தமிழ் மக்கள் மீண்டும் ஒரு துயர வாழ்வுக்குள் வீழ்ந்துள்ளனர். தமிழ்மக்களின் சொந்த விடுதலைக்கு எதிராக புலிகளின் எதிர்ப்புரட்சி கடந்த 30 ஆண்டுகள் ஆற்றிய நடவடிக்கைகளால், இன்று இது தன் சொந்த அந்திமத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விடத்தை நிரப்புவது, புலியை விட மோசமான மற்றொரு எதிர்ப்புரட்சி கும்பலாகும். தமிழ் மக்களின் எதிரியும், எதிரியுடன் 30 ஆண்டு காலம் பயணித்து வந்த கூலிக் குழுக்களின் எதிர்ப்புரட்சி அரங்கேறியுள்ளது.

 

மக்கள் இனி இந்த எதிர்ப்புரட்சி கும்;பலின் வக்கிரத்தை, அதன் ஒடுக்குமுறையை புதிய வடிவில் தரிசிக்கவுள்ளனர். கடந்தகாலத்தில் புலியின் பெயரால் இவர்கள் நடத்திய கொடுமைகளை, இந்த மக்கள் அறிந்தவை தான்.

 

கடந்த காலத்தில் ஒரு இலட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரசு தான், மீண்டும் புலியின் இடத்தில் அமருகின்றது. இது தமிழ்மக்கள் மேல் தன் பேரினவாதத்தை திணிக்கவுள்ளது. இது முன்பை விடவும் பாசிச வடிவம் கொண்டு, திமிரோடு எழுந்து நிற்கின்றது. இன்று இலங்கையில் தமிழ்மக்கள் சார்பாக யாரும் எந்தக் குரலும் கொடுக்கமுடியாத புதிய சூழல். தமிழரின் உரிமைகள் அனைத்தையும் காலுக்கு கீழ் போட்டு மிதித்து வருகின்றது.

 

தமிழ் மக்களின் உரிமை மறுப்பு மட்டுமின்றி, அவர்கள் தம் சொந்த அரசியல் வழியை தீர்மானிக்க முடியாத வண்ணம், அவர்கள் மேல் கைக்கூலிகளின் ஆட்சியைத் திணிக்கின்றது. இதைத்தான் புலியிடமிருந்து 'மீட்பாக" பறைசாற்றுகின்றது.

 

இதற்காக இவர்கள் நடத்திய கொடூரமான இனவழிப்பு யுத்தத்தை, தமிழ்மக்கள் மேல் திணித்தனர். இப்படி பேரினவாதம் நடத்திய இனப் படுகொலைகளில் இருந்து, மக்கள் தப்பி வர முயன்றனரே ஒழிய புலியிடமிருந்தல்ல. பலர் இதை திரித்துக் காட்டுகின்றனர். புலிகளுடனான மக்கள் முரண்பாடு இதுவல்ல. அது மற்றொரு தளத்தில் வேறொன்றாக இருந்தது.

 

மக்கள் பேரினவாத படுகொலையில் இருந்த தப்ப விரும்பியதும், அதை புலிகள் தடுத்ததும், புலிகள் இதற்காக சுட்டுக் கொன்றது எல்லாம், இந்த பேரினவாத இனவழிப்பு யுத்த எல்லைக்கு உட்பட்டது. புலிகள் விடுதலை இயக்கம் என்ற அரசியல் அடிப்படை எல்லையை மீறி, மக்களை தம் பணயக் கைதிகளாக்கினர். இதை மீறியபோது சுட்டும் கொன்றனர். 

 

இவை அனைத்தையும் தாண்டி மக்கள் அங்கிருந்து தப்ப காரணமாக இருந்தது, பேரினவாதம் நடத்திய இனவழிப்பு படுகொலைதான்;. புலிகளின் பாசிசமும், அவர்களின் பணயமுமல்ல. பேரினவாத படுகொலையில் இருந்து தப்ப முனைந்த மக்கள் தான், பேரினவாதம் ஆக்கிரமித்திருந்த தங்கள் சொந்த மண்ணுக்கு மீண்டும் ஒடினர். இது பேரினவாதம் மக்களை 'மீட்ட" நிகழ்வல்ல. இது பேரினவாதம் நடத்திய படுகொலையில் இருந்து தப்பியோடிய நிகழ்வு. மக்களை கொன்று குவித்த நிலையில், பேரினவாதம் ஆக்கிரமித்து இருந்;த பிரதேசத்துக்கு மட்டும் தப்பியோட இடமிருந்ததால் அங்கு தப்பி ஓடினர்.

