சிவமுராத் திவேதி, தில்லியைச் சேர்ந்த பிரபலமான விபச்சாரத்தரகன். இணையதளத்தின் மூலம் விபச்சாரத் தொழில் செய்து கொடிகட்டிப் பறந்தவன். அவனது தொழிலுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பாக உதவியது காவியுடைதான். பகல் முழுவதும் யோகம், தியானம், ஆன்மீகச் சொற்பொழிவு என ""இச்சாதாரிபாபா''வாக வேடம் போட்ட இந்தக் காவியுடைச் சாமியார், இரவானால் விபச்சார "மாமா'வாகச் செயல்பட்டுள்ளான். இந்த இச்சாதாரி "மாமா' அம்பலமாகி வட இந்தியாவைக் கலக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், காற்று வரும் என நினைத்து கதவைத் திறந்து வைத்து கல்லாக் கட்டிக் கொண்டிருந்த கயவாளி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் கொஞ்சிக் குலாவிய படுக்கையறைக் காட்சிகள் வெளியாகி தமிழகத்தை அதிர வைத்தன.

நித்யாவின் "கிருஷ்ண லீலை'களுக்கு இணையாக, அதே நேரத்தில் ஆந்திராவை கலக்கிக் கொண்டிருந்தான், கலியுகக் கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட "கல்கி பகவான்'. போதை மயக்கத்தில், பெண்கள் புடைசூழ, அரைகுறை ஆடையுடன் பக்தர்கள் ஆடுவதைக் கல்கி பகவான் ரசித்துக் கொண்டிருந்த காட்சிகள் ஆந்திர ஊடகங்களில் வெளியாகின. இந்த அவதார புருஷனின் சின்னத்தனங்களை சின்னத்திரையில் பார்த்து ஆத்திரமடைந்த பக்தர்கள், அவனது ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள்.

 

இது போன்ற பொறுக்கி சாமியார்கள் அம்பலமாவது முதல்முறையாக நடப்பதல்ல. பிரேமானந்தா தொடங்கி காமகேடி ஜெயேந்திரன்வரை எத்தனையோ பேர்வழிகள் அம்பலமாகியுள்ளனர். அதே சமயத்தில், புதிது புதிதாக சாமியார்கள் தோன்றுவதும் குறைந்தபாடாயில்லை. இவர்களும் வாயிலிருந்து லிங்கம், கட்டிப்புடி வைத்தியம், கல்பதரு ரகசியம், சுதர்ஸன கிரியையோகம், தியான லிங்கம், சுயம்புலிங்கம்  என பக்தர்களைக் கவரபுதுப்புது வழிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நீதி, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு  என இவர்கள் போதிப்பது அனைத்தும் பக்தர்களுக்கு மட்டும்தானேயொழிய, இந்தக் காவியுடைச் சாமியார்கள் எதையும் தங்கள் வாழ்வில் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை.

 

இவர்களை இவ்வளவு உயரத்திற்கு ஏற்றிவிடுவதில் பெரும் பங்கு ஊடகங்களுக்கு இருக்கிறது. நித்யானந்தன் புகழோடு இருந்த போது, அவனை வைத்துத் "தொழில்' நடத்திய பத்திரிகைகள், தற்போது அவனது சாயம் வெளுத்த பிறகு அதனையும் தங்களது வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. நித்யானந்தா நடிகை ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி, பத்திரிக்கை தர்மத்தில் "மாமா வேலை'யையும் சேர்த்து புது இலக்கணம் ஒன்றையும் இவர்கள் வகுத்துள்ளனர்.

 

