சமகால நிகழ்வுகள் மீது, உடனுக்குடன் வழிகாட்டி எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதைச் செய்யாத, செய்ய முனையாத அனைவரும் சந்தர்ப்பவாதிகள். சமூகத்துடன் சேர்ந்து  எதிர்வினையாற்றாதவர்கள், நிலவும் சூழலுக்குள் விலாங்கு மீன் போல், வழுக்கி தப்பித்து நெளிபவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மக்களை வழிகாட்ட முடியாதவர்கள்.

 

இன்று நாம் பேசும் விடையங்கள், அது சார்ந்த சூழலுக்கு வெளியில் இருந்தே அநேகமாக பேசப்படுகின்றது. அந்தளவுக்கு சமூகத்தினுள்ளான அசைவுகள் அனைத்தும் நலமடிக்கப்படுகின்றது. இன்று இலங்கையில் தமிழினம் சந்திக்கின்ற அவலங்கள், பெருமளவுக்கு புலத்தில் தான் பேசப்படுகின்றது.

 

குறித்த மக்கள் மத்தியில் செயல் சார்ந்த ஒரு அரசியல் வேலை முறை, அறவே இன்று அற்றுப்போயுள்ளது. முன்பு புலிப் பாசிசமும், இன்று அரச பாசிசமும் மக்கள் மத்தியில் செயலுக்குரிய அனைத்து சமூகக் கூறுகளையும்,  அடக்கியொடுக்கி படுகொலை செய்தது, செய்கின்றது. இதுவே இன்றைய இலங்கை நிலைமை. சமூகம் மீது அக்கறை கொண்டு  அங்கு உள்ளவர்கள், குறைந்தபட்சம் புலத்தில் சொல்லுகின்ற விடையத்தைக் கூட அங்கு இருந்து சொல்ல முடியாத நிலைக்குள் உள்ளனர். சிங்கள அறிவுத்துறைக்கும் இதேநிலை தான்.

 

இப்படி இலங்கை பாசிசத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி நிற்க, மக்கள் திணறுகின்றனர்.  மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக செயலூக்கமுள்ள ஒரு வழியை உருவாக்கும் பணி என்பது கடினமாகி, நீண்டு நெடியதாக மாறி நிற்கின்றது. இந்த நிலையில் அந்த மக்களின் உண்மை நிலைமைகள் மேல், புலத்து செயற்பாடுகள் தான் உயிர்த்துடிப்புடன் உள்ளது. இருந்தபோதும், இதன் பெரும்பகுதி புலிப்பாசிசத்தை அல்லது அரச பாசிசத்தை ஆதரித்து, ஒன்றை மட்டும்  எதிர்த்து நிற்கின்றது.

 

மக்களின் சொந்த மொத்த அரசியல் நலன்களுக்காக, மிகச் சிறிய ஒரு பிரிவு இயங்குகின்றது. அரச மற்றும் புலிப் பாசிசத்துடன் அரசியல் ரீதியாக தம்மை முறித்துக் கொள்ள, இதில் ஒரு பகுதி தயாராகவில்லை. மக்கள் விரோதிகள் முன்வைக்கின்ற "தேசியம்" மற்றும் "ஜனநாயக"த்துடன், அரசியல் மற்றும் நடைமுறையில் தம்மை முறித்துக்கொண்டு ஒரு மக்கள் அரசியல் நகர்வுக்கு புலத்து சில பிரிவுகள் தயாராகவில்லை. மார்க்சியம் முதல் தலித்தியம் வரை பேசும் இவர்களின் அரசியல் செயல்தளம், எதிர்ப்புரட்சியை அடிப்படையாக கொண்டது.

 

அனைத்து மக்கள் விரோத பிற்போக்கு சமூகக் கூறுகளை முறித்துக் கொண்ட, தனித்துவமான  அரசியல் முன்னெடுப்பு செய்யத்தயாரற்ற போக்கு, புலத்தில் எதிர்ப்புரட்சி அம்சமாக உள்ளிருந்து உருவாகின்றது.

