பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றங்களாகின்றது. நுகர்வு எப்படி மாறுகின்றதோ, அதையே சினிமா வக்கிரமாக்கி பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் பெண்ணைக் கூட இந்த நுகர்வு எல்லையில் வக்கிரமாக காட்டியே, அதை நுகரக் கோருகின்றது. பெண் பற்றிய பார்வையைக் கூட மிகத் தீவிரமாக மாற்றுகின்றது. பெண் இந்த உலகில் எதற்காக ஏன் எப்படி வாழ்தல் என்பதை, சினிமா மிக வேகமாக அடிக்கடி மாற்றிவிடுகின்றது. அதாவது உலகமயமாதல் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப அதை மாற்றிவிடுகின்றது.

இப்படி இன்றைய உலகமயமாதலின் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப, விளம்பரத்தை செய்யும் கலாச்சாரத் தரகுகளாகவே சினிமா இருக்கின்றது. குடும்பத்தை சேர்ப்பதா அல்லது பிரிப்பதா, இது எதுவாக இருந்தாலும் சந்தை விதிக்கமைய இயங்கும் ஒரு தரகு ஊடகவியல் தான் சினிமா.

 

நுகர்வுச் சந்தையும், நுகர்வுக் கலாச்சாரமும் என்ன செய்கின்றது. தன்னளவில், தான் மட்டும்  வரைமுறையின்றி நுகரக் கோருகின்றது. சேர்ந்து நுகர்வதை மறுக்கின்றது. சுயநலத்துடன் நுகரக் கோருகின்றது. மனிதன் சேர்ந்திருப்பதை, சேர்ந்து இயங்குவதை, சேர்ந்து வாழ்வதை இது மறுக்கின்றது. மனித உறவுகள் அனைத்தையும் அற்ப நுகர்வாக, விற்கும் பொருளாக அது பார்க்கின்றது. இது கலாச்சாரம் முதல் அனைத்தையும் இதற்குள்ளாகவே பார்க்க வைக்கின்றது. இதையே திணிக்கின்றது. மனித உறவுகளை, சந்தைக்குரிய வக்கிரமான போலி உறவாக்குகின்றது. இதற்குள்ளாக அனைத்தும் இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மாறான சமூகக் கூறுகளை அது அழிக்கின்றது. இதைச் செய்வதில் தான், சினிமாவின் பங்கு மிக முக்கியமானது. தேசிய உற்பத்திகள் தரமற்றது என்று சொல்லுமளவுக்கு, நுகர்வுச் சந்தைக்கேற்ற கதைகளைக் கூட அது உருவாக்குகின்றது. கதையின் வில்லன் தேசியக்கூறாகவும், கதாநாயகன் உலகமயமாதல் கூறாகவும் கூட, இன்றைய சினிமாவில் காட்டப்படுகின்றது.

 

இதன் பின்னணியில் பெண்ணின் சதையும், அது சார்ந்த கவர்ச்சியும், ஆபாசமுமே, சினிமா உலகை ஆளும் விதியாகின்றது. சினிமாவில் பெண்ணின் சதை என்னும் ஆபாச கலை இல்லை என்றால், சினிமா குப்புறப்படுத்துவிடும். இங்கு பெண்ணின் சதைதான், இங்கு  மனித உணர்வை சிதைத்து நுகர்வைத் தூண்டும் கலையாக்கப்படுகின்றது. பெண் சதையைக் காட்ட, காதலைக் காட்டுகின்றனர். காதலை விபச்சாரத்தின் எல்லையில் நிறுத்தி, உடல் உறவை முதன்மைப்படுத்திக் காட்டுகின்றனர்.

 

இந்த சினிமாவுக்கு ஒரு ஆன்மா இருக்கிறது என்றால், அது சந்தை வெளிப்படுத்தும் அசைவும் இது ஏற்படுத்தும் ஆபாச உணர்ச்சியும்தான். சினிமாவுக்கு ஒரு சந்தை இருக்கின்றது என்றால், பெண்ணின் சதை வெளிப்படுத்தும் கவர்ச்சி சார்ந்த ஆபாசமும் ஆணாதிக்க உலகும் அவசியமாகின்றது. சினிமா நுகர்வுச் சந்தைக்கேற்ற விபச்சாரி என்பதால், விபச்சாரத்தை விளம்பரம் செய்வது அதன் கலையாகின்றது. என்னதான் நோண்டினாலும், இதன் ஊடாகவே சினிமாவின் ஆன்மா வெளிப்படுகின்றது.

