புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.    

 

இதற்கு அமைய இறுதி இனவழிப்பாக 48 மணி நேரத்தை பிரகடனம் செய்தார் 'மாண்புமிகு” கொலைகார ஜனாதிபதி. ஆனால் அந்தக் காலம், இனவழிப்பு இயந்திரத்துக்கு போதவில்லை. அந்தளவுக்கு மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அறிவித்த 48 மணி நேரத்தை விட, அது மூன்று மடங்கு நேரத்தையும் கடந்துவிட்டது. இன்னமும் இந்த இனவழிப்பு யுத்தம் முடியவில்லை. அவசரமாக இனவழிப்பின் நற்செய்தி அறிவிக்க விமானத்தில் ஏறி ஒடோடி வந்த வேகத்தில், கால் தடுக்கி விழுந்த மண்ணை முத்தமிட்ட ஜனாதிபதியால் கூட, இந்தக் கணம் வரை கூட நற்செய்தியை வெளியிட முடியவில்லை.

 

பயங்கரவாதம் ஒழிந்த மண்ணுக்கு தான் செல்வதாக உலகறிய கொக்கரித்தவர், பயங்கரவாத மண்ணை மீள முத்தமிட்டவேண்டிய சோகம்.

 

இவை எல்லாம் இனவழிப்பின் கோரத்தைக் காட்டுகின்றது. பெருகிச்செல்லும் மனித இழப்பின், எல்லயைற்ற தன்மையைக் காட்டுகின்றது. பல ஆயிரம் முதல் சில பத்தாயிரம் மனித உயிர்கள் கொல்லப்பட்டதை, இது உறுதி செய்கின்றது.   

 

புலித்தலைமை பற்றிய ஊகங்கள், எதிர்வு கூறல்கள், தலைமையின் தற்கொலை என்று எண்ணற்ற செய்திகள் ஒருபுறம், மறுபக்கம் இன்னமும் சண்டை நடக்கின்றது. சண்டை நடக்கின்றது என்றால், இன்னமும் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்பதே அர்த்தம்.

 

பேரினவாத சிங்கள அரசு தன் இனவழிப்புத் திட்டத்துக்கு ஏற்ப, 20000 முதல்; 30000 மக்களே அங்கிருந்ததாக கூறிவந்தது. ஆனால் 72000 மக்களை 'மீட்டுள்ளதாக" இன்று கூறுகின்றது. இது மற்றொரு உண்மையை போட்டு உடைக்கின்றது. மக்கள் எண்ணிக்கை அரசு கூறியதை விட, குறைந்தது 4 அல்லது 5 மடங்கு இருந்துள்ளதும், அவர்களை இனப்படுகொலை செய்து புதைக்க இந்த அரசு எண்ணியதும் அம்பலமாகின்றது.

 

இந்தக் கணம் வரை தொடரும் இனப்படுகொலை மூலம், பல ஆயிரம் மக்களைக் கொன்றுள்ளது.  அவர்கள் பற்றிய தகவல்களை அழிக்க, இந்த இனவழிப்பு பேரினவாத அரசு எண்ணியுள்ளது. இதற்கமையவே அங்கு பணயமாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை, உலகுக்கு குறைத்துக் காட்டிவந்தது. இன்று சாட்சிகளற்ற இனப்படுகொலை மூலம், அதை மூடிமறைக்கும்  நற்செய்திகளுடன், பேரினவாத பாசிட்டுகள் இதைக் கொண்டாடத் தயாராகின்றனர்.

 

பி.இரயாகரன்
17.05.2009