திணிக்கப்படும் விளம்பரங்கள் மதிய வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். செல்போன் ,மணி அடிக்க எடுத்தவுடன்”வணக்கம் நான் தான் மு.கருணாநிதி பேசுகிறேன். ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி , அனைவருக்கும் கலர் டிவி, 16000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தோம். நல்லாட்சி

 தொடர ஆதரிப்பீர் உதய சூரியன் ,கை, நட்சத்திரம். ” அன்று மாலையே “வணக்கம் நான் ஜெயலலிதா பேசுகிறேன்” என ஆரம்பிக்கிறது. ஓட்டு அரசியல் பிரச்சாரம் அனைவரையும் எட்டுவதற்காக ரெக்கார்டு செய்யப்பட்ட வார்த்தைகள் செல்போன்களில்ஒலிபரப்பப்படுகின்றன.

 

 

 இது வெறும் பிரச்சார உத்தி என விட முடியுமா? இந்த சிந்தனையை கொஞ்சம் கிளறிப்பார்த்தோமாயின் நம்மை மனிதர்களாக கூட மதிக்காத இந்த முதலாளித்துவத்தின் கோர முகம் தெரியும். ஒரு பொருளை விற்பதற்காக செய்யப்படும் விளம்பரங்கள் பலவகையில் இருக்கிறது. செய்தித்தாள்விளம்பரம்,தொலைக்காட்சி விளம்பரம், நோட்டீஸ், டிஜிட்டல் போர்டுகள். ஒரு முதலாளி தன்னுடைய பொருளின் சேவையினை அதன் சிறப்பம்சத்தினை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமென விரும்புகிறான். இவ்வகையில்தான் மேற்கண்ட பிரிவுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் தன்னுடைய பொருளை கண்டிப்பாக எல்லோரும் பார்த்தார்களா? எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து யோசிக்கும் போதுதான் செல்போன் அதற்கு மாபெரும் வரப்பிரசாதமாய் அமைகிறது.

 

 

hello copy

 

 

கடந்த இரண்டு வருடங்களாக செல்போனின் பயன்பாடு மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளது. ஆம் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பொருளின் சிறப்பம்சத்தை கொண்டு செல்லலாம். அதற்கு அவர்களின் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படியும் ஒரு குறுந்தகவல் வருகிறது எனில் கண்டிப்பாக அதை அதை திறந்து பார்ப்போம் அதன் மூலம் அப்பொருளை நேரடியாக எல்லோருக்கும் கொண்டு வருகிறான் முதலாளி.

 

நுகர்வியல் தான் இங்கு அடிப்படை. உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ என் விளம்பரத்தை நீ கண்டிப்பாய் நுகரத்தான் வேண்டும். நுகராதன் மனிதன் இல்லை. இப்படி நம்மை கேட்காமலே நாம் விரும்பாமலே அனைத்து கம்பெனிகளின் விளம்பரங்கள் காதில் போடப்படுகிறன. “உங்களுக்கு கடன் வேண்டுமா? சார் எங்க லைப் இன்ஸ¥ரன்ஸ்ல நல்ல நல்ல திட்டம் இருக்கு நீங்க ட்ரைபண்ணுங்க” . தினந்தோறும் இவ்வார்த்தைகளை கேட்காமல் இருக்க முடியாது” இல்லைங்க எனக்கு வேண்டாம் என்றால் கூட சார் நிறைய ஆப்சன் இருக்கு என அவர்களை இழுக்க வைத்து விட்டனர்.

 

முதலாளியின் லாப வெறி பேசும் ஊழியன் எத்தனைதிட்டு வாங்கினால் என்ன எத்தனை ஆபாச அர்ச்சனை வாங்கினால் என்ன ஒரு நாளைக்கு இத்தனை பேரிடம் பேச வேண்டும் பேசித்தான் ஆக வேண்டும் என கட்டளையிடுகிறது. வேலையில்லாத்திண்டாட்டம் யார் யாரிடமோ திட்டுவாங்கிக்கொண்டு சிலரை நுகர்வோனாக்குவதில் மகிழ்ச்சிகொள்ள சொல்கிறது அல்லது சமாதானம் கொள்ள செய்கிறது . அது ஒரு புறம் இருக்க, பலர் போன் செய்தவுடன் பெயரையும் சேர்த்து சொல்கின்றனர். “என் செல்போன் எண் உங்களுக்கு எப்படி தெரியும் என்றால் நாங்க மொத்தமா கம்பெனியில் வாங்குவோம் என்கிறார்கள்.

 

என்னுடைய பெயரை என்னுடைய எண்ணை எனக்குதெரியாமல் மற்றவருக்கு தெரிவிக்க ஒரு முதலாளிமுடிவு செய்து விட்டான் எனில் அவ்வளவுதான் நான் வேண்டாம் என்றால் கூட எனக்கு கடன் தேவை குறித்த கால்கள் வந்து கொண்டே இருக்கும். இது தனி மனிதபிரச்சினையா இல்லையா? .இது என்னுடைய உரிமையை சிதைக்கிறதா இல்லையா? என்னுடைய தகவல்களை எனக்கு தெரிவிக்காது மற்றவனுக்கு அளிக்க நீயார் என கேட்டால் சிரிக்கிறான் முதலாளி காற்று நீர் வானம் பூமி ஏன் அந்த நிலவைக்கூட பார்ட் பார்ட் ஆக விற்று விட்ட இந்த சமூகத்தில் தனிமனித உரிமை ஒரு கேடா என்றவாறு.

