அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே

 

உன் உரிமைகள்
கிடைக்கும் வரை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

மார்பறுக்கப்பட்ட
உன் தாய்களைப்பார்
கொன்று குவிக்கப்பட்ட
உன் சகோதரர்களைப்பார்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஏன்?
எதற்காக?
கேள்வியை கேள்

மூலதனம் சொல்லிவிட்டது
நீ வாழ தகுதியற்றவன்
நீ சாகப்பட வேண்டியவன்
உன் இனம் மட்டுமல்ல
உழைக்கும் இனமே
வாழத்தகுதியற்றதுதான்

அழுகின்ற குழந்தையே!
நன்றாய்க்கேள்!!
தகுதியற்றவர்கள் தான்
அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்

உழைக்கும் கைகளின்
மீதேறிதான் அவர்கள்
உயர்ந்தவர்களாகியிருக்கிறார்கள்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

கேளாத செவிகள்
கிழிந்து போகட்டும்
கருணைகளின் கோட்டைகள்
நொறுங்கட்டும்

தேர்ந்தெடுத்திருக்கிறாய்
உனக்கான ஆயுதத்தை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஆம்
அழுகையின் அதிர்வுகளில்
உடைபட காத்திருப்பது
அதிகார பீடங்கள் மட்டுமல்ல
எங்களின் அடிமைத்தனமும் தான்

 


http://kalagam.wordpress.com/2010/03/30/அழுகின்ற-குழந்தையே/