புதிய ஜனநாயகம்

கடந்த பிப்ரவரி மாதத்தில், பு.மா.இ.மு. தோழர்கள் திருச்சி சட்டக் கல்லூரி வாயிலில் பழங்குடியினர் போல வேடமிட்டு, மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ப.சிதம்பரத்தை அம்பலப்படுத்தியும், இக் கொலைவெறியாட்டப்போரை வீழ்த்த அணிதிரளுமாறு அறைகூவியும் பிரச்சாரம் செய்தனர். ""நாங்கள்தான் இந்திய அரசால் குற்றம் சாட்டப்படும் பயங்கரவாதிகள்!'' என்ற முழக்க அட்டைகளை ஏந்தி தோழர்கள் நடத்திய இந்தக்கூட்டம், மாணவர்களால் பெருத்த வரவேற்புடன் ஆதரிக்கப்பட்டது. பெண்கள் விடுதலை முன்னணியினர், இளம் தோழர்களுக்கு பழங்குடியினர் போல வேடமிட்டு திருச்சி மையப் பேருந்து நிலையத்தில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சாரம் செய்தனர். ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், எதற்காக இந்தப் பிரச்சாரம் என்பதை ஆர்வத்துடன் அறிந்து, இப்பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்துமாறு உற்சாகப்படுத்தி ஆதரவளித்து நன்கொடையும் அளித்தனர்.

 

திருவாரூர் நகரில் பு.மா.இ.மு.வினர் சைக்கிள் ரிக்ஷாவில் பெரிய முழக்கத் தட்டிகளுடன் வீதிவீதியாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். பட்டுக்கோட்டை வட்டாரத்தில், பட்டுக்கோட்டை நகரம், மதுக்கூர், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை முதலான பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் தெருமுனைத்தொடர் பிரச்சார இயக்கம் நடந்தது. உசிலம்பட்டி, மணப்பாறை, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்சி, ஓசூர், சென்னை என பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாகத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்; தஞ்சை, புதுச்சேரி, விழுப்புரம், திருவாரூர் முதலான நகரங்களில் புரட்சிகர ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி கருத்தரங்கங்கள்; திருச்சி, வேலூர் பகுதிகளில் விரைவு இரயில் வண்டிகளில் பயணிகளிடம் பிரச்சாரம்; தமிழகமெங்கும் இப்புரட்சிகரஅமைப்புகள் செயல்படும் பகுதிகளில் பேருந்துகள், கடைவீதிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், கூலித்தொழிலாளர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் பணிபுரியும் பகுதிகள், குடியிருப்புகள்  என அனைத்து இடங்களிலும் இப்பிரச்சார இயக்கம் காட்டுத்தீயாகப் பற்றிப் படர்ந்தது. சென்னையிலும் ஓசூரிலும் ஆங்கிலம் மற்றும் இந்திமொழிகளில் காட்டுவேட்டைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. குறிப்பாக, ஒரிசா, பீகார், சட்டிஸ்கர் முதலான வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் இந்தி மொழியில் அமைந்த துண்டுப் பிரசரம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

 

இப்பிரச்சார இயக்கத்தின் மூலம் இந்திய அரசு நாட்டு மக்கள் மீது நடத்திவரும் கொலைவெறியாட்டப் போரையும் அதன் உள்நோக்கத்தையும் அறிந்த உழைக்கும் மக்கள், தம்மையும் இப்பிரச்சார இயக்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி, நன்கொடை அளித்து ஆதரித்து வருகின்றனர். காட்டுவேட்டைக்கு எதிரான போராட்ட அரசியல், தமிழக உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் தீக்கனலை மூட்டி வருகிறது. அது, மறுகாலனியாதிக்க எதிர்ப்பு எரிமலையாகக் கிளர்ந்தெழுவது நிச்சயம் என்பதை தொடரும் இப்பிரச்சார இயக்கம் நிரூபித்து வருகிறது.


— பு.ஜ.செய்தியாளர்கள்