இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.

இலங்கை பாசிச சமூகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு, இந்தக் வீடியோ காட்சி ஒரு நல்ல உதாரணம். கொல்வதில் எந்த ஓளிவு மறைவும் கிடையாது. இப்படி நடப்பதே அதிகார வர்க்கத்தின், கேள்விக்கிடமற்ற கொலைத் தொழிலாக உள்ளது. இதைச் செய்வதை நியாயப்படுத்தும் அரசியல் தான் பூத்துக் குலுங்குகின்றது. இதற்கு இனம், நிறம், சாதி, பால், பிரதேசம், அதிகாரம் என, எது வேண்டுமென்றாலும் ஒரு காரணியாக இருக்;கலாம். 

  

இந்த நிகழ்வு தற்செயலாகவே வீடியோ காட்சியாக வெளிவந்தது. இதனால் அரசு, சட்டம், நீதி எல்லாம் உடனடியாக செயல்படுவதாக, தனக்குத்தானே பாசாங்கு செய்கின்றது.  எத்தனை ஆயிரம் படுகொலைகளைச் செய்த இந்த அதிகார வர்க்கக் கும்பல், சட்டம் நீதி என்று நடிக்கின்றது.

 

 

கொலைகார கும்பல் பற்றியும், அதன் பாசிச நடிப்பையும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்;த விக்கிரமதுங்க தன் மரணத்தின் பின் தனக்கு என்ன நடக்கும் என்பதை மிக அழகாக எள்ளி நகையாடினார்.

 

தன் மரணத்தைப்பற்றி, மரணத்துக்கு முதல் எழுதிய தனது கட்டுரையில் “எனது மரணத்தின் பின்னர், வழமை போலவே பகட்டுத்தனமான விசாரணைக்கு உத்தரவிடுவீர்கள் என்றும் காவல்துறையினர் முழுமையான விசாரணையினை மேற்கொள்வார்கள் என்றும் நான் அறிவேன். ஆனால், கடந்த காலத்தில் நீங்கள் கட்டளையிட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இந்த விசாரணையின் பலனாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனது மரணத்தின் பின்னால் யார் இருந்து செயற்பட்டார்கள் என்பதை நாம் இருவரும் அறிவோம். ஆனால் அவரது பெயரை உச்சரிக்கத் துணியமாட்டோம். எனது வாழ்வு மாத்திரமல்ல, உங்களது வாழ்வும் இதில்தான் தங்கியிருக்கிறது.” இப்படி எழுதிய பின்தான் லசந்;த விக்கிரமதுங்க இந்த பாசிச அரசால் கொல்லப்படுகின்றார்.

 

அரசே கொலையாளியாக, அதன் பின்னால் தான் ஜனாதிபதியின் “வாழ்வும்” ஆளும் வர்க்க பாசிசத்தின் இருப்பும் கூட அடங்கியிருந்தது. ஜனநாயகம் இப்படித்தான் இலங்கையில் பூத்துக் குலுங்குகின்றது. ஒரு அப்பாவியை, ஒரு மனநோயாளியை, ஒரு மனிதனை கடலுக்குள் வைத்து அடித்துக் கொல்லும் பொலிஸ்காரனின் உளவியல், பாசிச அரசின் அரசியல் உள்ளடக்கமாகும்.

 

இது கடந்த நாற்பது வருடத்தில், பல இலட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. இதுவே அதிகார வர்க்கத்தின், சொந்த அரசியல் அதிகார நடைமுறையாகும். 1970 களில் ஜே.வி.பியையும், 1979-1980 களில் மீண்டும் ஜே.வி.பியும், 1970கள் முதல் இன்றுவரை தமிழ்மக்கள் மேலும், பேரினவாதம் கட்விழ்த்துவிட்ட படுகொலை அனைத்தும் இப்படிப்பட்டதே.  இவை எந்த சட்ட நீதி விசாரணைக்கும் உட்பட்டது கிடையாது. இப்படி 40 வருடமாக இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியல் மொழியே, கொலை அரசியல் தான்.

 

சண்டே லீடர் ஆசிரியரான லசந்;த விக்கிரமதுங்கவை, மகிந்த கும்பல் தங்கள் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள எந்த ஒளிவுமறைவுமின்றி கொல்ல முடிகின்றது. இது சாத்தியமென்றால், ஒரு பொலிஸ்காரன் ஏன் ஒருவனைக் கொல்லமுடியாது. இந்த அரசியல்தான், ஒரு மனநேயாளியை ஆயிரக்கணக்கான மக்கள் முன் எந்தக் கேள்வியுமின்றி அடித்துக் கொள்ள முடிகின்றது. இலங்கையின் சட்டம், நீதி எல்லாம், இதற்கு இசைவாக்கமடைந்துள்ளது.

 

இது வீடியோ காட்சியாக வெளிவந்தவுடன் தான், கைது விசாரணை என்று பாசிச நாடகங்களைப் போடுகின்றனர். வேடிக்கையான அரசியலும், சித்து விளையாட்டு. சண்டே லீவர் ஆசிரியரான லசந்;த விக்கிரமதுங்க தன் மரணத்துக்கு காரணம் மகிந்த அரசுதான் என்று, தன் மரணத்தை பற்றி எழுதிய பின் கொல்லப்பட்டார். மகிந்த குடும்பத்தின் மீது எந்த சட்டமும், நீதியும் பாய்ந்துவிடவில்லை. சண்டே லீடர் ஆசிரியரான லசந்;த விக்கிரமதுங்க, எழுதிய கடைசி ஆசிரியர் தலையங்கத்தில், தன்னை கொல்ல உள்ள மகிந்த கும்பலை மிகத் தெளிவாக இனம் காட்டுகின்றார். 

