மீண்டும் கச்சத்தீவு செய்திகளில் முக்கியத்துவம் பெறத்தொடங்கிவிட்டது. 1974ல் தொடங்கி இன்றுவரை ஓட்டுக்கட்சிகளுக்கு ஒரு உபரி வசதி போல் தேவைப்பட்டால் கைக்கொள்ளும் பிரச்சனை போல் இருந்துவருகிறது.

 

தற்போது இலங்கையில் இனவெறிப்போர் முடிந்து விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும்; தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதும் சுட்டுவீழ்த்துவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால், கச்சத்தீவை மீட்பதன் அவசியம் குறித்த சொல்லாடல்கள் உலவத் தொடங்கியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதினிலும், தினம் தினம் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி வாழ்வு குலைகின்ற போதினிலும் இந்திய அரசு இது குறித்து எச்சரிக்கவோ குறைந்த பட்சம் பேசவோ கூட தயாரில்லை. தமிழக அரசோ கடிதம் எழுதுகிறது, அனைவரும் என்னை ஆதரித்தால் தீர்மானம் கொண்டுவருகிறேன் என்கிறது. இதுவரை கொண்டுவந்த தீர்மானங்களோ நீள் துயிலினிடையே சிரித்துக்கொள்கின்றன. மீனவர்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள், சாலைமறியல் செய்துவிட்டார்கள், உண்ணாவிரதம் இருந்தும் பார்த்துவிட்டார்கள் சிங்கள தோட்டாக்களின் வீரியத்தை குறைக்கமுடியவில்லை.

 

உலகெங்கும் மீனவர்கள் எல்லை தாண்டுவது நிகழத்தான் செய்கிறது. ஆனால் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக்கொல்வது இலங்கை மட்டும் தான். காரணம் அந்தப்பகுதிக்கு மீனவர்கள் வரவே கூடாது என கருதுகிறது, இந்தியாவும் தான், அதனால் தான் கொல்லப்படுவது சொந்த நாட்டு மக்களென்றாலும் கண்டும் காணாமல் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் ராணுவ கண்காணிப்பு கோபுரம் நிறுவப்போவதாக செய்தி வந்த போதும் இந்தியா இலங்கையிடம் விளக்கம் கேட்கவில்லை. இலங்கையும் செய்தியை மறுத்திருக்கிறது. இவ்விடத்தில் கோத்தபாய வின் கூற்றை நாம் நினைவுபடுத்துவது அவசியம், இனவெறிப்போரின் இறுதிப்பகுதியில் அவர் கூறியிருந்தார், “நாங்கள் இந்தியாவுக்கு தெரியாமல் எதையும் செய்யவில்லை.” இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீன்பிடி படகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாளிதழ்களில் செய்தி வருவதும் சில போதுகளில் மீனவர்கள் போராடுவதும் பின் அடுத்துஒரு நிகழ்வு நடக்கும் வரை மறந்திருப்பது என்பது தான் வழமையாக இருக்கிறது. பலன்….?

 

முத‌லில், எல்லை தாண்டுதல் எனும் பிரச்சனையே இல்லை, ஏனென்றால் 74, 76 ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகவே சேர்க்கப்பட்டிருக்கிறது. விதியாக சேர்த்தபின்பு எல்லை தாண்ட வேண்டாம் என அறிவுரை சொல்கின்றன அரசுகள். ஏன் எல்லை தாண்ட வேண்டும்? ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்களால் இயலாது. கரையோரப்பகுதிகளிலோ மீன்வளம் குறந்துவருகிறது. இயற்கைச் சீற்றங்கள், கடல் உள்வாங்குதல், புயல், இனப்பெருக்க காலம், உள்ளூர் பிரச்சனைகள் என அநேக தடைகள் உள்ள நிலையில் மீன்களை தேடிச்செல்வது தவிர்க்க இயலாதது. இதிலும் ரெட்டை மடி ஒற்றை மடி என்று வலைப்பிரச்சனைகள் வேறு. இத்தனையையும் மீறி மீன்பிடித்துவந்தால் விலை, ஒரு பெரிய கேள்விக்குறி? மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசுகள் ஆழ்கடல் மீன்பிடி நிறுவனங்களை எதுவும் செய்வதில்லை,

 

செய்ய‌முடிவதுமில்லை. சிங்கள ராணுவம் சுடுவதும், ஆழ்கடல் மீன்பிடி இயந்திரங்கள் கடலை அரித்து மீன்வளத்தை சுரண்டுவதும் மீனவர்களின் வாழ்வை குடிக்கும் இரட்டைக்குழல்கள். ஆக இங்கு பிரச்சனைகள் கச்சத்தீவை மட்டும் சார்ந்ததல்ல.