 

சினிமா ஒரு ஊடகம் என்ற வகையில், அது சந்தைக்குரிய பண்பாட்டை கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, அதை வெளிப்படுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த வகையில் அது தனது சந்தைச் சீரழிவூடாக, தானே முக்கிமுனங்கி கட்டிப் பாதுகாத்து வந்த பழைய கலாச்சார பண்பாட்டை அழிப்பதில் முன்னணிப் பங்கை வகிப்பதில் அதுவே முன்னோடியாகின்றது.

 

சினிமா வெளிப்படுத்தும் ஆபாசமும் கவர்ச்சியும் சினிமா கலையாக, இது உலகம் தழுவிய வகையில் மாற்றத்தை விரைவில் மக்களில் உட்புகுத்தக் கூடியதாக உள்ளது. இதை வைத்து சிலர் பிழைப்புக்காக பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் சினிமா மக்களுக்கு சிறுகச்சிறுக நஞ்சிடுகிறது என்பதே எதார்த்தம். பாலியல் கவர்ச்சியையும் ஆபாசத்தையும் ஒருங்கே புகுத்தி, தனிமனித அற்ப நுகர்வுவெறியை தூண்டி மனித உணர்வுகளை வக்கரிக்க வைக்கின்றது. பாலியல் வக்கிரமும், உடல் உறவு சார்ந்த சிந்தனையூடாக ஆணையும் பெண்ணையும் அணுகக் கோருகின்றது.

 

பெண் உள்ளடக்க ரீதியாக, வாழ்வு முறையூடாக, உடல் ரீதியாக முழுமையில் ஆபாசமாக இருக்க வேண்டியவள் என்று, இன்றைய சினிமாக் கலை கூறுகின்றது. முன்பு ஆபாசமின்றி அடக்க ஒடுக்கமாக பெண்ணைக் இருக்கக் கோரியது. இன்று மறுத்து உடல் ரீதியாக ஆபாசமாக வாழ்தலையே உலகமயமாதல் கோருகின்றது. இதற்கமைய பெண் அணியும் துணியை குறைத்தலில் உள்ள நவீன நுட்பமும், வித்தையும் தான், சினிமாவின் அழகாகவும் கலையாகவும் மாறுகின்றது.

 

பெண்ணின் சதையை வெளியில் தெரிய வைப்பதில் உள்ள நுட்பமும், அதை வக்கிரமாக இயங்க வைப்பதிலும் உள்ள ஆற்றலும், சினிமாக் கலையாகின்றது. இதை செய்வதில் உள்ள மனவிகாரம் கொண்ட வக்கிரமே, கலைத் திறமையாகின்றது. இதுவோ பணமாக புரளுகின்றது. நுகர்வு சந்தைக்குரிய ஓழுக்கம் (ஆன்மா), பணம் திரட்டுவதில் தான் இறுதியாக பூரிக்கின்றது என்றால், சினிமா அதற்கு ஏற்ப பாய் விரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. இப்படி கட்டியமைக்கும் சமூகத்தின் அவலத்தின் போக்கிடம் தான், இன்றைய (பின்)நவீன நாகரீகமாக புகுத்தப்படுகின்றது.