 

இதில் முற்போக்கு முதல் மார்க்சியம் வரை பேசுகின்ற சிலர், சமகால அரசியல் மீது தம்மையும், தம் கருத்தையும் முன்வைப்பது கிடையாது. கருத்தியல் தளத்தில் செயல்படுபவர்களின் நடைமுறை என்பது, சமகால நிகழ்ச்சிகள் மீது உடனுக்குடன் அரசியல் ரீதியான எதிர்வினைiயாற்றுவது தான்.

 

மக்கள் மத்தியில் செயல்படும் போது எதை செய்கின்றோமோ, அதை அறிவுத்துறை செய்யத் தவறுகின்ற போது, அது இயல்பாக  நடைமுறையை நிராகரிக்கின்றது. சாராம்சத்தில் சமகால அரசியல் நிகழ்ச்சிகள் மீது, தான் கொண்டுள்ள சந்தர்ப்பவாத அரசியல் நிலையை மூடிமறைக்க இது உதவுகின்றது. அரசியலில் நேர்மையற்ற தங்கள் போக்கு, வெளிப்படாத வண்ணம் தப்பித்துக் கொள்ள கடந்தகால விடையங்கள் பற்றி பேசுகின்றனர். உதாரணமாக சிவத்தம்பி போன்றவர்கள், கடந்தகால மனித வரலாறுகளை வித்தியாசமாக பேசி, மார்க்சிய மற்றும் முற்போக்குவாதியாக காட்டி உலவுவது போன்றது தான் இது.  இன்று புலத்தில், இப்படி சிலர் இயங்குகின்றனர்.  

 

தங்கள் முற்போக்கையும், மார்க்சியத்தையும் சமகால நிகழ்ச்சிகள் மீது மக்களுடன் மக்களாக  நின்று முன் வைக்க முடியாதவர்கள், கடந்தகால உலக நடப்புகளைச் சொல்லி தம்மை சமூகத்தில் தக்கவைக்க முனைகின்றனர். எதிரிகள் மக்களை பல முனையில் ஒடுக்கி வரும் நிலையில், அதற்கு எதிராக உடனுக்குடன் அதை எதிர்கொண்டு எதிர்வினையாற்ற வேண்டிய நடைமுறை அரசியல் வேலை முறையையே நிராகரிக்கின்றனர். மாறாக கடந்த காலத்தில் நடந்தவை பற்றி, அதற்கெதிரான முன்னைய விமர்சன உலகில் இருந்து எடுத்து அதை தீவிரமாக பேசுகின்றனர். இப்படி அதை மீள முன்வைக்கின்றவர்கள், இன்றைய சமூக எதார்த்தத்தின் மேல் நடைமுறையற்ற ஒரு அரசியல் சர்ந்தர்ப்பவாத போக்கை கையாளுகின்றனர். இப்படி சமகால நிகழ்ச்சி மீது நடைமுறை ரீதியாக அரசியல் எதிர்வினை ஆற்றாது, மார்க்சியம் மற்றும் முற்போக்கு பற்றி எல்லாம் வாய் கிழியப் பேசுகின்றனர்.

 

இன்று ஈழத்தில் மனித அவலமே மனித எதார்த்தமாகியுள்ள நிலையில், "மார்க்சியத்தையும்" "முற்போக்கையும்" "ஜனநாயகத்தையும்" வைத்து பிடில் வாசிக்கின்ற கூட்டம் ஒன்று உருவாகிவருகின்றது. இவர்கள் எதார்த்த அரசியல் போக்குகள் மீது எதிர்வினையற்று, நடைமுறைக்கு எதிராக சலசலக்கின்றனர். அது கடந்தகால விடையங்களை முன்னிறுத்தி, மார்க்சியம் முற்போக்கு தலித்தியம் என்று நடைமுறை விடையங்கள் மீது நடைமுறைக் கருத்தின்றி, நடைமுறைக்கு எதிராகவே இயங்குகின்றனர். இன்று நாம் மக்களை அரசியலை, நடைமுறையுடன் எதிர்கொள்ளும் போது, எதிர்கொள்ளும் எதிர்புரட்சி அரசியல் கூறுகளில் இதுவுமொன்றாக பரிணாமிக்கின்றது. 

 

பி.இரயாகரன்
30.07.2009