 

அன்றிலிருந்து இன்றுவரை கச்சத்தீவுக்காக குரல் (மட்டும்) கொடுத்துவரும் ஓட்டுக்கட்சிகள் அதை தாண்டி ஏதாவது செய்துவிட முடியுமா? அவ்வாறு ஏதாவது செய்வதற்கு மாநில அமைப்புகளில் சாத்தியம் உண்டா? நடுவண் அரசு எல்லை தாண்டவேண்டாம் என்று கூறும் போது கச்சத்தீவுக்கு செல்வது ஒப்பந்தத்தின் படி எல்லை தாண்டுவதாகாது என மறுத்துக்கூறக்கூட இயலாமல் எல்லை தாண்டாதீர் என மீண்டும் வாந்தியெடுக்கும் மாநில அரசு தீர்மானம் கொண்டுவருவதினால் மட்டும் பயன் விளைந்துவிடுமா? இந்தியா பாக்கிஸ்தான் போர், அணுகுண்டு சோதனை நடத்தியது போன்றவற்றால் தனிமைப்படும் சூழலிலிருந்த இந்தியா அதை சமாளிப்பதற்கு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து அதன் ஆதரவைப்பெற்றது. ராமநாதபுர சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் இந்தியாவிற்கு கிடைத்த கச்சத்தீவை தமிழகத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு கொடுத்தது சட்டவிரோதம். ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தும் அதை மீறி நடந்துகொண்டிருக்கும் இலங்கையை கண்டிக்காதது ஒப்பந்தவிரோதம். சொந்த மக்களை தாக்கி கொன்று கொண்டிருக்கும்போதும் மவுனமாக இருப்பது துரோகம். இவைகளையெல்லாம் இந்திய அரசியலமைப்பு வரம்புக்குள் நின்றே ஒரு மாநில அரசு கேள்வி கேட்க முடியும், எதிர்க்க முடியும், நிர்ப்பந்திக்க முடியும். ஆனால் செய்ய‌முடிந்த இவைகளை செய்யாமல் தீர்மானம் கொண்டுவருகிறேன் என்னை ஆதரியுங்கள் என்பது எதற்கு? மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் கோபம் போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது. அப்படியே போராடினாலும் அது ஒன்றிணைந்த அளவில் சமரசமற்றதாக போய்விடக்கூடாது என்பது தான் ஓட்டுக்கட்சிகளின் கவலை. அதற்காகத்தான் அறிக்கைகளும் கடிதமெழுதுவதும் தீர்மானம் கொண்டுவருகிறேன் என்பதும். திமுக மட்டும் என்றில்லை எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதில் மற்றமொன்றும் இருக்கப்போவதில்லை. என்றால் துப்பாக்கி தோட்டாக்களின் நடுவே எல்லைக்குட்பட்டு கிடைத்ததை பிடித்துக்கொண்டு முடிந்தால் வாழ்வதுதான் மீனவர்களின் முடிவா? கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டுமல்ல ஆழ்கடல் மீன்பிடிப்பை பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்கள் செய்வதை தடுத்து பாரம்பரிய மீனவர்களுக்கே அந்த உரிமை வழங்கப்படவேண்டும் நவீன மீன்பிடி இயந்திரங்களையும் அதற்கான தொழில்நுட்ப பயிற்சிகளையும் அரசு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமரசமற்ற போராட்டங்களை ஓட்டுக்கட்சிகளை ஒதுக்கிவிட்டு வீரியத்தோடு செய்வதுதான் மீனவர்களை பாதுகாக்கும்.