இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.

 

 

தனது இடையறாத பணிகளுக்கு இடையேயும் நேரம் ஒதுக்கி இந்த நேர்காணலைத் தந்தமைக்காக தோழர் பசந்தாவிற்கும், இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கத்திற்கும் ஆசிரியர் குழு மற்றும் பு.ஜ.வாசகர்களின் சார்பாக நமது நன்றியையும், புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

— ஆசிரியர் குழு.

 

புதிய ஜனநாயகம்: உங்கள் கட்சியின் தலைமையிலான அரசாங்கம், அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குடிமக்கள் உயரதிகாரத்தைக் கீழறுக்கும் சதிகளைக் காரணம் காட்டி பதவி விலகியுள்ளது. இப்பதவி விலகல் தவிர, வேறு மாற்று வாய்ப்புகள் பற்றி உங்கள் கட்சியில் விவாதிக்கப்பட்டதா? பதவி விலகல் மட்டுமே ஒரே சரியான தீர்வு என்பதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

 

தோழர் பசந்தா: குடிமக்கள் உயரதிகாரம் என்பது நேபாளத்தில் எல்லாவற்றுக்கும் மேலான மிக முக்கியமான விசயமாகும். நேபாள இராணுவம், முன்பு நாட்டின் முதன்மை எதிரியான மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களின் பேöரழுச்சியில் மன்னராட்சி வீழ்த்தப்பட்ட பின்னரும், இன்னமும் நேபாள இராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை.

 

1950களில் நேபாள மக்கள் மன்னராட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடியதன் விளைவாக, நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு, நேபாள காங்கிரசு கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஆனால், பின்னர் இராணுவத்தின் துணையுடன் மன்னர் இந்த நாடாளுமன்றத்தையும், நேபாள காங்கிரசு அரசாங்கத்தையும் கவிழ்த்தார். ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த மக்கள் எழுச்சிக் காலத்தில் நீடித்த நாடாளுமன்றத்தையும் இதேபோல இராணுவத்தின் துணையுடன் மன்னர் கவிழ்த்தார். இராணுவத்தின் துணையுடன்தான் ஒவ்வொரு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைப்பதும் கவிழ்ப்பதும் நடந்துள்ளது. எனவேதான், நேபாள மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட, குடிமக்களின் உயரதிகாரத்தை நிலைநாட்டுவதே முதன்மையான, முக்கியமான கடமையாக உள்ளது. நேபாள இராணுவம் குடியாட்சிக்குக் கீழ்படிந்து கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.

 

எனவே தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக உள்ள நாங்கள், குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ளோம். இதனால்தான், மன்னராட்சியின் கீழிருந்த நேபாள இராணுவத் தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும், அவருக்குப் பதிலாக வேறொருவரைத் தலைமைத் தளபதியாக நியமிக்க வேண்டும் என்றும் எங்கள் கட்சியில் முடிவு செய்தோம்.

 

ஆனால், இதற்கு இந்திய ஆளும் வர்க்கங்களும் அமெரிக்க வல்லரசும், உலகெங்குமுள்ள பிற்போக்கு எதிர்ப்புரட்சிவாதிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து நிர்ப்பந்தங்கள் கொடுத்தார்கள். அவர்கள் குடியாட்சியின் உயரதிகாரத்தை எதிர்த்தார்கள். இராணுவத்தின் உயரதிகாரத்தை மறைமுகமாக ஆதரித்தார்கள். நேபாள இராணுவத்தில் தமது சித்தாந்தத்தைத் திணிக்க மாவோயிஸ்டுகள் முயற்சிப்பதாக அவதூறு பிரச்சாரம் செய்தார்கள். ஒன்று, அவர்களது கட்டளைகளுக்கு நாங்கள் அடி பணிய வேண்டும்; அல்லது, நாங்கள் பதவி விலக வேண்டும் என்ற நிர்பந்தமான நிலை ஏற்பட்டது. நாங்கள் மக்களுக்காகப் போராடுபவர்கள்; நேபாளத்தில் குடியாட்சியின் உயரதிகாரத்துக்காகப் போராடுபவர்கள்; நேபாள சமுதாயத்தில் ஜனநாயகத்தை நிறுவப் போராடுபவர்கள். எனவேதான், நாங்கள் அன்னிய சக்திகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணியவில்லை. எங்கள் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி, அரசாங்கத்துக்கு வெளியே மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமே குடியாட்சியின் உயரதிகாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் நிலைநாட்ட முடியும் என்று எமது கட்சி இதனாலேயே இச்சரியான முடிவை எடுத்தது.

