"நம்மிடம் எந்த நம்பிக்கைகளும் கைவசமில்லை. நாம் வாழ்வு மறுக்கப் பட்ட சூழலுக்கு மறுப்பும்,நமது குடியிருப்புகளை இராணுவ உயர் பாதுகாப்பாக்கிய யுத்தத்தையும்- இலட்சக்கணக்கான மனித அழிவையும் வெறுக்கிறோம்.இதனால் பாதிப்புக்குள்ளானது மட்டுமல்ல வேரோடுபிடுங்கியெறியப் பட்ட உயிர் வாழ்வின் விழுமியங்களை மீட்பதற்கு யுத்தம் குறுக்கே நிற்பதால் அதை உடலில் உயிருள்ளவரை எதிர்ப்போம்.

 

 

 

 

 

 

 "ஏதிலிக்குழந்தைகள்"(!) அழகான தமிழ்.இப்படிக் கூறுவதால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த நிறைவும் வந்நு விடாது.முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவை.எதற்கெடுத்தாலும் மறுப்புச் சொல்லாதீர்கள்.ஈழப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள தமிழ்பேசும் மக்களுக்கு சுமார் இருபதாண்டுகள் சென்றது.மக்கள் இழந்த அனைத்தும் மண்ணுக்காகவென்ற கருத்தியல் தளத்தை இனியும் நாம் மௌனமாக 'ம்'போடமுடியாது.மழலைகள் எப்படி அநாதைகளானார்கள்?அவர்களது வாழ்வை எந்தப்பூதம் தின்று ஏப்பமிட்டதது? எதன்பொருட்டு அவர்தம் பெற்றோர்கள் அழிந்தார்கள்? ஊனமானது அவர்தம் வாழ்வு மட்டுமல்ல ஒரு சந்ததியே போராடிச் செத்த பின் நீங்கள் கதைசொல்கிறீர்கள்.

யுத்தத்தால் முடமாக்கப்பட்ட சிறார்களை முல்லத்தீவுக்குள்ளும் வன்னிமண்ணுக்குள்ளும்தாம் உங்களுகுத் தெரிகிறது.நமக்கோ தமிழ்பேசும் மக்கள் வாழும் முழு இலங்கைக்குள்ளும் தெரியும்.தொடார்புகள் உண்டு.இவர்களது வாழ்வை எந்த அமைப்பு சீராக்குகிறது?வெட்கங்கெட்ட இயக்கங்கள் தத்தம் தேவைக்காகச் சிறார்களைப் போருக்கு அனுப்பிக் கொன்றும்-ஊனமாக்கியும்-அநாதவராக்கிவிட்டும்,இப்போது காப்பகங்கள் நடாத்துகின்றனவாம்.பேருக்குச் சில விளம்பர நாடகங்களைச் செய்பவர்களுக்காக- இப்படி ஓட்டுமொத்தச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாயும்போது-எந்த விளம்பரமுமின்றிக் காரியமாற்றும் மனிதர்கள் இந்தக் கண்றாவித்தனங்களை இனியும் மூடிமறைக்கத் தயாரில்லை.புலிகள்தாம் தமிழர்கள்,தமிழர்கள்தாம் புலிகள் என்பதெல்லாம் முன்னோருகாலத்தில் சாத்தியமாகலாம்.இப்போது ஜனநாயக அரசியலுக்கு வருகிறார்களா வாருங்கள்-பன்முக அரசியலோடு-பன்முகத் தலைமைத்துவங்களோடு கலந்து நமது விடிவைத் தேடி விவாதிப்போம்-செயற்படுவோம்.அதை விட்டுவிட்டு விசமத் தனம்-திரிபுவாதம் என்பதை அவிட்டுவிட வேண்டாம்.இவற்றைக் கடந்த கால் நூற்றாண்டாய் கேட்டுக்கேட்டு நமது வாழ்வே நாசமாகிவிட்டது..." -அன்று(01.04.2005), அன்பர் ஈழநாதனோடான விவாதத்தில் ஸ்ரீரங்கன்.
 
