினை தாக்கியவர்களை குருசேவ் மிகச் சரியாகவே கண்டனம் செய்து கீழ்க் கண்டவாறு பேசினார்.”தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயர்த்துபவர்கள் நம் அனைவருக்கும் எதிராக உயர்த்துபவர்கள். உழைக்கும் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் எதிராக கரம் உயர்த்துபவர்கள். தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயர்த்துவதன் மூலம் அவர்கள் மார்க்ஸ் எங்கெல்ஸ,; லெனின் ஆகியோரது போதனைகளுக்கு எதிராக கரம் உயர்த்துகிறார்கள்”. குருசேவ் தானே ஸ்டாலினை மாபெரும் தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய நண்பர் , போராட்ட தோழன் என்றும் ஒரு மாபெரும் மேதை ,ஆசான், மனித குலத்தின் தலைவர் என்றும் எப்பொழுதும் வெற்றியீட்டும் மாபெரும் ராணுவத் தளபதி என்றும் மக்களின் உண்மையான நண்பன் என்றும் தனது சொந்த தந்தை என்றும் திரும்ப திரும்ப பலவிதமாக புகழ்ந்துள்ளார்.


ஸ்டாலின் உயிரோடு இருந்த போது குருசேவ் கூறிய கருத்துக்களையும் ஸ்டாலின் இறந்த பிறகு குருசேவ் கூறிய கருத்துக்களையும் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலினைப் பற்றிய மதிப்பீட்டில் 180 டிகிரி தலை கீழாக அவர் மாறியிருப்பதை ஒருவர் காணாமலிருக்க முடியாது.


குருசேவ் ஞாபகசக்தி மிகவும் குறைவாக இல்லாதிருந்தால் அவர் நினைவு படுத்திப் பார்க்கட்டும். ஸ்டாலின் தலைமைக் காலத்தில் எதிர்ப் புரட்சியாளர்களை நசுக்குவதற்கு நடைமுறையிலிருந்த கொள்கையை கடைப்பிடிப்பதிலும் ஆதரிப்பதிலும் குறிப்பாக குருசேவ்தானே மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட்டார்.


1937 ஜீன் 6ம் நாள் மாஸ்கோ பிராந்தியத்தின் ஜந்தாவது கட்சி மாநாட்டில் குருசேவ் பிரகடனம் செய்தார். “நமது கட்சி துரோகிகளையும் காட்டிக் கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிசடைகள் அனைத்தையும் துடைத்தெறியும். இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்கமுடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்”.


1938ம் ஆண்டு ஜீன் 8ம் தேதி கீவ் பிராந்தியத்தின் நான்காவது கட்சி மாநாட்டில்  குருசேவ் அறிவித்தார். “யாகிர்கள், பலிட்ஸ்கியர்கள், லியுப்செங்கியர்கள், ஜாதொனஸ்கியர்கள் மற்றும் பிற கழிசடைகளும் போலந்து நில உடைமையாளர்களை உக்ரெய்னுக்குள் கொண்டுவர விரும்பினர். ஜெர்மன் பாசிஸ்டுக்களையும், நிலப்பிரபுக்களையும், முதலாளிகளையும் இங்கே கொண்டுவர விரும்பின. கணிசமான எண்ணிக்கையில் எதிரிகளை நாம் ஒழித்துக்கட்டியுள்ளோம். ஆயினும் இன்னும் எதிரிகள் அனைவரையும் ஒழித்துக்கட்டவில்லை. எனவே நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். முதலாளித்துவ முற்றுகை இருக்கும்வரை உளவாளிகளும், அழிவு வேலைக்காரர்களும் நமது நாட்டுக்குள் திருட்டுத்தனமாக அனுப்பப்படுவார்கள் என்ற தோழர் ஸ்டாலினுடைய வார்த்தைகளை நாம் நெஞ்சில் உறுதியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.”


ஸ்டாலின் காலத்தில் கட்சி மற்றும் அரசின் தலைமையில் இருந்த குருசேவ் எதிர்ப்புரட்சியாளர்களை நசுக்கும் கொள்கையை ஆதரித்து உறுதியாக நிறைவேற்றிய குருசேவ் அந்தக் காலத்தில் நடைபெற்ற எல்லாவற்றையும் ஏன் மறுத்துரைக்க வேண்டும்? தன்னை மட்டும் முற்று முழுக்க தூய்மையாக்கி காட்டிக்கொண்டு எல்லா தவறுகளுக்கும் ஸ்டாலின் மீது மட்டும் ஏன் பழியைச் சுமத்த வேண்டும்?