 

பு.ஜ: உங்கள் கட்சி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலிலும் போட்டியிட்டது. இந்தியாவின் இடது, வலது போலி கம்யூனிஸ்டுகளோ, நீங்கள் ஆயுதப் போராட்டம் இனி பலன் தராது என்று தீர்மானித்து விட்டதாகவும், அவர்களைப் போலவே "ஜனநாயக நீரோட்டத்தில்' சங்கமித்து விட்டதாகவும் உங்களைப் பாராட்டுகிறார்கள். அதே சமயம் இந்திய மாவோயிஸ்டு கட்சியினரோ, நீங்கள் புரட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாக உங்களை விமர்சிக்கிறார்கள். இவ்விரு கண்ணோட்டங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

 

தோழர் பசந்தா: நேபாளத்தில் நாங்கள் மேற்கொண்டுவரும் புரட்சிகர வழிமுறை பற்றி இந்திய இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாவோயிஸ்டு கட்சித் தோழர்களும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இப்புரட்சிகர வழிமுறையை நாங்கள் வழமையான பாரம்பரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. இன்றைய சூழ்நிலையில், புரட்சியை முன்னெடுத்துச் செல்லவும் புரட்சியைச் சாதிக்கவும் பாரம்பரிய முறையில் போராடுவதென்பது பொருந்தக் கூடியதாக இல்லை என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில், உலகின் புறநிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களினால் ஏற்படும் புதிய நிலைமைகளையும் புதிய முரண்பாடுகளையும் ஒவ்வொரு நாடும் மக்களும் எதிர்கொள்கின்றனர். இம்மாற்றங்களுக்கு ஏற்ப பொருத்தமான செயல் தந்திரங்களை வகுத்து, புரட்சியைச் சாதிக்க நாங்கள் விழைகிறோம். இதைப் பார்த்து, இந்தப் பிராந்தியத்துக்கேற்ற பாணியில் அதாவது, நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் நாங்கள் பயணிப்பதாக ஒருதலைப்பட்சமாக இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.

 

அவர்கள் அப்படிக் கூறிக் கொண்டாலும், உண்மை என்னவென்றால், நாங்கள் புரட்சியைக் கைகழுவி விடவில்லை. ஆயுதப் போராட்டம் மட்டுமே புரட்சியின் ஒரே அங்கம் என்றும் நாங்கள் கருதவுமில்லை. புரட்சியின் வளர்ச்சிப் போக்கில், ஆயுதப் போராட்டமும் இதர அரசியல் போராட்டங்களும் பல்வேறு போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இவையனைத்தும் சேர்ந்துதான் புரட்சிகர வழிமுறையை உருவாக்குகின்றன.

 

தற்போதைய நேபாளப் புரட்சியின் வளர்ச்சிப் போக்கானது, அவர்களது கூற்றுக்கு உதவுபவையாக உள்ளன. எனவேதான் அவர்கள், நேபாள மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டப் பாதையில் களைப்படைந்து விட்டார்கள் என்றும், ஆயுதப் போராட்டம் இனி பொருத்தப்பாடு உடையதல்ல என்று தீர்மானித்து விட்டார்கள் என்றும், பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் நீரோட்டத்துக்கு வந்து விட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது குறுகிய நலன்களுக்கு மட்டுமே பயன்படும்.