 

இதை நாம் மேலும் இலகுவாக புரிந்துகொள்ள முனைவோம். முன்பு சினிமாவில் கவர்ச்சியை ஆபாசத்தை வெளிப்படுத்த, இதற்கென சினிமாவால் உருவாக்கப்பட்ட, துணை நடிகைகள் (கவர்ச்சியைக் காட்ட) பயன்படுத்தப்பட்டனர். கதாநாயகிகள் கவர்ச்சியைக் வெளிப்படையாக காட்டுவதில்லை. அன்று சமுதாயத்தில் பாலியல் கவர்ச்சியையும், ஆபாசத்தையும் வெளிப்படுத்தும் இடங்களாக மதுபானக் கிளப்புகளே என்று, சினிமா முன்பு காட்டியது. சமுதாயத்தின் முன் இவை கரும்புள்ளிகளே என்ற எல்லைக்குள் தான், சினிமாவில் இது முன்பு கொண்டு வரப்பட்டது. இவைகளை சமூகத்தில் ஒழிவு மறைவான சந்து பொந்துகளில் நிறுத்தியே, அவைகள் சினிமாவில் காட்டப்பட்டது.

 

உலகமயமாதல் ஆபாசமே சினிமாக் கலாச்சாரமாகிவிட்ட இன்றைய நிலையில், இவை ஒளிவு மறைவற்ற ஒன்றாக, இதுவே நவீன சமூகத்தின் பொதுப் போக்காகவே காட்டப்படுகின்றது. ஆபாசத்தை தூண்டும் துணை நடிகைகள் பாத்திரம் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தின் கதாநாயகிகளே ஆபாசமாக கவர்ச்சியாக இருக்கின்ற நிலைக்கு பெண் மாற்றப்பட்டுவிட்டாள். கதாநாயகி எப்படியோ அப்படித்தான் சமூகத்தில் பெண் இருக்கவேண்டும் என்பதையே, சினிமா உலகம் தனது ஆபாச வழிகளில் அற்புதமாக தனது கலையாக எடுத்துக்காட்டுகின்றது. சினிமா வெளிப்படுத்தும் ஆபாசமான வக்கிரம், இன்றைய உலகமயமாதல் சமூகத்தின் பொதுப் பண்பாடு கலாச்சாரம் என்று காட்டப்படுகின்றது. முன்னைய ஆபாச பாத்திரங்கள், இன்று பொதுப் பாத்திரமாகி, அதுவே பண்பாடாக கலாச்சாரமாக மாறுகின்றது. இதுவே மாற்றத்தின் உட்சாரமாகும். முன்பு துணை நடிகை ஊடாகவே சமூக ஒழுக்கவியலைக் கேள்விக்குள்ளாக்கும் சமூகப் பாத்திரம், இன்று ஒழிக்கப்பட்டு, அதுவே சமூக ஒழுக்கமாக மாற்றப்படுகின்றது. அதாவது சமூகத்தின் கதாநாயகிகளாகவும், சமூக ஒழுக்கவாதிகளாகவும் காட்டப்படுவோர், ஆபாசமாக கவர்ச்சியாக சதை பிதுங்க உடுப்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்கள் தான். சமூகத்தில் இதை ஒட்டி உருவாகும் கலாச்சாரங்கள் பண்பாடுகள். இப்படி பெண்ணின் சதை தெரிய ஆடை குறைக்கப்பட்டு, வக்கிரமாக நிறுத்தப்படும் உலகம் தான், இன்றைய உலகமயமாதலை சந்தையை வழிநடத்துகின்றது.

 

இப்படி சமுதாயத்தில் நடந்த மாற்றம் தான் என்ன? வெளிப்படையாக இலகுவாக புரிந்து கொள்ள முடியாத சூக்குமம், இங்கு ஆளும் சமூக விதியாகின்றது. தன்னை மறுத்தல், தனக்கு முந்தியதை தெரிந்து கொள்ள மறுத்தல், மனித வரலாற்றை எட்டி உதைத்தலே இதுவே இதன் மூலதனமாகும். அனைத்தையும் நுகர்வுக் கலாச்சாரம் என்ற பண்பாட்டின் ஊடாக, புணர்ந்து பார்த்தல் தான் இதன் ஒழுக்கவிதியாகின்றது.

