பேரினவாத அரசு புலியைக்காட்டி, அவர்களிடமிருந்து தமிழரை விடுவித்ததாக கூறியது. புலியிடமிருந்து தமிழரை விடுவித்த போதும், தன்சொந்த இனவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்கவில்லை. இதைத்தான் இன்று மக்கள் இந்த தேர்தல் மூலம், மீளவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சிங்கள இனவாதம் தான், தமிழ் மக்களை பெரும்பான்மை மக்களுடன் இணைய இன்று தடையாக இருப்பதை தமிழ் மக்கள் மீளவும் உணர்த்தியுள்ளனர். புலிகள் தங்கள் பாசிச வழியில் இதைச் சொன்னார்கள். தமிழ் மக்களோ தமக்கு கிடைத்த இந்த வழியில், இதை கூறியுள்ளனர். இதை சுதந்திரமாக, மக்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று சொல்ல நாட்டில் ஜனநாயகமில்லை. அரச பாசிசமே நாடு முழுவதும் ஆட்சியாக நிலவுகின்றது. தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை, இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

 

1. இந்த தேர்தலால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று கருதுகின்றனர் தமிழ்மக்கள். இதனால் ஆகப்பெரும்பான்மை மக்கள், இந்த மக்கள் விரோதத் தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை.

 

2. வாக்களித்தவர்களில் பெரும்பான்மை, அரசும், அரசுடன் நிற்பவர்களாலும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை என்று கருதினர். அரசு மற்றும் அரசுடன் நின்றவர்களை நிராகரித்து, அவர்களுடன் நிற்காதவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

 

3. அரசுக்கும் அதன் கூலிப்படைக்கும் கிடைத்த வாக்கு, மக்களின் இயல்பான சொந்த தெரிவல்ல. மாறாக அரச அதிகாரம் மூலமான சிறப்பு சலுகைகளைக் கொடுத்தும், பலவிதமான மோசடிகளைச் செய்தும், அரச அதிகாரத்தைக் கொண்டும், உருட்டல் மிரட்டல்களை விடுத்தும், மற்றவர்களின் பிரச்சாரங்களை தடுத்தும், ஒரு தலைப்பட்சமான பிரச்சாரத்தை பாதுகாத்தும், அரசை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அரச பாசிசத்தை திணித்தும், பெற்ற சிறுபான்மை வாக்குகள்தான்.

 

இந்தப் பேரினவாத அரசை, தமிழ் மக்கள் மீளவும் தோற்கடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்மக்கள் என்ன நினைக்கின்றார்கள். இலங்கையில் சிங்கள பெரும்பான்மை மக்களுடன் தமிழ்மக்கள் சேர்ந்து வாழ்வதை இந்த அரசு விரும்பவில்லை என்றுதான் நினைகின்றார்கள். சிங்கள மக்களுடன் தமிழ்மக்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய அரசியல் தீர்வை, இந்த அரசு தரத் தயாராகவில்லை என்று தமிழ் மக்கள் நினைக்கின்றனர். இதைத்தான் சிங்கள அரசு, தன் பேரினவாத நடத்தைகள் மூலம் செய்கின்றது. 

 

தமிழ் மக்கள் இந்த அரசில் நம்பிக்கையை பெறக் கூடிய வகையில், நாட்டின் ஜக்கியத்துக்கு ஏற்ற ஒரு அரசியல் தீர்வை, இந்த அரசு தமிழ் மக்களுக்கு வழங்கத் தயாராகவில்லை என்ற உண்மையை இந்த தேர்தலில் மக்கள் போட்டு உடைத்துள்ளனர்.

 

இப்படி இந்த தேர்தலை யாழ்ப்பாணத்தில் 80 சதவீதமானவர்கள் பகிஸ்கரிக்க, வவுனியாவில் 50 சதவீதமானவர்கள் பகிஸ்கரித்தனர். வாக்களித்தவர்கள் என்ன செய்கின்றனர். அரச பாதுகாப்புடன், அரச கூலி ஏஜண்டுகளின் ஆதிக்கத்தையும் அதன் அடிவருடித்தனத்தை பத்து வருடங்களுக்கு மேலாக தக்கவைத்திருந்தவர்களை நிராகரித்து, அரசுடன் இல்லாத இனத்தின் பெயரில் உள்ள பிழைப்புவாதிகளுக்கு வாக்களித்து ஆதரித்துள்ளனர். அரசுக்கு ஆதரவாக கூலிக்கு நின்றவர்கள் பெற்ற வாக்கு, அரசு அதிகாரமற்ற சூழலில் இவ்வளவு தொகையாக ஒருநாளும் கிடைத்திருக்காது.

 

தமிழ் மக்கள் தாம் விரும்பிய ஒன்றை, தங்கள் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் வண்ணம், எதையும் உருவாக்க முடியாத பாசிசம் அங்கு தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்கள் சிறுபான்மை இனப் பிழைப்புவாதிகளையும், பெரும்பான்மை இனவாதிகளையும், "ஜனநாயகத்தின்" பெயரில் இன்று முகம் கொடுக்கின்றனர். அரச பாசிசம், இதில் ஒன்றை "ஜனநாயகத்தின்" பெயரில் தெரிவு செய்யக் கோருகின்றது. ஆனால் பெரும்பான்மை மக்கள் இந்த போலியான "ஜனநாயகத்" தெரிவை நிராகரித்தனர். சிறுபான்மை மக்களை ஏமாற்றி வென்றவர்களோ, இனங்களை பிளந்து வைத்து அதில் குளிர் காயமுனைகின்றனர். சிங்களப் பேரினவாத பாசிசத்தின் முன், இதைத்தான் இன்றும் தமிழ்மக்கள் மீளவும் உணருகின்றனர்.      

     

பி.இரயாகரன்
09.08.2009