 

“யாரால் எனது உயிர் எடுக்கப்படும் என்பது நீண்ட பல நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டதை நான் அறிவேன். எப்போது எடுக்கப்படும் என்பதுதான் எழுதப்பட்டிருக்கவில்லை. அதிகார வர்க்கத்தினால் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் வரிசையில் நானும் இணைந்துவிட்டேன்...

 

‘சண்டே லீடர்” பத்திரிகை தனது மூச்சினை நிறுத்தும் நாள் வரைக்கும் எங்களைப் போன்ற பலர் கொல்லப்படுவார்கள். எனது படுகொலையானது சுதந்திரத்திற்குக் கிடைத்த தோல்வியாக இருந்தாலும், என்னைப் போன்றவர்கள் தங்களது இலட்சியப் பாதை எதுவோ அதில் முழுவீச்சுடன் பயணிப்பதற்கு அவர்களைத் தூண்டும் என வெகுவாக நம்புகிறேன்.

 

எமது அன்பான தாய்நாட்டில் புதியதோர் மானிட சுதந்திர தசாப்தம் உதயமாவதற்கு உள்ள தடைகள் எவையோ அவற்றைத் தகர்ப்பதற்கு எனது படுகொலை உதவும் என நம்புகிறேன்.

 

நாட்டுப்பற்று என்ற பெயரால் இதுநாள் வரை பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தாலும் கூட, ஜனாதிபதியினது கண்களைத் திறப்பதற்கும் நாட்டில் புதிய மனித தர்மம் உதயமாவதற்கு எனது மறைவு வழி செய்யும் என எண்ணுகிறேன்.

 

அபாயம் நிறைந்த பாதையில் நான் ஏன் இவ்வாறு பயணிக்கிறேன் என்றும், இதன் விளைவாக நான் எப்போதும் கொல்லப்படலாம் என்றும் மக்கள் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.

 

எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல்களின் போதும் அரசாங்கம்தான் பின்னணியில் இருந்து செயற்பட்டது என நான் நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது. இறுதியாக நான் கொல்லப்பட்ட போதும், என்னைக் கொலை செய்தது அரசாங்கம்தான் என நம்புகிறேன்.” (இதை விரிவாக படிக்க இங்கே அழுத்தவும் : படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம்

 

 

இப்படி எழுதிய பின்தான் இந்த அரசால் கொல்லப்பட்டார். ஒரு மனிதன் படுகொலைக்கு எதிராக சட்டம், நீதி என அனைத்தும் படுகொலை செய்யப்பட்டது. அதையும் அவர் தன் மரணத்தின் முன் கிண்டல்செய்து விடுகின்றார்.
    
“.. என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, போலீஸை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!

 

என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். மனிதநேயம் வளம் பெறும். எத்தனை ராஜபக்சேக்கள் இணைந்தாலும் அதை அழிக்க முடியாது.” மிகப்பெரிய ஆற்றலுடன், மரணத்தை எதிர் கொள்கின்றார். அரசு போட முன்வந்த சலுகைகள் அனைத்தையும் எள்ளி நகையாடினார். இந்த நிலையில் தான் அரசு படுகொலை செய்தது.

 

இங்கு எம்முன் மன நோயாளி கொல்லப்படும் ஒரு காட்சி. சட்டம், நீதி என அனைத்தும், இதை உருவாக்கிய அதிகார வர்க்கத்திற்கு எதிராக செயல்படவில்லை. மாறாக தனிப்பட்ட ஒருவனை குற்றவாளியாக சமூகம் நிறுத்துகின்றது.

 

அரசு என்ற குற்றக் கும்பல், தன் பாசிச இயந்திரத்தின் தந்திரங்கள் மூலம் இதுபோன்ற ஆயிரம் ஆயிரம் கொலைகளை மூடிமறைக்க முனைகின்றது. ஒரு அரசு ஒரு பத்திரிகையாளனை கொல்ல நாள் குறித்தை, அதே பத்திரிகையாளன் அம்பலப்படுத்தி பின் படுகொலை செய்யப்படு;கின்றான். அவரைக் கொன்ற குற்றவாளிக் கும்பல்தான், நாட்டை ஆளுகின்றது. கொலைகாரக் கும்பல் ஆளும் வர்க்கமாக இருக்கும் நாட்டில் தான், மனநோயாளியை கூட பல ஆயிரம் பேர் முன் அடித்துக் கொல்வது நடக்கின்றது.

 

இதற்கமைய உருவான பாசிசத்தின் உளவியலில் தான், இந்த படுகொலையை தடுக்க முனையாது வேடிக்கையாக பார்க்க வைக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் முன் நடந்த இந்த நிகழ்ச்சி, சமூகத்தின் கோபமாக மாறவில்லை. இது எமக்கு எதைக் காட்டுகின்றது. நாம் போராட வேண்டிய பணியோ கடினமானது என்பதையும், அது  நீண்டு விரிந்து கிடக்கின்றது என்பதையும் இது  எமக்கு உறைக்கும் படி மீண்டும் கூறுகின்றது.    

 

பி.இரயாகரன்
01.11.2009