 

மறுபுறம், இந்திய மாவோயிஸ்டு கட்சித் தோழர்களும் எங்களை விமர்சிக்கிறார்கள். புரட்சியின் இடைக்கட்டத்தில், வேறுபட்ட போராட்ட வடிவங்களை மேற்கொள்வதன் மூலமே புரட்சியைத் தலைமையேற்று முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். எங்களது மக்கள் யுத்தம் குறிப்பிட்ட கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது எங்களது புரட்சிப்போரை அமைதியான முறையில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதை நாங்கள் பார்க்கிறோம். எனவேதான், புரட்சியின் தேவையை ஈடுசெய்ய, இந்தச் சூழலை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம்.

 

இந்திய மாவோயிஸ்டு கட்சித் தோழர்கள், நாங்கள் தீர்மானித்துள்ள செயல்தந்திரத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். இதனால்தான் அவர்கள் எங்களது புரட்சிகர வழிமுறையை, புரட்சி பற்றிய பாரம்பரிய கண்ணோட்டத்தில் விமர்சிக்கின்றனர்.

 

பு.ஜ: தற்போதைய நாடாளுமன்ற முட்டுக்கட்டை நிலையை உடைக்கவும், புரட்சியை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லவும் உங்கள் கட்சி என்ன திட்டம் வைத்துள்ளது?

 

தோழர் பசந்தா: இப்போது நாங்கள் அமைதிவழிப்பட்ட செயல் முறையில் உள்ளோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புரட்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல, அரசியல் நிர்ணய சபையில் புரட்சிகரமான மக்கள் நலனுக்கான சட்டங்களை இயற்ற கடுமையாக முயற்சித்து வருகிறோம். இச்சட்டங்கள் மூலம்தான் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நாட்டின் சுயாதிபத்திய உரிமையைப் பாதுகாக்கவும் முடியும்.

 

நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கைக் கண்டு, மக்களுக்கான புரட்சிகர சட்டங்களை இயற்றுவதில் உறுதியாக நிற்பதைக் கண்டு அஞ்சும் உலகெங்குமுள்ள எதிர்ப்புரட்சிவாதிகள், இந்த வழிமுறையைச் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் நிர்ணய சபையைக் கலைத்து, அரசுத் தலைவர் ஆட்சியை நிறுவி, பழைய சட்டங்களையே மீண்டும் நிலை நாட்டத் துடிக்கிறார்கள். இதை எதிர்த்து நாங்கள் கடுமையாகப் போராடி, மக்களுக்கான சட்டங்களை இயற்ற முயற்சித்து வருகிறோம். உள்நாட்டுவெளிநாட்டு எதிர்ப்புரட்சிவாதிகள் இந்த அமைதிவழியிலான வளர்ச்சிப் போக்கை சீர்குலைத்தால், நேபாள மக்கள் இதற்கெதிராக மீண்டும் ஒரு பேரெழுச்சியில் இறங்குவார்கள். நாங்கள் அந்த எழுச்சியை வெற்றியை நோக்கி வழிநடத்துவோம்.

 

பு.ஜ: தற்போது நேபாளம் கூட்டுத்துவ (சமஷ்டி) குடியரசாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உங்களது ஐக்கிய மாவோயிஸ்டு கட்சியானது, தேசிய கூட்டுத்துவ ஜனநாயக மக்கள் குடியரசு என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என உறுதியாகக் கோருகிறது. இது சில சொற்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையா? அல்லது வர்க்கக் கண்ணோட்டத்தில் இதற்கு தனிச்சிறப்பான முக்கியத்துவம் உள்ளதா?

 

தோழர் பசந்தா: கூட்டுத்துவ குடியரசுக்கும் தேசிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கும் பண்பு ரீதியாக வேறுபாடு உள்ளது. கூட்டுத்துவ குடியரசு தற்போது நேபாளத்தில் வென்றெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போதுள்ள இக்கூட்டுத்துவ குடியரசில் நிலப்பிரபுத்துவம் இன்னமும் நீடிக்கிறது. எங்கள் நாடு இக்குடியரசின் கீழ் இன்னமும் அரைக் காலனியஅரை நிலப்பிரபுத்துவ சமுதாயமாகவே நீடிக்கிறது. நாங்கள் அரைக்காலனிய நேபாளத்தை சுதந்திரமான சுயாதிபத்திய உரிமைபெற்ற நாடாகவும், அரைநிலப்பிரபுத்துவ நேபாளத்தை ஜனநாயக நாடாகவும் மாற்றியமைக்க விழைகிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் கொண்ட கட்டமைப்புடன் உள்ள தேசியஜனநாயக கூட்டுத்துவ மக்கள் குடியரசை நிறுவ விழைகிறோம். தற்போதைய குடியரசுக்கும் நாங்கள் நிறுவ விழையும் குடியரசுக்கும் பண்பு ரீதியாகப் பெருத்த வேறுபாடு உள்ளது.