 

பொதுவான மனித வாழ்வியல் எல்லைக்குள் கதாநாயகி என்பவளின், அதாவது பெண்ணின் தகுதி என்பது என்ன? அரைகுறையான சதைக் கவர்ச்சியூடாக, ஆபாசத்தை தானாக முன்வந்து வெளிப்படுத்தலாகும். இதைத்தான் உலகமயமாதல் தனது சமூக உணர்வாக்கியுள்ளது. சினிமா இதை பெண்ணுக்குரிய ஒரு அங்கலட்சணமாக்கி, அதைப் பண்பாடாக, கலாச்சாரமாக எடுத்துக் காட்டுகின்றது. இதற்கேற்ப மேட்டுக்குடி பெண்ணியம் பேசுவோர், தாம் இதுவாக இருத்தலையே பெண்ணியம் என்கின்றனர்.

 

சந்தைக்கேற்ற பெண் என்ற எல்லையில், இன்று பெண் உடுப்பு அணிவதும், சந்தை இதற்கான உடுப்பை உற்பத்தி செய்வதுமாக உள்ளது. ஆணாதிக்க சந்தை, பெண்ணின் உடலை  சதையூடாக திமிர வெளிப்படுத்துவதுதான். சினிமா இதைத்தான், தனது சொந்த சுதந்திரமான கலை என்கின்றது. இன்றைய உலகில் சுதந்திரம் என்பது, மற்றவனிடம் இருந்து அபகரிக்கும் அற்பத்தனம் தானே. சினிமாவின் கலைச் சுதந்திரம் என்பது, பெண்ணின் சதையை திமிற வைப்பது தான். இதைக் கண்டு ரசிப்பது தான், மனித சுதந்திரம் என்கின்றனர். இதை வெளிப்படுத்தும் சுதந்திரம் தான், பெண்ணின் சுதந்திரம் என்கின்றனர்.

 

இந்த நிலையில் சினிமா, கதாநாயகி சதையூடாக திமிறவிட்டு காட்டப்;படுகின்றாள். இது அவளின் சொந்த தேர்வுமல்ல, சுதந்திரமுமல்ல. மிகக் குறைந்த உடையில் சதை திமிர நடத்தும் பாலியல் ஆபாசத்தையும், கவர்ச்சியையும், அது வெளிப்படுத்தும் வக்கிரத்தையும், கேள்விகளின்றி ரசிக்கும் சமூக மனப்பாங்கு, வாழ்க்கையை அனுபவிப்பதாக பீற்றிக்கொள்ளும் போக்கும் இன்று மேலோங்கி நிற்கின்றது. இதே மனிதன், (இங்கு ஆண், பெண்) தனது மனைவி சகோதரி குழந்தை விடையங்களில், இதற்கு இணங்க இந்தத் தன்மையை அனுசரிக்க மறுக்கின்றனர். இங்கு குடும்பம் என்ற தனிச்சொத்துரிமை அலகு, இதை கோரவைக்கின்றது. இதை உலகமயமாதல் என்ற தனிச்சொத்துரிமை அலகு வீங்கி வெம்பும் எல்லையில் தான், குறுகிய குடும்ப தனித்சொத்துரிமையை மறுதலிக்கின்றது. இதனால் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலும் தீவிர மாற்றத்தை திணிக்கின்றது.

 

மொத்தத்தில் பெண் ஆணின் சொத்து என்ற ஆணாதிக்க தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டமும், பெண் நுகர்வுக்குரிய சந்தைப் பொருள் என்ற நுகர்வுக் கண்ணோட்டமும், இந்த அமைப்புக்குள்ளான முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகின்றது. ஒரே நேரத்தில் வௌ;வேறு பாத்திரங்களில் வெளிப்படும் அற்ப குறுகிய வக்கிரமான உணர்வு தான், இவை.

 

இதன் சாரம் என்பது, இந்த எல்லைக்குள் பெண்ணை நோக்கும் சிந்தனை தளத்தில் உள்ள முரண்பாடு இதற்கு காரணமாகின்றது. குடும்ப உறுப்பினரையும் இதே எல்லைக்குள் நோக்கக் கோருகின்ற, ஒரு சுய முரண்பாடாக வெடிக்கின்றது. குடும்பத்திலான பாலியல் உறவு, இந்த எல்லைக்குள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகின்றது. மனைவி ஆபாசமாக பொது உலகில் இருப்பதை மறுப்பதும், சொந்த உறவில் பாலியல் உறவில் இருக்க கோரும் முரண்பாடும் ஏற்படுகின்றது. அத்துடன் அது முடிவதில்லை. குறித்த ஆணின் முன் ஆபாசமாக இருந்து விட்டால், பொது உலகு சார்ந்த ஆபாசக் கண்ணோட்டம் எதிர்நிலையில் பெண் மேலான சந்தேகமாகி விடுகின்றது.

