மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயியும், போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவருமான லால்மோகன் டுடூ, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன், தம்பதிகளான யுவராஜ், சுசித்ராமுர்மூ ஆகிய இரு பழங்குடியினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

லால்கார் வட்டாரத்தின் கண்டபாஹிரியிலுள்ள மத்திய ரிசர்வ் போலீசுப்படை முகாமை மாவோயிஸ்டுகள் தாக்கியதாகவும், தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவர் மாண்டுவிட்டதாகவும் வழக்கம் போலவே கதையளக்கிறது, போலீசு. ""அவர் ஒரு மாவோயிஸ்டு பயங்கரவாதி, அவர் அப்பகுதியெங்கும் பயங்கரவாதத்தை விரிவுபடுத்தினார்'' என்கிறது போலீசு.

 

ஆனால், லால்மோகன் டுடூ மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்தவரோ, கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டவரோ, கொரில்லாப் போர்க் கலையில் தேர்ச்சி பெற்ற தளபதியோ அல்ல. லால்காருக்கு அருகில் உள்ள நார்சா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிதான் டுடூ. அவர் ஒரு சேவை மனப்பான்மை கொண்ட, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சாதாரணப் பழங்குடியின விவசாயி. அதனால்தான் போலீசு அடக்குமுறைக்கு எதிராக லால்காரில் பழங்குடியினமக்கள் இயக்கம் தொடங்கப்பட்டபோது, தாலிபூர்சவுக்கில் நடந்த பழங்குடியினர் கூட்டத்தில் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசு அதிகாரிகளுடனும் தேர்தல் கமிசன் அதிகாரிகளுடனும் நடந்த பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்காற்றினார். அப்போதெல்லாம் அவர் மாவோயிஸ்டு என்று குற்றம் சாட்டப்படவில்லை. பயங்கரவாதி என்று தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படவுமில்லை.

 

லால்காரில் மத்தியமாநில அரசுகளின் படைகள் குவிக்கப்பட்டு அடக்குமுறை ஏவப்பட்டதும், டுடூவும் அவரது கிராமத்திலுள்ள ஆண்களும் தலைமறைவாகினர். பத்தாம் வகுப்பு படித்துவரும் தனது மகளின் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதியன்று தொடங்குவதால், மகளைச் சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக பிப்ரவரி 22ஆம் தேதியன்று இரவில் அவர் வீட்டிற்கு வந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு, நள்ளிரவில் வீட்டை முற்றுகையிட்டு அவரையும் மற்றும் இருவரையும் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளது.

 

மத்திய ரிசர்வ் போலீசுப் படை முகாமுக்கு வெகு அருகிலுள்ள கோயிலில் அன்று திருவிழா நடந்துள்ளது. கிராம மக்கள் பலர் அந்தத் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு பின்னிரவில் தான் திரும்பியுள்ளனர். அங்கு மாவோயிஸ்டு தாக்குதல் நடந்ததற்கான எவ்வித அடையாளமும் இல்லை. முகாமிலிருந்த போலீசாரும் அப்படி எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்றே கூறியுள்ளனர். ஆனாலும் இது மாவோயிஸ்டு தாக்குதல்தான் என்றும், மோதலில்தான் டுடூ கொல்லப்பட்டார் என்றும் கூசாமல் புளுகி வருகின்றன மைய, மாநில அரசுகள்.

 

சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து வயல்வெளியில் அவர் கிடத்தப்பட்ட இடம் வரை இரத்தம் சிந்தியிருப்பதையும், வயல்வெளியில் போலீசாரின் பூட்சுகளால் பயிர்கள் நசுக்கப்பட்டிருப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் படம் பிடித்து இக்கோரக் கொலையை வெளிக்கொணர்ந்துள்ளன. ""மே.வங்கத்தில் கண்டதும் சுட உத்தரவு  நாமெல்லோரும் இலக்குகள்!'' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டு, இலண்டனிலிருந்து வெளிவரும் இண்டிபென்டென்ட் நாளேடு, இந்தக் கொலைவெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

 

காட்டுவேட்டை எனும் உள்நாட்டுப் போரைத்தொடுத்துள்ள அரசு, மாவோயிஸ்டுகளைக் கண்டதும் சுடுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் யார் மாவோயிஸ்டு என்பது தான் கேள்வி. போராடும் அனைவரும் மாவோயிஸ்டுகளாகச் சந்தேகிக்கப்படுகிறார்கள். மக்கள்திரள் போராட்டத் தலைவரான டுடூவின் கொலை இதை நிரூபித்துக் காட்டுகிறது.

 

· பாலன்