கலாச்சாரத்திற்கும் பழக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்வார்கள். கலாச்சாரம் என்பது பாரம்பாரியமாக இருந்து வரும் ஒரு இனக் குழுமத்தின் செயற்பாட்டு நடைமுறைகள் என்றும் சொல்வீர்கள்.

ஆனால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுருங்கிவரும் உலகத்தில் இவை காலச்சாரமாகி விடுவதை அவதானிக்கலாம். இருந்தாலும் இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான கலாச்சார பண்பாடுகள் உண்டு. அந்த கலாச்சார அடித்தளத்தையே தகர்ப்பதில் அந்நிய சக்திகள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் கடந்த ஒரு நெருப்பாற்றுப் பயணம் அந்தப் பயணம். அந்த பயணமானது முகாம் வாழ்க்கையில் வேறு விதத்தில் தொடர்கின்றது. உணர்ச்சிகள் அற்ற ஐடங்களைப் போன்று உயிரை மட்டும் கொண்டு குண்டுச் சத்தமே கேட்காத பாலைவனம் என்றாலும் போதும் என்ற நிலையில் தான் இந்த மக்கள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. எப்படியும் வாழ முடியும் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பண்பாட்டுடன் வாழ்ந்த மக்களில் சிலர் தவறான வழியில் செல்வதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசும், அதிகாரிகளும்தான் என்னும் மிகப் பெரிய கருத்து ஒன்று மக்கள் மத்தியில் உலாவி வருகின்றது. இதைப் பற்றி கேட்ட போது அவர்கள் கூறுகின்ற செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.

மில்லியன் கணக்கில் செலவு செய்து 30 வருடமாக முடிவுக்கு வராத போரை முடித்து வைத்த அரசாங்கத்திடம் ஒரு குடும்பத்திற்கு ஒரு கூடாரத்தை ஏன் வழங்கமுடியவில்லை? ஒரு கூடாரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பல குடும்பங்களை தங்க வைத்து, கட்டாயக் கற்பழிப்பும், பாலியல் சேட்டைகளையும் ஆரம்பத்தில் அரசாங்கமே உருவாக்கி விட்டது. உணர்ச்சிகளற்ற ஐடங்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

ஒரு கூடாரத்தில் பனங்கிழங்கு போன்று அடுக்கிய நிலையில் படுத்தால் இதன் விளைவு எவ்வாறு இருக்கும். குடும்ப உறவுகள்,சொந்த உறவுகள் என்பதற்கு அப்பால் ஆரோக்கியமற்ற சூழ்நிலை ஓன்று உருவாக வழிவகுக்கப்பட்டது. இதன் அன்றைய விளைவுதான் இன்று இந்த மக்களின் பண்பாட்டுச் சீரழிவுக்கு அத்திவாரமிட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளும், கமாரா போன்களும் இங்கு குப்பையாக பெருகிவிட்டது. இவற்றின் மூலமாக மிஸ்கோல்கள் அடிப்பதும், ஆபாசப்படங்களை பார்ப்பதும் மிக மோசமான சூழலை உருவாக்கி விட்டது. இதனால் ஆண், பெண் இருபாலாரும் விடுதிகளைத் தேடிப் போய்க்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு சட்டத்தைப் பாதுகாக்கும் காவல்துறையினரும் உடந்தையாகச் செயற்படுவது தான் மிக மோசமான சூழலை உருவாக்கி விட்டது. இருபாலாரும் விடுதிகளைத் தேடிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையினரும் உடந்தையாய் செயற்படுகின்றது தான் மிக வேதனையாக உள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து தப்பிக் கொள்வதற்காக மனப்பொருத்தம், புரிந்துணர்வு எதவும் இன்றி 15,16 வயதுகளில் திருமணங்களைச் செய்தவர்கள் இன்று கருத்து முரண்பாடுகளால் பிரிந்து சென்று தவறான வழியில் போய்க் கொண்டு இருக்கின்றார்கள். வேலியே பயிரை மேய்வது போன்று மக்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டிய இராணுவத்தினரும் பொலிஸ் அதிகாரிகளும் சேர்ந்து சில பெண்களைக் தவறான பாதைக்கு அழைத்து செல்வதைப் பார்க்கும் போது எமது இனத்தின் தலைவிதியை இப்படி மாற்றி விட்டார்களே என்று ஏங்குவதை தவிர வேறெதுவும் செய்ய முடியாதவர்களாகிய துப்பாக்கியசாலிகளாக இருக்க வேண்டியுள்ளது. புலிகள் என்று அழைத்துச் சென்றவர்களின் எத்தனையோ குடும்பங்கள் உருக்குலைந்து விட்டன. கணவன் தடுப்பு முகாமில் இருக்க மனைவியானவள் தனது உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலை நாடிச் செல்கிறாள். இதன் மூலம் வேறொரு ஆணுடன் சேர்ந்து வாழ்வதற்கு தயராகின்றாள். மனைவியை ஆவலுடன் எதிர்பார்த்து  காத்திருக்கும் கணவனுக்கு மனைவியினது நாடக வாழ்வின் செய்தி மட்டுமே செல்கின்றது. இதனால் அவன் ஒரு மன நோயாளியாக மாறுகின்றான். இந்த நிலையை உருவாக்கி விட்டவர்கள் யார்? இதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு வகையில் கணவனை இழந்த மனைவி தனது பிள்ளைகளை வளர்ப்பதற்கும் தவறான பாதையைத் தான் நாடுகின்றாள். வவுனியா நகரத்தில் தேவையற்று ஒரு பெண் காத்திருந்தால் அதனை தப்பாக புரிந்து கொள்ளும் நிலை. ஏனெனில் அங்கு காத்திருக்கும் ஏராளமானோர் விலைமாதர்களாக தங்களை அறிமுகப்படுத்தியவர்களே. இதனால் சாதாரண பெண்கள் கூட விழிப்பாக இருக்க வேண்டும்.

