செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.

வலுவான குரலில் குற்றப்பத்திரிகை வாசித்த லீனா பேட்டா கொடுக்காததை குற்றமாக பார்க்கிறாரா? உழைப்புச் சுரண்டலாகப் பார்க்கிறாரா? என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்த நிலையில் ஷோபா சக்தி தன் அடுத்தப்பதிவை எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஷோபா சக்தியிடம் அடி வாங்கியவன் என்ற முறையில் அங்கு என்ன நடந்தது என்பதை நானும் பதிவு செய்திட விரும்புகிறேன்.

ஷோபா சக்தி மற்றும் லீனா மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல என் பதிவு. அவர்கள் படமெடுத்து ஆயிரம் கூலி உழைப்பாளர்களை ஏமாற்றிவிட்டுப் போனால் கூட சகித்துக் கொள்ளலாம். செங்கடல் என்று படமெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்று போலி வேசம் போட்டுக்கொண்டு அரசியலைப் பாவித்து படம் காட்டுகிறார்கள் படுபாவிகள்.

உழைப்பையே மூலதனமாகக் கொண்ட எனக்கும் எழுத்துரிமை உண்டு என “தோழர்கள்” ஷோபா சக்தி லீனா போன்றோர் ஒத்துக்கொள்வார்களோ தெரியாது. தமிழ் நாட்டில் நாளாந்தம் ஏமாற்றப்படும் ஆயிரம் சினிமா தொழிலாளர்களுடன் நானும் ஒருவன்.

பொதுவாக தமிழ் சினிமா 24 சங்கங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக செயல்படுவது போன்ற தோற்றம் இருந்தாலும், இவை ஒவ்வொன்றும் சங்கிபோன்ற பின்னலைக் கொண்ட அமைப்புகளே. பேட்டா பிரச்சனை, லேப் பிரச்சனை, சம்பளம் என, எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தத் தமக்கான சங்கங்களில் போய் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்படும்.

சரி செய்யப்படாவிட்டால்  சம்பந்தப்பட்ட படத்தை இயல்பாகவே முடக்கி விடும் சக்தி இச் சங்கங்களுக்கு உண்டு. இப்படி பல பிரச்சனைகளால் நூற்றுக்கணக்கான படங்கள் வராமால் போனதும் உண்டு.

பைசல் பண்ணி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் உண்டு. ஓடாத படங்களும் உண்டு. இது தான் தமிழ் சினிமா. வலுவான சங்க பின்னணியைக் கொண்ட தமிழ் சினிமாவின் இந்தச் சூழலைப் புரிந்து கொண்டே செங்கடல் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த பிரச்சனையை நீங்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

லீனா எனது நண்பர். ஆமாம்! அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனால் நல்லவேளை “தோழராக” இருந்ததில்லை. அவர் என்னை ஷூட்டிங் அழைத்தார் நானும் ஒரு அசிஸ்டெண்டாகச் சென்றேன். குறைவான பட்ஜெட் சிக்கனமான செலவு என்பதால் எல்லாம் எனக்கு எதுவும் பிரச்சனை இருக்கவில்லை. நட்புக்காக, ஆமாம் லீனாவுக்காகச் சென்றேன். இருபது நாள் ஷூட்டிங் நடந்தது. முதல் ஒரு வாரம் பேட்டா எல்லாம் ஒழுங்காக கொடுத்தார்கள். மீதி ஒரு நாளும் பேட்டா தரவில்லை. கேமிரா அசிஸ்டெண்டாக இருந்தாலும் உதவி இயக்குநராக இருந்தாலும் அவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் பேட்டா மட்டும்தான் வருமானம்.

இது லீனாவுக்கும் தெரியும் அவர் என்னைப்போல ஒரு ஏழை அசிஸ்டெண்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?

சரவணன் என்பவர்தான் கேமிரா அனுப்பியிருந்தார். அவர் ஹைதராபாத்தில் இருந்து இவர்களின் படத்திற்காக கேமிரா வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

சென்னையில்ருந்து வந்திருந்த கேமிரா அஸிஸ்டன்டுக்குக் கூட பேட்டா கொடுக்கப்படவில்லை. அவர்கள் அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பேட்டா இல்லாமல் வாழ்க்கை, தங்குமிடம், உணவு, உடை எல்லாமே கேள்விக்குரியதாகிவிடும்.

