தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.

 

 அதே போல் ஒடுக்குமுறையிலான இராணுவத் தீர்வை மூடிமறைக்க முனைகின்றது. புலிகளின் கொடுமையான, கொடூரமான நடத்தைகளை முன்னிறுத்தி, தன் கொடுமைகளையும், கொடூரங்களையும், தமிழ்மக்களை வகைதொகையின்றி கொல்வதையும் மூடிமறைக்க முனைகின்றது. இதன் மூலம் மிக இலகுவாக ஒரு இனவழிப்பை, இனக்களையெடுப்பை, இனச்சுத்திகரிப்பை செய்கின்றது. மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றும், காயப்படுத்தியும், அங்கவீனராக்கியும், ஒரு தமிழ் சமூகத்தை உற்பத்தி செய்கின்றது. நாலு முட்கம்பிக்கு வேலிகளுக்கு பின்னால், முழு மக்களையும் பலாத்காரமாக சிறை வைத்திருக்கின்றது.

 

புலியிடம் 'மீட்டவர்கள்" களை, இன்று நாலு முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் அப்பாவி மக்களை அடைத்து வைத்துள்ளது. புலியை விட கேவலமாக, அடிமையாக இந்த மக்களை நடத்துகின்றது. புலிகள் தமக்காக சண்டைசெய்ய இழுத்துச் சென்ற குழந்தைகளைக் காட்டும் உலகத்துக்கு, பேரினவாதம் வெளி உலக தொடர்பற்ற இராணுவ சூனியப் பிரதேசத்தில் வைத்து  இழுத்துச் செல்லும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கதி என்னவென்று தெரியாது.

 

இவ்வளவையும் அது செய்வது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுபதற்காகத்தான். ஒரு அரசியல் தீர்வை வழங்காமல் விடுவதற்காகத்தான். இதற்கு பதில், இன்று இராணுவ ரீதியாக தீர்வாக, மக்களை வகைதொகையின்றி கொன்று குவிக்கின்றது. பேரினவாத சிறைகளில் தள்ளுகின்றது. மக்களை திறந்தவெளிச் சிறைகளில் வைத்துப் பூட்டுகின்றது.

 

புலியை 'பயங்கரவாத" அமைப்பாக கூறியவர்கள் தான், பல ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளனர். இங்கு உண்மையில் யார் பயங்கரவாதி? என்ற கேள்வியும், தமிழ் மக்களின் முதல் எதிரி யார் என்ற உண்மையும் பளிச்சென்றே இன்று மீண்டும் அம்பலமாகின்றது.  

 

கடந்த 60 வருடமாக பல்வேறு பரிணாமம் பெற்ற இனப்பிரச்சனையை, இப்படி இராணுவ ரீதியாக தமிழ்மக்களை கொன்று தீர்வு காணமுனைகின்றது. இதை வெறும் புலிப் பிரச்சனையாக காட்டி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்று இராணுவ ரீதியான தீர்வு காண்கின்றது. இப்படி மக்களை படுகொலை செய்து, அவர்களின் முழு வாழ்வையும் சிதைத்து, அவர்களை பேரினவாதம் அடிமை கொள்ள எண்ணுகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி, அவர்களை முழுசாக விழுங்கி ஏப்பமிடவே பேரினவாதம் முனைகின்றது. 

 

தமிழ்மக்களின் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்வு காண முனையாத பேரினவாதத்தின் அரசியல் இருப்பு, தமிழர் தரப்பில் நிலவிய பாசிச வடிவங்கள் மேல் தான் தன் இராணுவ வெற்றியை திணிக்கின்றது. எதிரி பற்றியும், அவனுடன் போராட வேண்டிய வடிவங்கள் பற்றியும், அதில் மக்களின் பங்கு பற்றியும் புலிகள் கொண்டிருந்த மனித விரோதக் கண்ணோட்டமே, இன்று பேரினவாதத்தின் இலகுவான இராணுவத் தீர்வாக மாறி நிற்கின்றது.

 

அரசியல் ரீதியாக தீர்வு காணுதல் மறுக்கப்பட்டு வந்தது என்பது, இன்று இலகுவான  இராணுவ தீர்வாக மாறி நிற்கின்றது. இந்த வகையில்

 

1. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து, ஒரு அரசியல் தீர்வை கோருவதற்கூடாக அரசை அம்பலப்படுத்தத் தவறினர். .

 

2. அரசு ஒரு அரசியல் தீர்வை வைப்பதன் மூலம், பேரினவாதத்தை களையத் தவறியது.

 

இபப்டி இனப்பிரச்சனை அரசியல் ரீதியாக தீர்வு காணப்படாமல், அது அம்பலப்படுத்;தப்படாமல் போனது. மாறாக தமிழினம் மீதான இராணுவ ரீதியான தாக்குதல் மூலம் மொத்த சமூகத்தையும் ஒடுக்குகின்றது. இப்படி இதன் மூலம் இந்தப் பிரச்சனை தீர்க்கமுடியும் என்று பேரினவாதம் கருதுகின்றது.