 

மறுபக்கத்தில் சகோதரி, அல்லது குழந்தை சதை திமிரும் நுகர்வுப் பண்பாட்டில் வாழ முற்படும் போது, இந்தக் கலாச்சாரத்தை ரசிக்கும் ஆண் (பெண்ணும் கூட) அதை எந்தக் கண் கொண்டு எப்படிப் பார்ப்பார்கள்? இந்த எல்லையில் தான் தீவிர குடும்ப முரண்பாடும், குடும்பத்தினிடையே பாலியல் வன்முறையும் கூட ஏற்படுகின்றது. இன்று குடும்பத்தினுள் அதிகரித்துச் செல்லும் பாலியல் வன்முறைக்குரிய அடிப்படையும், பொதுவான வன்முறைக்குரிய கூறுகளும் கூட, அதிகளவில் இதனால் உருவாகின்றது.

 

ஒரு மனிதனின் உள்ளான இரட்டை போலி வாழ்க்கை முறை என்பது சாத்தியமற்றது. சந்தை வெளிப்படுத்தும் திமிரிய சதை நுகர்வை, அனுபவிப்பதற்கு இயற்கையாகவே தடை உள்ளது. பெண்ணின் சதையை பார்க்கலாம், ரசிக்கலாம், அதை தொட்டு உணர்ந்து பாலியலாக நுகர முடியாது. சந்தையில் எல்லோராலும் அனைத்தையும் நுகர முடியாத பொருட்களைப் போல். பெண்ணின் சதையும். சந்தையில் நுகர பணம் தேவை எப்படியோ, அப்படி பெண்ணின் தனித்துவமான இணக்கமும் அவசியம். அல்லது இதை இலகுவாக இந்த சமூக அமைப்பில் அடைய, பணம், கலை, அந்தஸ்து… என்ற தகுதிகள் இருக்கவேண்டும். நுகர்வு என்பது சுதந்திரமானதல்ல, அவை நிபந்தனைக்கு உட்பட்டது.

 

இப்படி ஆபாசமாக நுகரக் கோரும் சந்தை, சதையையும் பொருளையும் நுகர்வதை மறுதலிக்கின்றது. பார்க்கும் விளம்பரத்தைப் போல், சதை ஆபாசத்தை கற்பனையில் தனிமையில் ரசிக்கலாமே ஒழிய, சமுதாயம் முழுக்க பாலியலாக தொட்டு உணர்ந்து நுகர முடியாது. நுகர்வதற்கு அதற்கே உரிய நிபந்தனைகள் உண்டு. மனிதன் நுகர முடியாததால் தான், அவை பலருக்கான பொது விளம்பரமாகின்றது, காட்சிப் பொருளாகின்றது. சிலருக்கான அற்ப நுகர்வாகின்றது.

 

இதனால் பொருளை நுகர, அராஜக வழிகள் அதிகரிக்கின்றது. இது எப்படி சமூகத்தில் அதிகரிக்கின்றதோ, அப்படியே தான் திமிரும் சதையையும் நுகர முனைகின்றது. நிலவுகின்ற வன்முறை கொண்ட ஆணாதிக்க குடும்பத்தினுள், இலகுவாகவே சதை சார்ந்த நுகர்வை அடையும் வெறி, வன்முறைக்குள்ளாக்கி அனுபவிக்க துணையாகின்றது.

 

இப்படி ஒருபுறம் வன்முறை சார்ந்த நுகர்வாகவும், மறுபக்கத்தில் தனது ரசனைக்கும் ரசிப்புக்கும் நேர் எதிரான மனப்பாங்கில் முரண்படுகின்ற போக்கு காணப்படுகின்றது. இதை ஆண் மட்டுமல்ல, பெண்ணும் கூட கடைப்பிடிக்கின்ற முரண்நிலைதான், கலாச்சாரத்தின் முரண்பாடாகின்றது. இப்படி இரட்டை உலகில் வாழ்கின்ற சமூக எதார்த்தம், இங்கு இயல்பாக அதை பிரித்தறிய முடியாத சூழலில் இருந்து பிரதிபலிக்கின்றது.

