................................................................................................
ஆப்பிரிக்காவின் கனிம வளங்களைச் சூறையாடிய பன்னாட்டு முதலாளிகள்,
அக்கண்டத்தின் வளமிக்க நிலங்களையும் அபகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
.................................................................................................

இயற்கை வளங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும் கொட்டிக் கிடக்கும் கண்டம் ஆப்பிரிக்கா. தங்கம், வைரம் முதல் கச்சா எண்ணெ வரை அங்கு இல்லாத செல்வங்களே இல்லை எனலாம். ஆனால் ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்கள்தான் அதற்கு சாபக்கேடாவும் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தொடங்கி, அமெரிக்கா தலைமையிலான இன்றைய மறுகாலனியாதிக்கவாதிகள் வரை தொடர்ந்து அந்தக் கண்டத்தைச் சுரண்டி-சூறையாடி வருகிறார்கள். அவர்களுக்குத் தனது வளங்களை அள்ளிக் கொடுத்த ஆப்பிரிக்கா பதிலுக்குப் பெற்றுக் கொண்டதெல்லாம் பஞ்சமும், பசியும், பட்டினியும் கூடவே இனக் கலவரங்களையும்தான்.


உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி, தனது நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காக பணக்கார நாடுகளிடம் கையேந்தி நிற்கும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் உலகின் மிக வளமான விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது அந்த விவசாய நிலங்களைக் குறிவைத்து உலக நாடுகள் ஆப்பிரிக்காவில் இறங்கியுள்ளன.


எதிர்காலத்தில் தங்களது நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் ஆபத்து இருப்பதால், உணவு உற்பத்திக்கென பணக்கார அரேபிய நாடுகள் இப்பொழுதே ஆப்பிரிக்காவில் நிலங்களைக் கையகப்படுத்த ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவின் நிதியாதிக்க கொள்ளைக்கார நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பதற்கென்றே தனியாக நிதி திரட்டி வருகின்றன.


சர்வதேசிய உணவுக் கொள்கை ஆராச்சி நிறுவனம் என்ற அமைப்பின் புள்ளி விவரப்படி, 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரைக் கிட்டத்தட்ட 2 கோடி ஏக்கர் வரையிலான நிலங்கள் ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. அரேபிய நாடுகளைத் தவிர இந்தியா, சீனா, தென் கொரியா போன்ற நாடுகளும் நிலப்பறிப்பில் இறங்கியுள்ளன. நிலங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கியோ 99 வருட குத்தகைக்கு எடுத்துக் கொண்டோ இந்த நாடுகள், இந்த நிலப்பறிப்பில் ஈடுபடுகின்றன. கென்யா, சூடான், தான்சானியா, எத்தியோப்பியா, கானா, மாலி, மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் தற்போது இந்த நிலப் பறிமுதல் வெகுவேகமாக நடைபெறுகிறது.


இதில் இந்திய நிறுவனங்கள் மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி ருபா வரை முதலீடு செய்து கென்யா, எத்தியோப்பியா, மொசாம்பிக், செனகல், மடகாஸ்கர் போன்ற நாடுகளில் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளன. இந்நிலங்களில் பல்வேறு உணவு தானியங்களையும், உயிர்ம எரிபொருளுக்குத் தேவையான பயிர்களையும் உற்பத்தி செய்யப் போகின்றன. மேற்கூறிய நாடுகளின் அரசுகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கும் இந்திய அரசு, இந்த நிலப் பறிமுதலுக்கு அவர்களைத் துணை போகும்படி நிர்பந்திக்கிறது.


நைல், நைஜர், காங்கோ, ஆரஞ்சு போன்ற நதிகள் இப்பகுதி விவசாயத்தின் ஆதாரமாக விளங்குகின்றன. எனவே, இந்த நதிகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவை பாயும் நாடுகளின் அரசுகளைத் தங்களது கைப்பொம்மைகளாக வைத்துக் கொள்ள பணக்கார நாடுகள் தங்களுக்குள் போட்டி போடுகின்றன.


அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இப்பகுதியில் தண்ணீரை மையமாக வைத்தே அரசியல் நடைபெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


கடந்த இரு ஆண்டுகளில் உலக அளவில் உணவு தானிய விளைச்சலில் ஏற்பட்ட சரிவையடுத்து பல நாடுகள் உணவுப் பொருள் ஏற்றுமதியைத் தடை செய்துவிட்டன. இதனால் உணவுப் பொருட்களை மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வந்த அரேபிய நாடுகளும் ஜப்பான், இஸ்ரேல், இந்தியா போன்ற நாடுகளும் உணவு தானியங்களுக்குக் கூடுதல் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் எவ்வளவு விலை கொடுத்தாலும் உணவு தானியம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.


இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட நாடுகள், உணவு தானியப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தானிய இறக்குமதியினால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டவும் ஆப்பிரிக்க நாடுகளில் நேரடியாக நிலத்தை வாங்கி மலிவான விலையில் உணவு தானியங்களை உற்பத்தி செய்து கொள்ளும் திட்டத்தில் இறங்கியுள்ளன.


ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் நிலப்பறிமுதலுக்கு இன்னொரு காரணமும் உள்ளது. அது உயிர்ம எரிபொருளுக்கு உலக அளவில் ஏற்பட்டிருக்கும் புதிய சந்தை. அமெரிக்கா தனது எரிபொருள் தேவையில் 10 சதவீதத்தை உயிர்ம எரிபொருளைக் கொண்டு நிறைவு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளதால், உயிர்ம எரிபொருளுக்கு உலக அளவில் ஒரு சந்தை ஏற்பட்டுள்ளது. அதனால் உயிர்ம எரிபொருள் உற்பத்திக்குத் தேவையான காட்டாமணக்கு, இனிப்புச் சோளம் போன்றவற்றைப் பயிரிட ஆப்பிரிக்க நாடுகளில் நிலம் வாங்குவது அதிகரிக்கிறது.


1990-களில் வளைகுடா நாடுகள் சூடானில் விவசாய நிலங்களை வாங்கியதிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளில் விவசாய நிலங்களின் விற்பனை தொடங்கியது. ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ருபாகளை பணக்கார நாடுகளிடமிருந்து உணவு மானியமாகப் பெறும் அந்நாட்டு அரசுகள் விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கத் தயாரா இருக்கின்றன.


8 கோடி மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் ஐ.நா.வின் உணவுத் திட்டத்தைச் சார்ந்திருக்கிறார்கள். இதே எத்தியோப்பியாவில்தான் 75 லட்சம் ஏக்கர் வளமான விவசாய நிலத்தை கையகப்படுத்தியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், அதில் விளையும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், மெலிஸ் ஜென்வானியின் தலைமையிலான சர்வாதிகார அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை.


அதேசமயம், இந்த நிலக் கொள்ளையை எதிர்க்கும் நாடுகளைப் பணிய வைக்க ஒட்டு மொத்த மேற்கத்திய நாடுகளும் ஓரணியில் நிற்கின்றன. இதற்கு ஜிம்பாப்வே சரியான உதாரணம். ஜிம்பாப்வேயின் மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே உள்ள வெள்ளையர்கள் 70 சதவிதத்துக்கும் அதிகமான விவசாய நிலங்களைக் கட்டுப்படுத்தி வந்தார்கள். இதனை எதிர்த்து ராபர்ட் முகாபே தலைமையிலான அரசு, நிலச் சீர்திருத்தங்களைத் தொடங்கியவுடன், ஓரணியில் திரண்ட மேற்கத்திய நாடுகள் ஜிம்பாப்வேயின் பொருளாதாரத்தையே சீரழித்து அதல பாதாளத்தில் தள்ளி விட்டன.


இந்த நிலப் பறிமுதல் ஆப்பிரிக்காவைத் தாண்டி தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. அண்மைக் காலமாக ஐக்கிய அரபு அமீரக நாடு, பாகிஸ்தானில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைப் பாசுமதி அரிசி உற்பத்திக்கென வாங்கியுள்ளது. இதே நாடு கஜகஸ்தானிலும் நிலங்களை வாங்கப் போவதாகக் கூறி வருகிறது.
இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில், தங்களது உணவுத் தேவையையே நிறைவு செய்து கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் ஏழை நாட்டு மக்கள், இனி பணக்கார நாடுகளுக்கும் சேர்த்து உணவை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.


அறுபதாண்டுகளுக்கு முன்னர், எவ்வாறு இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் நிலங்களை எல்லாம் அபகரித்து பாலஸ்தீனர்களை சோந்த நாட்டிலேயே அகதிகளாக்கியதோ, அதேபோன்று இன்று ஏகாதிபத்திய நாடுகள் ஆப்பிரிக்க மக்களின் நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்து ஆப்பிரிக்கர்களை உள்நாட்டு அகதிகளாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த நிலக் கொள்ளை.

-மணி.