லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப்பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது.

 

 மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்க இடதுசாரி அரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. போலீசு – துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைக்கு அஞ்சி,லால்கார் பழங்குடியின மக்கள் காடுகளிலிருந்து வெளியேறி அகதி முகாம்களில் அவதிப்படுகிறார்கள்.

lalgarh1835

தமது வாழ்வுரிமைக்காகவும், அரசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வரும் லால்கார் பழங்குடியின மக்களை வன்முறையாளர்கள்,அராஜகவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது, மே.வங்க இடதுசாரி அரசு. “இம்மக்களை இடதுசாரி அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டு வன்முறைப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டும்,அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதச் செயல்களிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, இவர்களுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து மாநிலமெங்கும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது” என்று மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் குற்றம் சாட்டுகின்றன.

லால்கார் பழங்குடியின மக்களோ எப்போதுமே அமைதியானவர்கள்; உண்மையானவர்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் உழலும் அவர்கள், சாலை வசதியே இல்லாத கரடுமுரடான காட்டுப் பாதையில் நீண்ட நெடும்பயணமாக கண்ணீர் மல்க நோயுற்ற தமது அன்புக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு ஓடி, அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் மாண்டு போகும்போது அவர்கள் கதறியழுவார்கள். லால்கார் வட்டாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தில்லாத போதும், மருத்துவர்களே இல்லாதபோதும், அவர்கள் தமது விதியை நொந்து கொண்டு அமைதியாகவே இருந்தார்கள்.

கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும்போதும், காட்டுக் கிழங்குகளை வேகவைத்து பசியாறிக் கொண்டு பட்டினியால் பரிதவித்த போதும், ஆரம்பப் பள்ளி இல்லாமலும் ஆசிரியரே இல்லாத பள்ளியாலும் தமது குழந்தைகள் தொடக்கக் கல்விகூடக் கற்க முடியாத அவலத்தைக் கண்டபோதும் – இவையெல்லாம் தலைமுறை தலைமுறையாக உள்ள விசயம்தானே என்று தமக்குத்தாமே ஆறுதல்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

lalgarh_1-1இன்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள லால்கார் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய கொல்கத்தாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், “இப்போது இம்மக்களுக்கு மருந்து – மாத்திரைகள் அவசியமில்லை;சத்தான உணவுதான் உடனடித் தேவையாக உள்ளது” என்கின்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென்,இம்மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார். அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும்,இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை. நாட்டின் பங்குச் சந்தை புள்ளிகள் நாலுகால் பாச்சலில் முன்னேறிய போதிலும், ஏகபோகக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளது ஊதியம் கோடிக்கணக்கில் அதிகரித்த போதிலும், இந்தியாவல்லரசாக ஒளிர்ந்த போதிலும், இவையெல்லாம் லால்கார் பழங்குடியின மக்களின் வாழ்வில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும், இவையெல்லாம் வன்முறையே அல்ல என்பதுதான் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான தேசிய பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொ வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ,பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.

வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!

அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகிறது. அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

lalgarh_2-1இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால்,இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள்.இடதுசாரி அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏக்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ.47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.

இது மட்டுமின்றி, கடந்த எட்டு மாதங்களில் அவர்கள், தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும்,பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி,பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.

கடந்த நவம்பரில் போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால்,இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.

தேர்தல் முடிந்த பிறகு, இப்போது மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.

இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சோந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது இடதுசாரி அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சோந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.

இப்பயங்கரவாதத்தையும், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.

lalgarh1836இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்;நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள்,கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி,கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.

புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க இடதுசாரி அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை விடுதலை செய்து அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ இடதுசாரிஅரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.

-புதிய ஜனநாயகம், ஜூலை-2009