“ரெய்டுக்கு பயந்து பிரபல சாராய வியாபாரியும், சாக்னாகடை மற்றும் சாராய வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவருமான ஜே.பங்கஜராஜ் (எ) ஜேப்பியார் தன்மூத்த மருமகனுடன் தப்பியோட்டம்.”

இது வேடிக்கைக்காக அல்ல. இங்கே ‘சாராய’ எனும் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு, ‘தனியார் சுயநிதிக் கல்லூரி’ என்ற வார்த்தையை போட்டு படித்துப்பாருங்கள். முன்னது கடந்த காலத்தையும், பின்னது நிகழ்காலத்தையும் நினைவுபடுத்தும். ‘சரக்கு’தான் வெவ்வேறு, செய்யும் ‘தொழில்’ ஒன்றுதான் என்பதையும் இது உணர்த்தும்.

மாதாமாதம் மாமூல். மாசத்துக்கு ஒரு கேஸ். தொழில் எதிரியிடம் மட்டும் ரெய்டு, பறிமுதல், பத்திரிக்கைக்கு போட்டோ. அது போலவே, மாதாமாதம் மாமூல். கல்வித்துறை அதிகாரி தொடங்கி அமைச்சர் வரைக்கும் சிபாரிசு கடிதம் கொடுத்து சம்பாத்யம். சம்பாதிச்ச காச வச்சி பினாமி பேரில், சொந்த பிசினஸ். எழவெடுத்தவனுங்க தொல்லையை சமாளிக்க அவ்வபோது சவடால்.

சாராய வியாபாரிக்கும் போலீசுக்கும் இடையே எத்தகைய உறவு இருக்குமோ, அத்தகைய ‘கள்ள உறவை’த்தான் இந்த தனியார் சுயநிதிக் கல்லூரி வியாபாரிகளிடம் அரசு கொண்டிருக்கிறது. இந்த வெட்கங்கெட்ட கூத்தை மறைக்கத்தான், ஆய்வுக்குழுவின்அதிரடி, சட்டசபையில் சரவெடி என பேசி முடிப்பதற்குள், “யாரு எதசெஞ்சாலும் அத நொட்டஞ்சொல்லுறதுதான் உங்க வேலை” என நொந்து கொண்டார் நண்பர் ஒருவர். கூடவே, “இந்த ஆய்வுக்குழுவின் தலைவரா இருக்கிறாரே, உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமி. ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்டு. யாருக்கும் எதுக்கும் பயப்பட மாட்டாரு, துணிச்சலா பேசுவாரு, செய்வாரு” என இந்த ஆய்வுக் குழுவுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழையும் வழங்கினார் அந்த நண்பர்.

நன்பரே, அதனால்தான் கேட்கிறோம். “அவ்ளோ நல்ல மனுசன் ஏன் போயிம் போயும் சும்மா பொம்மையை வச்சு பிலிம் காட்டுற வேலையில சேர்ந்தாருனு”. “இவுரு போயி என்னத்த கிழிச்சிட்டாருன்னு” நாங்க கேட்டா நீங்க கோபித்துக்கொள்வீர்கள். ஆனா, ரெய்டுக்க போன இடத்தில், “இவரால ஒன்னும் கிழிக்க முடியாதுனு” வெளிச்சம் போட்டு கான்பிச்சிட்டாங்கல்ல. இதற்கு உங்கள் பதில் என்ன?

வந்திருக்கிறது யாருன்னு நல்லா தெரிஞ்சிருந்தும், “நீங்கல்லாம் யாரு? ஐடென்டி கார்டு இருக்கா? இது தனியார் இடம் போலீசுக்கு போன் போடுவேன்?” என சீறியிருக்கிறார், சிறீ வெங்கடேசுவரா பொறியியல் கல்லூரியின் செயலர் பாலச்சந்திரன்.

ஜேப்பியாரின் பனிமலர் கல்லூரியிலோ அந்தோ பரிதாபம்! இதுவரை அரசு, ‘ஆணை’ யென்று வழங்கி வந்த கடுதாசியெல்லாம் கக்கூசுல ‘கசக்கி’ப்போட்டு வந்த இந்த கணவான்கள்; ஆய்வுன்னதும் “சரி நடத்திக்கோ”ன்னு, கக்கூசு கதவ மட்டும் திறந்து வச்சுட்டு ஓடினாங்களே? இவர்களால், என்ன செய்யமுடிந்தது?