சென்ற முறை, காஞ்சிபுரம் கருவறைப் புகழ் தேவநாதனின் லீலைகள் ஒளிக் குறுந்தகடுகளாக வெளிவந்தபோது, அதனை வியாபாரமாக்கும் அரிய வாய்ப்பை தவற விட்ட ஏக்கத்திலிருந்த இந்த ஊடகங்கள், இம்முறை நித்யானந்தா வசமாக மாட்டியவுடன் தங்களது வியாபாரத் தந்திரங்கள் அனைத்தையும் காட்டி விதவிதமாகக் காசு பார்த்துவிட்டன. இலவசமாக நித்யானந்தனின் லீலைகளைப் போட்டுக்காட்டி தனது பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதுடன், விளம்பரக் கட்டணங்களை உயர்த்தி, சன் டிவி கல்லா கட்டியது. நக்கீரனோ தனது பத்திரிக்கையில் அதனை விலாவரியாகப் படங்களாகப் போட்டு விளக்கியதோடு மட்டுமல்லாமல், தனது இணையதளத்தில், சன் டிவி தணிக்கை செய்த காட்சிகளையும் கட்டணம் வாங்கிக்கொண்டு போட்டுக் காட்டி காசு பார்த்தது. ""கதவைத்திற, காற்று வரட்டும்!'' என்ற நித்யானந்தனின் ஆன்மீக உளறல்களைப் பலவண்ணத்தில் விதவிதமாக வெளியிட்ட குமுதம் இதழ், இப்போது அவன் மாட்டிக்கொண்டவுடன் ஒரு சிறு மறுப்போ, மன்னிப்போ, கண்டனமோ கூடத் தெரிவிக்காமல் நித்யானந்தனைக் கூட்டத்தோடு சேர்ந்து கும்மியடித்து தனது சூரத்தனத்தைக்காட்டிக் கொள்கிறது.

 

இந்த 32 வயது இளஞ்சாமியார் "தொழிலுக்கு' வந்து பத்துபதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அவன் சேர்த்துள்ள சொத்து மதிப்போ அதற்குள் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது. உலகம் முழுக்க முப்பத்து மூன்று இடங்களில் ஆசிரமம், பெங்களூரில் மிகப் பெரிய தலைமையகம்  என நித்யானந்தனுக்குச் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆன்மீகம் என்ற பெயரில் உலகம் முழுக்கச் சுற்றுப் பயணம், களைப்பு தெரியாமலிருக்கப் பணிவிடை செய்ய நூற்றுக்கணக்கான பெண் சீடர்கள் என ஒரு சாம்ராஜ்யத்தின் அரசனைப் போலத்தான் நித்தியானந்தன் வாழ்ந்துள்ளான்.

 

இன்று நித்யானந்தனை எதிர்ப்பவர்கள் கூட அவன் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டான் என்பதற்காக எதிர்க்கிறார்களே அன்றி, அவன் மக்களை ஏமாற்றிச் சொத்து சேர்த்தான் என்றோ, கருப்புப் பணப் பெட்டகமாக இருந்த அவனது சொத்துக்களைப் பறிமுதல்செய்ய வேண்டும் என்றோ கோருவது இல்லை. தாழ்த்தப்பட்டோரும் சூத்திரர்களும் ஆலயக் கருவறைக்குள் நுழைவோம் என்றால், இந்து தர்மத்துக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது என்று கத்தும் இந்து மதவெறி அமைப்புகள் எவையும், இலட்சக்கணக்கான இந்துக்களை ஏமாற்றிய நித்தியானந்தனை இந்து விரோதியாகக் காட்டவில்லை. கொடும்பாவி எரிப்பு, ஆசிரமம் தகர்ப்பு என நித்யானந்தனைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட இந்து மக்கள் கட்சி, அடுத்தவாரத்திலேயே அவன் ""இந்து என்பதால்தான் எல்லாரும் தாக்குகிறார்கள்"" என்று ""தினமணி''யில் கட்டுரை  எழுதி அந்தர் பல்டி அடித்தது. சிவசேனாவோ ஒருபடி மேலே சென்று, நித்யானந்தனுக்கு ""இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம் துறவி'' என்று பட்டம் கொடுத்தது.

 

நித்யானந்தா போன்ற இன்னும் பல ஆன்மீக அவதாரங்கள் உருவாகி வளர்வதற்கும் ஒரு அரசியல்பொருளாதார அடிப்படை இருக்கிறது. 1990க்குப் பிறகு வந்த தனியார்மயம்  தாராளமயம் எனும் புதியபொருளாதாரக் கொள்கையினால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர்; ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர.;; நாட்டில் கருப்புப்பணத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கருப்புப் பண முதலைகளுக்கு மோட்சமளிக்க இதுபோன்ற சாமியார்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில், இந்தச் சாமியார்கள் தான் கருப்புப்பணத்தைப் வெள்ளையாக்கும் ரசவாதம் தெரிந்தவர்கள். உலகமயச் சூழலும், நுகர்வுக் கலாச்சாரமும் உருவாக்கிய புதிய புதிய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும், அதிலிருந்து மீள தீர்வைத்தேடி அலையும் மக்களுக்கும் பொருத்தமான புதிய வடிவில் ஆன்மீக வியாபாரமும் இன்று நித்யானந்தனை எதிர்ப்பவர்கள்கூட, அவன் மக்களை ஏமாற்றிச் சொத்து சேர்த்ததை, கருப்புப் பண மூட்டையாக இருந்ததைக் கண்டு கொள்வதில்லை. கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ரசவாதம் தெரிந்த நித்யானந்தனின் ஆன்மீக வியாபார விளம்பரம். களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, ரவிசங்கர், அமிர்தானந்தமயி, பீமானந்தா, காசியாபாத் பாபா அனூப் என்று புதிய ஆன்மீகச் சரக்குகள் வந்த வண்ணம் உள்ளன.