 

பு.ஜ: நேபாளத்தில் மன்னராட்சி முறை தூக்கியெறியப்பட்ட பின்னர், நேபாள அரசின் வர்க்கத் தன்மை மாறியுள்ளதா? குடியாட்சி நிறுவப்பட்ட போதிலும், நேபாள சமுதாயத்தின் அடிப்படைகள் அதாவது, உற்பத்தி உறவுகள் மாறவில்லையே, அது ஏன்? ஏனிந்த முரண் நிலை?

 

தோழர் பசந்தா: நிலப்பிரபுத்துவத்தின் முதன்மைப் பிரதிநிதியாகத் திகழ்ந்த மன்னர், மக்களின் பேரெழுச்சியில் தூக்கியெறிப்பட்டுள்ளார். இதனால், நிலப்பிரபுத்துவம் இன்று நேபாளத்தில் பலவீனப்பட்டுக் கிடக்கிறது. அரசு அதிகாரத்தை முன்பு ஏந்திச் சுழற்றிய நிலப்பிரபுத்துவத்துக்குப் பதிலாக, அரசு எந்திரத்தில் இப்போது தரகு முதலாளித்துவம் முன்னணிக்கு வந்துள்ளது. மக்களின் பேரெழுச்சியால், இந்த மாற்றம் மட்டுமே நடந்தேறியுள்ளது. சமூகபொருளாதார உறவுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எந்த வர்க்கமும் தூக்கியெறியப்படாததால், எந்த சமுதாய மாற்றமும் நிகழவில்லை. இதற்கு முன்பு மன்னர், தரகு முதலாளித்துவ வர்க்கத்தை தலைமையேற்று வழிநடத்தினார். இப்போது தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்துக்குத் தலைமை தாங்கி வழிநடத்துகிறது. இதனால் வர்க்க உறவுகளில் எந்த மாற்றமும் நேரவில்லை. வர்க்கப் போராட்டமும் மாறிவிடவில்லை.

 

பு.ஜ: மன்னராட்சியின் கீழிருந்த நேபாள இராணுவப் படையும், மாவோயிஸ்டுகளின் செம்படையும் தாமதமின்றி இணைக்கப்பட வேண்டும் என்று உங்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அமைதி ஒப்பந்தத்திலும் இந்தக் கோரிக்கையை உங்கள் கட்சி சேர்த்துள்ளது. எந்த வகையில் இரு வேறு படைகளையும் ஒன்றிணைக்கப்பட முடியும்? இந்த ஒன்றிணைவின் மூலம் உங்கள் கட்சியும் நேபாள புரட்சிகர மக்களும் பெறப்போவது என்ன?

 

தோழர் பசந்தா: தற்போதைய அமைதி வழியிலான வளர்ச்சிப் போக்கில், நாங்கள் ஒட்டு மொத்த சமுதாயக் கட்டமைப்பையும், ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் மாற்றியமைக்கக் கடுமையாகப் போராடி வருகிறோம். தற்போது நிலவும் கட்டமைப்பின் மூலம் நேபாளத்தின் பிரச்சினைகளையோ, மக்களின் பிரச்சினைகளையோ ஒருக்காலும் தீர்க்க முடியாது. எனவேதான் நேபாள சமுதாயத்தையும், அரசு எந்திரம், அதிகார வர்க்கம், நீதித்துறை, போலீசு இராணுவம் உள்ளிட்ட அனைத்தையும் புரட்சிகரமான முறையில் மறுவார்ப்பு செய்து மாற்றியமைக்க விழைகிறோம்.