ஸ்டாலின் தவறான ஒன்றை செய்த போது அவர் தன்னைத்தானே விமர்சித்துக்கொள்ளும் தகுதியுடையவராக இருந்தார். உதாரணமாக சீனப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையில் சில தவறான அறிவுரைகளை அவர் வழங்கியிருந்தார். சீனப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். 1939ல் நடந்த ரஸ்சிய கம்யனிஸ்ட் (போல்~;விக்)கட்சியின் 18வது காங்கிரசில் அவர் முன்வைத்த அறிக்கையில் கட்சி அணிகளை தூய்மைப் படுத்தும் பணியில் தான் செய்த தவறுகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் குருசேவ் என்ன செய்தார்? சுயவிமர்சனம் என்றால் என்ன என்பதையே அவர் கொஞ்சமும் அறியமாட்டார். அவர் செய்தது எல்லாம் அனைத்து பழியையும் மற்றவர்கள் மீது போட்டுவிட்டு சாதனைகள் அனைத்துக்கும் தானே சொந்தம் கொண்டாடியதுதான்.


நவீன திருத்தல்வாதம் வெறிகொண்டு திரியும் சமயத்தில் குருசேவின் இந்த அசிங்கமான நடவடிக்கைகள் நடந்ததில் ஆச்சரியம் இல்லை. மார்க்சியத்திற்கு துரோகம் இழைத்ததற்காக இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்வாதிகளை விமர்சித்து 1915ல் லெனின் சொன்னதைப் போன்று “வார்த்தைகள் மறக்கப்பட்டுவிடும். கொள்கைகள் இழக்கப்பட்டுவிடும். தத்துவங்கள் தூக்கியெறிப்பட்டுவிடும். அனைத்து தீர்மானங்களும் முறைப்படியான வாக்குறுதிகளும் கைவிடப்படும். இந்தக்காலத்தில் இது ஆச்சரியமளிப்பதாகவே இல்லை.”


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுமையாக மறுதலித்ததின் மிகக்கடுமையான பின்விளைவுகளை ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசுக்கு பிறகு நடந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் முழுமையாக காட்டுகின்றன.
அது ஏகாதிபத்தியவாதிகளும் அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும் மிதமிஞ்சி வரவேற்கத்தக்க ரஸ்சிய எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு தோட்டாக்களை வழங்கியுள்ளது. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசுக்குப்பிறகு வெகு குறுகிய காலத்திலேயே குருசேவின் ஸ்டாலின் எதிர்ப்பு ரகசிய அறிக்கையை ரசிய நாட்டிற்கும் கம்யுனிசத்திற்கும் எதிராக ஒரு உலகு தழுவிய பேரலையை உசுப்பிவிட ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஏகாதிபத்தியவாதிகளும,; அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும், டிட்டோ கும்பலும், பல்வேறு ரகமான சந்தர்ப்பவாதிகளும,; ரஸ்சிய நாட்டை தாக்குவதற்கும,; சோசலிச முகாமை தாக்குவதற்கும,; கம்யுனிச கட்சிகளைத் தாக்குவதற்கும,; இந்த வாய்ப்பைத் தாவிப் பிடித்துக்கொண்டார்கள். இவ்வாறு பல சகோதரக் கட்சிகளும் நாடுகளும் கடும் சங்கடங்களில் தள்ளப்பட்டன.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களால் ஸ்டாலினுக்கு எதிராக செய்யப்பட்ட வெறித்தனமான பிரச்சாரத்தினால் நீண்டகாலமாக அரசியல் சவங்களாக கிடந்த டிராட்ஸ்கியவாதிகள் மீண்டும் உயிர்பெற்று டிராட்ஸ்கிக்கு புனர்வாழ்வு கொடுக்க கூக்குரலிடுகின்றனர். 1961 நவம்பரில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 22வது பேராயத்தின் முடிவில் சொல்லிக் கொள்ளப்படும் நான்காவது அகிலத்தின் சர்வதேச செயலகம் ரஸ்சிய கம்யனிஸ்ட் கட்சியின் 22வது பேராயத்திற்கு அதன் புதிய மத்திய கமிட்டிக்கும் எழுதிய கடிதத்தில் ஸ்டாலினால் கொலை செய்யப்பட்டவர்களை கௌரவித்து ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று 1937ல் டிராட்ஸ்கி சொன்னார் என்று குறிப்பிட்டிருந்தது. அது மேலும் தொடர்ந்து “இன்று இந்த தீர்க்க தரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு உங்கள் கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டது. இந்தக் கடிதத்தில் ஸ்டாலினால் பலி கொள்ளப்பட்டவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறுவப்படும் நினைவுச் சின்னத்தின் மீது டிராட்ஸ்கியினுடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என குறிப்பாகவே கோரப்பட்டுள்ளது. டிராட்ஸ்கியவாதிகள் தங்கள் மகிழ்ச்சியை மறைக்கவில்லை. ரஸ்சிய கம்யனிஸ்ட் கட்சியின் தலைமையால் தொடங்கப்பட்ட ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம் “டிராட்ஸ்கியத்திற்கு கதவு திறந்து விட்டுள்ளது” என்றும் “டிராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காவது அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாபெரும் உதவியை செய்திருக்கிறது” என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்டாலினை முழுவதுமாக மறுத்ததற்கு வெளியில் சொல்லமுடியாத உள்நோக்கம் இருக்கிறது.


