மகிந்த குடும்பம், தன்னைச் சுற்றி ஒரு கூலிக்குழுவை உருவாக்கி வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை தனக்கு கீழ் மென்மேலும் அடிமைப்படுத்த முனைகின்றது. இந்த வகையில் இராணுவத்திற்குள் நடக்கும் குழிபறிப்புகள், கைதுகள், பதவி இறக்கங்கள், இட மாற்றங்கள் எல்லாம், தம் குடும்ப பாசிச அதிகாரத்தை தக்க வைக்கவும், அதை பலப்படுத்தவும் செய்கின்ற தில்லுமுல்லுகள் தான்.

 

பாசிசத்தின் முரண்பட்ட கூறுகள், தம் அதிகாரத்துக்கான மோதல்களில் ஈடுபடுகின்றது. இது இன்று இலங்கையில் உச்சத்தை எட்டியுள்ளது. இராணுவத் தளபதி முதல் அரசின் எடுபிடியாக நக்கிய டக்ளஸ் வரை, இந்த குடும்ப பாசிச மயமாக்கலில் சிதைந்து உருத்தெரியாமல் சிதைக்கப்படுகின்றனர்.

 

குடும்ப பாசிசமயமாக்கலில், பாசிட்டுகளிடையே ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. பல உயர் இராணுவத் தளபதிகளின் தலை உருட்டப்படுகின்றது. மகிந்தா குடும்பத்துக்கு வேண்டப்படாதவர்கள் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர், நக்கி வாழத் தயாராக உள்ளவர்கள் அதிகாரமிக்கவராக மாற்றப்படுகின்றனர். 

 

மகிந்த குடும்பம் பாசிசத்தை தன் அதிகார உறுப்பாக கொண்டு, "ஜனநாயகத்தை" தனக்கேற்ற ஒன்றாக மாற்ற முனைகின்றனர். தனக்கேற்ற "ஜனநாயகம்" மூலம், தன் குடும்ப அதிகாரத்தை தக்கவைக்கவும், அதைக் கொண்டு தம்மை பலப்படுத்தவும் முனைகின்றது மகிந்தா கும்பல். இதற்கமைய தன் குடும்ப அதிகாரம் அல்லாத கட்சிகளையும், அதன் தனித்துவத்தையும் சிதைத்து வருகின்றது. கட்சிகளில் பிளவுகளை உருவாக்கியும், அவர்களை விலைக்கு வாங்கியும், தான் அல்லாத கட்சிகளின் அரசியல் இருப்பை இல்லாதாக்குகின்றது.

 

மறுபக்கத்தில் இதற்கு முரண்படும் கட்சிகளை, மிரட்டி தன் கட்சிக்குள் பலாத்காரமாக இணைக்கின்றது. இதை மீறி மறக்கும் போது, கீழ் இருந்து அந்த கட்சிகளின் முன்னணி உறுப்பினர்களை மிரட்டி தம்முடன் பலாத்காரமாக இணைத்து, தலைமையின் அத்திவாரத்தையே கட்சிகளுக்கு இல்லாதாக்குகின்றது. குறைந்தபட்சமாக நிலவிய முரண்பட்ட சுரண்டும் வர்க்க கட்சிகளின் ஜனநாயகத்தைக் கூட, இன்று நாட்டில் இல்லாதாக்குகின்றது மகிந்த குடும்பம். 

 

இப்படி நாட்டில் ஒரு குடும்ப சர்வாதிகாரத்தை "ஜனநாயகத்தைக்" கொண்டு நிறுவுகின்ற ஒரு பாசிசத்தையே கட்டவிழ்த்து விட்;டுள்ளது. இதற்கமைய ஊடகம் மீது வன்முறையை ஏவியும், படுகொலைகளைச் செய்தும், அவற்றை முடக்கி வருகின்றது. தமக்கு ஏற்றவாறு, ஊடகவியல் தன் சுயகட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்பது தான், மகிந்தாவின் குடும்ப பாசிசம் சொல்லும் "ஜனநாயக"த்தின் பொது விதியாகின்றது.

         

கடந்தகாலத்தில் புலியைச் சொல்லி பாசிசத்தை ஏவிய மகிந்த குடும்பம், இன்றும் அதைச் சொல்லி தன் பாசிச அதிகாரத்துக்கு இடைஞ்சலான கூறுகளை ஒடுக்கி வருகின்றது. பாசிச கூறுகளிடையே முரண்பாடுகள் கூர்மையடைய, கடந்த காலத்தில் புலியொழிப்பின் பெயரில் செய்த போர்க் குற்றங்கள், ஆதாரங்கள் மெதுவாக பல முனையில் இருந்து வெளிப்படத் தொடங்கியுள்ளது.

