இன்று, இந்த மணி, இந்த நிமிடம், இந்தக் கணம், ஒரு பாரிய மனித அவலத்தின் மேல், ஒரு அழிப்பு யுத்தம் நடக்கின்றது. இது ஒரு இனத்தின் மேலாக நடக்கின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை பலியிடுதல் இன்றி, இந்த அழித்தொழிப்பு நடக்கவில்லை. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகக் கூறும் ஒரு பொய்ப்  பிரச்சாரம் மூலம் இந்த இனவழிப்பு உச்சத்தில் அரங்கேறுகின்றது.

 

இதன் மூலம் ஆகப் பெரும்பான்மையான தமிழ்மக்கள், தங்கள் தலைமையாக நம்பிய ஒரு தலைமை அழிக்கப்படுவதை பார்க்கின்றனர். அவர்கள் இந்த அழித்தொழிப்பை, வெறும் புலி அழிப்பாக பார்க்கவில்லை. அப்படி தமிழ்மக்கள் நம்பவுமில்லை. தமிழினத்தின் மேலான அழித்தொழிப்பாகவே, தமிழ் மக்கள் உணருகின்றனர். சாராம்சத்தில் அதையே பேரினவாத அரசு, கொக்கரித்தபடி செய்கின்றது.

 

இப்படி அழிப்பவன் இதை புலி அழிப்பாக நடத்தவில்லை. தமிழின அழிப்பாக நடத்துகின்றான். சிங்களப் பெரும்பான்மை மக்கள் இதை கொண்டாடத் தயாராகின்றனர். தமிழனை வென்ற பெருமை, பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு. பெரும்பான்மை தமிழ் மக்கள், தாம் தோற்ற துக்கம். இப்படி இனங்களின் பிளவு, மகிழ்;ச்சியான துன்பமாக மாறி, அதுவே பகையுணர்வாகி பழிவாங்கும் உணர்வாக மாறி நிற்கின்றது.

 

வென்றவன் அடக்கிய இனம் மேல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் எல்லையில் வெற்றியைக் கொண்டாட முனைகின்றான். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், பயப்பீதியில் உறைகின்றனர். மறுபக்கத்தில் தோற்றவர்கள் இலங்கைக்கு வெளியில் வன்முறையில் ஈடுபடும் சூழல்.

 

இப்படி இனவாதம் அதன் உச்சத்தில் கொண்டாட்டமாக, கோபமாக, வன்முறையாக மாறி நிற்கின்றது. உணர்வுகளும், உணர்ச்சிகளும் அறிவை இழந்து, மனிதத் தன்மை அற்றதாகி வருகின்றது. 

 

முழுநாட்டு மக்களின் பொது எதிரியான சிங்கள பேரினவாத பாசிச அரசு, இனவழிப்பின் மூலம் புலித் தலைமையை இன்று அழிக்கின்றான். பொது எதிரியின் இந்த அழித்தொழிப்பு யுத்தம் மூலமான இனவழிப்பை, யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

தமிழ்மக்கள் தங்கள் தலைவராக, தம் இனத்தின் விடுதலைக்காக போராடியதாக  நம்பியவர்களை, மற்றொரு இனவாதி அழித்தொழிப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதற்காக மகிழ்ச்சி கொள்ள முடியாது.

 

புலிகள் தமிழ் மக்களை தங்கள் சொந்த எதிரியாக நடத்தி, அவர்களுக்கு அவலங்களையே வாழ்வாக்கியவர்கள் தான். இதனால், தமிழ் மக்களின் பொது எதிரி புலியை  அழித்தொழிப்பதை, நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்கள் தங்கள் மேலான புலியின் மக்கள் விரோத செயலை உணர்ந்து, அவர்கள் மட்டும்தான் புலியை அழிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக எம்முன் இருந்துள்ளது.

 

இதுவல்லாத புலி அழிப்பும், இனவழிப்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிய வகையில் நடந்தேறுகின்றது. இதற்கமைய புலிகளின் மக்கள் விரோத அரசியல், இந்த இறுதி யுத்தத்தில் மக்களை தம்முடன் தக்க வைத்துக் கொண்டது.

 

இருந்தபோதும் பேரினவாதம் பாரிய இனவழிப்பின் ஊடாக, பல பத்தாயிரம் மக்களின் உடல்கள் மேலாகவே, இன வெற்றியை பறைசாற்றுகின்றது.  இப்படி தன் பேரினவாத பாசிச இயந்திரத்தின் மூலம், பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து, ஒரு இனத்தின் அடிமை வரலாற்றை எழுத முனைகின்றான்.

 

பி.இரயாகரன்
18.05.2009