ஸ்டாலின் 1953ல் இறந்தார்.மூன்றாண்டுகளுப்பிறகு 20வது பேராயத்தில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் அவரை மூர்க்கத்தனமாக தாக்கினார்கள். அவர் மறைந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 22வது பேராயத்தில் மீண்டும் அதேபோல் செய்தனர். அவரது பூதவுடலை எடுத்து எரித்தனர். ஸ்டாலின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை திரும்பவும் தொடங்குவதன் மூலம் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியிலும் ரஸ்சிய நாட்டில் உள்ள மக்கள் மத்தியிலும் அந்த மாபெரும் பாட்டாளிவர்க்க புரட்சியாளன் பெற்றுள்ள அழிக்க முடியாத செல்வாக்கினை துடைத்தெறிய முனைகிறார்கள். இதன் மூலம் திருத்தல்வாதப் பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக, ஸ்டாலின் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய-லெனினியத்தை மறுத்துவிட முனைகிறார்கள். அவர்களுடைய திருத்தல்வாத பாதை குறிப்பாக 20வது பேராயத்தில் தொடங்கி 22வது பேராயத்தில் முழுமையாக முறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் சமாதானம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் , காலனி , அரைக்காலனி நாடுகளில் புரட்சி, பாட்டாளி வர்க்கக்கட்சி இன்னும் பிறவற்றின் மீதான மார்க்சிய-லெனினிய கொள்கைகளை அவர்கள் திருத்தியது ஸ்டாலினை அவர்கள் முழுவதுமாக மறுதலித்ததுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப் பட்டிருப்பதை நிகழ்ச்சிகள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன.


“தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது” என்ற போர்வையில்தான் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுவதுமாக மறுக்க முயற்சிக்கிறது.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலைமை பற்றிய கொள்கைகளிலும் கட்சி வாழ்க்கையிலும் லெனினிய மரபுகளை மீட்பதற்காக “தனி நபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை” தொடுக்கவில்லை. மாறாக அவர்கள் தலைவர்கள், கட்சி, வர்க்கம் மற்றும் மக்களுக்கிடையேயான பரஸ்பர உறவுகள் பற்றிய லெனினிய போதனைகளை மீறுகிறார்கள். கட்சியில் ஜனநாயக மத்தியத்துவக் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.


பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சி புரட்சிகரப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையகமாக உண்மையிலேயே பணியாற்ற வேண்டுமெனில் அது தலைவர்கள் ,கட்சி, வர்க்கம், மக்கள் ஆகியோருக்கிடையேயான பரஸ்பர உறவுகளைச் சரியாக கையாள வேண்டும். மேலும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மார்க்சிய- லெனினியவாதிகள் வலியுறுத்தி வருகிறார்கள். அத்தகைய ஒரு கட்சி கிட்டத்தட்ட ஒரு ஸ்திரமான தலைமைக் கருக்குழுவை பெற்றிருக்க வேண்டும். அத் தலைமை மார்க்சிய –லெனினிய சர்வ வியாபக உண்மையை புரட்சியின் பருண்மையான நடைமுறையுடன் இணைப்பதில் சிறந்தவர்களாக விளங்கும் புடம் போட்ட தலைவர்களடங்கிய ஒரு குழுவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைவர்கள் அவர்கள் உள்ள+ர் கமிட்டியைச் சார்ந்தவர்களாயினும் சரி , மத்திய கமிட்டியைச் சார்ந்தவர்களாயினும் சரி வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிகர வெகுஜன இயக்கங்களின் போக்கில் மக்களிடமிருந்து தோன்றுகிறார்கள். அவர்கள் மக்களிடம் எல்லையற்ற விசுவாசம் கொண்டவர்கள். மக்களுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பவர்கள். மக்களின் எண்ணங்களை சரியான முறையில் ஒரு முனைப்படுத்தி அவற்றை செயல் படுத்துவதில் வல்லவர்கள். அத்தகைய தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதிகள். மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அத்தகைய தலைவர்களைப் பெற்றிருப்பது ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகும். பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்கான நம்பிக்கை இதில்தான் இருக்கிறது.


லெனின் மிகச் சரியாகச் சொன்னார்: “வரலாற்றில் எந்தவொரு  வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை –ஒரு இயக்கத்தை கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றுச் சிறந்த தனது பிரதிநிதிகளை –உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை.” அவர் மேலும் சொன்னார் “அனுபவமிக்க பெரும் செல்வாக்கு பெற்ற கட்சி தலைவர்களை பயிற்றுவிப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கக்கூடிய கடினமான பணியாகும். ஆனால் இதில்லாமல் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற அதன் ஒன்றுபட்ட விருப்பம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாகவே இருக்கும்.”


வரலாற்றில் மக்கள், தனிநபர் ஆகியோரது பாத்திரம் மற்றும் தலைவர்கள் , கட்சி, வர்க்கம், மக்கள் ஆகியவற்றின் பரஸ்பர உறவு பற்றிய மார்க்சிய-லெனினிய போதனைகளை எப்போதும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி பின்பற்றி வந்திருக்கிறது. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது. நாங்கள் எப்போதும் கூட்டுத்தலைமையை கடைப்பிடித்து வந்திருக்கிறோம். அதே சமயத்தில் தலைவர்களின் பாத்திரத்தை சிறுமைப்படுத்துவதை எதிர்க்கிறோம். தலைவர்களின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில் தனி நபர்கள் நேர்மையற்ற முறையில் அளவுக்கு அதிகமாக புகழ்படுவதையும் அவர்களின் பாத்திரம் மிகைப்படுத்தப்படுவதையும் எதிர்க்கிறோம். 1949லேயே சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி தோழர் மாசேதுங்கின் ஆலோசனைப்படி கட்சி தலைவர்களின் பிறந்த நாட்களில் எந்தவிதமான பொது விழாக்கள் எடுப்பதையும் இடங்கள,; தெருக்கள், நிறுவனங்களுக்கு அவர்கள் பெயர் சூட்டப்படுவதையும் தடைசெய்யும் ஒரு முடிவை எடுத்துள்ளது.


இந்த முரண்பாடற்ற சரியான எங்களுடைய அணுகுமுறை ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைமையால் முன்வைக்கப்பட்ட தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்திலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டதாகும்.


தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை முன்வைக்கும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களது நோக்கம் அவர்கள் கூறுவதைப் போல ஜனநாயகத்தை வளர்ப்பதோ, கூட்டுத்தலைமையை நடைமுறைப்படுத்துவதோ, தனிநபர் பாத்திரம் மிகைப்படுத்துவதை எதிர்ப்பதோ அல்ல. மாறாக அவர்களுக்கு வேறு உள் நோக்கங்கள் இருக்கின்றன. அவர்களின் தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தின் உண்மையான சாரம்சம் என்ன?


ஒளிவுமறைவின்றிச் சொல்ல வேண்டுமானால் கீழ்கண்டவற்றைத் தவிர வேறொன்றுமில்லை.
1.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் கட்சியின் தலைவரான ஸ்டாலினை கட்சி அமைப்புக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும், பரந்துபட்ட மக்களுக்கும் எதிராக நிறுத்துவது.


