யமுனா ராஜேந்திரன் என்ன கூறுகின்றார். புலி தனக்குள் சாதி பார்க்கவில்லை என்றால், அது சாதிய சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலி தனக்குள் பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது பிரதேசவாதத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.  புலிகள் தனக்குள் ஆணாதிக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.

 

புலிகள் தமக்குள் முதலாளித்துவமல்லாத உறவை பேணினார்கள் என்றால், அவர்கள் முதலாளித்துவ சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். இப்படி யமுனா வலதுசாரிய பாசிசப் புலியை "மார்;க்சியம்" மூலம் ஆய்வு செய்கின்றார். இப்படி யமுனா கூட்டிக்கழித்து, புலிகள் முற்போக்கு இயக்கமாக தற்போதைக்கு காட்டுகின்றார். விரைவில் புலியை மார்க்சிய இயக்கமாக கூறினாலும், ஆச்சரியம் கிடையாது.

 

புலி தன் "தேசியத்தின்" பெயரில் பாதுகாத்த சாதியத்தை, யமுனா ராஜேந்திரன் தன் பிழைப்புவாத எழுத்துக்காக அதை மறுக்கின்றார். இதற்கு அவர் மக்களின் விடுதலைக்கு எந்த அரசியல் வழியையும் வைக்காது புகழுக்கு எழுதிப் பிழைக்கும் அ.மார்க்ஸ் - சோபாசக்தி போன்றோர் முன்வைத்த தலித்தியத்தை, கையில் எடுக்கின்றார். அத்துடன் இவர்களை மட்டுமல்ல, தலித்தியம் பேசியும் ஈழத்தவர்களை முன்னிறுத்தியும் முரண்படும் பிரிவுக்குள், தன்னையும் தன் நிலையையும் உள் நுழைக்கின்றார். அவர்கள் பேசிய குறுகிய மக்கள் விரோத அரசியல் பின்னணி இசையில், வரலாற்றை புலிக்காக புனைகின்றார். இதன் மூலம் புலியின் சாதியம் பற்றிய பார்வையை, முற்போக்கானதாக காட்ட முனைகின்றார்.

 

ஈழத்து சாதியத்தை தேசியப் போராட்டம் எப்படி களையப் போராடி இருக்க வேண்டும் என்ற, அரசியல் ரீதியான சுயவிமர்சன மற்றும் விமர்சன முறையை, அவர் தனக்குத்தானே முதலில் மறுத்துவிடுகின்றார். இப்படி எதார்த்தம் சார்ந்த புலித்தேசிய சாதிய சமூக வாழ்வியல் மீதான, நடைமுறை சார்ந்த விமர்சனத்தை மறுத்து விடுகின்றார். மற்றவர்கள் மேல் பேய் பிடித்துள்ளதாக காட்டி, பேய் ஓட்ட முனைகின்றார். இதைத்தான், பிழைப்புக்கு எழுதும் இவர்கள் சாதிய ஆய்வென்கின்றனர். ஏன், இதை மறுத்தால் உடனே "வரட்டுத்தனமற்ற மார்க்சியம்" என்று கூட முழங்குகின்றனர். இதற்கு அங்குமிங்கும் வரலாற்றை கடித்துக் குதறி, புலிகளை முற்போக்கான சாதிய நடைமுறையை முன்னெடுத்ததாக படம் காட்ட முனைகின்றார்.

 

பொதுவில் ஈழத்து தலித்தியத்தை "புலியெதிர்ப்பு" என்று முத்திரை குத்தி புலம்பத் தொடங்கும் ஜமுனா, தான் யார் எது என்பதை இங்கு முன்வைக்கவில்லை. அதுவோ புலி அரசியல் தான். முன்பு புலி பத்திரிகையில் பணத்துக்காக எழுதியவர் தான் இவர். பணம் கொடுத்தால் எதற்கும், எப்படியும் எழுதுபவர்தான், இந்த ஆய்வு ஜம்பவான். புலிகள் இன்று தம்மை திரித்து மீள் கட்டமைப்பு செய்ய முனையும் நிலையில், தம்மைப் பற்றிய ஒரு போலியான அரசியல் விம்பத்தை மீள உருவாக்க முனைகின்றனர். இதற்காக மீண்டும் பணத்தை இறைக்கத் தொடங்கியுள்ளனர். பணத்துக்கு எப்படியும் எழுதத் தயாரான யமுனா தான், இன்று புலியின் சாதியத்தை முற்போக்கான ஒன்று என்று எழுதுகின்றார். இதை மறுப்பது "புலியெதிர்ப்பு" என்று வேறு எழுதுகின்றார். இந்த போக்கிலித்தனத்தை அம்பலப்படுத்தினால், அதை வரட்டு மார்க்சியம் என்று முத்திரை குத்தி பிழைப்பது இவரின் தொழில்.

