தொண்டமான், விஜேதுங்க ஊடல் அண்மையில் கூடல் ஊடாக சிறுபான்மை தேசிய இனம் மீண்டும் ஒரு முறை விற்பனையாகியுள்ளது. அண்மைக்காலமாக கௌரவ அவமதிப்புக்குள்ளாகிய தொண்டைமான் தேசிய சிறுபான்மை மீதான டிங்கிரியின் தாக்குதலுடன் மலையக மக்களின் கதாநாயகன் வேடத்தை தாங்கினார். இதனால் யூ.என்.பி தொண்டா உறவு கேள்விக்குள்ளாகியும் இருந்தது. இந்நிலையில் செல்லச்சாமியை விலைக்கு வாங்கிய பலர், எட்டு மாகாண சபை உறுப்பினர்களையும் சேர்த்து விலை பேசிக்கொண்டனர். ஆனால் அண்மையில் தென்மாகாண சபை தேர்தலின் தோல்வியைத் தொடர்ந்து தொண்டா யூ.என்.பி உறவை புதிப்பிக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விஜேயதுங்கா அழைப்பை ஏற்றுச் சென்ற தொண்டமானின் பேரன் ஆறுமுகத்துடன் ஜனாதிபதி சந்தித்து கட்டித் தழுவிக்கொண்டார். ஜனாதிபதி தொண்டமானை பார்த்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை எனக் கூறியவுடன் தொண்டமான் மெய்சிலிர்த்து மலையக மக்களினதும், தமிழ் தேசிய சிறுபான்மை இனங்களினதும் பிரச்சனையை ஜனாதிபதி தீர்த்துவிட்டார் எனக் கருதி எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து அரசியல் விபச்சாரியானார். இந்த உறவுடன் செல்லச்சாமி மரணப்படுக்கையில் உயிர் ஊசலாடுகிறது. செல்லச்சாமியின் வெளியேற்றம் தொண்டமானின் கட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

தொண்டைமான், யூ.என்.பி ஊடல் முடிவுக்கு வந்தவுடன் செல்லச்சாமியின் வாழ்வு இனி அஸ்தமனம் தான். இதுவரை கொள்ளையடித்ததுடன் எதிர்காலத்தில் கொள்ளையடிக்க முடியாத நிலையை விபச்சார அரசியல் ஏற்படுத்தி விட்டது. தொண்டமானை அரசியலிலிருந்து வெளியேற்றக் கோரிய செல்லச்சாமி தொடர்பாக இன்று தொண்டமானிடம் கேட்டபோது அவர் தன் அரசியல் சமநிலையையும் எதிர்காலத்தையும் இழந்துவிட்டார் எனக் இப்படிக் கூறினார். எதிர்காலத்தை இழந்தது என்றதன் ஊடாக தமது சுகபோகங்களையும், கொள்ளையையும் குறிப்பிடுகிறார் தொண்டமான். மலையக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வாழமுடியாது போய்விட்டது என அறிவித்துள்ளார் தொண்டமான். செல்லச்சாமி ஆப்பிழுத்த குரங்காக மாறி அவ்விடத்திலே சிறு காலத்தில் மரணிப்பதை விட வேறு வழியில்லை.