2.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் பாட்டாளி வர்க்க கட்சியையும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும,; சோசலிச அமைப்பு முறையையும் களங்கப் படுத்துவது.


3.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வது. மார்க்சிய-லெனினியத்திற்கு விசுவாசமாக இருக்கும் புரட்சியாளர்களைத் தாக்குவது. அதன் மூலம் திரிபுவாத சூழ்ச்சியாளர்களுக்கு கட்சி மற்றும் அரசு தலைமையைக் கைப்பற்ற பாதையமைத்துத் தருவது.


4.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் தோழமைக்கட்சிகள் மற்றும் நாடுகளது உள்விவகாரங்களில் தலையிடுவது. அவற்றின் தலைமையை தமது வசதிக்கேற்ப கவிழ்க்க முயல்வது.


5.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் மார்க்சிய-லெனினியத்தை பின்பற்றும் சகோதரக்கட்சிகளை தாக்குவது. சர்வதேச கம்யுனிச இயக்கத்தை பிளவுபடுத்துவது.


குருசேவினால் தொடுக்கப்பட்டுள்ள தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு வெறுக்கத்தக்க அரசியல் சதிச்செயலாகும். மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட ஒருவரைப்போல் “அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர். அதே வேளையில் கோட்பாட்டாளன் என்ற முறையில் ஒரு அனாமதேயம்”.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதம் தனிநபர் வழிபாட்டை நிராகரித்து அதன் பின் விளைவுகளை எதிர்த்து போராடும் வேளையில் அவர்கள் தகுதி வாய்ந்த பெருமைக்குரிய தலைவர்கள் மீது உயர்ந்த மதிப்பை வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன? இதன் பொருள் ஸ்டாலினை காலில் போட்டு மிதிக்கும் வேளையில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் குருசேவை வானளாவப் புகழ்கிறார்கள் என்பதாகும்.


அக்டோபர் புரட்சியின்போது இன்னும் ஒரு கம்யுனிஸ்ட் ஆகாமலும் உள்நாட்டு போரின்போது ஒரு கீழ்மட்ட அரசியல் பணியாளராகவும் இருந்த குருசேவை அவர்கள் செயலூக்கத்துடன் செம்படையை உருவாக்கியவர் என்று வர்ணிக்கிறார்கள்.
ஸ்டாலின்கிராட் போர்க்களத்தில் குருசேவின் குரலே அடிக்கடி கேட்டது என்றும் அவர் ஸ்டாலின்கிராட் வாசிகளின் ஆன்மாவாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லி அவர்கள் சோவியத் தேசபக்த யுத்தத்தின் தீர்மானகரமான மாபெரும் வெற்றிக்கு முழுவதுமாக குருசேவ்தான் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.


ஏவுகணை மற்றும் அணு ஆயுத தளவாடங்களில் ஈட்டிய மாபெரும் சாதனைகளுக்கு குருசேவ்தான் காரணம் என்று கூறும் அவர்கள் குருசேவை விண்வெளித்தந்தை என்று அழைக்கிறார்கள். ஆனால் அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் தயாரிப்பதில் ரஸ்சியா அடைந்த வெற்றிகள் ரஸ்சிய விஞ்ஞானிகள் தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரஸ்சிய மக்கள் ஸ்டாலின் தலைமையின் கீழ் சாதித்த மாபெரும் சாதனைகளாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏவுகணை உற்பத்திக்கான அஸ்திவாரங்கள் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டவை. இந்த முக்கிய வரலாற்று உண்மைகளை எப்படி அழிக்க முடியும்? எல்லாப் பெருமைகளும் குருசேவுக்கு எப்படி சேரும்?