இதில் கேவலம் என்னவென்றால், ஹைதராபாத்திலிருந்து வந்திருந்த உதவியாளர்களுக்கு தமிழ் பேசக் கூடத் தெரியாது, தனி என்ற தமிழ் நாட்டுக்காரர்தான் அவர்களுக்குத் தொடர்பாளர். பேட்டா இல்லாமல் அவர்களும் தெருவிலே அலைய வேண்டியதாயிற்று.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய லீனா – ஷோபா கூட்டணி அவர்கள் கேட்ட, அவர்களுக்கு உரிய பணத்தைக் குறித்து எந்தப்பதிலும் சொல்லாமல் தொழிலாளர்களைத் தட்டிக்களிதனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் ஷூட் பண்ணிய பூட்டேஜை எடுத்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள்.

அதிலும் இறுதி இரண்டு நாள் பூட்டேஸ் மட்டும்தான். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அவர்களுக்குப் பூட்டேஜ் கொடுக்க வேண்டும். அதற்கும் முன்னையவை எல்லாம் லீனா குழுவிற்குக் கொடுத்துவிட்டார்கள்.

இதைத் தான் லீனா டேப்பை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள் என்றார். இதற்கு பேட்டா கொடுக்காததே காரணம்.பேட்டா கொடுக்கப்படாததற்குப் பதிலடியாக அதனைப் பெற்றுக்கொள்ளும் போராட்டமாக டேப்பை எடுத்துக்கொண்டு ஓடியது குற்றமா அல்லது பேட்டாவே கொடுக்காமல் தொழிலாளர்களைத் “தோழர்கள்” ஏமாற்றியது குற்றமா? “தோழர்” லீனா தான் பதில் சொல்லவேண்டும்.

பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு நடைபெறுவது எல்லாப் படப்பிடிப்புகளிலும் ஒரு பொதுவான நடைமுறை என்பது வேறுவிடயம்.

குறைந்த செலவுப் படம் என்பதால் எல்லா தொழிலாளர்களும் புரிந்துணர்வோடே நடந்து கொண்டார்கள். முதலில் அவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளான போதும் பெரிதாக வாக்குவாதப்படுவதில்லை. நானும் கூடப் பல தடவைகள் அவர்களைச் சமாதானப்படுத்துவது உண்டு. ஆனல் கேமிரா மறு நாள் ஒரு இடத்திற்குக் கொண்டுபோய் படம் பிடித்துவிட்டுக் திரும்பக் கொண்டுவர வேண்டிய தேவை இருந்ததால். தனி உட்பட்ட ஆசிஸ்டன்கள் லீனா குழுவிடம் 1500 ரூபாவைத் தரவேண்டிய பணத்திலிருந்து கேட்டார்கள் அதைக்கூட அவர்கள் கொடுக்க மறுத்து பல மணி நேரங்களின் பின்னரே கொடுத்ததால், அவர்களுக்கு கடுப்பு அதிகமாகிவிட்டது.

இவை அனைத்தையும் சேர்த்து கேமிராவை பூட்டேஜுடன் சேர்த்துக் கொண்டுபோய் விட்டார்கள்.

சரி, இதையெல்லாம் விடுங்கள். என்னில் என்ன குற்றம் கண்டார்கள்?

நான் என்ன தவறு செய்தேன். டேப்பை எடுத்துச் சென்ற உடன் நானும் லீனாவும் கேமிரா அசிஸ்டெண்டுக்கு போன் பண்னினோம். ஆனால் அவரது போன் ஸ்விட்ச் ஆப்ஃ ஆகியிருந்தது.ஆத்திரம் உச்சிக்கு ஏற லீனா தனது கையில் இருந்த செல்போனை தரையில் வீசி உடைத்தார். இது நடந்தபோது இரவு எட்டு மணியிருக்கும்.

லீனா கடுமையான டென்ஷனில் இருந்தார். ஷோபா சக்திக்கு அதை விட டென்ஷனாக இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், லீனாவுக்கு தனது நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அல்லது சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தவிப்பும் அவருக்கு இருந்தது.

