பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர் கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம்  இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து
நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியின் "உண்மை' நிலை இது! ஏறத்தாழ தமிழகம் முழுவதுமுள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் "முகவரி'யும் இதுதான்!

 

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் இவ்விடுதி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவ்விடுதியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது! இங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி "வார்த்தைகளில்' சொல்லிவிடவும் முடியாது!

 

இவ்விடுதியில் 2005ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக சமீபத்தில் 26 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு வழங்குவதையும் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது.

 

இந்நிலையில் தான் கடந்த 23.9.09 அன்று அதிகாலை விடுதியின் அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாணவர்
கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதனைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரியும், விடுதிக் கட்டிடத்தை மாற்றக் கோரியும் பு.மா.இ.மு.வின் விடுதி கிளைச் செயலர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில் அணிதிரண்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

 

கோரிக்கை என்ன என்பதைக் கூட கேட்காமல், உதவி கமிசனர் ராஜேந்திரன், போலீசு ஆய்வாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசு கும்பல், காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கியது. தாக்குதல் தொடர்ந்த போதும்
"மாவட்ட ஆட்சியர்' உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்வரை இங்கிருந்து கலையப் போவதில்லை என மாணவர்கள் உறுதியாய் நின்றனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, அலறியடித்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியரை, ""நாங்கள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும் நீங்கள் நேரில் வந்து அனுபவியுங்கள்'' என மாணவர்கள் இழுத்து சென்றனர். ""இடிந்து விழும் இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான'' உத்திரவை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பின்னரே, அவர் விடுவிக்கப்பட்டார்.

 

மூன்றுநபர் கொண்ட மாணவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ் புதிய விடுதிக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன. பு.மா.இ.மு.வின் முன்முயற்சியால் கிடைக்கப் பெற்ற இத்தொடர் வெற்றிகள், அனைத்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும், வழங்கியிருப்பது மாத்திரமல்ல, வீதியிலிறங்கிப் போராடுவதன் வலிமையையும் உணர்த்தியிருக்கிறது!

— பு.ஜ. செய்தியாளர், திருச்சி.