புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர். 

 

இப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல இந்த பினாமி சொத்து எப்படி ஒரு காரணமாக இருந்ததுவோ அது போல், அதை தமக்குள் பங்கிட பிரபாகரனின் மரணத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கமைய மாபியா கேபி பிரபாகரனுக்கு பிரமாண்டமான அஞ்சலியை நடத்திவிட முனைகின்றார்.

 

மறுபக்கத்தில் இந்த மாவீரர் தினத்தை தங்களின் சொந்த வியாபாரத்துக்கான மையமாக கருதும் கூட்டம், அதை நோக்கி திட்டமிடுகின்றது. இம்முறை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி, தங்கள் வியாபாரத்தை களைகட்ட வைக்க முனைகின்றனர். இப்படி அஞ்சலிக் கூட்டம் வியாபாரமாக மாறி நிற்கின்றது.

 

பிரபாகரன் கொல்லப்பட்ட விதம், அதன் பின் உள்ள போர்க்குற்றங்கள் பற்றி இந்த கூட்டத்துக்கு எந்த அக்கறையும் கிடையாது. இது எப்படி, எந்த நிலையில் நிகழ்ந்தது என்பது தொடர்பான முழு விபரங்களையும் மூடிமறைத்து, தங்கள் துரோகங்களையும் குற்றங்களையும் இதனூடு மூடிமறைக்கவே முனைகின்றனர்.

 

மாறாக பிரபாகரனை வீரனாக, கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒருவனாக, தேசியத்தின் அடையாளமாக, தங்கள் போலியான அஞ்சலிகள் மூலம் கட்டமைத்து காட்ட முனைகின்றனர். ஒரு விம்பத்தை உருவாக்கி, தங்கள் பிழைப்பை நடத்த முனைகின்றனர். பினாமிச் சொத்துக்கு தமக்குள் மோதும் இந்தக் கும்பல், அந்த நிதியை தமிழருக்கான ஒரு பொது நிதியமாக்க முனைவதில்லை. பிரபாகரனை வழிபாட்டுக்குரிய ஒருவராக்கி, அதன் மூலம் சொத்துப் பிரச்சனையை தீர்க்கவே முனைகின்றனர்.   

 

பிரபாகரனோ உண்மையில் போராடி மடியாது சரணாகதி அடைந்து, ஒரு கோழையாகவே மரணித்தவன். கொள்கையை கைவிட்டு, தன் உயிரைக் காப்பாற்ற முனைந்து கேவலமாக மடிந்தவன். தேசியத்தின் அனைத்துவிதமான சமூக கூறுகளையும் நிராகரித்து, தன் சொந்த வாழ்வுக்கு ஏற்ப போராட்டத்தை பாசிசமாக்கியவன். தான் அல்லாத, தன்னுடன் நிற்காத அனைவரையும் 30 வருடத்தில் தொடர்ச்சியாக படுகொலை செய்து வந்தவன். இறுதி நேரத்தில் தன்னை பாதுகாக்க மக்களை பலிக்கடாவாக்கியதுடன், இந்தப் பலிக்கு உடன்பட மறுத்த மக்களை தன் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியிட்டவன்.

 

இப்படிப்பட்ட இவனுக்கு புலத்துப் புலி மாபியாக் கும்பல் தன் தொழிலுக்கேற்ற ஒரு புருசனாக கருதி அஞ்சலி செலுத்துவதன் மூலம், அதை வைத்துப் பிழைக்க முனைகின்றது. பிரபாகரன் மரணத்தை மறுத்து முரண்படும் கும்பல், இதற்குள் சொத்தை தக்க வைக்க முனைகின்றது. பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் செய்த தமிழ்நாட்டு அரசியல் பிழைப்புவாதிகள், பிரபாகரனின் இந்த செயலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதை மறுத்தும், அவர் இருப்பதாக கூறியும் அரசியல் பிழைப்பை தொடர்ந்து நடத்த முனைகின்றது. இவை அனைத்தும் மக்களுக்கு பிரபகாரன் செய்ததை, சொல்லாமல் இருக்க முனைகின்றது.

