காலிலே போட்டாட்டி கண்மணியே உறங்கென்று
எண்ணை குளிப்பாட்டி ஏராளம் கனவோடு
பிஞ்சுடல் நோகாது மெல்லத்தடவி கிராமத்துக்
கொஞ்சும் பாட்டிலே வளர்ந்தவர்கள்
கஞ்சியோ கூழோ காலாறியிருந்து முற்றத்தில்
கெந்தி விளையாடி கிளித்தட்டு மறிப்புமாய்
குதூகலித்துக் கிடந்தவர்கள் நெஞ்சு பதைக்கிறதே….

பாட்டியை சுமந்து படம் காட்டிய படியே
பிள்ளைகளை பேரக் குஞ்சுகளை
குண்டு பொழிந்த குழிகளில் தின்றுபோட்டது
பாதகர் பாதத்தில் மிதி படத் தள்ளிய போரே
வீரப் பரம்பரை வெளி உலக நப்பாசையென
விண்ணிலும் பறக்க விட்டு கண்ணிலே குத்தினாய் போ….

 

விழுகின்ற இராட்சதக் குண்டுகளால்
அழுகுரலால் அதிர்ந்த நிலம் புகைமுட்டமாய்
வீடிழந்து ஓடிடும் உயிர்களை பேய்கள் தின்றது
பாடிய குயில்களின் கூடுகளை பொசுக்கியபடியே
காருண்ய மீட்பாய் காணொளிகள் வந்தன–பாரிங்கே
குஞ்சுகளை குதறிய கொடுமரக்கர் கைகளையே
கொஞ்சுகின்ற இழிநிலையை என்னென்போம்..

 

திக்கொன்றாய் கிடக்கும் மக்கள் நலன் கூடுமோ
செஞ்சேனை திரண்டென்று எம் மண்ணை ஆழுமோ
நெஞ்சத்துக் கனலெல்லாம் நிமிர்ந்தென்று ஒலிக்குமோ
பஞ்சத்துள் வாழ்வோர் படைதிரண்டு அதிருமோ

 

இனத்திடை பகை நொருங்கி இணைந்தென்று எழுவரோ 
புலத்தினில் போலிகள் முகத்திரை கிழியுமோ
உலக உழைப்பவர் அணியினுள் தமிழினம் சேருமோ
வதைப்பவன் அரசாட்சி வீழ்ந்திடல் நெருங்குமோ

 

நந்திக் கடல்வரை வீழ்ந்தழித்தோம்
சிந்திக்காதினியும் சிதையினுள் வீழ்த்துவதோ
முந்தைய தவறுகள் முளைவிடாதெழுக
சிந்தையில் நிறுத்தி செயலிறங்கு இளையோரே……

 

http://www.psminaiyam.com/?p=6129