முகாம்களில் பாடசாலை கல்வி என்பது ஏதோ தானோ என்று தான் உள்ளது. ஆனால் கமாரா போன்களில் ஆபாசப்படங்களைப் பார்த்து குறுக்கு வழியினைப் பின்பற்றுகின்றார்கள். வீட்டில் ஒரு நேரச் சாப்பாட்டுக் கூட வழியில்லை. ஆனால் விலையுயர்ந்த போன்களுடன் பிள்ளைகள் வீதியில் வலம் வருகின்றார்கள். வன்னியில் போன் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கு ஆபாசப் படங்களைப் பார்த்து அழிவுப்பாதையில் செல்கின்றார்கள். இவற்றை பார்த்தும் இலங்கை அரசு மௌனமாக இருக்கின்றது. என்றால் என்ன அர்த்தம் என்று புரியாத முட்டாள்களா நாம்?

வழிதவறிச் சென்று வயிற்றில் சுமையுடன் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணொருவர் பொலிஸ் காரியாலத்தில் நிற்கிறார். இந்த பெண்ணிடம் பல கேள்விகளை பொலிஸார் கேட்கின்றார்கள். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிரவில்லை எப்படி நிமிர்ந்து நின்று பதில் சொல்வது. அவர்கள் கேட்ட கேள்வி உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவன் யார் என்றுதான்.  எப்படி பதில் சொல்வது யாரோ ஒரு சிப்பாய் என்று சொல்வதா அல்லது சட்டத்தை காக்கும் காக்கி உடுப்புக்காரர் என்று சொல்வதா? அல்லது கூடாரத்தில் பல பேர் இருந்தார்கள் அதில் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதா எதைச் சொல்வது? இவரைப் போன்று பல பெண்கள்  இந்த நிலையில் தான் உள்ளார்கள். இதனை பார்த்து சிங்கள மொழியில் கதைக்கின்றார்கள். நாங்கள் நாங்களாகத்தானே இருந்தோம் எம்மினத்தை நாசமாக்கி வருவது யார்?

ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி ஓழுக்கம் பண்பாடு என்பது இருபாலாருக்கும் பொருந்தும். முகாம்களில் வாழும் சில மக்களின் தவறான நடத்தைகளால் ஏராளமான பெண்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது. நிச்சயம் செய்து திருமணம் என்றாலும் முகாம் பெண்கள் ஆண்கள் என்றால் முகம் சுளிக்கின்றனர். ஏன் ஓரு சிலரினால்  எல்லா மக்களும் பாதிக்கப்பட வேண்டும்? இந்த சந்தேகக் கண்ணோட்டத்தின் மூல காரணம் என்ன? இதற்கு பதில் சொல்ல அரசாங்கத்தால்  முடியுமா?  லஞ்சம் வாங்கி கடமை செய்யும் பொலிஸ் அதிகாரிகள் இலங்கை அரசிடம் மட்டும்தான் உண்டு. ஏனெனில்; பொலிசிற்கு லஞ்த்தை கொடுத்து விட்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுகின்றார்கள். இதனால் முகாம்களில் ஏகப்பட்ட குழப்பம். ஓரே மாதிரியான கூடாரங்கள் பிரித்து இனங்காண முடிவதில்லை.

