நான் இப்போதேதும்
பேசப்போவதில்லை பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன
ஆனாலும் நான் இப்போது
பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….

நான் பேசாமலிருப்பது

பலருக்கும் மகிழ்ச்சியைத்
தரலாம்
பேசாமலிருப்பது கோழைத்தனமாம்
பேசவிடாமல் செய்வது வீரமாம்
நான் கோழையாகவே
இருந்து விட்டுப் போகிறேன்
ஆனால் அது நிரந்தரமல்ல…….

படிப்பிற்காக வேலைக்காக
நான்  செல்லும் இடங்களிலெல்லாம்
பதவியும் பணமும்
என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

pesu copy

நான் மறுத்தாலும்
ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
தேனீர்க்கடைகள் என்னை
பிளாஸ்டிக் டம்ளர்களோடு
வரவேற்கின்றன

என் துயரங்கள் வேதனைகள்
எல்லாம் நினைவலைகளாய்
என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
எல்லாம் உள்ளே வெடித்துக்
குமுறிக்கொண்டிருக்கின்றன
பயமாய் இருக்கின்றது
எங்காவது தப்பித்தவறி
பேசிவிடுவோமோ என்று…….

என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
கனவுகளில்

எல்லாம் பணத்தால்
மதிப்பிடப்படும் போது
நானும் மதிப்பிடப்பட்டிருக்கிறேன்
செல்லாக்காசாக

செல்லாக்காசுகளின் மீதேறி
சிலர் கலசங்களாய்
அமர்ந்திருக்கின்றார்கள்
கலசங்களுக்கு தங்க முலாம்
பூசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது
அவை புனிதமானவையாம்…….

நான் எப்போதும் பேசாமல்
இருக்கப்போவதில்லை
நான்
மட்டுமல்ல நான் நாமாக
நாங்களாக பேசுவோம்
பேசுவோம்

இப்போது பேசுபவர்களெல்லாம்
அப்போது வாய் திறந்துகிடப்பார்கள்
உளுத்துப்போன சன நாயகத்தின்
எச்சில்கள் ஆறாய் ஓட
மொய்க்க வந்த ஈக்களோ
நிலையறிந்து பின்னங்கால்
பிடறியிலடிக்க ஓடும்

பேசுவோம் பேசுவோம்
பேசிக்கொண்டே இருப்போம்
அதிகாரத்தின் விம்மல்கள்
அடங்கும் வரை
உங்களின் மவுனங்கள்
நிரந்தரமாகும் வரை பேசிக்கொண்டே இருப்போம்