 

இவர் தன் புலியாதரவு "மார்க்சிய" ஆய்வை எப்படி எதனூடாக வாந்தியெடுக்கின்றார் என்பதைப் பாருங்கள். "புலிகள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்கிறீர்கள். இந்துத்துவவாதிகள் என்கிறீர்கள். முதலாளித்துவவாதிகள் என்கிறீர்கள். சாதி வெறியர்கள் என்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது என்பதற்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது இவ்வாறான முத்திரைகள் குத்துவது கொடுமையிலும் கொடுமை." சரி இதுவல்ல என்றால், புலி எது? ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமா!? மத எதிர்ப்பு இயக்கமா!? சுரண்டலுக்கு எதிரான இயக்கமா!? சாதி ஒழிப்பு இயக்கமா!? "ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்க"ம் என்றால், இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள், உங்கள் பார்வையில் ஒடுக்கப்;பட வேண்டியவர்களா!? 

 

இப்படி புலிகளின் "கொடுமையிலும் கொடுமை"யை பாதுகாத்து, மற்றவர்களை எதிர்க்கும் யமுனா, புலியை முற்போக்கானதாக காட்ட முனைகின்றார். இது தான், எம்முன்  கொடுமையிலும் கொடுமை. கண் முன்னால் ஒரு இனத்தையே புலிகள் அழித்துள்ளனர். ஆனால் இது கொடுமையிலும் கொடுமையல்ல என்கின்றார். இதற்கு பலவிதமாக புரட்டல்கள்.

 

இவர் தன் "மார்க்சியம்" மூலம் கண்டு பிடித்து கூறுகின்றார் "விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வையே அவர்களது எல்லாத் தவறுகளுக்கும் காரணமாக அமைந்தது." என்கின்றார். ஒரு புலிப் பன்னாடை தன் "மார்க்சியம்" மூலம் ஆய்வு செய்து, புலியின் வர்க்க அரசியலை இப்படி புரட்டி மறுக்கின்றார். கார்ல் மார்க்ஸ் என்ன கூறுகின்றார்  "வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம்" என்றார். இதை "வரட்டு மார்க்சியமாக" கூவும் யமுனா, புலியின் வலது பாசிச வர்க்க அரசியலை "புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வை" யாக திரிக்கின்றார். வர்க்க அரசியல் வரலாற்றையே திரித்து புரட்டுகின்றார். புலியின் சுரண்டும் வர்க்க அரசியல்தான், பாசிசமாகி மாபியாத்தனம் பெற்றது. அது "ஏகப்பிரதிநிதித்துவப் பார்வை" யல்ல. மாறாக அதன் வர்க்க அரசியல் பாசிசமாகியது.

 

பணத்துக்கு எழுதும் போது எப்படியும் எழுதலாம் என்று நினைக்கும் யமுனா, உடனே கவர் எடுத்து அதை நியாயப்படுத்துகின்றார். "கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது" என்கின்றார். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. உலக நிகழ்ச்சி போக்குத்தான், இதை இப்படி ஆக்கியது என்கின்றார். "அரசியலில் திசை மாறிவிட்டது" என்றால், அது என்ன? உங்கள் "மார்க்சிய" அரசியலில் எதிர்மறைப் போக்குகள் இல்லையா? புலிகள் எப்போதுதான், மக்கள் அரசியலை நடைமுறைப்படுத்தினர். இதை உலக நிகழ்ச்சிப் போக்கு தடுத்ததா அல்லது புலியின் வர்க்க அரசியல் மறுத்ததா? சரி "ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம்" என்கின்றீர்கள். எந்த ஒடுக்குமுறைக்கு எதிராக? எப்படி? தாமல்லாத சில பத்தாயிரம் பேரைக் கொன்று, தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவது தானா "ஒடுக்குமுறைக்கு எதிரான" போராட்டம். மக்களை ஒடுக்கி அடிமைப்படுத்திய அடிமைத்தனத்தையா, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது! 

 

பி.இரயாகரன்
12.08.2009

தொடரும்