மற்றவர்களின் கூடாரங்களிற்குள் புகுந்து தேவையற்ற ரசபாசங்கள் உருவாகின்றன. வன்னியில் எப்ப செல் விழும் என்று பயத்தில் நித்திரை கொள்ள முடியாது. இங்கு எந்த சைடர் (கசிப்புக்கு வைத்துள்ள பெயர்கள் ) காரன் வந்து வீடு மாறிப் போய் புகுந்து கொள்கிறானோ என்ற ஏக்கத்தில் உறங்க முடியாதுள்ளது. ஒவ்வொரு கூடாத்திலும் ஓரு சோக வரலாறு உண்டு. ஆனால் சில உள்ளங்கள் ஏன் இப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் என்று தெரியவில்லை. வன்னி மீள்குடியேற்றம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. முகாம்களில் இருக்கும் மக்களின் விடுதலை பற்றி தெளிவான முடிவில்லை. இந்த நிலையில் முகாம்களில் உள்ள கால்வாசிப் பங்கினர் ஏதோ ஓரு வகையில் சீரழிகின்றனர், சீரழிக்கப்பட்டும் வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக பலரிடம் கதைக்கும் போது அவர்களது மனதில் மறைந்தும் மறையாமலும் நின்றவர்கள் விடுதலைப்புலிகளே.

விடுதலைப்புலிகள் இருக்கும் வரை எந்த ஓரு கலாச்சார சீரழிவுகளோ பாலியல் சேட்டைகளோ பலதார திருமணங்களோ இடம்பெற அனுமதிக்கப்படவில்லை. தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காத்து போற்றிப் பாதுகாத்தவர்கள். ஓரு சினிமாப்படத்தை பார்ப்பது என்றாலும் அவர்களின் அனுமதியுடன் தான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஆபாசக் காட்சிகள் அற்ற நல்ல திரைப்படங்கள் மட்டுமே பார்க்க வேண்டும் பார்க்க முடியும். அப்போது அவர்களின் அந்த நடைமுறை எங்களுக்கு அடக்குமுறை போன்றுதான் இருந்தது. ஆனால் இங்கு பார்க்கும் படங்களிலிருந்து ஒன்று மட்டும் உணரக் கூடியதாக இருக்கிறது. அங்கு அவர்களின் நடவடிக்கையால்  ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கினார்கள். இங்கு இவர்கள் ஆபாசமான சூழலை உருவாக்கி எதைப்பற்றியும் சிந்திக்காமல் உருக்குலைந்த சமுதாயமாக மாற்ற எணணியுள்ளார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். ஆரம்பத்தில் புலிகளே வேண்டாம் என்று அறை கூவினோம். ஆனால் எல்லா விசயங்களையும் அலசி ஆராயும் போது புலிகளைப் போன்று புலிகளே வந்தாலும் நல்லது அப்படிபட்டவர்களால் தான் இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறுகின்றார்கள்.

குற்றம் செய்வது மனித இயல்பு. அதனை முடியுமான அளவு குற்றவாளிகளுக்கு எடுத்துச் சொல்லி வாய்மொழியாலும் எச்சரிக்கைகளாலும் திருத்தப்பட வேண்டும். சட்டம் என்பது எல்லா மதத்தினருக்கும் இனத்தவருக்கும் உண்டு. இதனை சரியான வழியில் கடைப்பிடித்தால் ஓரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம் என்பதை ஏனிந்த அரசாங்கம் விளங்கிக் கொள்;ள மறுக்கின்றது என்பதுதான் எமக்கு புரியவில்லை.

எல்லாவற்றையும் ஓட்டுமொத்தமாக நோக்கும் போது எப்பாடுபட்டாலும் தமிழ் சமுகத்தை சீரழித்தே  தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை சிதைத்து உருக்குலைந்த சமுதாயமாக மாற்ற எண்ணியுள்ளது. சிறுபான்மை என்று எவருமில்லை எல்லோரும் ஒரே மக்கள் என்று உலகிற்கு போக்குக் காட்டி வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு இன்னொரு பக்கத்தில் இந்த முறைகேடான முகாம் வாழ்க்கையை ஆதரித்து மௌனமாக உள்ளது.

புலிகள் இல்லாத நிலையில் இந்த மக்கள் இப்படிதான் வழி நடத்தப்படப் போகின்றார்கள் என்பது நிரூபணமாகின்றது. இந்த மக்கள் இப்படித்தான் இனியும் ஏமாற்றப்படப் போவது எதிர்கால சந்ததிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை அவசரமாகவும் அவசியமாகவும் சிந்திக்க வேண்டும்.

வன்னியிலிருந்து கண்மணி