நான் அங்கிருந்து அகன்று சென்று விட்டேன். இரவு 10.30 மணியிருக்கும் ஷோபாசக்தியும் அவரது இரண்டு நண்பர்களும் வந்து என்னை தனியாக அழைத்தார்.அப்போது என்னுடன் இருந்த எடிட்டரையும்,போட்டோகிராப்பரையும் திரும்பிச் செல்லுமாறு அனுப்பி விட்டு என்னை மட்டும் மீட்டிங் இருக்கிறது என்று அழைத்துச் சென்றார்கள்.

ஷோபா சக்தி புல் போதையில் இருந்தார். எனக்கு அப்போதே அவர் மீது சந்தேகம் இருந்தது. புரடக்சன் வண்டி டிரைவர் எனக்கு நண்பர் ஆனால் அவர் என்னோடு வருவதை ஷோபாசக்தி அனுமதிக்கவில்லை, ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த அறையில் சுமார் 8 பேர் இருந்தார்கள். ஷோபா சக்தி, அசோசியேட் டைரக்டர் ரமேஷ், மற்றும் ஆர்டிஸ்ட் ( அவர் லீனாவுக்கு வேண்டிய இன்னொரு “தோழர்”) 3 பேரும் இருந்தனர். ஆக மொத்தம் எட்டு பேர்.

அதில் தலைமை நாட்டாமையாக ஷோபா சக்தி! அவரை அந்தப்பதவிக்கு உள்ளே போயிருந்த குரங்கு உயர்த்திவைத்திருந்தது.

அவர்கள் என்னை விசாரித்தார்கள். எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. நான் ’’ஓனரிடம் பேசி விட்டேன். அவர் லீனாவின் கணவர் சி. ஜெரால்டிடம் கொடுத்து விடுவதாகச் சொல்லி விட்டார். அப்படியே டேப் ஜெரால்டின் கைக்குச் செல்லாவிட்டாலும் கேமிரா அனுப்பிய ஓனரின் கைக்குத்தான் செல்லும். அவரிடமிருந்து ஜெரால்சிற்குச் செல்லும். இதை நான் லீனாவிடமும் சொல்லி விட்டேன்’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆகச் சிறந்த மார்க்சியவாதியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தீராத கரிசனமும் மாறாத காதலும் கொண்ட மனித் உரிமை வாதி ஷோபா சக்தி என்னை தாக்கினார்.

நான் இதை எதிர்பார்த்தாலும் என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. என் மொபைலை மேனேஜர் தனுஷ் பிடுங்கிக் கொள்ள நான் பயந்து விட்டேன். அலறி என்னைக் காப்பாற்றுமாறு கத்தினேன். கதவை உடைத்து டிரைவர்கள் என்னைக் காப்பாறினார்கள். அப்போது ஒரு வேளை நான் கத்தாமல் அங்கிருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அவ்வளவு கட்டுங்கடங்காத வெறி ஷோபா சக்தியிடம் இருந்தது.

ஷோபா சக்தி பெரும்பாலும் படப்பிடிப்பில் குடிபோதையில் தான் இருப்பார். மாலை நேரம் நெருங்கினால் போதும் போதை தலைக்கேறிவிடும். இப்போதெல்லாம் அவர் எழுதுவதைப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ் கூட குவாட்டர் அடித்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிப்பார் என்று கூட எழுதினாலும் ஆச்சரியப்பட முடியாது.

கதாசிரியர் என்ற வகையில் ஷோபாவோடு நான் பேச வேண்டும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடம் பேசுவதில்லை. தொழிலாளர்களை அவர் மதிப்பதில்லை. எங்களை எல்லாம் ஏளனமாகத் தான் அணுகுவார். இவரோடு எப்படி நாங்கள் பழகுவது. அப்படியே உணர்வுகளை அடகுவைத்துவிட்டுப் பேசினாலும் பாதி நேரம் குடி போதையில் தன் உணர்வு இல்லாமல் அலையும் அவருடன் எப்படிப் பேசுவது. இது குறித்து லீனா பல தடவை என்னோடு கடிந்து கொண்டார். இதனால் ஷோபாவிற்கு என் மீது ஆத்திர உணர்வு இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தார்.

என்னை மீட்டவர்கள் ஷோபாசக்தியை எச்சரித்தார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நண்பர்கள் என்னை ரூமிற்கு அனுப்பாமல் அவர்களுடனே வைத்துக் கொண்டார்கள். அடி வாங்கிய பிறகு 12.30 மணிக்கு டேப்பை எடுத்துச் சென்ற அசிஸ்டெண்ட் எனக்கு போன் செய்து மதுரையைத் தாண்டிச் செல்வதாகவும் டேப்பை ஓனரிடம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தான். அவனிடம் இங்கு நடந்த அனைத்த விஷயங்களையும் சொன்னேன்.மேலும் லீனாவுக்கு போன் செய்து பேசு எனவும் கூறினேன்.

