பிர்லா மாளிகையில் தங்கிக் கொண்டு காந்தி எளிமையாகக் காட்சியளித்ததும்; ‘மகாத்மா’வை எளிமையானவராகக் காட்டுவதற்கு காங்கிரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து காங்கிரசு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சரோஜினி நாயுடு அங்கலாய்த்துக் கொண்டதும் நாம் மறந்து போன பழைய வரலாறு. 

“காங்கிரசு கட்சி எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தில் 20 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வார்கள்” எனக் கட்டளையிட்டிருப்பதன் மூலம், காங்கிரசுக்கே உரித்தான அந்தப் போலித்தனத்தை மீண்டும் நமக்கு நினைவூட்டியிருக்கிறார், சோனியா காந்தி.

இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து, அதுவரை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து கொண்டு “மக்கள் சேவை” ஆற்றிவந்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், அத்துறையின் துணை அமைச்சர் சசிதரூரும், தங்களின் ஜாகையை அரசு பங்களாக்களுக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.  அமைச்சர் வந்து தங்கப் போவது தெரிந்து அரசு பங்களாக்கள் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல பளபளவென அரசு செலவில் மாற்றப்பட்டிருக்கலாம்.  கத்தி போய் வாள் வந்தது டும் டும் என்ற கணக்கில் எப்பேர்பட்ட எளிமை! எப்பேர்பட்ட சிக்கனம்!

  • இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம்  ரூ.16,000.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகுதிப்படி ரூ.20,000.
  • நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொழுது  வழங்கப்படும் தினப்படி ரூ.1,000.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் செலவுகளுக்காக  மாதந்தோறும் வழங்கப்படும் அஞ்சல்படி ரூ.5,000.
  • அமைச்சர்களின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு-வெளி நாட்டுப் பயணங்களுக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.160.76 கோடி.
  • அமைச்சர்களின் பங்களாக்களைப் பளபளவென மாற்றியமைப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் செலவிடப்பட்ட  தொகை ரூ.93.5 கோடி.
  • சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட  முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்காக  2006-07 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகை ரூ.154.32  கோடி.
  • தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் படிகள் ரூ.50,000.

இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் அன்றாடம் பெறும் தினக்கூலியே வெறும் இருபது ரூபாய்தான்.  அவர்கள் அரைப்பட்டினியாய் முழுப்பட்டினியாய் வாழ்க்கையை ஓட்டும்பொழுது, நமது ‘மக்கள் பிரதிநிதிகள்’ பொதுப் பணத்தில் மகாராஜாக்களைப் போல பவனி வருவதை மேலேயுள்ள பட்டியலைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.

இந்திய மக்கள் இப்படி வறுமையில் உழல்வது இப்பொழுதுதான் தெரிய வந்தது போல மன்மோகன் சிங்கும், சோனியாவும் சிக்கனமாக நடந்து கொள்ளும்படி கட்டளை போடுகிறார்கள்.  அக்கட்டளையை அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சரே (சசிதரூர்) நக்கல் செய்கிறார்.  நாய் வாலை நிமிர்த்தினாலும், ஆளும் கும்பலும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் பொதுப் பணத்தில் மஞ்சள் குளிப்பதை மாற்றிவிட முடியுமா?.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009