 
ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.இன்று புதிதாகப் புதுவையாருக்கு ஞானம் பிறந்து அவர் தான்போற்றிய நெருப்புக் கடவுள்-சூரியதேவனைச் சர்வதிகாரியாக்கித் தன்னை "மக்கள் கவிஞனாக்க" இடைத்தங்கல் முகாமிலிருந்து முணுமுணுக்கிறார்.இதையும் "அநாமதேயன்"என்று காலச்சுவட்டில் இனவாதக் குண்டு தயாரிக்கும் இன்னொரு முகமூடி(நம்மால் அறியப்பட்ட அவலம்)சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப்போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"அநாமதேயன்"எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!
 
 
இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள்.தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம்.சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.புலிகளது தோற்றத்திலேயே அது அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம் இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டுகிறது இப்போது.இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.இத்தகைய சதிகாரர்களைக் குறித்து அன்று,2005 மட்டில் இங்ஙனம் எனது அகதிப்பதிவில் எழுதினேன்:
 
 
"அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்பிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்."
 
 
 
இன்று,நாம் சந்திக்கும் இந்த வலைப்பதிவு "வாசகர்களையும்"அவர்களின் பார்வையையும் பற்றிப் பெரிதும் கவலைகொள்வதற்கில்லை.ஆனால்,புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்
"ஈழமென்றும்,தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வரும் புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும் சரணடைந்தும்- வார்தைகளினால் தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றைப் பிரபாகரனது சர்வதிகாரத்துக்குள் திணித்துவிட்டுத் தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.
 
 
"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!
 
 
இருள் சூழ்ந்த நாளிகையிலே
பலரைத்தின்றுவிட்டு
இடைத்தங்கல் முகாமிலிருந்து இரை மீட்கிறாய்"
 -இன்று.
 
 
புதுவை இரத்தினதுரை அன்று,தனது வார்த்தைகளால் எத்தனையோ அப்பாவிகளது கொலைகளை நியாப்படுத்திய அவரது மக்கள் விரோதம்,இன்று பிரபாகரனைப் பெரும் சர்வதிகாரியாக்கும் அரசியலோடு மக்களிடம் வருகிறது.இதையேதாம் "அநாமதேயன்"கூடச் செய்கிறார்.அன்று புலிகளைத் "தேசியச் சக்தி-தேசிய இராணுவம்"எனக் கருத்துக்கூறியவர்,இன்றோ அனைத்துக்கும் பிரபாகரனது தவறே காரணமென்று புலிகளுக்குப் பின்னாலிருந்து இயக்கிய சக்திகளை மறைத்து மீளவும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்கிறார்.ஒரு தலைமுறையையே கையாலாகாத கூட்டமாக்கி அவர்களைக் கொன்றுதள்ளிய புலிப்பரப்புரையாளர்களெல்லோரும் இனிமேல் இதே தமிழ்ச்சமுதாயத்துள்தாம் வாழப்போகின்றார்கள்.தம்மால் அநாதைகளாக்கப்பட்டு ஒட்டக் காயடிக்கப்பட்டவொரு இனத்தின் அழிவைச் செய்த இதே நபர்கள் எந்த முகத்தோடு மேலும் உயிர்வாழ்வார்கள்?"உண்மை மனிதர்களக்கு நிச்சியம் உறுத்தும்.அவர்கள் தமது தவறுகளுக்காக வருந்துவதுமட்டுமல்ல தமக்குத் தாமே தண்டனையைக் கோருபவர்களாகவும் இருப்பார்கள்." கூட்டாகக் கோழியடிச்சு உண்டு,தலைமுறையையே நாசங் செய்துவிட்டு,அதைத் தமது தலைவனுக்கு மட்டும் பொறுப்பாக்கும் எவனும்-எவளும் மனிதவிரோதிகளே.தமது தவறைத் தார்மீக அடிப்படையிற்கூட ஏற்கமுடியாத மனித விரோதிகள்.இவர்கள் பிரபாகரன் குறித்துக் கருத்துச் சொல்லவே அருகதையற்ற ஜென்மங்கள்!இதோ உனக்கும் உனது இராணுவ வாதத் தலைமைக்கும் அன்றே இங்ஙனம் உரைத்தோம்:
 