 

இந்த சதை சார்ந்த அற்ப உணர்வை புரிந்துகொள்ள, பொருள் உலகு பற்றி நுகர்வுப் பார்வையே போதுமானது. பொருளை நுகர்வது எப்படியோ, அப்படித் தான் சதையை நுகர்வதும். இங்கு நுகர்வுக் கண்ணோட்டம் பொதுவானது.

 

சந்தை நுகர்வைத் தூண்டித்தள்ளுகின்றது. வாழ்க்கைக்கும், தேவைக்கும் தான் பொருள் என்பதை சந்தை மறுத்து, பொருள் நுகர்வுக்கு என்ற உணர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த நுகர்ச்சிக்கு ஏற்ப, பொருளை அடிக்கடி மாற்றுகின்றது. மனிதனின் நுகர்வு உணர்ச்சியோ தொழில் நுட்பத்துக்கும், கவர்ச்சிக்கும், போலியான நடிப்புக்கும், அற்ப அழகுணர்ச்சிக்கும் ஏற்ப, பொருளை அடிக்கடி மாற்றக் கோருகின்றது. இயல்பின் தேவைக்கு புறம்பான மிதமிஞ்சிய அற்ப நுகர்வைக் கோருகின்றது. இப்படி நுகரும் கண்ணோட்டம், ஆண்பெண் உணர்வாக மாற்றப்பட்டுள்ளது.

 

இந்த நுகர்வுக் கண்ணோட்டம் தனது கணவனை அல்லது தனது மனைவியுடன் பாலியல் என்பதுடன் இயல்பாக முரண்படுகின்றது. மாறாக பல ஆண்களுடன் அல்லது பல பெண்ணுடன்  சதை நுகர்வை, நுகர்வுசார் உணர்ச்சி கோருகின்றது. பொருள் உலகம் சார்ந்த நுகர்ச்சி சார் உணர்ச்சி தான் இதிலும் உள்ளது. இந்த உலகமயமாதலில் ஆண் பெண் கொண்டுள்ள சமுதாய பார்வையும், குடும்ப ஒழுக்கப் பார்வையும் இயல்பாகவே போலியாகி விடுகின்றது. சமுதாயத்தின் முன் முரண்பாட்டுடன் அவர்கள் உள்ளும் புறமுமாக நடிக்க தொடங்கிவிடுகின்றனர். ஆண்பெண் இயல்புணர்ச்சியைக் கூட, கூட்டு மனப்பான்மையைக் கூட, நுகர்வுக் கண்ணோட்டம் தகர்த்து விடுகின்றது. இதனால் குடும்பத்தில் சிக்கல்கள், முரண்பாடுகள் ஏன் எதற்கு என்று உருத்தெரியாத வகையில் உருவாகின்றது.

 

இதற்கு பின்னால் ஒளிந்திருப்பது சந்தை என்ற கவர்ச்சி உலகமும், அதை மறுக்கும் உழைப்பு என்ற உலகமும். மிக நுட்பமான உலகளாவிய இந்த முரண்பாடு தான், சமுகத்தினுள்ளான கலாச்சார முரண்பாட்டிற்கான சமூக சாரமாகும். உண்மையில் இதை வெளிப்படையாக உணராத செயல்பாடுகள் தான், அன்றாட வாழ்வியலில்  கலாச்சார முரண்பாடுகளாகின்றது.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

 

1.ஆபாசமும்! கவர்ச்சியும்! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? : (மனித கலாச்சாரம் பாகம் - 1)

 

2.மனித உறவுகளும், அதன் சிதைவுகளும் : (மனித கலாச்சாரம் பாகம் - 02)

 

3.நுகர்வுச் சந்தையின், ஆன்மாவாகிவிட்ட பெண்ணின் சதை : மனித கலாச்சாரம் பாகம் - 03