ஈழப்போரில் பேரழிவும் பின்னடைவும் ஏற்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்துவரும் அறிக்கைகளும், அவர்கள் எடுத்துவரும் நிலைப்பாடுகளும் தமிழர்களைப் புல்லரிக்க வைக்கின்றன. ஏழு மாதங்களுக்குமுன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவின் "நேர்மையான சந்தர்ப்பவாதமான' ஈழ ஆதரவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இரட்டை இலைக்கு தெருவெங்கும் வாக்கு சேகரித்தனர், பெரியார் தி.க.வினர்.

 இதைத்தொடர்ந்து சென்னை இராயப்பேட்டையில் பெ.தி.க.வினரை, தி.மு.க. குண்டர்கள் கடுமையாகத் தாக்கி, பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர். பல பெ.தி.க. தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். இவை எல்லாம் இப்போது மறப்போம் மன்னிப்போம் என்பதாகிவிட்டன. அண்மையில், இராயப்பேட்டையில் பெரியார் தி.க.நடத்திய பொங்கல் விழாவிற்கு, தங்கள் மீது தாக்குதலை நடத்திய "ஈழத்துரோகிகளான' தி.மு.க.வின் பொறுப்பாளர்களிடமே மேடை அமைப்பு போன்றவற்றிற்கு நன்கொடை பெற்றுக்கொண்டு, அவர்களோடு சேர்ந்து கோலாகலமாகப் பொங்கல் விழாவை நடத்தி முடித்துள்ளனர்.

 

"அது அரசியல்; இது தமிழரின் விழா" என்று நாக்கைச்சுழற்றி இதற்கு விளக்கமும் அளிக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. அரசு, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்தது. "நம் வீட்டில் மிகப்பெரும் சோகம் நடந்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் அவசியமா? ஓராண்டுக்குத் தள்ளி வைக்கக் கூடாதா?"என்றெல்லாம் "சென்டிமென்டாக' உருகினார் த.தே.பொ.கட்சியின் பெ.மணியரசன். ஆனால் தமிழ் இனவாதியும், பெ.ம.வின் நட்புசக்தியுமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன், அதேமாநாட்டில் பொறுப்பேற்றதை அவர் விமர்சிக்கவில்லை. ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு எதிராக மனம் குமுறிய இன்னொரு "புரட்சிகர தமிழ்த்தேசியர்' இன்குலாப், தனக்கு அரசு அளித்த கலைமாமணி விருதைத் திருப்பித் தந்து "தனது கவுரவத்தைக்காத்துக் கொண்டார்' என அவருக்கு இதே தமிழ் இனவாதிகள் சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். ஆனால் "பொருள்' அற்ற கலைமாமணியை உதறிய இன்குலாப், ஈழத்தமிழினஅழிப்பை நடத்திய மத்திய அரசின் செம்மொழி ஆய்வு மையத்தில், தனது திட்டம் ஒன்றுக்காக அண்மையில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதை ஏன் திருப்பிக்கொடுக்கவில்லை என்று எந்தத்தமிழ்த் தேசியரும் கேள்வி எழுப்பவில்லை. இவற்றை "நேர்மையான சந்தர்ப்பவாதம்' என்பதா? "நேர்மையற்ற சந்தர்ப்பவாதம்' என்பதா?