 

இன்று எந்தச் சாமியார் ஆன்மீக வியாபாரத்தை மட்டும் செய்கிறான்? கல்வி நிறுவனங்கள் நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என இலாபகரமான தொழில்கள் அனைத்தையும் சாமியார்களின் டிரஸ்டுகள் நடத்துகின்றன் அதுவும் ஒரு பைசா வருமான வரி இன்றி! தற்போதைய சூழலில் இவர்கள் பெரும் அரசுசாரா நிறுவனங்களாக வளர்ந்துள்ளனர். தங்களது ஆன்மீக வியாபாரத்தை மக்களுக்கான திட்டங்களாகக்காட்டி ஏகாதிபத்திய நாடுகளில் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார்கள். அமிர்தானந்தமயி, சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாகக்கூறி வசூலித்த தொகை மட்டும் ரூ.200 கோடி. இது, வெளியே காட்டப்பட்ட கணக்கு. மறைக்கப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு கோடிகள் என்பது அந்த ஆண்டவனுக்கே கூடத் தெரியாது. தனது பிறந்த நாளின்போது 100 கோடி ரூபாசூக்கு ஆன்மீகநற்பணித் திட்டங்களை அறிவித்திருக்கிறார், பங்காரு. அப்படியானால் எத்தனை ஆயிரம் கோடிகளைப் பதுக்கி வைத்திருப்பார் இந்த செவ்வாடைச் சாமியார்? சேதுக் கால்வாய் தொடர்பாக ராமன் குறித்து கருணாநிதி கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு காட்டிய வேதாந்தி என்ற இந்துவெறி சாமியார், கருணாநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்குப்பரிசு அறிவித்தான். அந்த காவியுடை "ராம பக்தன்'தான், இந்தியப் பெருமுதலாளிகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் இரகசிய உலகப்பேர்வழியாகச் செயல்பட்டவன் என்பது நாடறிந்த உண்மை.


இவர்கள் மட்டுமல்ல, யாரெல்லாம் ஆன்மீகச்சேவை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி சாமியார் பெயரில் வருகிறானோ, அத்தகையப் பேர்வழிகள் கருப்புப் பணப் பெட்டகமாகத்தான் இருக்கின்றனர். சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் என்றால் அரசு அதற்கு வரிவிலக்கு அளிக்கிறது. அவற்றுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் தொகை கருப்புப் பணமா, வெள்ளைப் பணமா என்று கேள்வி கேட்பதும் கிடையாது. இதைப் பயன்படுத்திக் கொண்டு நவீனகார்ப்பரேட் சாமியார்கள் பெரும் மோசடி நிறுவனமாக உருவாகி இன்று நச்சுமரமாக வளர்ந்துள்ளார்கள். பெருமுதலாளித்துவ கருப்புப் பணப்பேர்வழிகளுக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கும் இத்தகைய காவியுடை நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தியான மண்டபங்கள், பத்திரிகைகள், நவீன பாலியல் விடுதிகள் — என பல நிறுவனங்களை இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தி வருவதோடு, அரசியலிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

 