 

இதனடிப்படையிலேயே இடைக்கால சட்டத்தில், இவ்விரு இராணுவப் படைகளையும் ஒருங்கிணைத்து புதிய நேபாள தேசிய இராணுவத்தைக் கட்டியமைப்பதென முடிவாகியது. இந்த புதிய தேசிய இராணுவம், குடியாட்சிக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும். இப்புதிய தேசிய இராணுவம் என்பது, முந்தைய நேபாள இராணுவப் படையாகவோ அல்லது செம்படையாகவோ இருக்காது. ஒட்டுமொத்த கட்டுமான மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் அமையும் புதிய தேசிய இராணுவமாக, இது இரு வேறுபட்ட இராணுவப்படைகளிலிருந்து உருவாக்கப்படும்.

 

பு.ஜ: நேபாளத்தின் பசுபதிநாதர் கோயில் பூசாரி நியமன விவகாரத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க விரிவாக்கத்தின் ஓர் அடையாளமாகவும் நேபாள மக்கள் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கருதுகிறார்களா?

 

தோழர் பசந்தா: எல்லாவற்றுக்கும் மேலாக, பசுபதிநாதர் கோயில் என்பது நேபாள இந்துத்துவ மேலாதிக்கத்தின் அடையாளச் சின்னம். இந்துத்துவ மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் சாதியினர் பசுபதிநாதர் கோயில் பூசாரி விவகார அரசியலாலும் ஒடுக்கப்படுகிறார்கள். மதரீதியாக அரசியல் ஆதிக்கம் செய்யும் ஆளும் வர்க்கங்களை இந்த விவகாரத்தினூடாக நேபாள மக்களும் ஒடுக்கப்பட்ட சாதியினரும் காண்கிறார்கள். எனவேதான் அவர்கள், பசுபதி நாதர் கோயில் விவகாரத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதிப் போராடுகிறார்கள்.

 

அதே நேரத்தில், நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் ஒரு பூசாரி இருக்கிறார் என்றால், அவர் ஒரு நேபாளியாகத்தான் இருக்க வேண்டும். எதற்காக ஒரு வெளிநாட்டுக்காரர் அங்கே பூசாரியாக இருக்க வேண்டும்? நேபாள மக்கள் நேபாளத்திலுள்ள கோயிலில் நேபாள பூசாரியை நியமிக்கவே விரும்புகிறார்கள். இது அவர்களின் அடிப்படை உரிமை. இது எங்கள் உள்நாட்டு விவகாரம், எமது மக்கள் தீர்மானிக்க வேண்டிய விவகாரம், இதில் அன்னியர்கள் தலையிடக் கூடாது என்றே நேபாள ஒடுக்கப்பட்ட சாதியினரும், இந்து மதத்தின் மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் நேபாள மக்களும் கருதுகின்றனர். நேபாள பசுபதி நாதர் கோயில் பூசாரியாக யாரை நியமிப்பது என்பதை நேபாள மக்கள்தான் தீர்மானிக்க முடியும். எனவேதான், இந்த விவகாரத்தில் இந்திய ஆளும் வர்க்கங்கள் தலையீடு செய்வதை எமது மக்கள் மிக முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் இத்தகைய தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் எதிர்க்கிறார்கள்.

 

பு.ஜ: நேபாள மாவோயிஸ்டுகள் இந்தியாவை எதிர்ப்பவர்கள்; சீனாவை ஆதரிப்பவர்கள் என்று இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. இந்தியாவின் விரிவாக்க மேலாதிக்கத்தை விட, "கம்யூனிச' சீனா ஒப்பீட்டளவில் குறைவான கேடு விளைவிக்கக் கூடியது என்று உங்கள் கட்சி கருதுகிறதா?