 

அவர் கோழையாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சரணடைந்ததையும், புலிக் கொள்கைகளைக்  கூட கைவிட்டதையும், மூடிமறைக்க முனைகின்றனர். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டதையும், இதற்கு உடன்படாதவர்களை பலியெடுத்ததையும் மறுக்க முனைகின்றனர்.

 

இதற்கு தலைமை தாங்கிய கொலைகாரன் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி, அவனால் கொல்லப்பட்ட மக்களுக்கு பட்டை நாமம் போட முனைகின்றனர். தேசியத்தின் பெயரில் உண்மையாக போராடிய மரணித்த போராளிகளுக்கு, இதன் மூலம் சேறடிக்க முனைகின்றனர்.    பிரபாகரனுக்கு அஞ்சலியா அல்லது அவன் தலைமையில் கொல்லப்பட்ட மக்களுக்கும் உண்மையான போராளிகளுக்கும் அஞ்சலியா என்பதே, மக்கள் பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள் முன் எழ வேண்டிய கேள்வியாக இன்று உள்ளது.

   

தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, சொந்த மக்களை பணயம் வைத்தவர்கள். இதன் மூலம் பல பத்தாயிரம் மக்களை பேரினவாதத்திடம் பலிகொடுத்தனர். இந்தப் பலியெடுப்புக்கு தாங்களாக உடன்படாதவர்களையும், இதில் இருந்து தப்பியோடியவர்களையும் சில நூற்றுக்கணக்கில்  புலிகள் படுகொலை செய்தார்கள். தாம் தப்பிப் பிழைக்க, இந்த பிணத்தைக் ஊர் உலகத்திற்கு காட்டி பிரச்சாரம் செய்தவர்கள். இறுதியில் தாமே தம் உயிருக்காக சரணடைந்து, கொள்கை கோட்பாட்டை எல்லாம் துறந்தவர்கள். இவர்களுக்கா அஞ்சலி.

 

இவர்களோ தண்டனைக்குரிய குற்றவாளிகள். வன்னி மக்கள் இவர்களுக்கு இந்த தண்டனையை வழங்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை அவர்கள் செய்தே இருப்பார்கள். துப்பாக்கி முனையில்தான், புலிகள் மக்களிடமிருந்து தப்பிப் பிழைத்தார்கள். இறுதியில் மற்றொரு குற்றவாளியான அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சரணடைந்ததன் மூலம், கோழையாகவே மரணித்தனர். இனவழிப்பை நடத்தும் பேரினவாத இந்த குற்றக் கும்பல், சரணடைந்தவர்களைக் கூட கொன்றது. இந்த போர்க்குற்றம் பிரபாகரன் தலைமையிலான கொலைகார பாசிசத்தையும், அதன் மக்கள் விரோத போக்கையும் என்றும் நியாயப்படுத்திவிடாது.

 

பேரினவாத கொலைகார பாசிச அரசுக்கு பதில், வன்னி மக்களே பிரபாகரனை அடித்துக் கொன்று இருந்தால், அது மிகச் சரியான செயலாக இருந்திருக்கும். அதை செய்யக் கூடிய சந்தர்ப்பம் வன்னி மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதால், பிரபாகரன் அஞ்சலிக்குரிய ஒரு மனிதனாகி விடமாட்டான். இங்கு அஞ்சலி செலுத்துபவன், மக்களை வதைத்து படுகொலை செய்த கொலைகாரன் பிரபாகரனின் வாரிசுகள் தான். மக்கள் சொத்தை பொது நிதியமாக்க மறுக்கும், பினாமிய மாபியாக் கும்பல் தான்.

 

பி.இரயாகரன்
05.08.2009