” எங்கள் குழுவின் சார்பாக அவர்களை தொலைபேசியிலும், செல்போனிலும் தொடர்புகொள்ள முயன்றும் பிடிக்க முடியவில்லை. இரண்டரை மணிநேரம் அங்கேயே காத்து கிடந்தோம். பிறகு குழுவினரோடு கலந்து பேசி, ஆவணங்களைத் தராமல் மறைத்ததில் இருந்தே தவறு நடந்திருப்பதாகக் கருதி அந்தக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விளக்க அறிவிக்கையை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். என்று குமுதம் ரிப்போர்ட்டர் (25.06.09) பேட்டியில் புலம்பத்தானே முடிந்தது.

அரசுக்கு அறிக்கை அனுப்புவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை என்பதை மட்டுமல்ல, சோளக்கொல்லை பொம்மையிடம் காகத்திற்கு இருக்கும் அளவு பயம்கூட, அரசின் மீது தனியார் முதலாளிகளுக்கு இம்மியளவும் இல்லை என்பதையும் உலகறியச்செய்து விட்டது, அரசு அனுப்பிய ஆய்வுக்குழு!

அது சரி, அரசுக்கு அறிக்கை வராதது ஒன்றுதான் குறையா? அறிக்கை வந்தால், உடனே அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகி விடுமா, என்ன?

அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது என்கிறார், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர். “ஒரு கல்லூரி தொடங்குவதற்கு மூன்று விதமான அனுமதிகள் தேவை. கல்விப் பிரிவுகளை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ. அனுமதியும், கல்லூரி இணைப்புக்கு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரமும், கல்லூரியை நடத்துவதற்கு தடையின்மைச் சான்றிதழையும் தமிழக அரசிடம் வாங்க வேண்டும். இதில் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை உள் கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பல்கலைக்கழக இணைப்பை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் உண்டு. பாடப்பிரிவுகளை நடத்துவதில் குளறுபடி இருந்தால் ஏ.ஐ.சி.டி.இ. நடவடிக்கை எடுக்கும். கல்லூரி ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்கும். அதற்கு போதிய ஆதாரம் கட்டாயம் இருக்க வேண்டும். பிறகு சம்பந்தபட்ட கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஐவர் குழு அளிக்கும் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுப்போம்” (குமுதம் ரிப்போர்ட்டர். 25.06.09)

சாலை விபத்தில் இறந்து போன பிணத்தை தானும் எடுக்காமல், இறந்தவனின் உறவினரையும் எடுக்க விடாமல், இரு போலீஸ் நிலையங்களுக்கிடையே நடக்கும் லிமிட் தகராறைப் போல, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மீதான எந்தப்புகாராயினும் இவர்களால் பந்தாடப்படும். என்பதைத்தான், இப்படி சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார், துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.

இத்தகைய கண்காணிப்பு அமைப்புகளில் அங்கத்தினராய் இருப்பவர்களெல்லாம், புகாருக்கு ஆளாகியிருக்கும் கல்லூரியின் அங்கத்தினராகவும் இருக்கிறார்கள் எனபது தனிக்கதை!

ஆய்வுக்குழுவுக்கு அதிகாரமில்லை, அறிக்கை அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எவரும் தயாரில்லை. அப்ப என்னதான் தீர்வு? அதையும் சொல்லி விட்டார், பேரா. ராமசாமி, “இந்தக் கல்வி முதலாளிகள் இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள். மாணவர்களும் பெற்றோர்களும் இவர்களை உதைக்கும் காலம் விரைவில் வரும். அந்தப் புரட்சியும் விரைவில் நடக்கத்தான் போகிறது.” என்று.

அடடே என்னப் பொருத்தமான முடிவு! பொதுமக்கள் சேர்ந்து உதைத்தால்தான் திருந்துவான் சாராய வியாபாரி என்பது கல்வி வியாபாரிக்கும் பொருந்திப் போவதைப் பாருங்கள்!
-தமிழினி

 

http://rsyf.wordpress.com/2009/07/07/ரெய்டுக்கு-பயந்து-பிரபல/