"எச்சங்களில்
"எந்த எலும்பு" உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"
 
 
புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில் மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!புதுவை உரைப்பதுபோல இது பிரபாகரனென்ற தனிநபரது விருப்பு-வெறுப்புக்குட்பட்டதல்ல.
 
பிரபாகரனென்ற பொம்மையைக் கடந்து சிந்தித்தால்,வர்க்க அடிப்படையாகப் புரிவதில் இவர்கள்,இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்புக்குப் பின்னால் நின்று, தமிழ் மேட்டுக்குடிகளின் நலனுக்குகாகத் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயப்படுத்தி இராணுவப்படையாக்கிக் கொன்றுள்ளார்கள்.
 
இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி"ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று புலம்பெயர்ந்த தமிழருக்குள் புதிய கதை பேசுகிறார்கள்.பங்குச் சண்டையில் ஒவ்வொருவரும் புதிய வேடம் பூண்டு மக்களுக்காகக் குரல்கொடுப்பதாக் கருத்துக்கட்டுகிறார்கள்.
 
இந்தப் புலிப்பினாமிகளின் வால்களது வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானப+ர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!இன்று, கேவலம் இந்தக் கேடுகெட்ட நாய்கள் போடும்"நாடுகடந்த அரசாங்கம்"என்ற கூச்சல் மக்களைச் சொல்லித் திரட்டப்பட்ட நிதியைத் தக்கவைக்கவும் தம்மை இலங்கை அரசியலில் ஏதோவொரு முறையில் தவிர்க்க முடியாத சக்திகளாய் உருவாக்கவதற்கு முனையும் கபடத்தனத்தின்மீது கட்டப்பட்டதாகும்.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.
 
இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் "ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்"என்றும் வரையறுத்துச் சொன்னோம்.இதுவே இன்று நிஜமாக நம்முன் நடந்தேறினாலும் இதை மறைத்து மாய்மாலஞ் செய்யப் புலிப்பினாமிகளே புதிய கதை பேசிப் பார்க்கிறார்கள்.அவர்கள் இதுவரை தம்மால் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்குள் அனைத்துத் தவறுகளையும் புதைத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாக்குவதில் மிகத் துடிப்போடு இயங்குகிறார்கள்.கடந்த காலத்தில் தாம் இயங்கிய அரசியலானது தமிழ் மக்களுக்கு விரோதமானதென்று தெரிந்தும் தவறிழைத்த இந்தக்கூட்டம் பெருவாரியான தமிழ்மக்களைக் கொல்வதற்கு உடந்தையானது.இவர்களை வரலாற்றில் தண்டிக்கவேண்டிய பொறுப்புத் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில்வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்டு!
 
"இதற்கு முன்
போ,போ,
போய் உன் பெற்றோரைச் சுற்றோரைக் கேள்
சுதந்திரமென்றால் என்னவென்று?"
 
 
ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.
 
இவர்களது அரசியல் சதியைத் தமது இலாபங்களுக்காகச் செய்து, தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் தமிழ் மேட்டுக்குடிகளும் இன்றும் பிரபாகரனைச் சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல "அநாமதேயன்கள்"அவசியமாகி நமக்குள் புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?
 
புலிகளை அன்று ஏதோவொரு அம்சத்துக்காக ஏற்றுக் காவடி தூக்கியவர்களின் இன்றைய புலம்பல் மேலும் எம்மை முட்டாளாக்கும்.இவர்கள் சொன்னதெல்லாம் புலிரூபத்தில் முடிந்திருக்கிறது.இவர்களைக்கடந்து நாம் மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டுவது அவசியம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
14.07.09