வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள  பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.

 

இதற்கு வெளியில் அகதிகள், வன்னி முகாம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு யாருக்காவது உண்மையில் அக்கறையிருந்தால், புலிக்கு பின்னால் குவிந்துள்ள மக்கள் சொத்தை பொதுச் சொத்தாக மாற்றும் படி கோருங்கள்.

 

இது தானே நியாயம். இதுதானே உண்மை. இதுதானே மக்கள் நலன். இதுதானே உண்மையான அரசியல்.

 

பொதுநிதியத்தை இங்கு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாத வண்ணம், மண்ணில் வாழும் மக்களுக்கான ஒரு பொதுநிதியமாக மாற்றக் கோருவது தான், உண்மையான மக்கள் நலனாகும். அனைத்து புலிப்பினாமிச் சொத்தையும் அப்படி மாற்றக் கோருங்கள். அப்போது தெரியும் உங்கள் இந்த பினாமிகளின் நேர்மையும், தமிழ்மக்கள் பற்றிய அவர்களின் உண்மையான அக்கறையும்.

 

இன்று இதை புலத்து புலிகளில் இருந்தவர்கள் முதல் அதன் பின் நின்றவர்கள் தங்கள் கோரிக்கையாக மாற்றுவது தான், தமிழ்மக்கள் பற்றிய குறைந்தபட்ச கருசனையாக அமையும்.

 

இதை விட்டுவிட்டு சொத்துச் சண்டையில் ஈடுபடும் இரண்டு கூட்டமும், தங்கள் சுயநலத்துடன் நடத்துகின்ற அரசியல் பித்தலாட்டங்கள் பின் மந்தைகளாக நீங்கள் சென்றால், உங்கள் "மக்கள் நலன்" என்பது பொய்யானது போலியானது. தலைவர் மரணித்தார் என்றும் இல்லை உயிருடன் இருக்கின்றார் என்றும் சொல்லி, பினாமிச் சொத்தை தக்க வைக்கவும் அல்லது அதை கைப்பற்றவும் நடத்துகின்ற இழுபறியான அரசியல் பித்தலாட்டம் என்பது, தமிழ் மக்களின் பணத்தை தமது சொந்த சொத்தாக்கும் அதே மனித விரோத நடத்தையாகும்.

 

புலத்து மக்களின் சொத்தை, ஈழத்து தமிழ் மக்களுக்கான பொது நிதியமாக்கு!

 

அந்த பொது நிதியத்தை இங்குள்ளவர்கள் பயன்படுத்த முடியாததாக்கு!

 

பொது நிதியத்தை சட்டபூர்வமான சர்வதேச நிதியமாக்கி, புலத்து தமிழ்மக்களின் பொதுக் கண்காணிப்பில் வை!

 

இன்று இதை செய்ய மறுப்பது, தமிழ் மக்களுக்கு எதிரானது. பொதுச் சொத்தை சிலர் திருடுகின்ற, திருட்டுத்தனமாகும்;. இதை பொதுவில் கோராமல் இருத்தல், இந்த திருட்டுக்கு உடந்தையாகும். இந்த திருட்டுக்கு அரசியல் சாயம் பூசி உதவுவது, கிரிமினல் தனமாகும்.

 

இன்று புலிக்கு பின்னால் குவிந்துள்ள பினாமிச் சொத்துகள், புலத்து தமிழ்மக்களுடையது. மண்ணில் வாழும் மக்களுக்காக, புலத்து மக்களால் கொடுக்கப்பட்டது, பலாத்காரமாக பலவழியில் அறவிடப்பட்டது. இந்த நிதியை பினாமிகள் தங்கள் மாபியாத்தனத்துடன் அபகரிப்பதற்கு, தமிழ் மக்கள் அனுமதிக்க முடியாது.

 

நீங்கள் மந்தைகளல்ல என்றால், சுய அறிவுள்ள மனிதர்கள் என்றால், மண்ணில் வாழும் மக்களின் மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், பினாமிச் சொத்துகளை புலத்து மக்களின் பொதுக் கண்காணிப்பில் இருக்கும் வண்ணம் பொதுச் சொத்தாக மாற்றப் போராடுங்கள்.

 

இதை நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் எல்லாம் மனிதரா என்று உங்களையும், உங்கள் துரோகத்தையும் வரலாறு கேட்கும்.

 

பி.இரயாகரன்
02.08.2009