 

மக்களால் வெறுக்கப்படும், ஆனால் தம்முடன் ஒட்டிக்கொள்ளும் சிலருக்கு ஏற்ற எலும்மைப் போட்டு, அவர்களைக் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளவே பேரினவாதம் விரும்புகின்றது.

 

1981இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அபிவிருத்திசபை வழங்கிய போது, தமிழர் விடுதலைக் கூட்டணி அதைக் காவிக்கொண்டு இது தான் தமிழ்மக்கள் தீர்வு என்றது. அது மக்களால் நிராகரிக்கப்பட்டதுடன், அவர்களை அரசியல் ரீதியாகவே மக்கள் ஒரம் கட்டினர். இன்று அந்த அபிவிருத்தி சபையை கூட அல்ல,

 

அபிவிருத்தி பற்றி பேசும் அரச குண்டர்களான நாலு பொறுக்கிகளை முன்னிறுத்தி அதைத் தீர்வு என்று பேசுகின்றது. தமிழ் மக்கள் இதன்பால் அக்கறை கொண்டு, தம் பின்னால் அணிதிரளுவதாக இந்தக் கும்பல் பினாற்றுகின்றது. பொய் பித்தலாட்டம், பொறுக்கித்தனத்தை விளம்பரம் செய்து, அதை தீர்வாக காட்டவும், திணிக்கவும் முனைகின்றது.

 

தமிழ்மக்கள் தீர்வை சுதந்திரக்கட்சி உறுப்புரிமை ஊடாக அடையமுடியும் என்று சொல்லுமளவுக்கு, இன்று சகல சமூகவிரோத பொறுக்கிகளும் கும்மியடிக்கின்றனர். தத்தம் சொந்தப் பிழைப்புக்கு இப்படி வழிதேடுகின்றனர். இதைத்தான் இவர்கள் இன்று தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.

 

யுத்தம் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கவும், அதை மூடிமறைக்கவும் உருவாக்கிய சர்வகட்சி சாக்கடை, இரத்த ஆற்றில் தமிழினத்தை மூழ்கடித்துள்ளது. இதன் பின் பல புலம்பெயர் பொறுக்கிகள்  பொறுக்கும் அரச எடுபிடிகளானார்கள்.

 

ஊர் உலகத்தை ஏமாற்றவும், ஆள் பிடிக்கவும், தம் இராணுவ தீர்வைத் திணிக்கவும் தான், இந்த வேஷம் போட்டனர். பாசிச இயந்திரத்தின் பற்களில் இவையும் ஒன்று.  

 

வெறும் புலி ஒழிப்பாக காட்டிக்கொள்ள, அரசு செய்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் இந்த சர்வகட்சி தீர்வு நாடகம். புலி தான் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணத் தடையாக இருக்கின்றது என்று கூறிக்கொண்டு, உண்மையில் அரசுதான் அதற்கு முதற் தடையாக இருக்கின்றது என்பதை மூடிமறைத்து, அதற்கு இராணுவரீதியாக தீர்வு காண்கின்றது. இதை புலிகள் அம்பலப்;படுத்தத் தவறியது தான், அவர்களின் தோல்விக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் தோல்வியாக மாறியுள்ளது.

 

இதன் மூலம் தமிழ்மக்களை அடக்கியாள எண்ணும் பேரினவாதம்;, அந்த மக்களை அடியோடு உரிமையை கோராத வண்ணம், தன் கொடுமையான கொடூரமான இராணுவ வன்முறை மூலம் வடுக்களை உருவாக்கி வருகின்றது. மக்கள் இனி இதை மீறி, தம் உரிமையை கோர மாட்டார்கள் என்று, தம் கைக்கூலிகளை கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். தமிழர்கள் வாய்பொத்தி அடிமைகளாக, பேரினவாதத்தின் கீழ் இருப்பார்கள் என்று கூறத் தலைப்படுகின்றனர். அதைப் பற்றி பேசும் காலம் இதுவல்ல என்கின்றனர். இன்று அல்லலுறும் மக்களின் நிவாரணம் தான் முதன்மையானது தீர்வல்ல என்று, புலிப்பாணியில் புலியின் தொப்பியை புரட்டி போட்டுக்கொண்டு கதைவிடுகின்றனர்.

 

தமிழ்மக்களின் உரிமையைப் பற்றி பேசுவது என்பது, பேரினவாத அரசு முதல் அரச எடுபிடிகளின் மொத்த நலனுக்கு எதிரானதாகவே இன்றும் உள்ளது. இராணுவ ரீதியான தீர்வு என்பது, இதன் முன் நிச்சயமாக தோல்வியுறும். நாளைய மக்கள் வரலாறு, அதை நிச்சயம் நிறுவும்.

 

பி.இரயாகரன்
26.04.2009