புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.

 

மறுபக்கத்தில் என்ன நடந்தது!? எந்த ஒரு மாற்று அரசியல் வழியையும் முன் வைக்காதவர்கள், புலியுடனான தம் அரசியல் முரண்பாட்டுக்கு எப்படி தீர்வு கண்டனர், காண்கின்றனர். அவர்களை அறியாமல், அரசின் பின் தான் அதற்கான தீர்வை இனம் காண்கின்றனர். புலம் பெயர் 'மாற்றுகள்", 'மறுத்தோடிகள்", 'இலக்கியவாதிகள்" என்று வேஷம் போட்ட அனைவரும், கூடிக் குலாவி வைக்கும் அரசியல் மக்களைச் சார்ந்தல்ல. இதைத்தான் நாம் முன் வைக்கின்றோம் என்று சொல்ல, அவர்களிடம் மாற்றாக எதுவுமில்லை.  புலிகளின் எதிர்தரப்பாக இருக்கும் இவர்கள், அரசைச் சார்ந்து தான் நிற்கின்றனர். இது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தன்னும், இதுதான் அவர்களின் அரசியல் முடிவாக அமைகின்றது.

 

இன்று தமிழ் மக்கள் சந்திக்கின்ற பேரினவாதத்துக்கும், புலியிசத்துக்கும் மாற்றாக எது சரி என்ற கேள்வி, அரசியல் ரீதியானது. அரூபமான வெறும் சொற்கள் அல்ல. வெறும் 'ஜனநாயகம்" என்ற சொல்லின் எல்லைக்குள் இவை, மாற்றாக மாறிவிடாது. 

 

'ஜனநாயகம்" என்பது, அரசியலுக்கு வெளியில்; இல்லை. மக்கள் அரசியலை முன்னிறுத்தினால் மட்டும்தான், அது கோரும் ஜனநாயகம் மக்களுக்கானதாக இருக்கும். இல்லாத 'ஜனநாயகம்"  ஒடுக்குமுறையாளனுக்கு சாதகமானது.

 

புலியல்லாத புலம்பெயர் செயல்பாட்டில் மக்களைச் சார்ந்து நிற்கும் அரசியலை முன்னிறுத்தாத செயல்பாடுகள்தான், இன்று அரசுக்கு பின்னால் அவர்களை கொண்டு  சென்றுள்ளது. அதன் பின் இன்று வெளிப்படையாக செல்லாதவர்கள் கூட, அரசின் சார்பு கருத்துடன் தான் நிற்க முடிகின்றது. இதனால் அரசுடன் சேர்ந்தவர்களுடன் ஒன்றாக கூடவும், கூத்தாடவும் கூட முடிகின்றது. அரசியல் நட்பை அரசியல் ரீதியாக பாராட்டவும் முடிகின்றது.

 

இன்று இப்படி அரசை ஆதரிக்கின்றவர்கள், அரசு நடத்தும் இனப்படுகொலைகளையும் இனவொடுக்குமுறைகளையும் அரசியல் ரீதியாக சரி என்று ஏற்றுக்கொண்டதால் தான், அதன் பின் நிற்கின்றனர். இப்படி தாம் ஆதரிக்கும் மனிதஅவலத்தை புலியின் பெயரால் நியாயப்படுத்தி, அரசின் பின் அணிதிரளுகின்றனர். இந்தப் பாசிசக் கும்பலுடன் நாம் அதை ஏற்கவில்லை என்று கூறக் கூடியவர்கள், எப்படி ஒன்றாக கூடி நிற்க முடிகின்றது!? இந்த கொலைகாரக் கும்பலுடன் ஒன்றாக எதைப்பற்றி விவாதிக்க முனைகின்றனர்!? 

 

அப்படியாயின் இவர்கள் யார்? இவர்கள் கூட தமிழ்மக்களைச் சார்ந்து நிற்கும் வண்ணம், மாற்று அரசியல் அற்றவர்கள் என்பதால் தான், மறைமுகமாக அரசை சார்ந்து நிற்கின்றனர். புலியின் பெயரால், கொலைகார அரச ஏஜண்டுகளுடன் ஒன்றாக இன்னமும் கூடவும் கூத்தாடவும்  முடிகின்றது. 

 

புலிப்பாசிசம் இன்று அம்பலமான அளவுக்கு, என்றும் அம்பலமானதில்லை. பேரினவாதம் புலியின் துணையுடன் நடத்தும் மனிதஅவலத்தினை கண்ட மக்கள், ஒரளவுக்கு தன்னியல்பாக இன்று எழுந்து போராடுகின்றனர். அதற்கு தலைமை தாங்கிச் செல்ல, எந்த மாற்று அரசியலும் எம் மத்தியில் கிடையாது. எம் மத்தியில் மாறாக இருப்பது அரச ஆதரவு கொலைவெறி அரசியல் தான்.

 

இந்த அரசியல் வெற்றிடத்தை புலிகள் பயன்படுத்தியே, மக்களின் உணர்வை தம் அரசியலாக வடிகட்டிக் காட்டுகின்றனர்.

 

பேரினவாத மனிதப்படுகொலைக்கு எதிராக புலம்பெயர் மண்ணில் தொடர்ச்சியாக போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள், புதிதாக இதற்குள் வந்தவர்கள், அங்கு வைக்கப்பட்ட கோசங்கள் அனைத்தும், இன்று எம்முன்னால் பல்வேறு வாதப்பிரதி வாதத்தை உருவாக்குகின்றது. அங்கு ஏற்பட்ட மொத்த தவறும், அதை வழி நடத்த முடியாத அரசியல் வெற்றிடமும், உண்மையில் புலிக்கு மாற்று என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடம் மாற்று அரசியல் எதுவும் இன்மையால் தான் ஏற்பட்டது. 

 

மாற்று மக்கள் அரசியலை முன்னிறுத்தி கடந்த 20 வருடமாக எதையும் செய்யாத எதிர்ப்புரட்சி நிலை, இன்று புலம்பெயர் அரசியல் வெற்றிடமாகின்றது. அதைத்தான் புலி அறுவடை செய்கின்றது. மறுபக்கத்தில் மாற்று என்பது, பேரினவாதமாக அறுவடையாகின்றது.

 

இன்றாவது இந்த உண்மையை உணர்ந்து, மக்களைச் சார்ந்து நிற்கப்போகின்றோமா!?  மக்களை சார்ந்து நிற்க, மக்கள் அரசியலை முன்வைக்கப் போகின்றோமா!? இது இன்று அரசியல் ரீதியானதும், எம்முன்னுள்ள மையமான அரசியல் கேள்வியுமாகும். மக்களைப் பற்றி சிந்திப்பவர்கள் முன், இதற்கு வெளியில் எந்த மாற்றும் இன்று கிடையாது.

 

பி.இரயாகரன்
03.05.2009