கடலோர மக்களின் வாழ்வு என்றாலே போராட்டங்களை எதிர்கொள்வதாகவே அமைந்துவிடும்போல! இலங்கை கடற்படையின் தாக்குதல், மீனவர்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பாணை, மீனவர்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றும் சட்டங்கள் என அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகளில் தத்தளித்து மீளமுடியாமல் இருப்போருக்கு இன்னோர் அதிர்ச்சியாக வந்துள்ளது கடலரிப்பு.

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் கடலரிப்பு மீனவ மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலரிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல.


திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உவரி கப்பல் மாதா ஆலயம், முன்னர் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுத்தான், புதிய ஆலயம் 1970-1974-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் புனித அந்தோனியார் ஆலயம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியுள்ளது. அப்போதெல்லாம் மக்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை உணரவில்லை.


ஆனால், அண்மைக்காலங்களில் 5 அல்லது 10 ஆண்டுகளில் ஏற்பட்டு வரும் கடலரிப்புதான் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தி மீனவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.


15 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து வேம்பார் காலனி அமைந்த இடத்தின் தொலைவு சுமார் 200 மீட்டர். ஆனால், தற்போது கடல் அலைகள் காலனி வீடுகளின் சுவர்களைத் தொடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன.



கடற்கரையில் இருந்து தொலைவில் கட்டப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம், கடலுக்குள் மூழ்கும் அபாயக் கட்டத்தில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலும் இதேபோல கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதாகப் பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.


மேலும், மாற்றுவழி காணும் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழகத்தில் பல கடலோரக் கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. இதைப் பற்றிச் சிந்திப்பது யார் என கடலோர மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடியப்பட்டினம், தேங்காய்ப்பட்டினம், இரயுமன்துறை உள்ளிட்ட கிராமங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியதாழை, கூட்டப்புளி உள்ளிட்ட கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள தருவைகுளம், சிப்பிகுளம், கீழவைப்பார், வேம்பார் உள்ளிட்ட கிராமங்களும் அதிக அளவில் கடலரிப்பைச் சந்தித்து வருவதாக அண்மையில் சின்பேட் என்ற தொண்டு நிறுவனம் பின்லாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் 9 கடலோர மாவட்டங்களில் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் விவசாயம், மீன் பிடித்தலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றி ஆய்வு நடத்தியபோதுதான் இந்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.


கடலரிப்பால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை உணராமலேயே "கரை தேய்கிறது, வளர்கிறது' என சாதாரணமாகக் கூறுகின்றனர் மீனவர்கள். இந்த பேராபத்து கடலோரக் கிராமங்களை மட்டுமன்றி, மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளையும் விட்டுவைக்கவில்லை.


மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் விலாங்குசல்லி, பூவரசன்பட்டி ஆகிய இரு தீவுகளும் கடல்மட்டத்தின் உயரத்துக்குச் சமமாகத்தான் தற்போது இருக்கின்றன. மிக விரைவில் இவை அடியோடு காணாமல்போகும் நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிலவியல் துறை ஆராய்ச்சியாளர்கள். மற்ற தீவுகளின் வடிவமும், அளவும் சில ஆண்டுகளாக உருமாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


கடலரிப்பும், கரை வளருவதும் வௌ;வேறு பகுதிகளில் வௌ;வேறு காலங்களில் நிகழ்ந்து வந்துள்ளன. இதை ஆபத்து நிலைக்கு வளரவிடாமல் சூழியல் சமநிலை அமைப்புகளான மணல் குன்றுகள், உயிர் அரண் காப்புக் காடுகள் மற்றும் கரையோரத்தில் அமைந்த தாவரங்கள் பாதுகாத்துள்ளன.


இதற்கு மாறாக, கடலில் கற்களைக் கொட்டுவதும், கட்டடங்களைக் கட்டுவதும், கடலோரத்தில் மணல் அள்ளுவதும், பவளப் பாறைகளை வெட்டி எடுப்பதும் கடலரிப்புக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.


பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் பனிக்கட்டி உருகிக் கடல் மட்டம் உயருகிறது என்றால், அதைத் தாக்குப்பிடிக்கும் இயற்கை அரண்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல இயற்கையைச் சுரண்டும் மனிதனின் செயல்பாடுகளே இயற்கைச் சீற்றத்துக்கு வழி அமைத்திடுகிறது.


புதுச்சேரி பகுதியில் கரையில் போடப்பட்ட கற்களால் விழுப்புரம் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அரசின் முடிவு கற்கள் மற்றும் கான்கிரீட் தடுப்பு உள்ளிட்ட இயற்கைக்கு மாறான தாற்காலிகத் தீர்வை நோக்கித்தான் உள்ளது.
அரசின் கட்டுப்பாடுகள் மீனவர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதம் கொடுப்பதாக அமைய வேண்டும்.


கடலோர மக்களை வெளியேற்றாமல் நிரந்தரத் தீர்வுக்கான வழிமுறைகளை அரசு செயல்படுத்த வேண்டும் என மீனவ மக்கள் விரும்புகின்றனர்.


அரசு, இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டி வரும் வேகத்தை அழிந்து வரும் கடலோரக் கிராமங்களைப் பாதுகாப்பதில் காட்டினால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம். தினமும் விடியலை முதலில் பார்க்கும் கடலோர மக்களுக்கு வாழ்விலும் விடிவு ஏற்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.


-ரெ. ஜாய்சன்


நன்றி: தினமணி, 20-10-09

 

http://poovulagu.blogspot.com/2009/10/blog-post_20.html