லெனினியம் காலாவதியாகிவிட்டது என்று கூறும் குருசேவை மார்க்சிய-லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளை திரித்துப் புரட்டிய குருசேவை அவர்கள் மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி என்று புகழ்கிறார்கள்.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற போர்வையில் செய்வது யாவும் லெனின் மிகச் சரியாக சொன்னது போல “சாதாரண விடயங்களைப்பற்றி மிகச் சாதாரண கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த பழைய தலைவர்களுக்கு பதிலாக இயற்கைக்கு அப்பாற்பட்டு முட்டாள்தனமாகவும் குழப்பமாகவும் பேசுகிற புதிய தலைவர்களை முன்வைக்கிற” செயலேயாகும்.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதம் மார்க்சிய-லெனினியத்தை பின்பற்றும் எங்கள் நிலைப்பாட்டின் மீது அவதூறு செய்கிறது. “தனிநபர் வழிபாட்டுக் காலத்தில் திகழ்ந்து வந்த சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகள், தலைமைக்கான வடிவங்கள் மற்றும் முறைகள் ஆகிய, நடைமுறையில் இருந்தவற்றை பிற கட்சிகள் மீது திணிக்க முயல்வதாக” எங்கள் மீது அவதூறு கூறுகிறது. இந்தக் கூற்று தனிநபர் வழிபாட்டை எதிர்த்து போராடுவதன்; முட்டாள்தனத்தை மீண்டும் அம்பலப்படுத்துகின்றது.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சி ரஸ்சியாவில் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டிய பிறகு அங்கு ஒரு தனிநபர் வழிபாட்டுக்காலம் தொடங்கியது. அந்தக்காலத்தின் சமூக அமைப்பு முறையும் சித்தாந்த மற்றும் நெறிமுறைகளும் சோசலிசத்திற்கானவை அல்ல என்று தோன்றும். அந்தக் காலத்தில் ரஸ்சிய உழைக்கும் மக்கள் ஒரு கனத்த சுமையினால் அழுத்தப்பட்டுக் கிடந்தார்கள். அங்கே மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சயமின்மையும் சந்தேகமும் அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது. இவை ரஸ்சிய சமுதாய வளர்ச்சியை தடை செய்தன.

1963 ஜீலை 19ல் நடந்த ரஸ்சிய-ஹங்கேரி நட்புறவு பேரணியில் குருசேவ் ஆற்றிய உரையில் “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினார்” என்று கூறி ஸ்டாலினுடைய பயங்கர ஆட்சி பற்றிப் பேசினார். அந்தக் காலத்தின் சமூக நிலைமைகளை கீழ்கண்டவாறு வர்ணித்தார். “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா தனது மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் காண்போமா என்பதைப்பற்றி நிச்சயமற்றிருந்தான்”.


ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களின் வர்ணிப்புப்படி தனிநபர் வழிபாட்டுக் காலத்தில் சமுதாயம் நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவக்  காலத்திலிருந்ததைவிட மிகவும் வெறுக்கத் தக்கதாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் இருந்தது.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சியின் விளைவாக நிறுவப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும் சோசலிச சமூக அமைப்பு முறையும் உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்கு முறையை நீக்குவதற்கோ அல்லது ரஸ்சிய சமுதாயத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கோ பல பத்தாண்டுகள் தவறிவிட்டன. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது பேராயம் தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை நிறைவேற்றிய பின்புதான் உழைக்கும் மக்கள் மீது இருந்த கனத்த சுமை அகற்றப்பட்டது. ரஸ்சிய சமுதாயத்தின் வளர்ச்சி திடீரென்று துரிதப்பட்டது.


குருசேவ் சொன்னார் “ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்... !” எல்லோருக்கும் தெரிந்ததுபோல் ஸ்டாலின் 1953ல் இறந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு என்பது 1943ஆக இருந்திருக்கும். அந்த ஆண்டுதான் ரஸ்சிய நாடு மாபெரும் தேச பக்த யுத்தத்தில் எதிர்த் தாக்குதலை தொடங்கியிருந்தது. அந்தக் காலத்தில் ஸ்டாலின் இறந்து போக வேண்டுமென்று விரும்பியது யார்? ஹிட்லர்!


சர்வதேச கம்யுனிச இயக்க வரலாற்றில் மார்க்சிய-லெனினியத்தின் எதிரிகள் பாட்டாளி வர்க்க தலைவர்களைக் கொடியவர்களாகக் காட்டுவதும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது போன்ற முழக்கங்களைப் பயன்படுத்தி பாட்டாளிவர்க்க இலட்சியத்திற்கு குழி பறிப்பதும் புதிய விடயமல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் கண்டுகொண்ட ஒரு அசிங்கமான தந்திரமே இது.


