நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து. ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.

 

பாசிசத்தின்முன் அடிபாணியாது, தொடர்ந்து அதை அம்பலப்படுத்துகிறார்.தனது இடைவிடாத பணிகளுக்குள் இவ்வளது செயற்பாட்டையும் மக்களுக்காவும்-ஒடுக்கு முறைக்குள்ளாகும் தேசங்களுக்காவும் முடுக்கிவிடுகிறார்.

 

எங்களது தேசத்தில்,புலிகளதும்-பாசிச அரசினதும் கொடுமைகளுக்கு எதிராகத் தம்மைத் தாமே "பேராசிரியர்"என அழைக்கும் தமிழ்க்"கல்வியாளர்கள்"எத்தகைய செயலில் இருந்தார்களென இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.தலைகுனிந்து நொந்துகொள்கிறேன்.

 

வாய் மூடி மௌனிகளாகவும்,கொடுமைக்காரர்களுக்கும்,அயோக்கியர்களுக்கும் அருகினில் இருந்துபடி,அவர்களை தேசியத்தினது பெயரால் அனுமதித்ததைத் தவிர இவர்கள் என்னதான் மக்கள்சார் அரசியலை-போராட்டத்தை முன்னெடுத்தார்கள்?

 

கிட்லரிடம் அடிபணியாத ஐயன் ஸ்ரைன், இன்றுவரையும் மக்கள் நல அரசியலால் போற்றப்படுகிறான்

 

 

எங்கள்போராட்ட வாழ்வில், நெடிய கொலைக்கெதிராகக் குரல் கொடுத்த புதியதோர் உலக நாவலாசிரியர் கோவிந்தன்,கவிஞை சிவரமணி,செல்வி,மக்களது நலத்தைத் தனது உயிராகவெண்ணிப் போரிட்ட ராஜனி திரணகம,விஜிதரன் என ஒரு பட்டியல் நமது மக்களது உரிமைக்காகத் தமது உயிரைக் கொடுத்திருக்கின்றனர் அன்று.

 

எனினும்,இன்று இவர்களைச் சொல்லிப் பிழைக்கும் குள்ள நரிக்கூட்டம், தமது இருப்புக்காகப் பிழைப்புவாத அரசியலை இனியொரு திசையில் கட்டியமைக்கப் பாசிசத்துக்கு முண்டுகொடுத்து மௌனித்திருந்தவர்களுடன் கைகோர்த்துத் தமக்கும், மக்கள்நல அரசியல் பாரம்பரியம் இருக்கிறதென்று பம்மாத்து அரசியலைச் செய்கிறது!

 

இத்தகைய கயவர்கள்,இப்போது,புலிகள் அழிக்கப்பட்டத்தும்,தம்மையும் செயலாளர்களாகவும்,மக்களுக்காகப் போராடியதாகவும் ரீல் விடுகிறார்கள்.இவர்களுக்குக் குடை பிடித்துத் தமது நரித்தன அரசியலை முன்னெடுக்கிறது பழைய இயக்கவாத மாயை.

 

வரலாற்றை மறைப்பதற்கு இவர்கள் எவ்வளவுதாம் இட்டுக்கட்டினாலும் உண்மை எந்த வடிவத்திலும் வெளிவந்தே விடுகிறது.

 

நோம் சோம்ஸ்கி,இன்றைய மக்கள்சார் உரிமைப் போராட்டத்துக்கு மிக நல்ல உதாரணமாவார்.இத்தகைய கல்வியாளர்களே நாளைய தலைமுறைக்கு வழி காட்டியாவார்கள்.இவர்களே கல்வியாளர்கள்.இதைவிட்ட எங்கள்"பேராசிரியர்கள்" மக்களது குருதியில் தமது இருப்பை நோக்கி அரசியல் செய்பவர்களே.

 

நாம்,நோம் சோம்ஸ்கி,சாரா வாகன்கினேக்ற்,ஹாபர் மாஸ் காலத்தில் வாழ்கிறோம்.

 

எங்களுக்கு, எமது தலைமுறையில் நமது"கல்வியாளர்கள்"குறித்தும் தெரிந்தே இருக்கிறது.

 

"தோழர்கள்"என்பதற்கு அர்த்தம் புரியாதவொரு இடதுசாரிகள் எல்லாம் புலிகளின் அழிவுக்குப்பின், தம்மையும் மக்கள் நலச் சிந்தனையாளர்களாகக் காட்டுவதில் எத்தனை முயற்சியைச் செய்யினும்,காலம் இவர்களைக் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது.

 

காலத்தில் வாழாதவர்கள் கட்டிவைக்கும் கருத்துக்கள் அணுவாயுதத்தைவிட கொடியது.

 

இதற்கு நம்மிலும் எத்தனை "பேராசிரியர்கள் தோழர்கள்"தூ...

 

ப.வி.ஸ்ரீரங்கன்

04.12.09

 

http://jananayagam.blogspot.com/2009/12/blog-post.html