 

தோழர் பசந்தா: நாங்கள் சுதந்திரமான, சுயாதிபத்திய நாடாக நேபாளம் நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், இந்திய ஆளும் வர்க்கங்களோ, நேபாள மக்களை இந்தியாவின் எதிரியாகவும் சீனாவின் நண்பர்களாகவும் தவறாகச் சித்தரித்து குற்றம் சாட்டுகின்றன. இந்த ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்துக்கு அடிபணியாமல், நேபாள மக்கள் தமது சொந்தக் காலில் எழுந்து நிற்க விரும்புவதாலேயே, இப்படி அவதூறு செய்து அவை குற்றம் சாட்டுகின்றன.

 

நேபாள நாடும் மக்களும் இந்தியாவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியாவின் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான நாடாக மாற்றியமைக்க நேபாள மக்கள் விரும்பினால், சீனாவின் ஆதரவாளர்கள் என்றும், பாகிஸ்தானின் பங்காளிகள் என்றும், இன்னும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை வாரியிறைக்கின்றனர்; பழிசுமத்துகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் பிடியில் நேபாள நாடும் மக்களும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி அவதூறு பிரச்சாரம் செய்கின்றன.

 

நாங்கள் சுதந்திரமான, சுயாதிபத்திய உரிமை கொண்ட நாடாக எமது சொந்தக் காலில் நிற்கவே விரும்புகிறோம். எந்தவொரு அன்னிய நாட்டின் கைப்பாவையாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. இந்தியா, சீனா, பாகிஸ்தான், பூடான் முதலான அண்டை நாடுகளுடனும், அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுடனும் நாங்கள் சமத்துவமான உறவைப் பேணவே விழைகிறோம். எனவே, இந்த ஆளும் வர்க்கங்களின் தீய நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம், குழப்பமடைய வேண்டாம் என்று இந்திய மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

 

பு.ஜ: பிராந்திய மேலாதிக்க வல்லரசான இந்தியாவும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவும் நேபாளத்தின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அதீத அக்கறை காட்டி தலையீடு செய்வது ஏன்? நேபாளத்தில் அவற்றின் போர்த்தந்திர நோக்கங்கள் என்ன?

 

தோழர் பசந்தா: எல்லாவற்றுக்கும் முதன்மையாக, கம்யூனிச சித்தாந்தத்தின் வெற்றியைக் கண்டு அவை அஞ்சுகின்றன. தற்போதைய நிலையில், எங்கள் கட்சி நேபாளப் புரட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்துகிறது. நேபாளத்தில் எங்களது ஐக்கியப் பொதுவுடமைக் கட்சியே நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்ற வலுவான கட்சியாக உள்ளது. எங்களது கட்சியும் கம்யூனிச சித்தாந்தமும் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டி, மாற்று வழியை விடுதலைக்கான பாதையைக் காட்டி முன்னுதாரணமாகத் திகழ்கிறது. எனவே இந்திய, அமெரிக்க பிற்போக்கு எதிர்ப்புரட்சிவாதிகளும் மக்கள் விரோத சக்திகளும் நேபாளத்திலிருந்து இப்புரட்சிகர சித்தாந்தம் காட்டுத் தீயாகப் பரவி வருவதைத் தடுத்து நிறுத்தத் துடிக்கின்றன. நேபாள உள் விவகாரங்களில் அதீத அக்கறை காட்டி தலையீடு செய்வதற்கு இது முதன்மையான காரணமாகும்.

 

இரண்டாவதாக, இந்தியாவும் அமெரிக்காவும் நேபாளத்தை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து, சீனாவைச் சுற்றி வளைத்து அச்சுறுத்திப் பணிய வைக்கும் தமது போர்த்தந்திர நோக்கத்துடன் காய்களை நகர்த்துகின்றன. அமெரிக்காவுக்குப் போட்டியாக இப்பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சக்தியாக சீனா இருப்பதால், அதைக் கட்டுப்படுத்தவும், சீனாவைச் சுற்றி வளைத்து மிரட்டிப் பணிய வைக்கவும், நேபாளத்தை இதற்கான தளமாகப் பயன்படுத்தவும் அவை முயற்சிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கானதாக இப்போர்தந்திரத் திட்டம் அமைந்துள்ளதால், அவை நேபாள உள் விவகாரங்களில் தலையீடு செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.