நானும் லீனாவின் மொபைலுக்கு அழைத்தேன் அது வேலை செய்யாததால் அறைக்குச் சென்றேன்.அப்போது இரவு இரண்டு மணி இருக்கும். அங்கே ஷோபா சக்தி என்னை அடித்தது பற்றி லீனாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து ஷோபா சக்தி ‘‘என்னை திருப்பி அடிக்க வந்தயா? ’’ என்று கேட்டார். நான் டேப்பை எடுத்துச் சென்றவரிடம் பேசியதையும் சொல்லி விட்டு என்னை அடித்தது பற்றியும் லீனாவிடம் சொன்னேன். மேலும் நான் ஒரு அரசு ஊழியன் என்னை அடித்துவிட்டு அவர் எளிதில் பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதையும் நான் லீனாவிடம் தெரிவித்தேன்.

இப்படத்தின் இயக்குநர் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன் உங்கள் படத்தின், உங்கள் யூனிட்டின் ஒரு ஊழியன் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினேன். ஷோபா சக்தியை அடிப்பது ஒன்றும் எனக்கு அவ்வளவு பெரிய வேலை இல்லை என்றேன். ஷோபா சக்தியிடம் நீங்கள் செய்தது முட்டாள் தனம் என்று மட்டும் கூறினேன். டேப்பை எடுத்துச் சென்ற சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாத போது எந்த முட்டாளாவது இப்படிச் செய்வானா? என்பதுதான் எனது ஆதங்கம்.

பிறகு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 4 மணியளவில் எனக்கு லீனா எனக்கு போன் செய்தார் எனது போன் ஆப்ஃஆகியிருந்ததால் எனது புரடொக்ஷன் அசிஸ்டண்டிடம் பேசினார்,பிறகு அவர் என்னிடம் போனைக் கொடுத்து பேச சொன்னார் அப்பொழுது லீனா என்னிடம் இந்த விஷயத்தை பெரிது பண்ண வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தனக்கு இந்த விஷயம் நான் சொல்லித்தான் தெரியும் என்றும் கூறினார்.

எனக்கு பல பத்திரிகையளர்களையும், எழுத்தாளர்களையும் தெரியும் என்பதும் லீனாவிற்கு நன்கு தெரியும், அதனால் தான் விடியகாலையிலேயே எனக்கு போன் செய்தார்கள் மேலும் நான் இருக்கும் இடத்திற்கே வந்து பிரச்சனையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

நான் அவர்களை பார்க்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன். எனது வருத்தம் என்னவென்றால் அவர் நான் சொன்னபோதே அங்கிருந்த ஷோபா சக்தியை அவர் கண்டித்திருக்க வேண்டும். பிரச்சனைகள் வேறு, அடித்தது தவறு என்று அந்த இடத்திலேயே அவர் சொல்லியிருந்தால் நான் அவரை மதித்திருப்பேன்.

இங்கே என மனதை நெருடுவது ஒன்றுதான் ஷோபாவை லீனா தோழர் என்று அழைப்பார். அவர் இவரை தோழர் என்றுதான் அழைப்பார்கள்.தோழர் என்றால் கம்யூனிஸ்டுகள் அல்லவா? இப்படியாக இரண்டு தோழர்களும் சேர்ந்து என்னை இப்படி டீல் செய்கிறார்களே என்பதுதான் எனக்கு நெருடலாகவும் வேதனையாகவும் இருந்தது.

அவர் காலையில் கண்டிப்பதாகச் சொன்னார் இரவில் கண்டிக்காத தோழர், எப்படி காலையில் காலையில் கண்டிக்க முடியும் என்பதால் எனக்கு அவமானமாக இருந்தது. நான் பெரிதும் மதிக்கும் மு. ராமசாமிக்கு தொலைபேசி எனக்கு நடந்ததைச் சொன்னேன். அவர் தமிழ் நாடு மதிக்கும் மிகப்பெரிய எழுத்தாளர். அவர் திட்டினார். அவர்கள் நேர்மையில்லாதவர்கள் நீ ஏன் போய் அவர்களிடம் வேலை பார்க்கிறாய் என்று என்னை திட்டினார். ஷோபா சக்தி, லீனா பற்றி எல்லாம் அவர் தெரிந்து வைத்திருந்தார். அவர் திட்டினாலும் அதுதான் அப்போது ஆறுதலாக இருந்தது.

