பி.இரயாகரன் - சமர்

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தை, கருணா என்ற எடுபிடி பாசிசக் கும்பல் எப்படி அபகரித்தது என்ற செய்தியை அண்மையில் அதிரடி இணையமும், இலங்கைநெற்றும் வெளியிட்டது. இது தான், இந்த உடனடியான பாசிச  மிரட்டலுக்கான காரணம். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசியவர்கள், புலிப்பாசிசம் மட்டும் பேசியவர்கள், இந்த நிகழ்வையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை.  

 

அதிரடியின் செய்தியால் மகிந்தாவின் எடுபிடியான இந்த மக்கள் விரோதிகள் அம்பலப்பட்டனர். இதனால் இந்த செய்தியை வெளியிட்ட இணைய ஆசிரியர்களுக்கு, பச்சை தூசணத்தினால் கொலை மிரட்டலை விடுத்தனர். கருணா அம்மானின் ஊடக செயலாளர் யூலியன் ஞானப்பிரகாசத்தின் "தேசிய" மொழியை, கீழ் உள்ள ஒலி வடிவில் கேட்கமுடியும். கருணாவின் ஊடக மொழி பச்சை தூசணத்தாலானது. 

கிழக்கு 'உதயமும்", "ஜனநாயகமும்" எப்படிப்பட்டது என்பதையும், அது எந்த மொழியில் எப்படி பேசும் என்பதையும் இது மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது. கிழக்கு விடிவெள்ளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், சுதந்திரக்கட்சியின் தமிழ் பிரதிநிதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், இங்கு நாம் கேட்டு சுயமாக அறிந்து கொள்ளமுடியும். இவர்கள் முன்வைத்த புலியெதிர்ப்பு தமக்கு மட்டுமான "ஜனநாயகமோ", தமக்கு கீழ் மனிதகுலத்தை அடிமைப்படுத்துவதே தான். இப்படிப்பட்ட இவர்கள், மக்களை எப்படி எந்த வடிவத்தில் அணுகுகிறார்கள் என்பதை இது சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. 

 

பாசிட்டுகளின் "தேசிய" மொழியே இதுதான். 1987 இல் என்னை புலிகளின் வதை முகாமில் வைத்து புலிகள் வதைத்த போது, இதே "தேசிய" மொழியால் அர்ச்சிக்கப்பட்டு தாக்கப்பட்டோம். இன்று நாம் அதன் தொடர்ச்சியாக புலி மற்றும் புலி எதிர்ப்பு பாசிட்டுகளிடமிருந்து கிடைத்த, கிடைக்கும் தூசணம் மூலமான தூற்றல் மற்றும் தூசணம் மூலமான மிரட்டல்கள் இப்படிப்பட்டது தான்.

 

இன்று அதிரடியைச் சேர்ந்த ஆசிரியரை மிரட்டும் இந்த ஒலிநாடா உரையாடல் தான், பாசிட்டுகளின் உண்மையான பக்கமாகும். அதன் பண்பாட்டு, மனித ஒழுக்கம், அதன் வாழ்வியல் எல்லாம், வக்கரித்துப் போனது. இது இந்த ஒலி நாடா உரையாடல் சார்ந்த பண்பாட்டினால் ஆனாது.

 

இதை அவர்கள் மூடிமறைக்கவே வெள்ளையும் சுள்ளையுமாக உடுப்புகளை அணிந்து கொண்டு, பல்லையும் காட்டிக்கொண்டு, ஒரு பேனையை பொக்கற்றில் செருகிக்கொண்டு நடிப்பது, இலங்கையில் வெளிப்படையாக நடமாடும் பாசிசத்தின் ஒரு வெளித் தோற்றமாகும்.

 

உள்ளே அவர்கள் பேசுவதோ பச்சை தூசணம். அதுவும் பெண்களின் பாலியல் உறுப்பு சார்ந்த கொச்சையான மொழி இழிவாடல்கள். தங்கள் கையில் சிக்கியவர்களை உடுப்புகளின்றி வதைத்து சிதைத்து கொல்வது முதல், ஊடகவியலின் பேனையை முறிப்பது வரையிலான பாசிச வக்கிரத்துடன், இவர்கள் முறுக்கெடுத்து நிற்கின்றனர். 

 

இப்படிப்பட்ட தங்களைப் பற்றி, மக்கள் எதையும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதுதான் இவர்களின் முதன்மையான அரசியல் குறிக்கோள். இதன் மூலம் தாங்கள் சொகுசாக வாழ்வது முதல் மக்களை சுரண்டி தின்பது வரை, இந்த சமூகவிரோதிகளின் அரசியல் இருப்பாகும்.  

        

இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வழி பாசிசமாகும். பேரினவாத பாசிசத்தின் பின், இது அரச பாசிசமாகி நிற்கின்றது. இலங்கையில் இருந்து தன் மிரட்டலை, மேற்கு நாடுகளை நோக்கி விடுகின்றது. புலிப் பாசிசத்தை மட்டும் காட்டி தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசியவர்கள், இன்று தாமல்லாத அனைத்தின் மேலும் பாசிசத்தை ஏவுகின்றனர். அரச பாசிசமோ இன்று இப்படி கோர முகமெடுத்தாடுகின்றது.

 

பி.இரயாகரன்
25.07.2009