 

“உனக்கென உரிமைகள் இல்லை அது நீயே காசு போட்டு வாங்கிய பொருளாயிருந்தாலும் எனக்காகத்தான் இயங்கப்படுகிறது.” அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். பலருக்கும் இது ஒரு தவறாகத்தெரிவதில்லை. “sms வந்தா வந்துட்டு போவுது அதுக்கு என்ன அது அவங்க வேலை” என சாக்கு சொல்கிறார்கள். அவர்கள் வேலை சாவு வீட்டில் இருக்கும் போதும் “உங்க காதலை வெளிப்படுத காதல் கவிதைகள் மாதம் வெறும் 30 ரூபாய்தான்” என்றுதான் வருகிறது.தொலைக்காட்சி ,டிஜிட்டல் விளம்பரம் போலன்றி நான் விரும்பாமலே அவைகளை நான் நுகரத்தான் வேண்டும் .

 

 என்னுடைய நேரம் என்பது போய் நான் ஒரு24 மணி நேர சந்தையாகிவிட்டேன் எப்போது வேண்டுமானாலும் பொருளை என்னிடம் அறிமுகப்படுதலாம் அதற்கேதும் தடையில்லை நான் ஒரு உணர்வுகளுள்ள, உரிமைகளுள்ள மனிதன் அல்ல . என்னிடம் எதை மற்றவர் பேசவேண்டுமென்பதை இனி முதலாளியே தீர்மானிப்பார். அவரின் தேவைக்கேற்ப லாபத்திற்கேற்ப எனக்கு நேரம் ஒதுக்கப்படும். இது தனிமனித உரிமைகளை மட்டும் பாதிக்கிறதா என்றால் அது மட்டுமல்ல முதலாளித்துவம் ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானதென்ற போது அனைத்தையும் கடைசரக்காக்கி விற்பனை செய்யாமல் ஓயாது.

 

ரிலையன்ஸ் தொலை பேசி வைத்திருப்போருக்கு இந்த அனுபவம் இருக்கும்”என்னங்க இன்னுமா ரீசார்ஜ் செய்ய மாட்டேங்குறீங்க சீக்கிரம் பண்ணுங்க” என ஒரு பெண் குழைவதைப்போல, அது ஏன் இந்த துறைக்கு ஆணைவிட பெண்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறார்கள்?

 

பெண்களின் குரல் frequency அதிகமாக தெளிவாக இருக்குமென்பதை விட அவர்கள் விற்பனை சரக்காக்காகமாற்றப்பட்டு விட்டார்கள்.இந்த சமூகம் பல்விளக்கும் பற்பசை முதல் கழிவறை கழுவும் விளம்பரம் வரை பெண் தான் மூலதனம்.அந்த் பெண்ணின் உரிமைகளை மறுத்து அவரை ஒரு விற்பனை பொருளாக மாற்றி அதை ஏற்று கொள்ள வைத்ததுதான் முதலாளித்துவம் செய்த மாபெரும் வெற்றி. அதே பார்முலாதான் மனித சமூகமனைத்தையும் வியாபாரப்பொருளாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

—————————————————————————–

 

கடந்த மாதம் நடந்த சம்பவம் இது எனக்கு போன் செய்த நண்பர்கள் சொன்னார்கள் “உனக்கு போன் பண்ணினா பாட்டு வருது”. இது குறித்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் சொன்னேன் . பலனில்லை சுமார் 5 தடவை இப்படி புகார் செய்தும் பலனில்லைஒருவாரம் கழித்து போன் செய்தேன் “ஏற்கனவே 5 முறை புகார் பண்ணிட்டேன் பாட்டை எடுக்க முடியுமா இல்லையா ? “அப்படிங்களா முன்னாடியே எடுத்துருப்பாங்களே ” உங்ககிட்ட ஒரியாடவேண்டிய வேலை எனக்கில்லை.

 

யாரைக்கேட்டு எனக்கு பாட்டை போட்டீங்க நான் உங்களை கேட்டனா? ” சார் அதுக்கு காசு இல்லை ப்ரீ தான் எந்த சர்ர்ஜ் இல்லை ஒரு மாசம் பாட்டு வரும் வேணுமினா காசு கொடுத்து எக்ஸ்டண்ட் பன்ணிக்கலாம்” ப்ரீ என்பதை அழுத்தி சொன்னார். “என்னப்பார்த்தா உனக்கு பிச்சக்காரன் மாதிரி தெரியுதா என்னமோ ப்ரீ ப்ரீ சொல்லுற, என்னகேக்காம எனக்கு ஆபாசப்பாட்ட போடு உட்டுவீங்க வாடா மாப்புள வெங்காயமாப்புளன்னு வரும் நான் கேட்டுட்டு வாயமூடிக்கிட்டு இருக்கணுமா? உங்ககிட்ட எல்லாம் எத்தன முற சொல்லி இழவெடுக்கிறது.

 

இப்ப பாட்ட எடுக்க முடியுமா இல்லையா? கொஞ்ச அமைதிக்கு பின் பேசினார்” சாரி சார் கண்டிப்பா பாட்டை எடுத்துடுவோம் என்றபடி இணைப்பை துண்டித்தார். ஆனால் பலர் சும்மாதானே வருது என்றபடி, ஒரு மாசம் பாட்டுதான பாடிட்டு போவுது புல்லரித்து மகிழ ஆரம்பித்து விடுகின்றனர்.

 

 முதலாளித்துவத்தின் எந்த ஒரு இலவசமும் நம்மை அடிமையாக்குவதற்கே.அது இலவசம் அல்ல அதுதான் நம்மை அவன் திருடிக்கொண்டு போவதற்கான முதல் கடவு சீட்டு. நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான முதல் அறிவிப்பு.