ராமேஸ்வரம் ஸ்டேஷனில் போய் ஷோபா சக்தி மீது புகார் கொடுத்தேன்.நான் புகார் கொடுத்த விஷயம் ஸ்டேஷன் ஏட்டு மூலமாக அந்த ஏரியா கைடுக்கு தெரியவந்து அவர் மூலமாக லீனாவிற்குத் தெரியவந்தது ஆனால் அந்த இடத்தில் லீனாவிற்கு அதிக செல்வாக்கு இருந்தது. அரசியல் ரீதியாகவும் அந்தஸ்து ரீதியாகவும் செல்வாக்கோடு இருந்தார் லீனா. அந்தப் பகுதியில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டர் லீனாவின் கணவர் ஜெரால்டின் நண்பர் ஆகவே சம்பவ இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு அவர் சமாதானம் பேச வந்தார்.

அங்கே லீனா கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். எஸ் ஐ வந்த பிறகும் அவர் எழுந்திருக்கவும் இல்லை காலை கீழே போடவும் இல்லை. இதில் எஸ் ஐ டார்ச்சர் ஆகி விட்டார்.

ஷோபா சக்தியை விசாரிக்கவே அவர் அங்கு வந்திருப்பதாகச் சொன்னார். இன்ஸ்பெக்டருடன் லீனா வாக்குவாதப்பட்டார் இதைக் கவனித்த ஏட்டு ஒரு மொபைல் போனில் நடப்பவற்றை படம் பிடித்தார். இதனைப் பார்த்த லீனா மேலும் டென்ஷனாகி பதிவு செய்யக்கூடாது எனவும் கோபப்பட்டார்.

எரிச்சலான எஸ் ஐ அந்த போனை லீனாவிடமே கொடுத்துவிடுமாறு ஏட்டிடம் கூற லீனா கொடுக்க வந்த ஏட்டை அடிக்க கை ஓங்கினார் இதப் பார்த்த எஸ். ஐ ஷோபாசக்தியை தரதரவென்று இழுத்து ஜீப்பில் ஏற்றினார் ஷோபாசக்தி அப்பொழுது போதையில் இல்லாமல் மிகவும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தார்.

அப்போது தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று எஸ் ஐ யிடம் கும்பிட்டுக் கெஞ்சினார், ஆனால் அவரை வண்டியினுள் இழுத்துக் கொண்டுபோய் போட்டார்கள்.

என்னை சமாதானம் செய்ய லீனாவின் தம்பி என்னிடம் பேசினார். நான் என்னை அடித்தற்கு ஷோபாசக்தி பதில் சொல்லியாக வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி விட்டேன். தவிறவும் தலையில் பலமாக அடிப்பட்டதால் எனக்கு அரசு மருத்துவமனை சிகிச்சையும் அவசியம் என்பதுதான் சட்ட ரீதியாக என் வாதமும் விருப்பமும்.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஸ்டெஷனில் காட்சிகள் மாறியது. ஸ்டேஷன் ஏட்டு என்னை மிரட்டத் துவங்கினார். லீனாவின் அறைக்குள் இரவு இரண்டு மணிக்கு அத்து மீறி நுழைந்ததாக உன் மீது வழக்குப் பதிவு செய்து விடுவேன் என்றார்.ஒரு வழியாக எனது வாக்குமூலத்தை எழுதி வாங்கி விட்டு சிகிச்சைக்கு என்னை அனுப்பினார்கள்.


நான் சிகிச்சைக்குச் சென்றேன் லீனாவும் ஷோபா சக்தியும் ஸ்டேஷனில் இருந்து வெளிவந்து சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள்.லீனாவின் வலைக்குள் இருந்த கைடும் என்னை மிரட்ட ஆரம்பித்தார். லீனாவும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. “தோழர்கள்” இருவரும் ஸ்டெஷனில் இருந்தும் வெளிவந்து விட்டார்கள். சாதாரணமாக இம்மாதிரி தாக்குதல் வழக்குகளில் ஸ்பாட் பைன் என்கிற மாதிரியான நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை.

