கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புத்திஜீவிகளில் பலர் இன்று இலங்கை பாசிச அரசை போற்றுவோராகவும் ஒட்டுக் குழுக்களின் பிரமுகர்களாகவும் மேடைகளில் பவனி வருகின்றனர்.

 

தமிழ் தேசிய விடுதலையின் பேரில் புலிகள் தமிழ் மக்களின் அனைத்து ஐனநாயக உரிமைகளையும் மறுத்து அச்சுறுத்தி தேசத்தை விட்டு வெளியேற்றி படுகொலைகள் செய்து மக்களின் மீது கொரத்தாண்டபம் ஆடினர்.

 

புலிகளின் அராஜகத்தினால் நாங்கள் நண்பர்கள் உறவினர் மற்றும் விடுதலைக்காய் அனைத்தையும் துறந்து போராட வந்த பல நூற்றுக்கணக்கான தோழர்களை இழந்துள்ளோம்.

 

புலிகளின் அராஜகத்தினால் பல்லாயிரக்கணக்கான மற்றைய இயக்க போராளிகள் தேசத்தை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் அகதிகளாயுள்ளனர் இவர்களில் பலர் தேசிய விடுதலைக்கான மாற்று அரசியலை முன் வைக்க முயற்சிக்கின்றனர். சிலர் எதிர் நிலை எடுத்து எந்த அரசு இயந்திர கட்டுமானம் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் மறுத்து தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்து பல்லாயிக்கணக்கானோரை கொன்றதோ அதற்கு துணை நின்று தமிழ் தேசிய இனத்திற்கு துரோகமிழைத்துள்ளனர்.

 

இன்றைய புதிய உலக ஒழுங்கிற்கு ஒரு பலமான அத்திவாரத்தினை அமைக்கும் முன் முயற்சியில் இந்தியா சீனா ரஸ்யா மற்றும் ஜப்பான் நாடுகள் இலங்கை பௌத்த பேரினவாத அரசுடன் கூட்டாக வன்னியில் பல்லாயிரக்கணக்கானோரை கொன்றும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோரை முட்கம்பி வேலிக்குள் அடைத்தும் வன்னியின் பாரிய நிலப்பரப்பை தமது மூலதன முதலீட்டுக்காக அபகரித்தும் வெற்றி கொண்டுள்ளனர். ஆனால் மறுபுறத்தே பல இலட்சக்கணக்கில் எதிரிகளை சம்பாதித்து தமது சவக்குழிகளை நோக்கி மிக வேகமாக முன்னேறுகின்றனர்.

 

இலங்கைப் பௌத்த பேரினவாத அரசு இன்று புதிய பரிணாமம் எடுத்து தேசத்தின் நிலங்களையும் மூலவளங்களையும் புதிய வல்லரசுகளுக்கு தாரைவார்த்து அவற்றின் நலன்களை பேண பாசிசமாக மாறிப் போயுள்ளது.

 

இன்று தமிழர் பிரதேசம் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை. தெற்கில் பத்திரிக்கை மற்றும் ஜனநாயகத்தின் குரல்கள்,  கொலை மற்றும் மிரட்டல் என பாசிசக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படுகின்றன.

 

இன்றைய புதிய அரசியல் நிலையில் இலங்கையில் புதிய போராட்ட களம் திறக்கப்பட்டுள்ளது அது சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட,  ஏகாதிபத்தியங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் எதிரான, இலங்கை மக்களின் புரட்சிகர யுத்தமாகும்.

 

அரச ஆதரவு புலம்பெயர் புத்திஜீவிகள் ஆகிய நீங்கள் ஆதரிக்கும் இலங்கை பாசிச அரசோ அன்றி அரச ஆதரவுக் குழுக்களோ மக்களின் நலன் பேணுபவர்கள் அல்லர் இவர்கள் பெரும்பான்மை மக்களின் விரோதிகள்.

 

கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்க தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசி தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புலம்பெயர் புத்திஜீவிகளே காலம் இன்னமும் கடந்து போய் விடவில்லை நீங்கள் உங்களைச் சுய விமர்சனம் செய்து கொண்டு புலத்திலும் இலங்கையிலும் இன்று விடுதலைக்கான மாற்று அரசியலை முன் வைக்க முனைபவர்களுடன் கை கோர்க்கப்போகிறீர்களா அன்றி பரந்துபட்ட மக்களின் எதிரிகளுடன் தொடர்ந்தும் ஒட்டி உறவாடப்போகின்றீர்களா?

 

ஜெகதீசன்
10.10.2009