 

இதை தடுத்து நிறுத்த, அது சார்ந்த தடையங்களை அழித்து வருகின்றது. இதில் சம்பந்தப்பட்ட இராணுவ தளபதிகள், இந்த எல்லைக்குள் வைத்து பலவிதமாக கையாளப்படுகின்றனர்.

 

மறுபக்கத்தில் பெரும் எடுப்பில் குற்றம் நிகழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாய்களைத் திறக்காமல் இருக்க, அவர்களைச் சுற்றி முட்கம்பி போடப்பட்டுள்ளது. அதேநேரம் தாங்கள் செய்த குற்றங்களை மூடிமறைக்க, கல்வி அறிவு பெற்ற அரச அதிகாரிகளை குறிவைக்கின்றது. அவர்களை குற்றவாளியாக்கி தனிச் சிறையில் தள்ள முனைகின்றது. அதாவது முட்கம்பிக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுவிக்க கோரும் அழுத்தங்கள் மற்றும் சர்வதேச நிர்ப்பந்தங்களைச் சமாளிக்கும் வண்ணம்,  புதிய பாசிச உத்தியை கையாளுகின்றது. அதாவது தங்கள் போர்க் குற்றங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் ஊடாக உலகமறியக் கூடாது என்பது, அரச பாசிசத்தின் மைய நோக்கமாக மாறியுள்ளது.

 

இதனால் வன்னி சமூகத்தை இரண்டாக்குகின்றது. ஊர் உலக விபரங்கள் தெரிந்தவர்கள், விபரம் தெரியாதவர்கள் என்று மக்களை பிரிக்கின்றது. விபரம் தெரிந்தவர்களை புலிக்கு உதவியவராக குற்றம்சாட்டி, அவர்களை தனியாக்கி நிரந்தரமாக அடைத்து வைக்க முனைகின்றது. இப்படி சமூகத்தில் தம் கல்வி மூலம் போர்க் குற்றத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் மற்றும் அறிவும் அனுபவமும் உள்ளவர்களை, புலித் தொடர்புடையவராக முத்திரை குத்தி அவர்களை தனி சிறையில் தள்ள முனைகின்றது. இப்படி 50000 பேரை புலித் தொடர்புடையவராகக் கூறி, அவர்களை தனிமைப்படுத்தி அடைக்கும் நவீன பாசிச உத்தியை இன்று ஏவிவிட்டுள்ளது. இதன் மூலம் உளவியல் ரீதியாகவே, போர்க் குற்ற மூலங்களை மக்களின் உணர்வுகளில் இருந்து அழிக்கவும், நலமடிக்கவும் முனைகின்றது.

 

இப்படி தங்கள் போர் குற்றத்தின் சுவடே தெரியாத வண்ணம் அழிக்க, மக்களை இரண்டாக்கி  தனிமைப்படுத்தும் பதிய வடிகட்டலை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மிகுதியானவர்களை பரந்த இராணுவ சூனியப் பிரதேசத்தில் குடியேற்றி, உலகை ஏமாற்ற முனைகின்றது. இப்படி புலியைக் காட்டி தங்கள் குற்றங்கள் உலகறியா வண்ணம் மூடிமறைக்க, புலி முத்திரை குத்தத் தொடங்கியுள்ளது. இப்படி 50000 பேரை வடிக்கட்டி, அவர்களை நலமடிக்கப்படும் வரை தனியாக அடைத்து வைக்க முனைகின்றது.  

 

இப்படி அரசே இன்று கிரிமினல்மயமாகி இயங்குகின்றது. மக்களுக்கு எந்த ஜனநாயகமும், இலங்கையில் கிடையாது. இந்த பாசிச அரசின் சட்டம், நிதி எதுவும், இன்று மக்களுக்கு கிடையாது. அது கிரிமினல்மயமான அரச இயந்திரத்துக்கு ஏற்ப, அது இயங்குகின்றது. இப்படி ஒரு குடும்ப சர்வாதிகாரம் நவீன பாசிசமாக, அதன் குற்றங்களுக்கு ஏற்ப அதை மூடிமறைக்க மக்கள் மேல் புதிய ஒடுக்குமுறையை ஏவிவருகின்றது. மக்களை அடக்கியாள, தங்கள் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெற, குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவிவருகின்றது.  இதனால் பாதிக்கப்படும் இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், பரஸ்பரம் மற்றவர்கள் உரிமைகளை அங்கீகரித்து ஒன்றுபட்டு போராடுவதன் மூலம்தான், இந்தப் பாசிசத்தை முறியடிக்க முடியும்.

             

பி.இரயாகரன்
27.07.2009