அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கொல்லைப்புற வழியாக நீக்கிவிட முயலுகிறது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாளன்று ஈழப்பிரச்சினையையொட்டி பார்ப்பன சகுனி சுப்பிரமணியசாமியை எதிர்த்துப் போராடிய வழக்குரைஞர்களைப் போலீசார் நாள் முழுக்கக் கொடூரமாகத் தாக்கிய பயங்கரவாதத்தைத் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தக் காக்கிச் சட்டை பயங்கரவாதத்தில் இருந்து நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் எந்தப் போலீசு அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்ட போதிலும் கருணாநிதி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 25.4.10 அன்று சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்புவிழா ஏற்பாடாகியிருந்தது. போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் இந்த விழாவுக்கு வரக்கூடாது என்று வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் வருகையைக் கண்டித்து பெரும்பாலான வழக்குரைஞர்கள் விழாவைப் புறக்கணித்தனர். விழாவுக்கு இரு நாட்கள் முன்னதாகவே மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் (HRPC) சேர்ந்த வழக்குரைஞர்கள் ""குற்றவாளி போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதியே திரும்பிப் போ!'' என்ற முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம் விநியோகித்து உயர்நீதி மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருப்பினும் இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு இந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டார்.

 

இவ்விழாவில் முத்தாய்ப்பாகத் தமிழக முதல்வர் கருணாநிதி பேச ஆரம்பித்தபோது திடீரென எழுந்த மனிதஉரிமைப் பாதுகாப்பு மையத்தைச் (HRPC) சேர்ந்த வழக்குரைஞர்கள் கருப்புக் கொடி ஏந்தி வழக்குரைஞர்களைத் தாக்கிய போலீசு மீது நடவடிக்கை எடுக்காத கருணாநிதி அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அக்கூட்டத்திற்கு கருப்பு பேண்ட் வெள்ளைச் சட்டையுடன் அழைத்து வரப்பட்ட தி.மு.க.வின் வடசென்னை மாவட்டச் செயலர் பாபுவின் அடியாட்கள் இத்தோழர்கள் மீது நாற்காலிகளை எடுத்து வீசிக் கற்களாலும் தாக்கினர். மேடைக்கு எதிரே பத்து நிமிடங்களுக்கும் மேலாக இக்கொடூரத் தாக்குதல் நடந்தபோதிலும் இந்த ரவுடித்தனத்தை போலீசு வேடிக்கைப் பார்த்தது. படுகாயமடைந்த இத்தோழர்கள் மீது பல பிரிவுகளில் பொய்வழக்குப் போட்டுள்ளது போலீசு.

 

இக்கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும் தி.மு.க. ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 27.4.10 அன்று பிற்பகலில் நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளான வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் வெறியாட்டம் போட்ட போலீசுக்கு அரணாக நிற்கும் தமிழக முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்டிய வழக்குரைஞர்கள் மீது தி.மு.க. ரவுடிகளை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றம் எதிரேயுள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் 29.4.10 அன்று கண்டனக் கூட்டம் நடைபெற்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நீதிமன்ற வளாகத்திலேயே முதல்வர் அமைச்சர்கள் நீதிபதிகள் முன்னிலையிலேயே இப்படியொரு வன்முறை வெறியாட்டம் நடந்திருக்கிறதென்றால் இது ஜனநாயக ஆட்சியா காட்டாட்சியா என்று கேள்வி எழுப்பி இக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

- பு.ஜ. செய்தியாளர்