 

இப்படி மக்கள் தங்கள் பிரதேசத்துக்கே மீளத் தப்பியோடினர். அவர்கள் தங்கள் சொந்த குடியிருப்புக்கு, மீண்டும் சென்று வாழத்தான் சென்றார்கள். ஆனால் ஆக்கிரமிப்பாளன் அவர்களை வலைபோட்டு பிடித்தான். அவர்கள் மீண்டும் தம் சொந்த குடியிருப்புக்கு செல்வதை தடுத்தான். இப்படி அவர்கள் கூறிய 'மீட்பு" மீளவும் ஒரு சிறையாகியது. பிடித்து வந்த மக்களை, நாலு முட்கம்பிக்குப் பின்னால் சிறை வைத்துள்ளனர். இனவழிப்பு, இனச்சுத்திகரிப்பாக, இனக் களையெடுப்பாக இன்று மாறி நிற்கின்றது. நாலுக்கம்பிக்கு பின் கொண்டு வர முன்பு,  பலர் இன்று காணாமல் போகின்றனர். இப்படியும் ஒரு இரகசிய இனப்படுகொலை நடக்கின்றது. 

 

இப்படி பலாத்காரமாக பிடித்து வந்து சிறையிட்டுள்ள அரசு, அந்த மக்களை பராமரிக்க கூட தயாராக இருக்கவில்லை. இன்று இதை 'மீட்பாக" கூறுவது மோசடி. மக்கள் பேரினவாத இனவழிப்பு கொலைவெறியில் இருந்து தப்ப ஒடிவந்தவர்கள். அவர்கள் தம் வீட்டுக்கு  செல்லத்தான் ஒடிவந்தனர். இவர்களை இனக்களையெடுப்பு செய்யத்தான் இன்று பிடித்து வந்துள்ளனர். அத்துடன் மக்கள் சொந்த பிரதேசத்துக்கு சென்றால், இனவாத யுத்தம் தோல்வி அடைந்துவிடும். அதைத் தடுக்கவும், இந்த மக்களை சிறை வைத்துள்ளனர்.

 

இப்படி சிறைவைத்தவர்களை 'மீட்பு" என்பதும், அதற்காக தாம் முயன்றதாகவும் கூறுவது மோசடி. 'மீட்பு" மக்களை பராமரிக்கக் கூட தயாராக இல்லாத அரசு, அந்த மக்களை கொன்று குவிக்க போட்ட குண்டில், தப்பி பிழைத்தவர்கள் தான் இந்த மக்கள்.

 

இன்று இந்த அரசு ஒரு நேர சோறு கூட போடமுடியாத நிலையில், மக்கள் மேல் குண்டை அள்ளி போட்டு, அவர்களை கொன்று குவித்து வருகின்றது. குண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றது. கொன்று கொண்டே இருக்கின்றது. தமிழனை கொல்லும் குண்டுக்கு பஞ்சமில்லை, ஆனால் சோத்துக்கு பஞ்சம். குண்டு போட்டு கொல்ல முடிந்தவனுக்கு, சோறு போட வக்கில்லை. இந்தக் கொலைகார அரசு இந்த மக்களைக் காட்டி உலகில் கையேந்துகின்றது. தொடர்ந்தும் குண்டை வாங்கி யுத்தத்தை நடத்தவும், தமிழனை கொல்லவும் கையேந்துகின்றது. அரச பணம் குண்டு வாங்கித் தமிழனை கொல்லத்தான் பயன்படுகின்றது, சோறு போடவல்ல.

 

இதனால் தான் புலம்பெயர் அரச எடுபிடிகள் சோறு போடாதே யுத்தத்தை நடத்து, உயிருடன் தப்பிவருபவர்களுக்கு தாங்கள் சோறு போடுகின்றோம் என்று கூறி, தமிழனை அழிக்க தமிழ்மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். 

 

பி.இரயாகரன்
25.04.2009