ஓய்வின்றிக் கட்டாய வேலை; சம்பளம் கிடையாது; சம்பளம் கேட்டால் சவுக்கடி; நோய்வாய்ப்பட்டாலும் விடுப்போ, மருத்துவமோ கிடையாது; இக்கொடுமையிலிருந்து தப்பியோட முயற்சித்தால்,

 

பிடித்து வந்து கட்டி வைத்து பெல்ட்டாலும் கேபிள் ஒயராலும் நாள் முழுக்க அடித்து வதைக்கும் கொடூரம்; ரூ. 5,000 முன்பணம் பெற்றுக் கொண்டு பிழைப்புக்காக இங்கு வேலைக்கு வந்த கூலி ஏழைகள், இங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி வெளியில் முணுமுணுக்கக்கூட முடியாது. போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையோடும், குண்டர்களின் பாதுகாப்போடும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரத்தை கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி வட்டத்திலுள்ள தலைப்பட்டி கிராமத்தில் நடத்தி வந்தான், மணி என்ற கொடுங்கோல் முதலாளி. டாடா கிரஷர் என்ற பெயரிலுள்ள கல்குவாரிதான் இவன் நடத்தி வந்த கொத்தடிமைக் கூடாரம்.

 

துறையூரை அடுத்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இங்கு எட்டாண்டுகளுக்கும் மேலாகக் கொத்தடிமைகளாக வதைபட்டனர். இவர்கள் தவிர, சேலம், தம்மம்பட்டி, ஆத்தூர் முதலான பகுதிகளிலிருந்தும் இங்கு வேலைக்குச் சேர்ந்து பல ஆண்டுகளாகப் பலர் கொத்தடிமைகளாக உழன்றனர். கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று வதையின் கொடுமை தாளாமல், இரவோடு இரவாக ஆண்களும் பெண்களுமாக 14 பேர் இக்கொத்தடிமைக் கூடாரத்திலிருந்து இரகசியமாகத் தப்பித்து, துறையூருக்கு வந்தனர். கல்குவாரி முதலாளியின் அடியாட்கள் கிராமத்துக்குத் தேடி வந்து அடித்து இழுத்துச் சென்று விடுவார்களோ என்று அஞ்சிய அவர்கள், இப்பகுதியில் இயங்கி வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி முறையிட்டனர். உடனடியாகக் களத்தில் இறங்கிய வி.வி.மு.; தனது தோழமை அமைப்புகளான மனித உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., ஆகியவற்றின் உதவியோடு, கொத்தடிமைக் கூடாரத்திலிருந்து தப்பி வந்தவர்களை, முழக்கமிட்டபடியே ஊர்வலமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 10.07.09 அன்று அழைத்துச் சென்றது.

 

"தலைப்பட்டி கொத்தடிமைக் கூடாரத்தை இழுத்து மூடி, அங்குள்ள ஏழைகளை மீட்டு, டாடா கிரஷர் முதலாளி உள்ளிட்டு அடியாள் கும்பலைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்; மீண்டு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரண உதவியும் தரவேண்டும்; எட்டாண்டுகாலக் கொத்தடிமை உழைப்புக்கான நியாயமான கூலியையும், ஏழைகளின் நிலப் பத்திரங்களையும் முதலாளியிடமிருந்து மீட்டுத் தரவேண்டும்; அரசு நிர்ணயித்த கொத்தடிமைகளுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்'' முதலான கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தப்பிவந்த ஏழைகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் சவுண்டையா, உடனடி யாக இவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்ததோடு, அரிசி, உடைகள், சமையல் பாத்திரங்கள் முதலானவற்றையும் அளித்து, அதிகாரிகள் மூலம் பாதுகாப்பாக அவர்களது கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார்.

 

முன் கூட்டியே ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அனைத்துப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இதனைச் செய்தியாக வெளியிட்டன.

 

இதைத் தொடர்ந்து சில பத்திரிகையாளர்கள், இக்கொத்தடிமைக் கூடாரத்துக்குச் சென்று விசாரிக்கத் தொடங்கியதும், அரண்டுபோன முதலாளி அங்கு வேலை செய்து வந்த அனைவரையும் அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டான். இருப்பினும் மீட்கப்பட்ட கொத்தடிமைகளிடம் விசா ரணை செய்து கொடுங்கோலர்களைத் தண்டிக்கவும், துவண்டு கிடக்கும் ஏழைகளுக்கு மறுவாழ்வளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காமல், அதிகார வர்க்கமும் போலீசும் இன்னமும் தட்டிக் கழித்து இழுத்தடித்து வருகின்றன. இதை அம்பலப்படுத்தி கரூர், முசிறி, துறையூர் வட்டாரமெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்ட வி.வி.மு., அடுத்த கட்டப் போராட்டத்துக்கு பாதிக்கப்பட்டோரையும் உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி வருகிறது.

 

— பு.ஜ.செய்தியாளர்.