உலகத்திலேயே கொடிய வறுமைத் தாண்டவமாடும் நாடுகளெல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் உள்ளன என்று அனைவரும் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், ஆப்பிரிக்காவை விட ஏழைகள் மிக அதிக அளவில் இருப்பது இந்தியாவில்தான் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை இப்போது வெளிவந்துள்ளது.


ஐ.நா ஆதரவு பெற்ற ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி (OPHI) என்ற அமைப்பு உலகளவில் மேற்கொண்ட ஆவில், ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமான ஏழைகள் இந்தியாவின் 8 மாநிலங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 41 கோடி பேர் கொடிய வறுமையில் வாடுகின்றனர். இந்தியாவிலோ பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் வறுமையின் கோரப் பிடியில் உள்ளோர் 42 கோடியே 10 லட்சம் பேர்களாவர்.


வறுமையை அளவிடுவதற்கான பழைய முறைக்குப் பதிலாக, கல்வி, சுகாதாரம், தூமையான குடிநீர், உணவு, உடை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்டு வறுமையை அளவீடு செய்யும் பல்பரிமாண வறுமைக் குறியீட்டு எண் (Multidimensional Poverty Index) என்ற புதிய முறையை பயன்படுத்தி இந்த ஆவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆண்டு அறிக்கைக்கு இனி இந்த புதிய அளவீடைத்தான் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளனர். உலகிலேயே தெற்காசியாவில்தான் ஆப்பிரிக்காவைவிட இரு மடங்கு வறியவர்கள் உள்ளனர் என்ற உண்மையை உலகுக்கு அறிவித்துள்ளது, இந்தக் குறியீட்டு முறை.


சீனாவுடன் வல்லரசுப் போட்டியில் இருக்கும் இந்தியா, வறுமையை ஒழிக்கும் திட்டத்திலோ, களிமண் ரொட்டி தின்று உயிர்வாழும் நிலையில் தம் மக்களை வைத்துள்ள ஹெதி நாட்டோடு போட்டி போடும் நிலையில்தான் உள்ளது. ஏழு கோடி மக்களைக் கொண்டிருக்கும் மத்திய பிரதேசமோ, இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு காங்கோ நாடாக மாறி வருகிறது. பீகாரின் வறுமை-வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக மோசமான அளவில் உள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரிசாவின் கிராமப்புறங்களில் 43% பேரும், பீகார் கிராமப்புறங்களில் 41% பேரும் வறுமையில் உள்ளனர்.


ஏகாதிபத்தியங்களின் சூறையாடலும் கடன் கொள்ளையும் உள்நாட்டுப் போரும் வறட்சியும் ஆப்பிரிக்காவின் வறுமைக்குக் காரணமென்றால், விவசாயத்தைச் சீரழித்து வரும் உலகமயப் பொருளாதாரம் இந்தியாவின் வறுமைக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயத்தின் சீரழிவால் வாழவழியின்றி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். "கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று, ஒரு வருடத்தில் சராசரியாக உட்கொள்ளும் உணவு தானியத்தின் அளவு 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்று 100 கிலோ குறைவாக உள்ளது" என்று இந்திய கிராமங்களின் வறுமையைப் பற்றி உட்சா பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் கூறுகிறார். நாட்டுக்கே உணவு தந்த விவசாயிகள் இன்று சோற்றுக்கே அல்லாடுகிறார்கள். விவசாயத்தின் தோல்வியால் கோடிக்கணக்கானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அத்துக் கூலிகளாகத் துரத்தப்படுகின்றனர். இதனால், இந்தியாவின் நகர்ப்புறச் சேரிகளில் மக்கள்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதை மத்திய அரசின் அறிக்கை ஒன்று உறுதி செய்கிறது.


நம் நாட்டில் வறுமையில் இருந்து மீள முடியாமல் உழல்வோரைத் தீர்மானிப்பதில் சாதி முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர்தான், வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கின்றனர். வறுமை நிலையில் வாழும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களில் 66% பேர் உச்சக்கட்ட வறுமையில் உள்ளனர். இது, பிற்படுத்தப்பட்ட சாதியினரில் 58%மாக உள்ளது. இது தவிர, மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரில் 81% பேர் வறுமையில் உள்ளனர். இவர்களது வறுமை நிலையானது, தொடர்ந்து 16 ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டு மக்களின் வறுமை நிலையைவிட மோசமானதாக உள்ளது.


உலக மனிதவள மேம்பாட்டு தரப் பட்டியலிலும் இந்தியா, மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய உடல் வளர்ச்சியின்மை காரணமாக பிரசவத்தின் போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. நோஞ்சான் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடும் இந்தியாதான். இந்தியாவின் கிராமப்புறத்தில் வாழும் சரி பாதிக் குழந்தைகள் எலும்பும் தோலுமாகவும் உடல் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 43% பேர் ஊட்டச் சத்தின்மையால் உடல் வளர்ச்சி குன்றிப் போ, ஆப்பிரிக்காவின் தெற்கு சஹாரா பாலைவனப் பிரதேசங்களை விட மோசமான நிலையில் உள்ளனர். நாட்டின் எதிர்காலம் எனப்படும் குழந்தைகளில் பாதிப்பேருக்கு நிகழ்காலமே கேள்விக்குறியாய் உள்ளது. இதனை மொத்தமாக தொகுத்து, உலக வங்கி இப்படிச் சான்றிதழ் அளிக்கிறது: "உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49%பேரும், உடல் வளர்ச்சி தடைபட்ட குழந்தைகளில் 34% பேரும், நோவாப்பட்ட குழந்தைகளில் 46% பேரும் வாழும் இடம் இந்தியா". மொத்தத்தில் உலகிலேயே குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாகத்தான் இந்தியா உள்ளது.

தனது குழந்தைகளின் நலனைக் கூடக் காக்க இயலாத இந்தியாதான் உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தையும், நான்காவது வலிமையான கப்பல் படையையும் கொண்டுள்ளது. சோந்த நாட்டில் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைக் கூட உத்திரவாதப்படுத்த வக்கில்லாதவர்கள், விஞ்ஞானத்தை வளர்த்து ராக்கெட் விட்டு சந்திரனைப் பிடிக்கப் போகிறார்களாம்!


இந்திய அரசு வறுமையை அளவிடக் கையாளும் முறையோ வக்கிரமானது. நகரத்தில் ஒருவர் மாதம் 538 ரூபா சம்பாதித்தாலே, அதாவது மூன்று வேளை ஒருவரால் தேநீர் மட்டும் குடிக்க முடிந்தாலே அவர் வறுமைக் கோட்டை கடந்துவிட்டார் என்று வரையறுத்துள்ளது. இந்த அளவை பல வருடங்களாக மாற்றாமலேயே வைத்திருந்துவிட்டு, வறுமை குறைந்துவிட்டது என்று இதுவரை கதையளந்து வந்துள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தத் தெரிந்தவர்களுக்கு மக்களின் வாழ்நிலையை உயர்த்தும் வழிதெரியவில்லை.


கழுதை தேந்து தேந்து கட்டெறும்பான கதையாக, வறுமையில் ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையை இந்தியா இன்று அடைந்துள்ளது. அதேநேரத்தில் உலகப் பெருமுதலாளிகளின் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் அணிவகுத்து நிற்கும் அளவுக்கு அவர்களது சோத்துக்களும் பூதாகரமாக வளர்ந்துள்ளன. இதுதான் நாட்டின் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தனியார்மய-தாராளமய-உலகமயமாக்கத்தின் மகிமை!


-கதிர்.