கருப்புப் பண சாமியார்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருங்கி இருப்பது பரஸ்பரம் இரு தரப்பினருக்கும் "தொழில் வளர்ச்சிக்கு' அவசியமானதாக இருக்கிறது. பக்தர்களுக்கு இமயமலை மானசரோவரில் தேவதைகளைக் காட்டி வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் ஜக்கி வாசுதேவன், தனது மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கச் சரணடைந்தது கருணாநிதியிடம் தானேயன்றி, மானசரோவர் தேவதைகளிடமல்ல. மேல்மருவத்தூருக்காக, தேசிய நெடுஞ்சாலையே கொஞ்சம் வளைந்துகொடுத்து விலகிப்போனபோது, மத்திய அரசில் தனது பக்தனுக்கிருக்கும் செல்வாக்கைக்கண்டு அந்த ஆதிபராசக்தியே அதிசயித்திருக்கக்கூடும். தனது கோயிலில் தங்கத்தால் கூரைவேய்ந்த விஜய்மல்லையாவுக்கு இணங்க சபரிமலை ஐய்யப்பனே கூட, 1990களுக்குப் பிறகு தனது கறாரான விதிமுறைகளை தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது. சாயிபாபா ஆசிரமத்து கொலைகளோ, ஆந்திராவில் சத்யசாயி டிரஸ்டு உருவாக்கிய குடிநீர் திட்டத்தில் கரைந்தே போயிற்று. இலங்கை இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஒரு ரவிசங்கர் தேவைப்படுகிறார். ஆர்.டி.ஓ.முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை, தங்களது காரியத்தைச் சாதித்துக் கொள்ள சங்கராச்சாரி தேவைப்படுகிறார். இப்போதும் கூட, தனது வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றிடவும், கர்நாடகத்தில் வழக்கைப் பதிவுசெய்யாமல் நீர்த்துப்போக வைக்கவும் நித்யானந்தனுக்கு கருணாநிதியும் எடியூரப்பாவும் தேவைப்படுகிறார்கள்.

 

ஒரு அரசியல்வாதியோ, அதிகாரியோ கணக்கு வழக்கின்றி சொத்துச் சேர்க்கும் போது, அந்தச் சொத்து எப்படி வந்தது என அவர்களை விசாரிக்கச் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், இதுபோன்ற சாமியார்களிடம் குவிந்துள்ள கருப்புப் பணம் பற்றி விசாரிக்கவோ, அவர்களது சொத்துக் கணக்குகளைத் தணிக்கை செய்யவோ எந்த சட்டமும் இல்லை. அதனால்தான் தாங்கள் வாங்கிக் குவிக்கும் கருப்புப் பணத்தில் ஒரு சிறு பகுதியை எடுத்து தானதர்மம் செய்யும் இவர்கள், அறக்கட்டளை என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்துவருகின்றனர். இத்தகைய மோசடி சாமியார்களின் உண்மை முகத்தைத் திரைகிழித்து, இவர்களது அரசியல் அதிகாரக் கள்ளக்கூட்டையும், இத்தகைய கயவாளிகளுக்கு இன்றைய அரசியலமைப்பு முறை உடந்தையாக நிற்பதையும் அம்பலப்படுத்துவதும், இவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்து தண்டிப்பதும்தான் இத்தகைய கருப்புப் பண கார்ப்பரேட் சாமியார்களின் ஆதிக்கத்தை அடித்து நொறுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு மக்களை அணிதிரட்டுவதுதான் இன்றைய அவசியத் தேவை.

• கதிர்

 

 

நித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தியதில் குமுதம் பத்திரிகைக்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்தப் பொறுக்கியையும் அவனது ஆன்மீக உளறல்களையும் விதவிதமான வடிவங்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் குழுமப் பத்திரிகைகள், தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாமல் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.3.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலமாய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தனர். ""நித்யானந்தனைக் கைது செய்! அவன் சொத்துக்களை பறிமுதல் செய்! நித்யானந்தனை வளர்த்துவிட்ட குமுதமே, மன்னிப்புக்கேள்! தமிழக அரசே, சாமியார்களின் பிரசாரத்தைத் தடைசெய்! சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கல்கி, நித்தியானந்தா கழிசடைகளை விரட்டியடிப்போம்! காவியுடைக் கிரிமினல்களை நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்!'' எனும் மைய முழக்கங்களோடு பெ.வி.மு. சென்னைக் கிளைச்செயலர் தோழர் உஷா தலைமையில், போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் குமுதம் பத்திரிகை அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. சாலைப் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு முடங்கிய போதிலும், நித்தியானந்தனையும், அவனுக்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை மக்கள் வரவேற்று ஆதரித்தனர். பின்னர், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு தோழர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தனை உருவாக்கியதோடு, இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை அடையாளம் காட்டிய இந்த ஆர்ப்பாட்டம், மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது

 

.— பு.ஜ.செய்தியாளர ;ஏப்ரல் 2010 புதிய ஜனநாயகம்