முதலாவது அகிலத்தின் காலகட்டத்தில் சதிகாரன் பக்கூன் மார்க்ஸை வசைபாட இத்தகைய மொழியைத்தான் பயன்படுதினான். முதலில் மார்க்ஸின் நம்பிக்கையை பெறுவதற்கு புழுவைப்போல் நெளிந்து “ நான் உங்கள் சீடன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று எழுதினான். பிறகு முதலாவது அகிலத்தின் தலைமையைக் கைப்பற்றுவதற்கான தனது சதியில் தோல்வியுற்ற அவன் மார்க்ஸை வசை பாடினான். “ஒரு ஜேர்மானியனும் யூதனுமான அவன் அடியிலிருந்து முடிவரை ஒரு எதேச்சதிகாரி” மற்றும் “ஒரு சர்வாதிகாரி” என்றும் சொன்னான்.


இரண்டாவது அகிலத்தின் காலகட்டத்தில் லெனினை வசைபாட ஓடுகாலி காவுத்ஸ்கி இதே மாதிரி மொழியைத்தான் பயன்படுத்தினான். “ஒரு அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல , மாறாக ஒரு மத்தியக்கால அல்லது கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தை குறுக்கிவிட்ட ஏகக்கடவுள் கொள்கையினரின் கடவுள்” என்று லெனினை பழித்துக் கூறினான்.


மூன்றாவது அகிலத்தின் காலகட்டத்தில் ஸ்டாலினை வசைபாட ஓடுகாலி டிராட்ஸ்கி இதேமாதிரி மொழியைத்தான் பயன்படுத்தினான். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றும் ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களை சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது என்றும் கூறினான்.


நவீன திரிபுவாத டிட்டோ கும்பலும் ஸ்டாலினை வசைபாட இதே மொழியை பயன்படுத்துகிறது. ஸ்டாலின் முற்று முழுக்க தனிநபர் அதிகாரத்தை கொண்ட ஒரு அமைப்பு முறையில் சர்வாதிகாரியாக இருந்தார் என்று கூறுகின்றது.


இவ்வாறு ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைமையினால் எழுப்பப்பட்டுள்ள தனிநபர் வழிபாட்டை எதிர்க்கும் போக்கு பாட்டாளிவர்க்க தலைவர்களைத் தாக்கவும் பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்திற்கு குழிபறிக்கவும் பக்கூன், காவுட்ஸ்கி, டிராட்ஸ்கி மற்றும் டிட்டோ போன்ற அனைவரும் பயன்படுத்தியதுதான் என்பது தெளிவாகிறது.


சந்தர்ப்பவாதிகள் சர்வதேச கம்யுனிச இயக்க வரலாற்றில் மார்கஸ், எங்கெல்ஸ் அல்லது லெனினை வசைபாடுவதன் மூலம் அவர்களை மறுதலிக்க முடியவில்லை. குருசேவினாலும் வசைபாடுவதன் மூலம் ஸ்டாலினை மறுதலிக்க முடியாது.


லெனின் சுட்டிக்காட்டியது போல உயர்ந்த பதவி இழிவுபடுத்தலின் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது.


லெனின் அருங்காட்சியகத்திலிருந்து ஸ்டாலினுடைய உடலை அப்புறப்படுத்த குருசேவ் தனது உயர்ந்த பதவியை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர் எவ்வளவுதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மக்கள் மனதிலிருந்தும் ரஸ்சிய மக்களின் மனதிலிருந்தும் ஸ்டாலின் மீதான மாபெரும் பற்றுதலை நீக்குவதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
மார்க்சிய- லெனினியத்தை ஒரு வழியிலோ அல்லது இன்னொரு வழியிலோ திரித்துப் புரட்டுவதற்கு குருசேவ் தன்னுடைய உயர்ந்த பதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவர் என்னதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மார்க்சிய-லெனினியவாதிகளால் பாதுகாக்கப்பட்ட, ஸ்டாலினால் பாதுகாக்கப்பட்ட மார்க்சிய-லெனினியத்தை தூக்கியெறிவதில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.


நாங்கள் தோழர் குருசேவுக்கு அக்கறையுடன் ஒரு அறிவுரை கூற விரும்புகிறோம். நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு தவறான பாதையிலிருந்து மார்க்சிய-லெனினியப் பாதைக்கு திரும்பி வருவீர்கள் என நம்புகிறோம்.


மார்க்ஸ, எங்கெல்ஸ,;லெனின, ஸ்டாலின் ஆகியோரது மாபெரும் புரட்சிகர போதனைகள் வாழ்க!