இடுபொருட்கள் விலை உயர்வு, கொள்முதல் விலைவீழ்ச்சி, உணவு தானிய தாராள இறக்குமதி முதலானவற்றால் இந்திய விவசாயிகள் போண்டியாகி, கந்துவட்டிக் கடன் சுமையில் சிக்கி ஓட்டாண்டிகளாகி வருகிறார்கள். மறுபுறம், விவசாயத்தைப் புறக்கணித்துவரும் ஆட்சியாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு வரிச் சலுகைகள்,மானியங்கள் என்ற பெயரில் நாளொன்றுக்குப் பலநூறு கோடிகள் வீதம் வாரியிறைக்கின்றனர்.

விவசாய நாடான இந்தியாவை உணவுக்காக மேலை நாடுகளிடம் கையேந்த வைக்கும் இம் மறுகாலனியாக்கத் தாக்குதலை வீழ்த்த அறைகூவி, நாமக்கல் மாவட்ட வி.வி.மு.வினர் முத்துகாபட்டியில், தோழர்கள் செல்லப்பன்சின்னுசாமி அரங்கில் (புகழேந்தி திருமண அரங்கில்) கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சியை 13.12.09 அன்று நடத்தினர்.

 

வி.வி.மு. வட்டார அமைப்பாளர் தோழர் அசோகன் தலைமையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இக்கருத்தரங்கில், வர்த்தக சூதாடிகள், பெரு முதலாளிகளின் இரும்புப் பிடியிலிருந்து இடுபொருட்கள் மற்றும் சந்தையை விடுவிக்காமல், இயற்கை வேளாண்மை முறையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய இயற்கை வேளாண் முன்னணியாளர்கள் இடித்துரைத்தனர். வி.வி.மு.வின் திருவெண்ணெய் நல்லூர் வட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், கம்பம் வட்ட அமைப்பாளர் தோழர் மோகன் ஆகியோர் விவசாயத்தின் சீர ழிவுக்கும் விவசாயிகளின் ஓட்டாண்டித்தனத்துக்கும் தனியார் மயதாராளமயஉலகமயமாக்கலே முதன்மைக் காரணம் என்பதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் விளக்கினர். அதைத் தொடர்ந்து, மறுகாலனியாக்கத்தின் கோரத்தாண்டவம் குறித்தும், அதை வீழ்த்தி விவசாயிகள்தொழிலாளர்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் புதிய ஜனநாயகப் புரட்சியே ஒரே தீர்வு என்பதையும் ம.க.இ.க. இணைச் செயலர் தோழர் காளியப்பன் விரிவாக விளக்கினார்.

 

ம.க.இ.க.மையக் கலைக்குழுவினர் இக்கருத்தரங்கின் இடையிடையே புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். வி.வி.மு.வில் முன்னோடிகளாகச் செயல்பட்டு விபத்திலும் நோய்தாக்கியும் மறைந்த தோழர்கள் செல்லப்பன், சின்னுசாமி ஆகியோரின் உருவப் படங்களைத் தோழர் காளியப்பனும் தோழர் மோகனும் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். திரளான விவசாயிகளும் இயற்கை வேளாண் முன்னணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இக்கருத்தரங்கம், மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு விவசாயிகள் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது.

 

— பு.ஜ.செய்தியாளர், நாமக்கல்.