ஆனால் அதிகார பீடங்கள் எனும் மந்திரக் கோல்கள் தட்டினால் எப்படியான காக்கிக் கதவுகள் கூட திறந்து விடும் இல்லையா?அப்படியாகத்தான் தோழர்கள் தங்களின் மேல்மட்டத் தொடர்புகளைப் பயன்படுத்தி வெளிவந்தார்கள். எவ்வித அதிகாரமும் அற்ற நான் இன்று வரை ஷோபா சக்தியிடம் உதையும் வாங்கி விட்டு அதற்கான நீதியோ, அறத்தின் பார்பட்ட கரிசனமோ கூட இன்றி கிடக்கிறேன். இப்போது அவர்கள் பல் வேறு சமூக பிரச்சனைகளுக்காவும் எழுதத் துவங்கி விட்டார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக நான் பத்திரிகைகளுக்கு மற்றி மாற்றி சொன்னதாக ஷோபாசக்தி கூறியுள்ளார் நான் தமிழ்க அரசியல் பத்திரிகைக்கு என்ன கூறினேனோ அதையேதான் நம் தேசத்திற்கும் கூறினேன் ஆனால் நம் தேசத்தின் ஆசிரியருக்கு லீனா மீது ஏற்கனவே கோபம் உண்டு. லீனா அவரை ஏமாற்றியிருக்கிறார்.

அதனால் அவரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவர் நான் கூறியதை திருத்தி எழுதி, நான் சொல்லாத சில விடயங்களையும் எழுதியுள்ளார். சேர்த்து எழுதியதை ஷோபாசக்தி இப்பொழுது சுட்டி காட்டியுள்ளார் நான் அப்பொழுதே அந்த ஆசிரியரிடம் கூறினேன். நான் நினைத்தது போல் நடந்து விட்டது..

இப்போது விரிவாக பத்திரிகைகளில் இது பற்றி பேச விரும்பினேன் அதுதான் இந்தப் பதிவு. இனியொரு இதனை வெளியிட்டு உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என நம்புகிறேன். நான் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கும் போது இனியொருவில் வெளியான செய்தியை எனது மாமா பிரதியெடுத்து வந்து காண்பித்தார்.

செங்கடல் அல்ல சுரண்டல் கடல்.

பணம் இல்லாமல் கூட பலர் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் அதைச் செய்வதற்கும் சில நட்பு சக்திகளும் தொழில் நுட்பக்கலைஞர்களும் உண்டு.ஆனால் லீனா நினைப்பதோ வெறுங்கையாலே முழம் போடுவது என்பார்கள் அல்லவா? அப்படித்தான். அவர்கள் இருவருக்குமே தொழிலாளர்கள் பற்றிய சிந்தனையே கிடையாது. பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் செலவு செய்வார்.

ஆனால் லீனா அளவிற்குக் கூட வசதியில்லாத சிலர் ஊதியம் கொடுக்காவிட்டாலும் தொழிளார்களை மரியாதையாக பிரெண்லியாக நடத்துவார்கள். ஆனால் இவர்கள்?எனக்கு மொத்தம் 35,000 சம்பளம் என்று பேசப்பட்டது ஆனால் இதுவரை நான் 10,800ரூபாய் தான் ஊதியம் பெற்றிருக்கிறேன் மீதி பணத்தை நானே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.எனக்கு பணம் ஒரு விஷயம் அல்ல ஆனாம் மான அவமானம்,

நான் லீனாவிடம் கொண்ட நட்பின் காரணமாக மட்டுமே ஷோபா சக்தியை மதித்தேன். மற்றபடி அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. அவரை அடிப்பதும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை தோழர், தோழர் என்று சொல்லும் ஒரு “முற்போக்கு வாதி” இப்படி கீழ்த்தரமான ஆளாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. லீனாவுக்கு உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு அவரும் அவர் “தோழர்களும்” தொழிலாளர்களை அல்லவா விலை பேசுகிறார்கள்!

நான் மு.ராமசாமி அவர்கள் போலெல்லாம் எழுத்தாளர் இல்லை. ஆனால் என்மீது தொழிலாளர்களை ஏமாற்றியவர்கள் சேறு பூசினால் எனது நியாயத்தையும் நான் சொல்வேன்.


http://inioru.com/?p=11321