கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு கிடைத்த ஆயிரக்கணக்கான பன்னாட்டு தொழிலாளர்கள் பற்றி இன்று பலருக்கு தெரியாது. அன்றைய கம்யூனிச அரசு, வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமான சம்பளம், சலுகைகள் வழங்கி கௌரவித்தது. நட்புறவு கொண்ட பிற கம்யூனிச நாடுகளில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில் (Vetragsarbeiter) இந்த தொழிலாளர்கள் வருவிக்கப்பட்டனர். பொருளாதார வளர்ச்சி குன்றிய சோஷலிச நாடுகளான வியட்நாம், மொசாம்பிக், போன்ற நாடுகளில் இருந்து மேற்படி தொழிலாளர்கள் வருகை தந்தனர். தொழிற்துறை வளர்ச்சியடைந்த கிழக்கு ஜெர்மனியில், தகமை சார் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கம். அதேநேரம்,அன்று நிலவிய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, வெளிநாட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளில், தனி நபர் வருமானம்அதிகமாகவிருந்த கிழக்கு ஜெர்மனியில் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள், தமது தாயகத்திற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். 1989 ல், பெர்லின் மதில் வீழ்ந்து, ஒரே நாளில் கம்யூனிச ஜெர்மனியை, முதலாளித்துவ ஜெர்மனி விழுங்கிய பின்னர், நிலைமை தலைகீழாக மாறியது.

 

தொழிற்சாலைகள் மூடப்பட்டு பெருமளவு தொழிலாளர்கள் தாயகம் திரும்பிவிட்டார்கள். ஆனாலும் சுமார் இருபதாயிரம் பேர் அங்கே நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்.

 

இன்று ஒன்றிணைந்த ஜெர்மனி, பெர்லின் மதில் வீழ்ந்த இருபதாண்டுநிறைவை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கொண்டாட்டங்களுக்கு இடையே மறக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சிலரை "அல் ஜசீரா" தொலைக்காட்சி செவ்வி கண்டது. இன்றும் கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்து வரும் மொசாம்பிக்கை சேர்ந்த ஜோவோ, வியட்நாமை சேர்ந்த நிகுயென் ஆகியோர் நேர்காணலில் இடம்பெறுகின்றனர்.

 

அநேகமான வெளிநாட்டு தொழிலாளர்கள், கிழக்கு ஜெர்மனியின் இழப்பை ஆதங்கத்துடன் குறிப்பிடத் தவறவில்லை. கம்யூனிச அரசு தம்மை சிறப்பாக கவனித்ததாகவும், உள்ளூர் மக்கள் நட்புணர்வுடன் பழகியதாகவும் தெரிவித்தனர். கம்யூனிச ஜெர்மனியில் ஒரு போதும் நிறவெறி இருக்கவில்லை. முதலாளித்துவம் வெற்றிவாகை சூடிய பின்னர், நிறவெறிக் கருத்துகளும் கூடவே பரவின.

 

வேலையில்லாதவர் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த உள்ளூர் ஜெர்மன் மக்கள், இன்று நிறவெறி காட்டுகின்றனர். ஆப்பிரிக்க, ஆசிய நாட்டவர்கள் இரவில் வெளியே நடமாட அஞ்சுகின்றனர். கம்யூனிசம் விரட்டியடித்த நிறவெறியை முதலாளித்துவம் மீட்டுக் கொண்டு வந்து விட்டது. பெர்லின் மதில் வீழ்ச்சியை கொண்டாட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

FOCUS: THE BERLIN WALL
'Taken over by the enemy'